மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தேர்தலே காரணம்!
வரப்போகிற 2026 - தமிழக சட்டபேரவைத் தேர்தலே மத்திய அரசை டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்திருக்கிறது, சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போது இருப்பதை விட, கூடுதல் இடங்களைப் பாஜக பெறுவதற்காகவே ஏலம் விடுவதை ரத்து செய்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஏலம் விடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வளர்மதி ஆசைத்தம்பி,
தஞ்சாவூர்.
மக்களின் போராட்டம்!
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம், மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டிருப்பது மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும். தங்களின் வாழ்விடம் பறிபோகும் சூழல் ஒரு பக்கம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடிபெயர வேண்டிய சூழல் மறுபக்கம். இதனால் மக்கள் நடத்திய போராட்டம், ஏல அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
மா.பழனி, கூத்தப்பாடி.
பல்லுயிர் பாரம்பரிய தளம்!
டங்ஸ்டன் சுரங்க ஏலம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டதால் அந்தக் கிராம மக்களின் இயற்கையின் மீதான பற்று மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரிட்டாபட்டி, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளம். மக்களின் நம்பிக்கை மற்றும் ஆர்வம் ஆகியவற்றை மட்டுமல்லாமல், அங்கு வாழும் 250-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 200 குளங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், சமணப் படுக்கைகள், குடைவரை கோயில்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அருணா சிவக்குமார், சேலம்.
அனைவரின் எதிர்ப்பு!
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பத் தொழில்களுக்கு இன்றியமையாத ஓர் உலோகமான டங்ஸ்டன், விவாதத்தின் மைய கருப்பொருளாக உள்ளது. இந்தியா தற்போது அதன் டங்ஸ்டன் தேவையை பெருமளவில் இறக்குமதி செய்து வரும் நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தேவையான ஒன்றாகக் கருதப்பட்டது. மக்களின் தொடர் போராட்டம், ஆளுங்கட்சியின் ஆதரவு, எதிர்க்கட்சியின் ஆதரவு, குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகப் பிரிவின் ஆதரவு ஆகியவையே டங்ஸ்டன் சுரங்க ஏலம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டதற்கான முக்கியக் காரணமாகும்.
முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மகிழ்ச்சியான செய்தி!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்கள் அழிப்பு, மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்த விஷயம் ஆகியவை அந்தப் பகுதி மக்களைப் போராடத் தூண்டின. மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த பிரச்னைக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தின. இந்த பிரச்னை உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் சுரங்கம் அமைக்கக் கூடாது என தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசும் இது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தெரிவித்தது. மாநில அரசின் கண்டிப்பான முடிவினாலும், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களினாலும், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பைத் திரும்பப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி.
ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
மக்களுக்கான வெற்றி!
மதுரைக்கு அருகில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான வேலை, ஒரே நாளில் நடைபெறவில்லை. இதற்கான ஆய்வுகள் மற்றும் ஆயத்தப் பணிகளின் தொடக்க காலத்தில் எந்த ஓர் அரசியல் கட்சியும் எதிர்ப்புக் குரல் கொடுக்காததை மக்கள் அறிவார்கள். மத்திய அரசின் திட்டம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்படி டெண்டர் வரை சென்றது என்ற கேள்விக்கு, வெற்றியைக் கொண்டாடுவோர் விடை அளிக்க வேண்டும். காலம் தாழ்ந்த நிலையில் வேறு வழியின்றி ஆளும் அரசால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற மக்கள் போராட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்ததாலேயே மத்திய அரசால் டங்ஸ்டன் திட்டம் திரும்பப் பெறப்பட்டது என்பதை நடுநிலையாளர்கள் அறிவார்கள்.
ப நரசிம்மன், தருமபுரி.
அரசியல் காரணங்களே!
