பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியிருப்பது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கலகம்

பிரதமரை பெருமைப்படுத்துவதாக எண்ணி ஜி.கே. வாசன் கூறியிருப்பது அவரை சங்கடத்தில்தான் ஆழ்த்தும். எப்படியோ தேர்தல் பரப்புரையில் கச்சத்தீவு பிரச்னையை எழுப்பியாகிவிட்டது. நாரதர் கலகம் நன்மையில்முடியும் என்பதற்கிணங்க கச்சத்தீவிற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தால் போதும். சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் மட்டுமே கச்சத்தீவை மீட்கமுடியுமே தவிர தனிநபரின் முயற்சியால் ஏதும் பலன் விளையாது.

த. முருகவேள், விழுப்புரம்.

சர்ச்சை

கச்சத்தீவு பிரச்னைக்கு முந்தைய ஆட்சியாளர்களைக் குறை கூறுவதை விடுத்து, இனியாவது அதை மீட்டெடுக்க வழிகாண வேண்டும். அரசியல்வாதிகள் சிலர் தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு பற்றிப் பேசுவது சந்தர்ப்பவாதம் அன்றி வேறில்லை. ஆர்ப்பாட்டமாகப் பேசும் மற்ற அரசியல்வாதிகள்போல் அல்லாமல், எப்போதும் தெளிவாக, நிதானமாகப் பேசும் ஜி.கே. வாசன் இக்கருத்தால் சர்ச்சைக்கு ஆளாகிவிட்டார்.

ஆர். தீனதயாளன், காரமடை.

இலக்கு

சொன்ன வண்ணம் செய்யும் செயல்வீரர் நமது பிரதமர் நரேந்திர மோடி. மூன்றாம் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கச்சத்தீவை மீட்பதே அவர் இலக்காகும். இல்லாவிடில் அவர் அது குறித்துப் பேசியே இருக்க மாட்டார். காலம் அறிந்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர் பிரதமர் மோடி. தமிழக மீனவர்களுக்கு வெகு விரைவிலேயே "கச்சத்தீவு மீட்கப்பட்டது' என்ற நற்செய்தி கிடைக்கப்போவது உறுதி.

முகதி.சுபா, திருநெல்வேலி.

வியப்பு

இலங்கை அரசு நம்நாட்டு மீனவர்களுக்குத் துன்பம் தருகிறது என்பதுதான் இன்றைய எதார்த்த நிலை. இருநாட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஜிகே. வாசனின் தந்தையார் காங்கிரஸில்தான் இருந்தார். இன்று பிரதமரே கச்சத்தீவை மீட்போம் என்று கூறாத நிலையில், ஜி.கே. வாசன் அதனைக் கூறி யிருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. தங்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்த பிரதமருக்கு ஜிகே. வாசனின் நன்றி நவிலல்தான் இது.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

கண்கூடு

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர், காங்கிரஸ் அரசால் கட்சத்தீவை மீட்க முடியாமல் போனது. இன்று உலக அரங்கில் இந்தியா ஒரு வலுவான நிலையில் உள்ளது. மோடியின் சொல்லுக்கு வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் செவிமடுக்கும் நிலையில் உள்ளனர் என்பது கண்கூடு. கடந்த காலங்களில் இயலாமல் போனவை தற்போது கைகூடிவர வாய்ப்பு உள்ளது.

கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

வழக்கம்

ஜி.கே. வாசன் சொல்வது தற்போது அவர் அமைத்துள்ள கூட்டணிக்கு ஆதரவான கருத்தாகத்தான் மக்களால் பார்க்கப்படும். தென்னிந்தியாவில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் பாஜக, எப்படியாவது இங்கு கால் ஊன்ற, இது போன்ற அறிவிப்புகளை தேர்தல் நேரத்தில் வெளியிடுவது வழக்கம்தான். இம்முறை பாஜக கச்சத்தீவு மீட்பு குறித்துப் பேசவில்லை. அதற்கு பதிலாக ஜி.கே. வாசன் பேசிவிட்டார். அவ்வளவுதான்.

பா. சக்திவேல், கோயம்புத்தூர்.

நூற்றுக்கு நூறு

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தலையாய பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். அதோடு, அண்டை நாடுகளுடன் சுமுக உறவைப் பேணிவருகிறார். எனவே, அவரால் கச்சத்தீவு பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கண்டு அதனை மீட்க முடியும் என்பதே மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதைத்தான் தமாகா தலைவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்ற ஜி.கே. வாசனின் கூற்று நூற்றுக்கு நூறு சரியே.

கே. ராமநாதன், மதுரை.

