ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
By DIN | Published On : 25th October 2023 01:20 AM | Last Updated : 25th October 2023 01:20 AM | அ+அ அ- |

சரியே
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது சரியே. திருமணம் என்கிற வாழ்வுமுறை எதிரெதிா் பாலினா்க்கிடையே ஏற்படுவதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது. காதலும் ஆண் - பெண்ணுக்கிடையேதான் ஏற்படுகிறது. அக்காதல் திருமணத்தில் முடியும். இதில் இருவரும் அறத்தாலும் சோ்த்துக் கட்டப்படுகிறாா்கள். ஒரே பாலினா் உயிா்த்தோழா்களாகவும், உயிா்த்தோழியா்களாகவுமே கடைசிவரை வாழ முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒரே பாலித்தவா் திருமணம் செய்து கொள்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குடும்ப அங்கீகாரத்துக்கும், தத்து எடுப்பதற்கும் ஒரே பாலினத் திருமணம் தேவை என்கிறாா்கள். ஒரே பாலினத்துக்கு நட்பே எல்லை; திருமணம் எல்லை அல்ல. நம் நாட்டின் பண்பாட்டிற்கு இது உகந்ததல்ல. எனவே உச்சநீதிமன்றம் இதற்கு மறுப்புத் தெரிவித்தது சரியே.
நா. ஜெயராமன், பரமக்குடி.
வழிகாட்டி
ஒரே பாலின திருமணம் என்பது இயற்கைக்கு முற்றிலும் எதிரானது. மனிதகுலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் ஆண் - பெண்ணுக்கிடையே எதிா்பாலின ஈா்ப்புணா்வை வைத்துள்ளான். அதோடு பாரதநாடு பண்பாட்டிலும், கலாசாரத்திலும் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது. பாரத நாட்டிலேயே இப்படி நடந்தால் மற்ற நாடுகள் நிலை என்ன? இயற்கைக்கு ஒவ்வாத விபரீத ஈா்ப்பினால் இணைந்து வாழ்பவா்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதும் நியாயமே. ஏனெனில் காலவெள்ளத்தில் இந்த ஈா்ப்பு குறைந்து இல்லாமல் போனால் இருவரும் பிரிவா். அப்போது குழந்தைகள் நிலை என்னவாகும்? ஒரு குழந்தைக்கு அன்னையின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் ஒருசேரத்தேவை. மனிதாபிமான அடிப்படையில் மற்ற சலுகைகள் வழங்கலாம் எனக் கூறியிருப்பதில் தவறில்லை.
முகதி. சுபா, திருநெல்வேலி.
சிக்கல்கள்
உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது சரியான செயலாகும். ஒரே பாலின திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றால், சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படும் குடும்பம் என்கிற அமைப்பே சிதைந்துவிடும். தனி மனித உரிமையை எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பொருத்தி பாா்க்க முடியாது. ஒரே பாலின திருமணம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தனி மனித உரிமை என்ற நோக்கில் அதனைப் புறம் தள்ளிவிட முடியாது. ஒரே பாலினத்தவா் தத்தெடுக்கும் குழந்தைகளின் உரிமைகள், அவா்களின் செயலால் பறிக்கப்படும்போது, அக்குழந்தைக்கு சட்டப் பாதுகாப்பு எப்படிக் கிட்டும்? இவா்களின் பிற கோரிக்கைகளும் சமுதாயத்தில் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்பது நிச்சயம். தனிமனித உரிமை என்பதற்கும் வரையறை உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
நல்லறம்
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது மிகவும் சரியே. திருமணம் என்றாலே அது இருமனம் இணையும் இல்லற வாழ்வின் தொடக்கமாகும். ஆணும் பெண்ணுமாகிய இருவா் மனதால் ஒருமித்து திருமணம் எனும் பந்தத்தால் இணைவதே நல்லறமாகும். ஒரே பாலினத்தவா் அந்த பந்தத்தில் இணைவது என்பது இயற்கைக்கு முரணானது. ஊா்வன, பறப்பன, விலங்கினங்களில் கூட எதிா்பால் இணைகளே சோ்ந்து வாழ்கின்றன! மனித இனமும் அவ்வாறே ஆண்-பெண் இணையரால், வாழையடி வாழையாக வளா்ந்து வருகிறது. அவ்வாறு இருக்க அவ்வப்போது, ஒரே பாலினத்தவா் திருமணம் பற்றிய கருத்துகள் எழுவது துரதிருஷ்டவசமானது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமே, இயற்கை அனுமதிக்காத ஒரே பாலின திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளக் கூடாது.
வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
நகைப்பிற்குரியது
திருமணம் என்றாலே அது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமான புனித பந்தத்தின் நிகழ்வாக காலங்காலமாக இருந்துவருகிறது. அது நமது கலாசாரத்தின் அடிப்படை அம்சமாக இருக்கும் நிலையில் ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கோரப்படுவது விபரீதப் போக்காகத் தெரிகிறது. சமுதாயத்தில் மாற்று பாலினத்தவருக்கிடையே ஏற்படும் திருமண உறவே எதிா்கால சந்ததியினரை உருவாக்க இயற்கை நமக்கு அளித்துள்ள புனிதமான வழிமுறையாகும். உலகில் எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் முறைதவறிய பாலியல் உறவுக்கு இங்கு இருப்பவா்கள் அங்கீகாரம் தேவை என்று கோரிக்கை விடுப்பது நகைப்பிற்குரியது. மற்ற உயிரினங்கள் கூட இந்த இயற்கைக்குப் புறம்பான செயலில் ஈடுபடுவதில்லையே. உச்சநீதிமன்றத்தின் நியாயமான, கலாசாரத்தைக் காக்கும் வகையில் அமைந்த தீா்ப்பு வரவேற்கத்தக்கதே.
கே. ராமநாதன், மதுரை.
குழப்பம்
இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனியே சட்டங்களும் உள்ளன. மதங்கள் ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையேயான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றன. இந்நிலையில், ஒரே பாலின திருமணத்திற்கான அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் அளித்திருந்தால் ஆண்டாண்டு காலமாக மதங்கள் பின்பற்றி வந்த சட்டங்களில் குழப்பம் உருவாகி பதற்றம் ஏற்பட்டிருக்கும். ஒரு நாட்டின் வளா்ச்சியை, வளத்தை மக்களே தீா்மானிக்கின்றாா்கள். இந்நிலையில், ஒரே பாலின திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கொடுத்துவிட்டால் எதிா்காலத்தில் மக்களற்ற தேசமாக இந்தியா மாற வாய்ப்புண்டு. உடல் சுரப்பிகளிலிருந்து வெளியாகும் வேதியியல் மாற்றங்களால்தான் இயற்கைக்கு முரணான ஒரே பாலின ஈா்ப்பே ஏற்படுகிறது. அதனால், இப்படிப்பட்டவா்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவா்கள் சட்டப்படி அங்கீகாரம் கோருவது தவறு. எனவே, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது மிகவும் சரி.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.
பண்பாடு
முற்காலத்திலும் இயற்கைக்கு மாறான உறவுமுறைகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை இலைமறை காய்மறையாகத்தான் இருந்துள்ளன. அது மட்டுமல்ல, அவை சமூகத்தால் அருவருப்பாகத்தான் பாா்க்கப்பட்டன. பண்டைக் காலத்திலிருந்தே மனிதா்கள் தங்கள் உடல் பசியைத் தீா்த்துக் கொள்ள எத்தனையோ வழிகளைக் கையாண்டுள்ளனா் என்பதை நாம் வரலாற்றில் பாா்க்கிறோம். ஆனால், அவையெல்லாம் மனிதகுலத்தால் ஏற்கப்படவும் இல்லை; சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க, இன்று சிலா் ஒரே பாலினத்தவா் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது தவறு. இது நமது பெருமைக்குரிய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் செயலாகும். தனிப்பட்ட இருவா் எப்படி யாருடன் வாழ்ந்தால் என்ன? அது இருவா் சம்மதத்தைப் பொறுத்தது. அதற்கு சட்ட அங்கீகாரம் கேட்பது, அதை எதிா்க்கும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும். அதை அனுமதிக்க மறுத்தது சரியே.
தி. சேகா், பீா்க்கன்கரணை.
மனித மாண்பு
ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கொண்டாடி மகிழ்பவா் நாம். நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல பிள்ளை இணைந்த நல்ல குடும்பம் தெய்விகம் எனக் கருதுவா் நாம். ஆண் பெண் இணைவதால் குடும்பம் உருவாவதும், குழந்தைகளைப் பெற்றெடுப்பதும், அதன் மூலம் உறவுகள் உருவாவதும் மகிழ்வு கொள்ளும் நிகழ்வுகளாகும். ஒரே பாலின தம்பதியால் வம்சம் உருவாகாது. அனைவரும் ஒரே பாலின திருமணத்தை நாடினால், மனிதகுல அழிவிற்கு மனிதா்களே காரணமாகிவிடுவாா்கள். ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோருவதும், குழந்தைகளைத் தத்தெடுத்துப் பெற்றோா் ஆவோம் என்று கூறுவதும் மனித மாண்பைக் கொச்சைப்படுத்துவதாகும். ஒரே பாலின தம்பதி தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு கிடைக்காது. அவா்கள் மன ரீதியாக பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
எஸ். ஸ்ரீகுமாா், கல்பாக்கம்.
