மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

குடியுரிமை சட்டம்: தமிழகத்தின் அமலாக்க மறுப்பு சரிதானா?

சாத்தியமற்றது

இச்சட்டம் ஒரு குறிப்பிட்ட மாநில மக்களுக்கு எதிரானது எனில் அம்மாநிலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு தடை எதுவுமில்லை. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை அகற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் சொல்லி, ஆட்சியமைத்தவுடன் அதற்காக தொடர்போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூறுவதற்கு நிகரானதே இதுவும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசு உடன்படாமைக்கு காரணம் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பது. ஆனால், குடியுரிமை மத்திய அரசின் முடிவு. மத்திய அரசின் முடிவை அமல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது.

த. முருகவேள், விழுப்புரம்.

அடித்தளம்

குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெüத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது . ஆனால், இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது என்று கூறுகிறார்கள். அதனால்தான், தமிழக அரசு இதனை எதிர்க்கிறது. இது இந்தியாவின் அடித்தளமான மதச்சார்பின்மையை சிதைத்துவிடும். எனவே, இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது சரியே.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அச்சம்

தமிழக அரசின் நிலைப்பாடு சரியே. இது தேர்தல் கால அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவசரகதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. பல்வேறு மொழி, இனம், மதம் மற்றும் வாழ்விடச் சூழல் அடிப்படையில் மக்கள் வேறுபட்டு இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இச்சட்டம் அவர்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் மக்களிடையே இச்சட்டம் பிரிவினையே உருவாக்கும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

உடன்பாடன்று

இந்தியாவின் தரை மற்றும் கடல் எல்லைகளில் உள்ள மாநிலங்கள்தான் இச்சட்டத்தை எதிர்க்கின்றன. தமிழ்நாடும் அதில் ஒன்று. ஆதரிக்கும் மற்ற மாநிலங்களுக்கு பிரச்னைகளும் இல்லை. அதனால் எதிர்ப்பும் இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில்தான் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தோர் அதிகம். அவர்களும் இலங்கையில்தான் குடியுரிமையுடன் வாழ விரும்புகின்றனர். அதைத்தான் தமிழக அரசும் விரும்புகிறது. இஸ்லாமியர்களுக்கு இக்குடியுரிமை திருத்த சட்டம் எதிராக இருப்பது மாநில அரசுக்கு உடன்பாடன்று. இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக அரசு அன்றே குரல் கொடுத்தது.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

சிக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை ஏற்க முடியவில்லை. ஏனெனில், மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மறுப்பதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இருந்த போதிலும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டம் அமுல்படுத்தப்படாது என அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் அறிவித்துள்ளன. நீட் தேர்வு விலக்கு போல இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதிலும் சிக்கல் தொடரும் என்றே தெரிகிறது.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தவறானது

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட முக்கியமான சட்டத் திருத்தத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது சரியல்ல. மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டிய இந்த சட்டத் திருத்தம் இனியும் தாமதப்படுதப்படுத்தினால் அது அரசியல் சட்ட அமைப்பின் நடைமுறைக்கு எதிரானதாகிவிடும். மத்திய அரசுடன் விவாதித்து, தேவையான விளக்கங்களைப் பெற்று இச்சட்டத்திருத்தத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். அதை விடுத்து, சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். மாநில அரசின் அறிவிப்பு முற்றிலும் தவறானது !

கே. ராமநாதன், மதுரை.

அரசியல்

இந்தியாவில் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கும் இங்குள்ள ஹிந்துக்களைப் போலவே சம உரிமை உண்டு. அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டில் குடியேறிய இஸ்லாமியர்கள்கூட இந்திய குடியுரிமை பெற முறைப்படி விண்ணப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாக அறிவித்திருக்கிறது. இந்த உண்மைகளை தமிழக சிறுபான்மையினருக்குப் புரிய வைத்து அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய தமிழக அரசு சட்டத்திருத்த்தை அமல்படுத்த மாட்டோம் என்று அடம் பிடிப்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறில்லை.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஏமாற்றம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கொடுமைகளை அனுபவித்தவர்களைப் பாதுகாக்கவே சட்டத் திருத்தம் என்றால் பல ஆண்டுகளாக இலங்கையில் கொடுமைகளை அனுபவித்து அடைக்கலமாக இந்தியாவுக்கு வந்திருக்கும் தமிழர்களின் நிலைகுறித்தும் மத்திய அரசு யோசித்திருக்க வேண்டுமல்லவா? இலங்கை அகதிகளாக தமிழக முகாம்களில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவோர் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமே.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

பாதிப்பு இல்லை

தமிழக அரசு அறிவித்திருப்பது சரியல்ல. மாநில அரசின் அறிவிப்பு மக்களை திசைதிருப்பும் வேலையாக இருக்கலம். அல்லது தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காத் திட்டமாகவும் இருக்கலாம். இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத் திருத்தத்தால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இஸ்லாமியர்களிடம் எந்தவொரு ஆவணத்தையும் அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களிடம் ஏற்படுத்தும் குழப்பத்தை தமிழக அரசு ஏற்படுத்துவது தவறானது.

தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

சமூகநீதியல்ல

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மை இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை மறுத்து ஹிந்து, பார்ஸி, சீக்கியர் போன்ற பிரிவினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்க முன்வந்திருப்பது சமூகநீதிக்கு புறம்பானதாகும். சமூகநீதிக்கு முக்கியத்துவம் தரும் திமுகவின் கொள்கைக்கு எதிராக இஸ்லாமிய அகதிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசு அதை அமல்படுத்த முடியாது என்று கூறுகிறது. குடியுரிமை பெறுபவர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜகவின் நிலைப்பாடு சரி என்றால் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவும் சரியானதுதான்.

தி. சேகர், பீர்க்கன்கரணை.

உள்நோக்கம்

2019}ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முனைவது உள்நோக்கம் கொண்டதாகும். மேலும், இச்சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். அது மட்டுமல்ல, மொழி, இனம், மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் நாடு இந்தியா. அந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதில் தவறில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

மிகவும் சரி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்தேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களில் மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெüத்தர்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் மட்டும் இந்தியக் குடியரிமை பெறலாம் என இச் சட்டம் கூறுகிறது. இந்தப் பட்டியலில் இஸ்லாமியர்கள் மட்டும் விடுபட்டுள்ளனர். இவர்களும் தங்கள் நாட்டில் தங்களுக்கேற்பட்ட நெருக்கடிகளிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள இந்தியா வந்தவர்களே. எனவே, தமிழக அரசு, இத்திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தமாட்டாது என்று அறிவித்திருப்பது மிகவும் சரியே.

நா. ஜெயராமன், பரமக்குடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com