நகைப்புக்குரியது

பிரதமர் மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்று ஜி.கே. வாசன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. மோடி ஆட்சியில் சீனா அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, அவற்றுக்குப் புதிய பெயரையும் சூட்டிவிட்டது. இவ்வளவு நடந்த பிறகும் சீனாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கச்சத்தீவை மீட்பார் என்று வாசன் கூறுவதை எவ்வாறு நம்ப முடியும்? இதை எவரும் ஏற்கமாட்டார்கள்.

நூ. அப்துல் ஹாதி பாகவி, சென்னை.

நியாயம்

நரேந்திர மோடி கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் கச்சத்தீவை மீட்க என்ன செய்தார் என்ற திமுகவின் கேள்வி நியாயமானதே. அதுபோல் மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக எத்தனை முறை கச்சத்தீவு பிரச்னை குறித்து காங்கிரஸிடம் பேசியது என்கிற கேள்வியும் மிகவும் நியாயமானதே. இந்திய மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறை எந்த கட்சிக்குமே இல்லை. இது வாக்குவங்கி அரசியலுக்கான பேச்சு.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

வாக்குவங்கி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மக்களுக்காகச் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்காமல் கச்சத்தீவு பிரச்னையைக் கையிலெடுப்பது தவறு. கச்சத்தீவின் மீது அக்கறை இருக்குமென்றால் அதை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொண்டிருக்கலாமே. அதைச் செய்யாமல் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மோடி மீட்பார் என்று ஜி.கே. வாசன் கூறியிருப்பது வாக்குவங்கி அரசியலே.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

ஆயுதம்

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை பிரதமர் மோடி ராஜதந்திரத்துடன் அணுகி கேட்டால் இலங்கை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதை உணர்ந்துதான் பாஜக கச்சத்தீவு பிரச்னையை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்துகிறது. ஒருவேளை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு அதை வலுவான பிரசார ஆயுதமாக பாஜக பயன்படுத்தலாம். எப்படி பார்த்தாலும் கச்சத்தீவை மீட்பது பிரதமரின் அதிகாரத்துக்குட்பட்டது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தவறான கருத்து

ஜி.கே. வாசன் தேர்தல் களத்தில் வாக்காளர்களைக் கவர்வதற்காக கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸையும் திமுகவையும் குற்றம் சாட்டும் ஜி.கே. வாசன் கடந்த காலத்தில் அவரின் தந்தையார் அரசியல் களத்தில் எந்த கட்சியுடன் இருந்தார் என்பதையும் யோசித்துப் பார்ப்பது நல்லது. ஜி.கே. வாசனின் கருத்து தவறானது.

மா. பழனி, கூத்தப்பாடி.

அக்கறை

பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்க முடியாது. போரின் மூலம் மீட்க முயன்றால் இலங்கையின் பக்கம் இந்திய எதிரி நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரளும். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும்போதே திமுக தடுத்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு பிரிந்தபோது காங்கிரஸின் ஆதரவு தேவைப்பட்டதால் அன்று கருணாநிதி இதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.

உ. இராசமாணிக்கம், கடலூர்.

முக்கியமல்ல

தமாகா தலைவர் கூறியிருப்பது அவர் பிரதமரின் மீதுள்ள வைத்துள்ள நம்பிக்கையையே காட்டுகிறது. கச்சத்தீவை மீட்பதற்கு, முதலில் அது நமது நாட்டுப் பகுதி என்ற உணர்வோடு செயல்பட்டாலே போதும். யார் பிரதமர் என்பது முக்கியமல்ல. பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்க முடியுமென்றால் அன்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியபோதே மீட்டிருக்கலாமே.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சாத்தியமற்றது

1974-இல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. அப்போது மத்தியில் இந்திரா காந்தியும் மாநிலத்தில் கருணாநிதியும் ஆட்சியில் இருந்தார்கள். தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்காமல் இந்திய கடற்படை தடுக்கவேண்டும். இலங்கை கடற்படையால் பிடிபடும் தமிழக மீனவர்களைக் காக்க துரித நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும். கச்சத்தீவை மீட்பதென்பது சாத்தியமற்றது.

நா. ஜெயராமன், பரமக்குடி.

வெளிப்படை

மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகள் மெத்தனமாக இருந்து விட்டு இப்போது கச்சத்தீவு என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருப்பது சரியான சந்தர்ப்பவாதம் ஆகும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஜி.கே. வாசன் கூறியது பாஜகவை, குறிப்பாக மோடியை திருப்திப்படுத்தவே என்பது வெளிப்படை.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com