Enable Javscript for better performance
இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி:எழுச்சி பெறுமா இந்திய அணி?- Dinamani

சுடச்சுட

  

  இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி:எழுச்சி பெறுமா இந்திய அணி?

  By kirthika  |   Published on : 27th May 2016 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அடுத்தடுத்த தோல்விகளை தொடர்ந்து எழுச்சி பெறும் முனைப்புடன் இந்திய அணியினர் களமிறங்குகின்றனர்.

  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது.

  இதில் முதலிரண்டு டி-20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி, வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடைபெறவிருந்த கடைசி டி-20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

  டி-20 தொடரை தென் ஆப்பிரிக்க வசம் இழந்த பிறகு, இந்திய அணி ஒரு நாள் தொடரில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டாய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக கேப்டன் தோனி, கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

  இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்ற தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தில் நடந்த ஒரு நாள் தொடர், அதன் பிறகு தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் டி-20 தொடர் என அடுத்தடுத்து தொடரை இழந்து வருகிறது.

  ரஹானேவுக்கு வாய்ப்பு: இந்த சூழலில் ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் உள்ளனர். ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. டி-20 போட்டியோடு ஒப்பிடுகையில் அணியில் ஓரிரு மாற்றங்களே இருக்கும். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் இணைகிறார். ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் மன் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ஆசையில் உள்ளார்.

  வழக்கம் போல் ஷிகர் தவண், ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்குவர். டி-20 போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத ரஹானே, அம்பாதி ராயுடுவுக்கு பதிலாக நடுவரிசையில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  டி-20 தொடரில் விளையாடியதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக ரன் குவிக்கும் முனைப்பில் விராட் கோலி உள்ளார். இவர்களைத் தொடர்ந்து தோனியும், ரெய்னாவும் களம் காண்பர்.

  பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு இப்போது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. பின்வரிசையில் ஸ்டூவர்ட் பின்னி ஆல்ரவுண்டர் பணியை கவனத்திக் கொள்வார். அவர் தவிர, பந்துவீச்சு பணியை கவனித்துக் கொள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் உள்ளனர்.

  அச்சுறுத்தும்

  டி வில்லியர்ஸ்: தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை டி-20 தொடரை வென்ற அதே உற்சாகத்தில் ஒரு நாள் போட்டியையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேனும் அணியின் கேப்டனுமான டி வில்லியர்ஸ் டி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையிலும், அது அவருக்கு போதிய திருப்தியை அளிக்கவில்லை. இதனால், ஒரு நாள் தொடரில் முன்பை காட்டிலும் இந்திய பந்துவீச்சாளர்களை அவர் கூடுதலாக அச்சுறுத்துவார். டி வில்லியர்ûஸ போலவே ஜே.பி.டுமினியும் இந்திய பந்துவீச்சைசிதறடித்து வருகிறார்.

  கைல் அபோட், ககிசோ ரபடா ஆகியோர் டி-20 போட்டியில் செயல்பட்டதை போலவே இந்த முறையும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளனர்.

  அவர்கள் தவிர அந்த அணியில் நிறைய பகுதிநேர பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இம்ரான் தாஹிரும், ஆரான் பங்கிசோ மட்டுமே கைதேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்களாக உள்ளனர். டி-20 தொடரில் பங்கேற்காத டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கெல் ஆகியோர் ஒரு நாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

  போட்டிக்கான இரு அணி வீரர்கள்:

  இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவண், விராட் கோலி, புவனேஷ்வர் குமார், அக்ஷர் படேல், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா.

  தென் ஆப்பிரிக்கா: ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குவின்டன் டி காக், ஃபாப் டுபிளெஸ்ஸிஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், ஃபர்ஹான் பெஹர்டியன், கிறிஸ் மோரீஸ், கயா ஜோண்டோ, ஆரோன் பங்கிசோ, இம்ரான் தாஹிர், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கெல், கைல் அபோட், ககிசோ ரபடா.

  கேப்டன் "குரல்'

  ரஹானே மேல்வரிசையில் நன்றாக விளையாடக் கூடியவர். எனவே, நாங்கள் அவரை 5 அல்லது 6-ஆவது இடத்தில் களமிறக்க விரும்பவில்லை. அவருக்கு வாய்ப்பளித்தால் முதல் 3 வீரர்களில் ஒருவராக களமிறங்குவார். இல்லையெனில் களமிறங்கும் அணியில் அவரை காண்பது கடினம்.

  - மகேந்திர சிங் தோனி,

  இந்திய கேப்டன்.

  "ஒரு நாள் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம். இப்போதுதான் மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகிறோம். டி-20 தொடர் முடிந்துபோன ஒன்று. இனி புதிய அத்தியாயம். இந்தியா எழுச்சிபெற முயற்சிக்கும். அதனை தடுப்போம் என்று நம்புகிறேன்'

  -டி வில்லியர்ஸ்,

  தென் ஆப்பிரிக்க கேப்டன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai