கர்நாடகத்தில் பட்டப்படிப்பு முடித்து ஆறு மாதம் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்குவதுபோல் தமிழக அரசு ரூ. 4,000 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் கூறுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கர்நாடகத்தில் பட்டப்படிப்பு முடித்து ஆறு மாதம் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்குவது போல தமிழக அரசு ரூ.4,000 வழங்க வேண்டும் என்று

நியாயம்
கர்நாடகத்தில் பட்டப்படிப்பு முடித்து ஆறு மாதம் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்குவது போல தமிழக அரசு ரூ.4,000 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனரின் கோரிக்கையில் நியாயம் இருந்தாலும், இப்படி உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வாகாது. அரசியல்வாதிகள் இளைஞர்களின் வாக்குகளைப் பெற இது உதவலாம். ஆனால், படித்த இளைஞர்கள் தம் சொந்த நாட்டில் உழைத்து ஊதியம் ஈட்ட வழியின்றி, கையேந்தி வாழ்கின்ற நிலை அவலமானது. ஆட்சியாளர்களின் தொழிற்கொள்கைகள், வேலைவாய்ப்புகளைப் பெருக்கித்தர ஏற்ற வகையில், தொழில் நிறுவனங்களை ஆரோக்கியமாக வளர்ப்பதே காலத்தின் கட்டாயம்.
கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
பரிந்துரை
இக்கோரிக்கை இளைஞர்களை சோம்பேறிகளாக்கும் செயல். படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும். உதவித்தொகை என்பது ஆதரவற்ற, உடல் உழைப்பைச் செலுத்த முடியாத வரியோர், வயது முதிர்ந்த மக்களுக்கு செய்ய வேண்டும். இது இளைஞர்களை பொழுதுபோக்கிற்கு அடிமையாக்கி தவறான பாதைக்கு வழிகாட்டும் பரிந்துரை. திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பான வேலையில் ஈடுபடுத்துவதே அரசின் செயலாக இருக்க வேண்டும்.
ம. தர்மராஜ், நி.பஞ்சம்பட்டி.
நிதிச்சுமை
இப்படியே சலுகைகளை அறிவித்துக்கொண்டே போனால் அரசின் நிதிச்சுமைதான் கூடிக்கொண்டே போகும். ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைக்கும் என்றெல்லாம் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஓர் அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் இதன் வீரியம் அரசுகள் மாற மாற கூடிக்கொண்டேதான் போகும். மாறாக, வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க அரசு முயல வேண்டும். இதுதான் சரியான தீர்வைத் தரும். உருவாக்கப்படும் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கலாம். இதன் மூலம்தான் பட்டதாரிகளை வேலை பெறும் நிலைக்கு உயர்த்த முடியும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம். 
தூண்டுகோல்
இந்தக் கோரிக்கை சரியானதல்ல. கர்நாடக அரசின் இந்தத் திட்டத்திற்கு அடித்தளமிட்டதே தமிழக அரசுதான். இந்திய குடிமைப் பணிக்குத் தயாராகின்ற மாணவர்களுக்கென ஒரு தகுதித் தேர்வை நடத்தி, அதில் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7,500 வழங்கும் திட்டம்தான் இதற்கெல்லாம் தூண்டுகோல். நாட்டில் கட்டாய உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு அப்பாற்பட்டு, துடிப்புடன் இருக்க வேண்டிய இளைஞர்களுக்கு வேலையில்லா ஊதியம் போன்ற இந்த மாதிரியான திட்டங்களைக் கோருவது சரியல்ல.
ஆசியன், தருமபுரி.
சீர்திருத்தம்
இந்தக் கோரிக்கை சரியானதுதான். அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். காவல் துறைக்கு அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலையில் அமர்த்தலாம். தொழிற் கல்வியில் தகுதியானவர்களைக் கொண்டு பயிற்றுவித்து சுயதொழில் செய்திட வாய்ப்புகளை உருவாக்கலாம். வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு கல்லூரிப் பாடங்களில் சீர்திருத்தம் தேவை. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு அகழ்வாராய்ச்சி, கல்வெட்டியல், ஓலைச்சுவடிகளைப் படித்து மொழிபெயர்க்கும் பயிற்சிகளைத் தருவது போன்ற முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம். 
தொலைநோக்கல்ல
இக்கோரிக்கை முற்றிலும் வாக்கு வங்கி அரசியலே. தற்போது தமிழகத்தில் படித்து முடித்து ஐந்து ஆண்டுகளாய் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 மூன்றாண்டுகளுக்கு வழங்கி வருவதை ரூ.1,000 வழங்க திட்டமிட்டிருக்கும் வேளையில், இப்படி அரசின் நிதிச்சுமையை மேன்மேலும் கூட்டக் கோருவது தொலை நோக்கல்ல. பல்வேறு நிதியுதவிகளை பல தரப்பட்ட பிரிவினருக்கும் அரசு வழங்கி வரும் நிலையில், குடும்ப வருவாயை பரிசீலித்து உண்மையாகவே வறுமை  நிலையில் இருப்போருக்கு மட்டும் உதவித்தொகைகள் வழங்குவதே  நியாயமாகும். 
ஏ.பி. மதிவாணன், பல்லாவரம்.
வரிச்சுமை
தமிழகத்தில் மகளிருக்கு நகர பேருந்து பயணத்தில் இலவசம். ஆனால் கர்நாடகமோ அதையும் தாண்டி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த மாதிரி இலவசங்களின் பயனாக கர்நாடகத்தில் சொத்து வரி, மின்சாரம், பால் விலை என்று எல்லா வகைகளிலும் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி மக்களின் வரிச்சுமையை அதிகப்படுத்தி உள்ளார்கள் என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாடு செயல்படுத்தி வரும் இலவச திட்டங்களினால் பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் இந்த நேரத்தில் இவர் இவ்வாறு கூறியிருப்பது சரியே அல்ல.
அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
வட்டியில்லா கடன்
இந்தக் கோரிக்கை மிகுந்த நிதிச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழகத்தைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிப்பை பதிவு செய்து வேலைக்காக பல லட்சம் பேர் காத்திருக்கின்றனர். உதவித் தொகைக்குப் பதிலாக அவர்களின் படிப்புக்கு ஏற்ப தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கலாம். அரசே தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் படித்து வேலைக்காக காத்திருப்போரை கணக்கெடுத்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிற்சாலைகளை அரசே தொடங்கி வேலைவாய்ப்பை உறுதி செய்யலாம். அதுவே சரியான விவேகமான முடிவாக இருக்கும். பணமாக கொடுப்பதெல்லாம் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வீசப்படும் தூண்டில்களே.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
போதுமானதல்ல
பட்டதாரிகளுக்கு ரூ.4,000 வழங்கவேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. பட்டதாரிகள் மட்டுமே வேலை இல்லாமல் இருக்கிறார்களா? தமிழகத்தில் இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த அனுபவம் ஆட்சியாளர்களுக்கு உண்டு. உதவித்தொகைக்கு பதிலாக வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெறும் பட்டப்படிப்பு மட்டுமே போதுமானதல்ல. பல தொழில் நிறுவனங்களில் வேலைக்கேற்ற தகுதியுள்ளவர்கள் கிடைக்காததால் வடமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருப்பதை காண்கிறோம். எல்லா வேலையும் செய்ய முன்வர வேண்டும். கிடைத்த வேலையைச் செய்ய வேண்டும்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சரம்.
போலி ஆவணங்கள்
மகளிர் உரிமைத்  தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்து, வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு போன்றவற்றை அறிவித்துவிட்டு நிதிப் பற்றாக்குறையால்  அரசு திணறிக் கொண்டுள்ளது. அதோடு பட்டப்படிப்பு முடித்து ஆறு மாதம் வேலையில்லாமல் இருப்பவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் அரசிடம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கல்லூரி, தொலைதுôர மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாக  பட்டம் பெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் பலர் உள்ளனர். தவிர, வேலையில் இருப்பவர்களும், சொந்தமாய் தொழில் செய்பவர்களும் மறைத்து போலி ஆவணங்கள் மூலமாக நிதி உதவியைப் பெற முயற்சிப்பர். இளம் பட்டதாரிகளுக்கும் மனநிலை மாறிவிடும். உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.
கடமை
பாமக நிறுவனரின் கூற்று முற்றிலும் சரியானதே. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான திட்டம் என்ற போதிலும், இத்திட்டம் மனிதாபிமான அடிப்படையிலான அற்புதமான திட்டமாகும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் வேலையில்லாமலிருக்கும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் இருந்தபோதிலும், அதைப் பெறுவதற்கான நிபந்தனைகள், உதவித்தொகை குறைவு போன்ற அம்சங்கள் திட்டத்தின் நோக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இல்லை என்பது நிதர்சனம். வேலைவாய்ப்புகள் பெருகிவிட்ட இந்நாளில், வேலை கிடைக்காது அல்லாடும் பட்டதாரிகள் சோர்ந்துவிடாதபடி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி ஊக்கமளிக்கும்  வகையில் திட்டத்தினை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமை.
கே. ராமநாதன், மதுரை.
திணிப்பு
படித்து முடித்தவர்களின் முதல் கடமை பணி தேடிக்கொள்வதுதான். அதற்காக விண்ணப்பிப்பதற்கும், நேர்முக தேர்வுக்கான பயண செலவிற்கும், வசதியற்றவர்களுக்கு மட்டும் அரசு உதவித்தொகை வழங்குவது அத்தியாவசியமாகும். அதுவும் குறிப்பிட்ட ஆண்டுக்கு மட்டும் காலநிர்ணயம் செய்து வழங்கினால் போதும். அதைவிடுத்து தேர்தல் வெற்றிக்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளாக தேவையற்ற இலவசமாக திணிப்பது, மக்களை மேலும் சோம்பேறியாக்கும். அரசின் நிதி நிலையையும் பாதிக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாக கடன் வாங்கவும் நேரும். அதை சமாளிக்க மக்கள்மீது வரிச் சுமையை திணிக்க வேண்டியிருக்கும். எனவே, பிற மாநிலங்களில் அரசு வழங்கும் சலுகைகளை தமிழகத்திலும் எதிர்பார்க்கக் கூடாது.
மல்லிகா அன்பழகன், சென்னை.
நலம் பயக்கும்
பட்டப்படிப்பு முடித்து ஆறுமாதம் வேலையில்லாது இருப்பவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் யோசனையும் ஏற்புடையதல்ல. ஆட்சியாளர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கலாம். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களை தொழில் முனைவோராக்குவது போன்றவற்றில் அரசுகள் தீவிர கவனம் செலுத்துவதே பல்வேறு வகைகளில் நல்லது. நாட்டில் இளைஞர் சக்தி என்னும் முக்கிய பலத்தை பயனுடையதாக ஆக்குவதே அரசின் சிறப்பு. பல்வேறு வகைகளில் இளைஞர்களுக்கான திறன்வளர்த்தல் பயிற்சிகளை அளித்து, அவர்களை சொந்தக்காலில் நிற்பவர்களாக உருவாக்குவதே நாட்டுக்கு நலம் பயக்கும்.
வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com