"பாஜகவுடனும் ஆர்எஸ்எஸ் உடனும் மட்டுமல்ல, இந்திய தேசத்துடனும் போரிடுகிறோம்' என்கிற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வியப்பேதும் இல்லை!
ஓர் அரசியல்வாதி பதவிக்கு வர எதையும் பேசுவார்; பிறரை எப்படி எல்லாம் தாக்க வேண்டுமோ, அப்படி எல்லாம் தாக்கி பேசுவார்; பதவியைப் பெற எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை எல்லோரும் அறிவார்கள். நம் நாட்டு அரசியல் மூதாதையர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையேதான் ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார். இதில் வியப்பேதும் இல்லை.
கோ.ராஜேஷ் கோபால்,
மணவாளக்குறிச்சி.
தேச விரோதமானது!
ராகுல்காந்தியின் கருத்து ஆட்சேபத்துக்கு உரியது. இந்திய இறையாண்மைக்கு விடுத்த சவால். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பில் உள்ள தலைவர், சற்று நிதானமாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும். இந்த மாதிரியான தடாலடி கருத்துகளால் தன்னை மலினப்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறு எதையும் அவரால் சாதிக்க முடியாது. அவரது கட்சியினரும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளாதது கவனிக்கத்தக்கது. அவருடைய கருத்து தேச விரோதமானது என்று கூறினால் அது மிகையாகாது.
பி.பாலசுப்பிரமணியன்,
அம்பாசமுத்திரம்.
அனுபவ முதிர்ச்சியின்மை!
பாஜகவுடனும் ஆர்எஸ்எஸ் உடனும் மட்டுமல்ல, இந்திய தேசத்துடனும் போரிடுகிறோம் என்னும் ராகுலின் கருத்து அர்த்தமற்றது;அபத்தமானது. பாஜக மிகப்பெரிய அரசியல்கட்சி. விமர்சிக்கலாம்; தப்பில்லை. ஆர்எஸ்எஸ் உடனும் இந்திய தேசத்துடனும் போரிடுகிறோம் என்று சொல்வது எந்த வகையில் பொருந்தும்? அனுபவ முதிர்ச்சியோ, அரசியல் விழிப்புணர்வோ ராகுல் காந்தியிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
எஸ்.ஷங்கர நாராயணன், அலிவலம்.
ஜனநாயக ரீதியில்!
ஆர்எஸ்எஸ் பின்னணியில் பாஜக மைய அரசு செயல்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக செல்வாக்கு குறைந்தபோதிலும், சில கட்சிகளுடனான கூட்டணி மூலம் இந்தியாவின் ஆட்சியைத் தன்வசம் வைத்துள்ளது. எனவேதான் இன்றைய மைய ஆட்சியாளரையும், பாஜகவையும், ஆர்எஸ்எஸ் நிறுவனத்தையும் எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடுகிறோம் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.
மக்களின் ஆதரவு!
2024 -இல் காங்கிரஸ் கட்சியை 99 இடங்களில் வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சி அந்தஸ்தை அதற்குத் தந்தது இந்திய தேசத்தின் மக்கள்தான். பாஜகவுடனோ ஆர்எஸ்எஸ் உடனோ போரிடுவது என்பது அரசியல் சித்தாந்த கொள்கைப் போர். அது தவறல்ல. இந்திய தேசத்துடன் போரிடுகிறோம் என்று ராகுல்காந்தி கூறுவது பிழை. கருத்துப் பிழை. இதே இந்திய மக்களின் ஆதரவினால்தான் ராகுல் காந்தியின் முன்னோர்கள் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள்.
இ.முருகன், சென்னை.
வளர்ச்சி ஏற்படவில்லை!
ஜனநாயக வழிமுறைகளின் வாயிலாக மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் பெற்றதால்தான் சுதந்திரத்துக்குப் பிறகு பாரத பிரதமர் நேரு மக்களின் மனதை வென்று சிறப்பான ஆட்சி கொடுத்தார். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் குரல், மக்களின் குரலாகவே ஒலித்தது. நாட்டின் ஒவ்வொரு நிர்வாக அமைப்பையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி விட்டதால், இந்திய தேசத்தைக் காப்பாற்றப் போரிடுவதாக ராகுல் காந்தி கூறி வருவதை மக்கள் ஆதரிக்கின்றனர். அனைவரையும் முன்னேற்றுவதாகக் கூறிய பாஜக, அந்த வளர்ச்சியை 10 ஆண்டுகளாக ஏற்படுத்தவில்லை. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய அரசு இயந்திரம், பாஜகவின் அரசியல் கருவியாகச் செயல்படுவதால் தான் இந்திய தேசத்துடன் போரிடுவதாக ராகுல் கூறுகிறார்.
என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
மொழிபெயர்ப்பு தவறு!
ராகுல் காந்தியின் கருத்து தவறாக விவாத மேடைக் கேள்வியில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். ஏனெனில் இந்திய நாடாளுமன்றத்திலேயே இந்தியாவுக்கு எதிராக போரிடுகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூற முடியாது. பாஜக உடனும் ஆர்எஸ்எஸ் உடனும் மட்டுமில்லாது அவர்கள் கட்டமைத்த இந்திய தேசத்துடனும் போரிடுகிறோம் என்று தான் கேள்வி இருக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தியின் "அவர்கள் கட்டமைத்த' என்ற வார்த்தையை விடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பு தவறாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இந்திய நாடாளுமன்றத்திலேயே கூறும் அளவுக்கு நாடாளுமன்றம் பலவீனமாக உள்ளது என்றுதானே அர்த்தம்?