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ஏதோ ஒரு நாளில் நடந்த நிகழ்வு போல் விமர்சிக்கப்படுகிறது. ஏல ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் தான் அந்தப் பகுதி மக்கள் விழிப்புணர்வு பெற்று, தங்களின் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து போராட்டம் செய்தனர். பின்னர் அது அரசியல் ஆகிவிட்டது. பரந்தூர் விமான நிலையப் போராட்டமும் இது போன்றதுதான். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லை. அரசின் ஆதரவும் இல்லை. மக்களின் நலன் என்பதை விட, அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டங்களுக்குக் கிடைத்தால்தான் போராட்டம் வெற்றி பெறும் நிலை உள்ளது. டங்க்ஸ்டன் ஏல அறிவிப்பைத் திரும்ப பெற்றதற்குக் காரணம் அரசியலே. மக்களின் நலன் அல்ல.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
மக்கள் சக்தியின் வெற்றி
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நாயக்கர் பட்டி பகுதிகளில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய இருப்பதாக மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு நிலைகளில் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இறுதியில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டது. இது மக்கள் சக்தியின் வெற்றி.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
கட்சி பாகுபாடு இல்லை!
மக்களுக்காகத்தான் அரசு . மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு வரலாற்றுச் சுவடுகளை, வளங்களை அழித்துவிட்டு எந்த முன்னேற்றத்தையும் அதற்கு ஈடாக மக்களுக்குக் கொடுத்து விட முடியாது என்பதை ஆளும் வர்க்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்வதற்காக அப்பகுதி மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பாராட்டத் தக்கவை. தமிழக அரசும் அதற்கு பக்கபலமாக இருந்து, சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி தன் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிய வைத்தது. அதன் காரணமாகவே மத்திய அரசு தன் முடிவிலிருந்து பின் வாங்கியது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சிகளும் மக்களின் பக்கம் நின்றதால்தான் இது சாத்தியப்பட்டது.
உதயாஆதிமூலம், திருப்போரூர்.
அரசின் கடமை!
டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள பகுதியைப் பல்லுயிர்ப் புவியியல் பூமியாக ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்து பாதுகாத்து வருகிறது. சுரங்கம் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சமணப் படுகைகளும், தமிழர்களின் பாரம்பரியக் கல்வெட்டுகளும், வரலாற்றுத் தடங்களும் இப்பகுதிகளில் அதிகமுள்ளன. தொன்மை வாய்ந்த இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. சுரங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையே குலுங்குகின்ற அளவிற்கு மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி போராட்டத்தை நடத்தினர். அதனால் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திருப்பப் பெற்றுள்ளது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.
நன்றி கூறுவோம்
மக்கள் நலனுக்கும், இயற்கைக்கும் எதிரான முடிவுகள் எடுக்கும்போது, அதனை ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு முடிவுகள் எடுக்கும் போது அதனை முறியடிக்க மக்கள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்தத் திட்டத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை காட்டியதால்தான் அந்த ஏலம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. அதற்காக நாம் மத்திய அரசுக்கும், போராட்டம் நடத்திய மக்களுக்கும் நன்றி கூறுவோம்.
அ. குணசேகரன், புவனகிரி.
பலத்த எதிர்ப்பு!
கனிம வளம், சுரங்கம் எல்லாம் ஒன்றிய அரசின் கையில் இருக்கிறது என்பதற்காக மாநில அரசை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது, கூடாது. அரிட்டாபட்டி உள்ளிட்ட அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மதிப்பளித்து, ஒன்றிய அரசு அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசின் முழு ஆதரவை ஒன்றிய அரசுக்கு அளித்து அத்திட்டம் தொடங்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தி சேகர், பீர்க்கன்கரணை.
எதிர்ப்பே காரணம்!
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல நடவடிக்கையின் ஆரம்பக் கட்ட கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழக அரசு, சுரங்கம் அமைக்க எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. பல்லுயிர் வரலாற்றுத் தளமென்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து சுரங்கம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியதால், திட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய சுரங்கத் துறை அமைச்சகம், இந்திய புவியியல் ஆய்வு மையத்தைக் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையிலேயே சுரங்க அமைப்பு ஏலம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கே.ராமநாதன், மதுரை.