வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது குறித்து... வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மருத்துவர் ராமதாஸ் பிரச்னைகளை நான்கு சுவற்றுக்குள் வைத்து தீர்வு காணாமல் பொதுக்குழுவிலும் பொதுவெளியிலும் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவருக்கும் கட்சிக்கும்தான் அவமரியாதையாகும்.
Published on

ஒப்படைக்க வேண்டும்...

மருத்துவர் ராமதாஸ் பிரச்னைகளை நான்கு சுவற்றுக்குள் வைத்து தீர்வு காணாமல் பொதுக்குழுவிலும் பொதுவெளியிலும் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவருக்கும் கட்சிக்கும்தான் அவமரியாதையாகும். மறைந்த முதல்வர் கருணாநிதி ஓசையின்றி தனது பொறுப்பை ஸ்டாலினிடம் தந்துவிட்டு பெயரளவுக்கு முதல்வராயிருந்தார். அதே போன்று நடந்து கொண்டு அன்புமணியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதே அவருக்கு மன அமைதியைத் தரும்.

உ. இராசமாணிக்கம், கடலூர் .

பரிதாப நிலை

பாமகவை குடும்பக் கட்சியாக முத்திரை குத்தியவர் ராமதாஸ்தானே. சத்தியத்தை மீறி தப்பு செய்து விட்டதாக வருந்துவதை எப்படி நம்புவது? ஆக, பாமக நிறுவனர் ராமதாஸூம், அவரது குடும்பத்தை மட்டுமே கவனிப்பதுபோல அன்புமணியும் அவரது குடும்பத்தை மட்டுமே கவனிப்பதால் இந்தச் சிக்கல். குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் ஒரு அரசியல் கட்சி இருந்தால் வளர்ச்சி மட்டுமே தடை படாது; காலப்போக்கில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும்.

சீ. காந்திமதிநாதன்,கோவில்பட்டி.

இருவருமே பொறுப்பு...

ராமதாஸூக்குப் பிறகு தலைமைப் பட்டம் ஏற்க வேண்டியவரே தன் கட்சியின் தலைவருமான தந்தையுடன் இப்படி மோதுவது அவர்களுக்கும் நல்லதல்ல; கட்சிக்கும் நல்லதல்ல; இந்தச் சண்டையால் அதிர்ச்சிக்குள்ளானவர்கள் கட்சித் தொண்டர்கள்தான். இது எதிர்வரும் தேர்தலில் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ராமதாஸூம் அவரது மகனும் உணராமல் பதவி வெறி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மோதுவது அழகல்ல. குடும்பச் சண்டை வீதிக்கு வந்து விட்டதற்கு இருவருமே பொறுப்பு.

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

தவறில்லை

மகன் பிறந்தவுடனேயே இப்படிதான் இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் தந்தை வளர்க்கும்போது தந்தையின் எதிர்பார்ப்பை அந்த மகன் நிறைவேற்றாவிட்டால் கண்டிப்பாக வளர்த்த கிடாவே மார்பில் உதைத்து விட்டது என்றுதான் சொல்வார்கள். பாசமுள்ள குடும்ப வாழ்க்கையையும், கருத்து வேறுபாடுகள் நிறைந்த அரசியல் வாழ்க்கையையும் ஒன்றாக எண்ணக் கூடாது. வீட்டுக்கு வந்தவுடன் தந்தையும், மகனுமாக இருக்க வேண்டும். வீட்டிலும் மகனை அரசியல்வாதியாகவே தந்தை பார்ப்பதால் அவர் இப்படி சொல்வதில் தவறு இல்லை.

உஷா முத்துராமன், மதுரை.

ஒரு உரைக்குள் ஒரு கத்தி...

பாமக என்பது ராமதாஸால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட இயக்கமாகும். அந்த அடிப்படையில் கட்சி யார் கையிலும் போய்விடக் கூடாது என்பதற்காகத் தனது மகனைத் தலைவராக்கினார். பதவியை அனுபவித்த பின் அதை வேண்டாமென்று சொல்பவர் யார்? இது இன்றைய அரசியல் உலகில் மிகவும் சாதாரணமானதே. இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். இதுவே ஒவ்வொரு அரசியல் தந்தையும் செய்ய வேண்டியது. ஒரு உறைக்குள் ஒரு கத்தி தான் இருக்க முடியும்.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

எங்குதான் இல்லை?

வளர்த்த கிடாவே மார்பில் உதைத்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது அவருக்கு அனுபவம்! கட்சிக்கு அவமானம்! இதே போன்று வாரிசு அரசியல் நடத்திய கருணாநிதி கூட எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும், அதனை சாதுர்யமாக சமாளித்தார். பிகாரிலும், தெலங்கானாவிலும், வாரிசு மோதல்கள் தொடர்கின்றன. பொறுமை பெருந்தன்மை சகிப்புத்தன்மை ஆகியவற்றில் ஒரு படி மேலாக இருக்க வேண்டிய ராமதாúஸ இளமை திரும்பியது போல் ஈகோ பிரச்சனையில் சிக்கித் தவிப்பது கட்சிக்கு நல்ல உதாரணமல்ல!

ஆர்.ஜி .பாலன், திசையன்விளை.

கட்சியை வளருங்கள்

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ' என்ற சிலப்பதிகார உண்மையை ராமதாஸ் மட்டுமல்ல, வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டிய தருணம் இது. களப்பணியில் அயராது பாடுபடும் அடிமட்டத் தொண்டர்களை கட்சி பொறுப்புகளிலும் உயர் பதவிகளிலும் அமர வைத்து அழகு பார்க்கும் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்ட கிடா மார்பில் உதைக்காது. இனி வருந்தாமல் புதிய குழப்பங்களை ஏற்படுத்தாமல் கட்சியை வழி நடத்துவதிலேயே அவரது புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது.