ஆ.ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
ஆதரவை இழந்துவிடுவார்!
ராகுல் காந்தி தேர்தலில் பெரும்பான்மை பெற்று எதிர்க் கட்சித் தலைவர் ஆகி உள்ளார். தனக்கு வாக்களித்த இந்திய மக்கள் மீதே அவருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. அதனால்தான் எதிர்க் கட்சிகளான பாஜகவுடனும், ஆர்எஸ்எஸ் உடனும் மட்டுமல்லாமல் இந்திய தேசத்துடனுமே போராடுகிறோம் என்று சொல்கிறார். இப்படிச் சொல்வதால், அவருக்கு வாக்களித்த இந்திய மக்களின் ஆதரவை அவர் இழந்து விடுவார் என்பதை மறந்து விட்டார். இந்திய தேசத்துடன் போரிடுகிறோம் என்பது அவருடைய கண்ணை அவருடைய கைகளாலேயே குத்திக் கொள்வது போன்றது.
நந்தினி கிருஷ்ணன், மும்பை
பேச்சைவிட சிறந்தது!
எதிர்க்கட்சித் தலைவரின் கவலை சரிதான். ஆர்.எஸ்.எஸ்-இன் மதக்கோட்பாடுகளை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. அதற்குத் துணைநிற்கும் பாஜகவையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. அதற்கு அவர் இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். இம்மாதிரியான பேச்சை விட அது சிறந்தது.
கா.ராமசாமி, கீழப்பனையூர்.
எதிரி அல்ல!
ராகுல் காந்தி அவர்களின் இந்த மனப் போக்கு விசித்திரமாக உள்ளது. எல்லோரிடமும் நட்பாகப் பழகினால் அவர்களுடன் போராட வேண்டிய அவசியமே இல்லை. இந்திய நாட்டை ஆளும்கட்சியை வேண்டுமானால் அவருக்கு எதிரியாகக் கருதி, அவர்களிடம் தன் கருத்தை தெரிவிக்க போராடலாம். ஆனால் ராகுல் காந்தி என்ற மனிதனைத் தாங்கி இருக்கும் இந்திய தேசத்துடன் எதற்கு அவர் போராட வேண்டும்? பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றை எதிர்க்கட்சி என்ற அளவில் மட்டும் பார்க்க வேண்டும். எதிரி என்று நினைக்கக் கூடாது.
உஷாமுத்துராமன், மதுரை.
தலைகுனிய வைத்துவிட்டது!
இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாட்டையே எதிர்ப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. இச்செயல் இந்தியாவின் ஜனநாயகத்தை உலக நாடுகள் சந்தேகிக்க வழிவகுக்கும். மேலும் இவரது பேச்சு காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணியையே தலைகுனிய வைத்துள்ளது. எனவே "ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு' என்ற வள்ளுவரின் வாக்கை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும்.
தோ.லஷ்மி நரசிம்மன், ஸ்ரீரங்கம்.
போராட்டம் அனுமதிக்கப்பட்டதே!
பாஜகவுடனும் ஆர்எஸ்எஸ் உடனும் மட்டுமல்ல, இந்திய தேசத்துடனும் போரிடுகிறோம் என்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து, அவரின் மிகுந்த மனவேதனையின் வெளிப்பாடாகவே உள்ளது. ஏனெனில் இந்திய தேசத்தின் அங்கங்களாக இருக்கக் கூடிய அமைப்புகள் எல்லாவற்றையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தன்வசப்படுத்தியிருக்கிறது. ஆர்எஸ்எஸ்}இன் தலைவரான மோகன் பாகவத் சமீபத்தில் "சுதந்திரம் பெற்றது 1947-இல் இல்லை; ராமர் கோயில் கட்டியபிறகே' என்ற கூறியதற்குப் பிறகே ராகுல் காந்தி இவ்வாறு பேச நேர்ந்தது. ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அனுமதிக்கப்பட்டதே. ராகுல் காந்தியும் போராட்டம் என்ற பொருளில்தான் அவ்வாறு பேசியுள்ளார்.
ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
தன்னை நிலைநிறுத்த வேண்டும்!
இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் இராகுல்காந்தி தன்னை ஆளுமை மிக்க தலைவராக நிலைநிறுத்த போராட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இல்லாமல் போய் விடுமோ என்ற நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் மூலம் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மட்டுமே, வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்யும். எனவே, அரசியல் நிகழ்வுகள் குறித்த ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போராட ராகுல் காந்தி முன்வர வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
ப.நரசிம்மன், தருமபுரி.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்...
இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என்பது உலகறிந்த உண்மை. இங்கு அனைத்து மதத்தினரும் பிற மதத்தினரின் மனம் புண்படாத வகையிலும், வேற்றுமை உணர்வு இல்லாமலும் தத்தம் மதக் கோட்பாடுகளையும், சடங்குகளையும் அனுசரித்து, சகோதர உணர்வுடன் பழகி வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக மைய அரசின் செயல்பாடுகள் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் மைய அரசு செயல்படுவதை அது கொண்டுவரும் சட்டங்கள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ராகுல் காந்தி இத்தகைய கருத்தைக் கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
எம்.ஜோசப் லாரன்ஸ்,
சிக்கத்தம்பூர் பாளையம்.