தனிச் சட்டம் தேவையில்லை!
ஏற்கெனவே பல சட்டங்கள் இருக்கின்றபோது தனியான ஒரு சட்டம் தேவையில்லை. ஏனென்றால் இருக்கின்ற சட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தினாலேயே போதுமானது. அது மட்டுமின்றி, எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றாத வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. மருத்துவமனைகளில் ஏற்படுகின்ற பாதுகாப்பு இன்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து அதில் இருக்கின்ற குறைகளை ஒவ்வொன்றாகக் களைய வேண்டும். மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தாலே பாதி பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
சரியான கருத்து!
பணியாற்றும் இடங்களில் அங்கு பணியாற்றுவோர் மீது தாக்குதல்கள் நடப்பது இயல்பே. எல்லாருக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தருவது கடினம். அதற்கான தனிச் சட்டங்களும் சாத்தியமற்றது. மருத்துவர்களின் பாதுகாப்புக்கு தனி மத்தியச் சட்டம் என்பது தேவையற்றது எனும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள பணிக்குழு தெரிவித்த கருத்து சரியானதே.
கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி
சட்டம் அனைவருக்கும் பொது!
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும் சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டம். அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய சட்டம், இருட்டறையாக மாறும்போது தனி நபர் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பிற்கெனத் தனி மத்தியச் சட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த பணிக்குழு தெரிவித்துள்ளது சரியே.
எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.
குறைகளைக் களைவதுதான் தீர்வு!
மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என்று பொதுமக்களுடன் அன்றாடம் கலந்து பணிபுரிபவர்கள் அதிகம். அரசு மருத்துவர்கள் பல்வேறு காரணங்களால் பொதுமக்களின் திருப்திக்குரியவகையில் பணிபுரிய முடியவில்லை என்பது நடைமுறை உண்மை. அந்த குறைகளைக் களைவதுதான் இந்த பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
புறக் காவல்நிலையம் தேவை!
அரசு அலுவலர்கள் அலுவலகத்தில் தாக்கப்படும் நிகழ்வு எப்போதாவது நடைபெறுகிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம். அனைத்து மருத்துவ மனைகளிலும் புறக்காவல் நிலையம் அமைக்கலாம். மருத்துவர்கள் மனித நேயத்துடன் சிகிச்சை அளிக்கவேண்டும். பல இடங்களில் அலட்சியமாக நடப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மருத்துவர்கள் அலட்சியம் இல்லாமல் கனிவுடன் சேவை செய்யும்போது பாராட்டுகளைப் பெறுவார்கள்.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.
கவலை அளிக்கிறது!
ஏற்கனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம். பல்வேறு துறைகளில் நியாயமாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் அலுவலர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாவது கவலை அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவப் பணியை செய்து வரும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை உணர்ந்து பொதுமக்கள் அவர்களை அணுகுவது நல்லது.
மா. பழனி, கூத்தப்பாடி.
மாநில சட்டங்களே போதும்!
நம் சட்டங்களை எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் தேசநலன் கருதி அதற்குரிய அதிகாரிகள் துணிச்சலாக, நேர்மையாக அமல்படுத்தினாலே போதும். பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அப்படித்தான் மருத்துவர் பாதுகாப்புக்கும் மாநில சட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தினாலே போதும் என்பதே உச்சநீதிமன்ற கருத்தாகும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
எதில்தான் ஆபத்தில்லை?
மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தனி மத்திய சட்டம் தேவையில்லை. இப்படி ஒரு பிரிவினருக்குப் பாதுகாப்பு கொடுத்தால் எல்லாரும் பாதுகாப்பு கேட்பார்கள். எந்த தொழிலில்தான் ஆபத்து இல்லை? எதையுமே நாம் எதிர் கொள்ளும் விதத்தில்தான் அதில் நன்மையும், தீமையும் நடக்கும். உச்சநீதி மன்றம் அமைத்த பணிக்குழு தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை.
உஷா முத்துராமன், மதுரை.
வெளிப்படையான பேச்சிருந்தால்...
மருத்துவர்களின் சேவை மற்றும் முக்கியத்துவத்தை மத்திய அரசு நன்றாகவே உணர்ந்துள்ளது. அவர்களுக்கான முழுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பாரத நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) சட்டம் இயற்றப்பட்டு மருத்துவர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கூடுதலாக அதில் சேர்க்கப்பட்டுள்ளன. புதுப்புது சட்டங்களைப் போடுவதால் எந்த நன்மையும் இல்லை. மருத்துவர்களுக்கும் நோயாளியின் குடும்பத்தினருக்குமிடையே வெளிப்படையான பேச்சிருந்தால் மோதல்களுக்கு வாய்ப்பே இல்லை.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.
