Enable Javscript for better performance
அரசியலாகும் நேரு பிறந்த நாள் மாநாடு!- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் பிரதமர் மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் மாநாடு அரசியலாகியுள்ளது.

    ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு ஒருபுறமும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் ஏற்பாடு செய்து வரும் விழாக்களே இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    நேரு பிறந்த நாளையொட்டி, தில்லி தால்கடோரா விளையாட்டரங்கில் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிய காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்ற தகவலை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் காங்கிரஸ் மேலிடம் அழைப்பிதழ் அனுப்பவில்லை.

    நேரு பிறந்த நாளையொட்டி, மத்திய கலாசார துறை சார்பில் தில்லி விஞ்ஞான் பவனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாரதத்தின் முதலாவது பிரதமரான நேருவின் 125-ஆவது பிறந்த நாள் நிகழ்வு இந்த முறை ஆளும் கட்சிக்கும், எதிரணியில் உள்ள காங்கிரஸூக்கும் இடையில் நிலவும் அரசியல் போட்டியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவற்றின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே தனது கைப்பட கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அமைய தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், அதன் தலைவர் சரத் பவாருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நேரு பிறந்த நாள் விழா அமைப்பாளருமான ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

    "காங்கிரஸ் நடத்தும் சர்வதேச மாநாட்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், சீன கம்யூனிஸ்ட் கட்சி, வங்கதேசத்தின் அவாமி லீக், நேபாளி காங்கிரஸ், வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்ஸாய், கானா நாட்டு முன்னாள் அதிபர் ஜான் குஃபுவர், நேபாள முன்னாள் பிரதமர் மாதவ் கே. நேபாள், பூட்டான் ராணி அஷி தோர்ஜி வாங்மோ வாங்சுக் உள்ளிட்ட தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். நேருவின் சிந்தனைகளை உளப்பூர்வமாக மதிப்பவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் அளித்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மதிக்கும் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் நேருவின் நோக்கத்தை திசை திருப்பும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். அதனால்தான் குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை' என்றார் அவர்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது நேருவின் 125-ஆவது பிறந்த நாள் விழாவை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கொண்டாடத் திட்டமிடப்பட்டது.

    இதையொட்டி, 125-ஆவது பிறந்த நாள் விழாவை 2015-ஆம் ஆண்டு, நவம்பர் 14-ஆம் தேதி வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசு சார்பில் மத்திய கலாசாரத் துறையும் காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவும் விழாக்களை நடத்த நியமிக்கப்பட்டன.

    இந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, நேருவின் 125-ஆவது பிறந்த நாள் விழாக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்தார். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை.

    இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் மேலிடம், நேருவின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, தில்லியில் வரும் 14, 15 ஆகிய நாள்களில் சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க 54 நாடுகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai