தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபடுவது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரியானதே

தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபடுவது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் சரியானதே. தில்லி முதல்வர் கேஜரிவால் மீது முன்னரே நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம், "இண்டியா' கூட்டணி அமைத்ததில் அவர் பங்கு கணிசமாக இருந்ததுதான். நிதீஷ் குமார் அணி மாறியது போல கேஜரிவாலும் அணி மாறியிருந்தால் இந்த நடவடிக்கை இருந்திருக்காது.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஐயம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் பாரபட்சமன்று இருந்திருந்தால் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டைத் தவறு என்று கூறலாம். ஆனால், அமலாக்கத்துறை எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து செயல்படும்போது அதன் நடவடிக்கைகள் குறித்து ஐயம் எழுவது இயல்பே. அடுத்த முறையும் தாங்களே ஆட்சி அமைப்போம் என்று கூறும் பாஜக, தேர்தல் முடிந்தபின் அமலாக்கத் துறை நடவடிக்கைகளை முடக்கி விடலாமே. அதைவிடுத்து, தேர்தல் நேரத்தில் அமலாக்கத் துறையினர் சோதனைகளில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.

த. முருகவேள், விழுப்புரம்.

அச்சம்

அமலாக்கத்துறை சோதனைகள் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என நேர்மைக்குப் பெயர் போன ஒடிஸô மாநில முதலமைச்சரான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நவீன் பட்நாயக் போன்றோர் குற்றம் சாட்டுகிறார்களா? இல்லையே. ஆண்டாண்டு காலமாக ஊழலில் ஊறித் திளைத்துப்போன எதிர்க்கட்சியினர்தானே எப்படியாவது தண்டனையில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்பதற்காக, இது மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை எனக் கூப்பாடு போடுகின்றனர். அவர்களது கூச்சலுக்கு ஒரே காரணம் ஊழல்வாதி என்பது தெரிந்துவிடுமோ என்கிற அச்சம்தான்.

முகதி. சுபா, திருநெல்வேலி.

நம்பிக்கை

எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவது மக்களுக்கு அமலாக்கத்துறை மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். மேலும், அமலாக்கத் துறை சோதனையில் சிக்கிக் கொண்டவர்கள் ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும். அப்படி சிக்கியவர்களை தங்களுக்கு ரகசியத் தகவல் கொடுப்பவர்களாக மாற்றிவிடும் மத்திய அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.

மாற்றம் தேவை

எதிர்க்கட்சிகளின் தேர்தல் கால நடவடிக்கைகளை முடக்குவதற்காகவும் அவர்களை மறைமுகமாக மிரட்டுவதற்காகவும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவது காலங்காலமாக இருப்பதுதான் என்றாலும் அண்மைக்காலமாக இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். அமலாக்கத்துறை பாரபட்சமாக செயல்பட்டால் அத்துறை அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். சத்தியம், தர்மத்தை மதிப்பவர்கள் உடனடியாக இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

ஏற்புடையதல்ல

யார் தவறு செய்தாலும் தண்டிப்பதில் நியாயம் உண்டு. ஆனால், தங்கள் கட்சியின் தலைவர்கள் செய்யும் தவறைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு, தவறிழைத்தவர்கள் என்பது உறுதியாவதற்கு முன்னரே எதிர்க்கட்சியினர் மீது பொய்யான குற்றச்சா ட்டுகளை சுமத்தி அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினரை இயங்க விடாமல் முடக்குவது ஜனநாயக நெறிமுறையயல்ல. நேரடியாக மோதாமல் அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சியினருக்குத் தொல்லை கொடுப்பது பழிவாங்கும் நடவடிக்கையல்லாமல் வேறென்ன?

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கேள்விக்குறி

தேர்தலுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவுச் செய்து விட்டது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை ஆதாரங்களோடு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கடமை அமலாக்கத் துறைக்கு உள்ளது. நடவடிக்கைகளை தள்ளிப் போட்டால் விசாரணையில் தொய்வு ஏற்படும். அமலாக்கத் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

உண்மை

இன்று எல்லா கட்சியினரும் ஏதோ ஒரு வகையில் ஊழலில் அல்லது முறைகேட்டில் சிக்கியுள்ளனர் என்பதே உண்மை. அதனால் மத்திய அரசு, எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத் துறையை ஏவி அவர்களை பாஜகவில் இணைய வற்புறுத்துகிறது. பாஜகவில் இணைந்த பின் அவர்கள் மீதுள்ள அமலாக்கத் துறை வழக்குகள் கைவிடப்படுகின்றன. சிவசேனை, அதிமுக போன்ற பல கட்சிகள் உடைவதற்கு பாஜகவின் அமலாக்கத் துறை சோதனையே காரணம். இதுவரை அமலாக்கத் துறை வழக்குகளில் ஒரு சதவீத அளவிற்கு கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

தி. சேகர், பீர்க்கங்கரணை.

எழுதப்படாத விதி

நான் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறேன், எப்போதும் சோதனைக்கு தயாராக உள்ளேன் என்று எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவரும் சொன்னதாக சரித்திரம் இல்லை. எப்படியாவது நாட்டு மக்களை ஏமாற்றி நான் அரசியல் வணிகம் செய்வேன், அதை யாரும் கண்டு கொள்ள கூடாது என்பதுதான் அவர்களின் எழுதப்படாத விதி. இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. ஆள்பவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு எப்படியாவது தொல்லை கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ளார்கள். அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

கண்கூடு

முறைகேடான வகையிலும், பினாமிகள் பெயரிலும் சொத்து சேர்த்திருப்பதை பல தருணங்களில் சோதனைகள் மூலம் கண்டுபிடித்து அமலாக்கத்துறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பது கண்கூடு. குற்றம் செய்யாதவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? சட்டத்திற்குப் புறம்பாக குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழிசெய்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. சட்ட ரீதியான இந்த நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல !

கே. ராமநாதன், மதுரை.

நகைப்புக்குரியது

கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது இந்த மாதிரியான பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குக் காரணம், அப்போது பாஜகவுக்கு இருந்த தோல்வி பயம்தான். இப்போது ஹேமந்த் சோரன், கேஜரிவால், கவிதா போன்றவர்களை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் கைது செய்திருப்பது ஆளும் பாஜகவின் உள்நோக்கமாக பார்க்கப்படுகிறது. எங்களுக்கும் புலன்விசாரணை அமைப்புகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது சட்டம் தன் கடமையை செய்கிறது என்கிற பாஜகவின் வாதம் நகைப்புக்குரியது.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

விதிவிலக்கல்ல

இது வேடிக்கையான குற்றச்சாட்டு. தேர்தல்நேரம் என்பதால் நீதித்துறை, காவல்துறை போன்றவை இயங்காமல் இருக்கிறதா? அமலாக்கத் துறை மட்டும் விதிவிலக்காக முடியுமா? இத்துறைக்கு எந்த நேரத்திலும் குற்றப் பின்னணி கொண்டவர்களை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதே. மடியில் கனம் இல்லாதவர்கள் இச்சோதனைக்கெல்லாம் கலங்க வேண்டியதில்லையே. எதற்கெடுத்தாலும் மத்தியஅரசைக் குற்றம் சாட்டுவது தவறு. தேர்தலுக்குப் பிறகாவது, நியாயமான குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களை வலுப்படுத்திக் கொள்வது எப்படி என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com