உறவுப் பாலம்!
இருக்கிற சட்டங்களை சரியான தருணத்தில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் செயல்படுத்தப்படும் நிலையில் எந்த ஒரு சூழ்நிலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மருத்துவர்கள் பாதுகாப்பு அவசியமானது. அவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கும் இடையே உறவுப்பாலம் உருவாக்க வேண்டும். சட்டம் இயற்றுவது மட்டுமே எந்த ஒரு சூழ்நிலையையும் கட்டுபடுத்தாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ப. நரசிம்மன், தருமபுரி.
மாநிலங்களில் சட்டம் உள்ளது!
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, தேசியப் பணிக் குழுவை அமைத்தது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவை இல்லை என்று அந்த அமைப்பு கருதக் காரணம், ஏற்கெனவே வன்முறையைத் தடுக்க 24 மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன என்றும் இரண்டு மாநிலங்கள் இது தொடர்பான மசோதாக்களை சட்ட சபையில் தாக்கல் செய்துள்ளதாலும், தடுக்க பிரத்யேக சட்டம் இல்லாத மாநிலங்களில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தலாம். தனி மத்திய சட்டம் தேவை இல்லை என்பதாகும்.
என் வி சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
ஒரு சிலரே மருத்துவர்கள்!
மருத்துவர்கள் பாதுகாப்புக்குத் தனி மத்திய சட்டம் தேவையில்லை என்று உச்சநீதி மன்றம் அமைத்த பணிக் குழு சொல்வது சரிதான். நம் நாட்டில் மருத்துவர்கள் மட்டும் இல்லை. இருக்கும் மக்கள் தொகையில் ஒரு சிலரே மருத்துவர்கள். மற்றவர்கள் அனைவரும் பொது மக்கள். இப்படி மருத்துவர்களின் பாதுகாப்புக்கும் மட்டும் தனி மத்திய சட்டம் வேண்டும் என்று கேட்பது சரியில்லை. இதனால் உச்சநீதி மன்றம் அமைத்த பணிக் குழு அதை வேண்டாம் என்று சொல்வது சரியானதே,
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
நிர்வாகத்தில் சீர்திருத்தம்!
தனிப்பட்ட முறையில் மருத்துவர்களுக்கு மட்டும் தனியாக பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றுவது என்பது மற்ற பணி செய்பவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய ஏற்றத் தாழ்வையும் இடைவெளியையும் ஏற்படுத்திவிடும். மருத்துவர்களுக்கு என்று தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றினால் ஒவ்வொரு துறையினரும் அவரவர்களுக்கு என்று தனித்தனி சட்டம் இயற்றும்படி கோரிக்கை எழுப்புவார்கள். ஆகவே பாதுகாப்பு என்பது எல்லா பணியாளர்களுக்கும் அவசியம் என்பதை உணர்ந்து அரசு அனைத்து பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பை முறையாக வழங்க அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தி. சேகர், பீர்க்கங்கரணை.
மருத்துவர்களின் பணிச்சுமை!
இது நீண்ட கால பிரச்னை. அரசு செய்ய வேண்டியது மருத்துவர்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றுவது இல்லை. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை. மருத்துவர், நோயாளிகள் விகிதாச்சாரத்தை குறைத்து மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதுதான் இப்பிரச்னைக்கான நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.
க.சக்திவேல், கும்பகோணம்.
பல நோயாளிகளைப் பார்த்தாக வேண்டும்!
அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் நோயாளிகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இதுவே தொடர்கிறது. நோயாளியை எந்தச் சூழ்நிலையிலும் (முதியோராக இருந்தாலும்) மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றவே நினைக்கிறோம். ஆகவே நோயாளி பற்றிய நிலையை அறிய நோயாளியின் பாதுகாவலர் ஆவலாகவே உள்ளார். ஆனால் எந்தச் சூழலிலும் மருத்துவரைத் தாக்குவது பெருங்குற்றமாகும். மருத்துவர் பல நோயாளிகளைப் பார்த்தாக வேண்டும். இப்போதுள்ள சட்டத்தில் மருத்துவர் பாதுகாப்புக்கான பல விதிகள் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தினாலே போதும்.
நா.ஜெயராமன், பரமக்குடி.