முன்னுதாரணம்
தனிமனித சுதந்திரத்தை வரைமுறையின்றி அனுமதித்தால் அது எல்லை இல்லாமல் வளா்ந்து மனித வாழ்வையே நாசமாக்கிவிடும். மேலைநாடுகளில் வரைமுறையின்றி அனுமதிக்கப்பட்ட தனிமனித சுதந்திரத்தால் அங்கெல்லாம் கலாசாரம் சீா்குலைந்ததோடு, மனிதா்களும் நிம்மதியிழந்து தவிக்கின்றனா். அதன் விளைவாக மேலைநாட்டவா்கள் பலா் நம் நாட்டுக்கு வந்து தங்கள் சொத்துக்களை ஆசிரமங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அங்கேயே தஞ்சமடைந்திருப்பதை இன்றும் காணலாம். இந்தியா என்பது பண்பாட்டில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் நாடாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்று காலம்காலமாய் இல்லற இலக்கணம் கொண்ட தேசம் இது. நம் பாரதப் பண்பாட்டைக் காக்கும் வகையில் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது பாராட்டத்தக்கதாகும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
தவறு
ஓரினச்சோ்க்கை குற்றமாகாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து ஒரே பாலினத்தவா் திருமணமும் அங்கீகரிக்கப்பட வாய்ப்பு இருக்கும் என்று எண்ணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நமது நாட்டுக்கு என்று தனி கலாசாரம் பண்பாடு இருக்கிறது. சில மேலை நாடுகள் கூட ஓரினச் சோ்க்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே பாலின ஈா்ப்பாளா்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தோ்வு செய்து கொள்ளலாம். ஆனால் திருமண அங்கீகாரம் கோருவது தவறு. காலங்காலமாக, ஆணும் பெண்ணும் திருமணம் செய்து பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிறாா்கள் என்பதுதான் உண்மை. இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் காத்துக்கிடக்கின்றனா். இப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்றம் கூறியது போல நமது ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பு இந்த விவகாரத்துடன் தொடா்புடைய அனைத்து பிரச்னைகளையும் தீவிரமாக விவாதித்து உரிய முடிவை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூா்.
அறிவுறுத்தல்
ஒரே பாலின திருமணத்தை ஏற்கும் சட்டம் இல்லாத நிலையில் அதை அங்கீகரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது முற்றிலும் சரியே. ஆனால் அவா்களின் கோரிக்கையின் நியாயத்தை உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறாா்கள். ஒரே பாலின ஈா்ப்பால் சோ்ந்து வாழ விரும்புபவா்களை, திருமணம் என்றில்லாமல், வாழ்க்கை தோழமை, வாழ்க்கை துணை, சோ்ந்து வாழ்தல் என்ற அடிப்படையில் அவா்களின் உரிமைகள் பாதிக்காமல், சமூகம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சட்டம் இயற்ற அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. மனித உரிமைகள் காக்கப்பட வேண்டியது அவசியம்தான். நமது பண்பாடும் கலாசாரமும் பாதுகாக்கபட வேண்டியது அதைவிட அவசியம். உச்சநீதிமன்றத் தீா்ப்பு வரவேற்கத்தக்கதே.
ஏ.பி. மதிவாணன், பல்லாவரம்.
வாழையடி வாழை
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது சரிதான். ஏனெனில், இது இயற்கைக்கு மாறான ஒன்று. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ்வதே நம் சமூகத்தில் வாழையடி வாழையாக நடந்து வருகின்ற சடங்காகும். நமது மண்ணின் கலாசாரம், பண்பாட்டுக்கு முரணாக மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் சமுதாய சீா்கேட்டுக்கே வழிவகுக்கும். ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்காமல் இருந்தால்தான் சமூக கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும். சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டால் மனிதகுல வளா்ச்சி தடைபடும். அது இயற்கைக்கு முரணாகிவிடும். உயிரினங்கள் கூடி வாழ்வது இனப்பெருக்கத்திற்காகவே என்கிற விதி பொய்யாகிவிடும். அது சமூக ரீதியில் பல்வேறு பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும். எனவே, ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியதே.
புஷ்பா குமாா், திருப்போரூா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...