நா. உஷா, தருமபுரி.

ஏற்க இயலாது

வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை ஏற்க இயலாது. கட்சியைத் தோற்றுவித்து போராடி வளர்த்தது அவரே. ஆனால், அவரின் புதல்வர் அன்புமணி ராமதாஸின் பங்களிப்பையும் புறந்தள்ள முடியாது. இன்று இளைஞர்கள் அனைவரும் அன்புமணி பக்கம் தான். எனவே முதுமையில் அனைத்துப் பொறுப்புகளையும் மகனுக்கு வழங்கி ராமதாஸ் ஆலோசகராக இருப்பதுதான் சிறந்தது.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்

துரதிருஷ்டவசமானது

மக்களின் நலனை உறிஞ்சுகின்ற ஊழல்கள் ஒழிய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்கள் வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக கட்சிகளின் கூட்டணி பற்றிய பேச்சுகள் தீவிரமாக உள்ளன. கட்சிகளின் சங்கமம் தேவையாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் உள்கட்சிப் பூசலில் பாமக அகப்பட்டுக் கொண்டு தந்தையும் மகனும் ஒருவரின் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, கடலூர்.

சமரசம் அவசியம்

என் குடும்பத்திலிருந்து யாராவது கட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்னை சாட்டையால் அடிக்கலாம் என்று சத்தியம் செய்து விட்டு மகன், மருமகள், பேரன் என்று அனுமதித்ததன் விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறார் ராமதாஸ். அன்புமணி மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மெளனமாக அனுமதித்தபோது அது கட்சியைப் பாதிக்கும் என்று அவருக்குத் தெரியாதா? தொண்டர்கள் சோர்ந்து போவதற்குள் நிலைத்த சமரசத்துக்கு முன்வருவதுதான் கட்சிக்கும், தமிழக அரசியலுக்கும், வரும் தேர்தலுக்கும் உகந்தது.

ஜ. அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை.

இயல்புதான்....

பதவி, அதிகாரம், அரசியலில் இது இயல்புதான். ஷாஜகானுக்கு ஒரு ஒளரங்கசீப் சரித்திர சம்பவங்கள்கூட தவறான முன்னுதாரணக் காட்சிகள்தான். குடும்ப அரசியலில் எதிர்பார்த்த ஒன்றுதான். அன்புமணியை பாமகவின் முதல்வர் வேட்பாளர் என 2016, 2021}இல் சட்டப்பேரவை தேர்தல்களில்கூட ராமதாஸ் ஆதரித்து பிரசாரம் செய்தார்அன்று; அன்புமணிக்கு எதிராக சொற்களை வீசுகிறார் இன்று; நாளை, ராமதாஸூம் , அன்புமணியும் இணைந்து கட்சி நடத்துவார்கள்; தமிழ்நாடு வாக்காளர்கள் ஏற்பார்கள்.

இ.ஆர்.கிருஷ்ணன், சென்னை.

நியாயமானது...

தன் சொந்த வாக்குறுதியையும் மீறி இதர அரசியல்வாதிகளைப்போல் வாரிசு அரசியல்வாதியாகத் தன் மகன் அன்புமணியையும் களமிறக்கி, மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்து நற்பெயர் வாங்கினார். இப்போது குடும்ப அரசியல் காரணமாக தந்தை, மகன் இருவரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, கட்சி பிளவுபடும் நிலையில் உள்ளது. கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் பாமக நிறுவனர் வேதனையில் வெளிப்படுத்திய வார்த்தைகள் நியாயமானது !

கே.ராமநாதன், மதுரை.

வளர்ச்சி குறையும்

ஜி.கே. மணியிடமிருந்து தலைவர் பதவியைப் பறித்து மகனுக்குக் கொடுத்து விட்டதால் அரசியலில் கஷ்ட} நஷ்டங்கள் பற்றி ஏதும் தெரியாமல் கிடைத்த தலைமைப் பதவியை வைத்து கட்சி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அன்புமணி முயற்சிக்கிறார்.வயதைக் காரணம் காட்டி ராமதாஸ் ஒதுங்கி இருக்கலாம். ஆனால், வீம்பு காட்டுகிறார். இது அன்புமணிக்கும் அவரது மனைவிக்கும் பிடிக்கவில்லை. இருப்பினும் அன்புமணி இப்போதுதான் பொறுமை காட்டி தந்தையை நேரடியாக எதிர்க்காமல் சற்றே ஒத்துபோனால் ராமதாஸþக்குப் பின்பு கட்சி தானாகவே அவர் கைக்கு வந்துவிடும். அவசரப்பட்டால் பாமக தானாகவே உடைந்து பாழாகும்; ஆக பலவற்றையும் யோசித்தால் வாரிசு அரசியலால் நாடும், மக்களும் வளர்ச்சிக்குப் போகாது.

மகிழநன், கடலூர்.

யாருக்குமே...

நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ பதவி ஏற்க மாட்டோம் என்றார். எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரியில்லை என்றால் சாட்டையால் அடியுங்கள் என்றார். இன்றோ மகனை அமைச்சராக்கியது தவறு என்கிறார். மருமகனுக்கு சீட் கொடுத்ததற்கு காரணம் சொல்கிறார். வன்னிய சமுதாய வாக்குவங்கியை வைத்துகொண்டு பண்ணை வீட்டில் இன்று வளர்த்த கிடா என்று மகன் குறித்துக் கூறுகிறார். இங்கே யாருக்கும் வெட்கம் இல்லை.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

X
Open in App
Dinamani
www.dinamani.com