Enable Javscript for better performance
கிறித்துவ தமிழ் வேதாகமத்தின் 305-ஆம் பிறந்த நாள்- Dinamani

சுடச்சுட

  

   

  வேத புத்தகமே (தமிழ்) வேத புத்தகமே

  வேதபுத்தகமே விலைபெற்ற செல்வம் நீயே

  பேதைகளின் ஞானமே பெரிய திரவியமே

  பாதைக்குத் தீபமே பாக்யர் விரும்பும் தேனே – மா நல்ல

  என்னை எனக்குக் காட்டி என் நிலைமையை மாற்றி

  பொன்னுலகத்தைக்காட்டிப் போகும்

  வழி சொல்வாயே – மா நல்ல

  பன்னிரு மாதங்களும் பறித்துண்ணலாம் உன் கனி

  உன்னை தியானிப்பவர் உயர்கதி சேர்ந்திடுவார்.- மா நல்ல

                           - அருளானந்தம்

   (கிறிஸ்துவ சபை பாமாலை, தமிழ்க் கீர்த்தனை 212: CLS, 27th Edition June 2013 சென்னை)

   

  இத்தகைய மாமனிதரின் சாதனைகளில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டி அவரது வாழ்க்கையின் பின்னணி என்னவென்பதை கற்றறிந்துகொள்ள விளைகின்றோம்.

  அகில உலக மனிதரிலும் அன்பு கூறும் இறைவன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தேசத்தின் தென்பகுதியில் வாழ்ந்த “மலபாரி” என்று அந்தக் காலக்கட்டத்தில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென ஓர் மாமனிதனையும் அவர் மூலம் வேறு பலரையும் ஆயத்தம் செய்து இந்திய மண்ணிலே சமய சமுதாய வளர்ச்சிக்கென விந்தைகள் பல இறைவன் செய்துள்ளார் என்பதையும் தமிழ் வேதாகமத்தின் முந்நூற்று ஐந்தாம் ஆண்டு கொண்டாடும் இன்று நாம் நினைவுபடுத்த முனைகின்றோம்.

  “எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன் கர்த்தா உன் கருணையைப்பாடிப் புகழ்ந்து” எனும் (காந்தியடிகள் விஜயம் செய்த திருப்பத்தூர்) கிறிஸ்துகுல ஆசிரம நிறுவனர்  டாக்டர் சவரிராயன் ஏசுதாசனின் வார்த்தைகள் எத்தனை பொருத்தமன்றோ? ( கிறித்தவ தமிழ் கீர்த்தனை 92)

  குழந்தைப்பருவமும் ஆரம்ப கல்வியும்

  பர்த்தலோமியோ, காத்ரீனாள் எனும் ஜெர்மானிய பெற்றோருக்கு 1683 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி சீகன்பால்கு பிறந்தார். அவர்கள் நவதானியம் விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவருக்கு மூத்த சகோதரிகள் நான்கு பேரும் இளைய சகோதரன் ஒருவனுமாகக் குடும்பத்தில் ஐந்தாம் குழந்தையாக பிறந்தார். மிகவும் செல்வந்தராக வாழ்ந்த இவர்கள் தெய்வபக்தியை ஈடற்றதாகக் கருதினர். எனவேதான் வீட்டில் குடும்ப வாழ்க்கையில் ஜெபம், வேதவாசிப்பு, ஆலய வழிபாடு ஆகியவற்றில் கருத்தாய்க் வளர்க்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே சீகன்பால்கு தனது தாயாரை மரணத்தில் இழந்தார். மரணமடைந்த தாயார் இறைவனோடு நெருங்கிய உறவில் வாழ்ந்த ஒரு பக்தியான பெண்மணி ஆவார்.  மரணப்படுக்கையில் இருந்தபோது தன்னைச் சூழ நின்று கண்கலங்கிய தனது பிள்ளைகளைப் பார்த்து, “என் பிரிய பிள்ளைகளே! நான் உங்களுக்காக விலைமதிக்க முடியாத சொத்து ஒன்றை சேமித்து வைத்திருக்கின்றேன். அந்த சொத்து வேதாகமத்தில் இருக்கின்றது. வேதாகமத்தை வாசிக்கும் போது, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். அந்த வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கமும் என் கண்களின் நீரால் நனைந்திருக்கின்றது” என ஆறுதல் கூறியிருந்தார். அந்த தாயாரும்  மரணமடைந்த இரண்டே ஆண்டுகளில் அவர் தனது தந்தையையும் மரணத்தில் இழந்தார். அதுவும் பட்டணத்தில் நேரிட்ட ஓர் நெருப்பு விபத்தின் காரணமாக நிகழ்ந்ததோர் சோக சம்பவமாகும் அது. அதே ஆண்டில் தனது சகோதரிகளில் ஒருவரையும் அவர் இழக்க நேரிட்டது.

  ஆறு வயது சிறுவனாகிய சீகன்பால்குவை இந்தச் சம்பவங்கள் மிகவும் பாதித்தன. தனிமையும் துயரமும் இறைவனின் சமுகத்தை அயராது நாடிச் செல்ல அவரைத் தூண்டிற்று. ஆறுதலும் ஞானமும் அவருக்கு அத்தியாவசியமாயிற்று. அவர் எதைச் செய்தாலும் அதில் ஆர்வம் நிறைந்தவராக ஈடுபட்டார். தியானமும் வேதவாசிப்பும் அவர் உள்ளத்தை ஈர்க்க, அவை அவரது தனிப் பழக்கங்களாயின. 12ஆம் வயதில், 1694 ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்தார். அருள்திரு வைஸ்மான் எனும் பள்ளித் தலைமை ஆசிரியரும் உள்ளுர் திருச்சபை போதகருமான ஒருவரை சந்தித்தார். இசை பற்றிய சிறந்த வார்த்தைகளைக் கூறிய ஓர் கிறித்தவ இளைஞன் சீகன்பால்குவைப் பார்த்து, “இசை என்பது கனிவானதோர் கலையாம் ஆனால் இறைவனோடு நல் உறவில் வாழ்ந்து ஆன்மிக வாழ்வில் தீவிரம் காட்டுவோர் மாத்திரமே இசையின் உயரிய இன்பத்தை அடைதல் இயலும்” என குறிப்பிட்டாராம். உலகின் நட்பை வெறுத்துவிடு, எனது நட்பை உனக்கு பூரணமாகத் தருகிறேன் என்றும் கூறி அவ்விழைஞன் சீகன்பால்குவை உற்சாகப் படுத்தினானாம். அதன் விளைவாகப் பள்ளி உடன் மாணவனாகிய இவ்விழைஞனுடன் அவரது நட்பு வளர்ந்தது. தனது சுற்றுச் சூழ்நிலைக் குறித்த தெளிவான அறிவிலும் சீகன்பால்கு விருத்தியடைந்தார். வேதாகமத்தை இருவருமே ஒன்றாக இணைந்து கற்றறிந்தனர், ஆன்மிகக் காரியங்களை விவாதித்து நேரம் செலவிட்டனர். இறைவனை இயற்கையில் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர். அத்தகைய நட்பில் வளரும் வேளையில் சீகன்பால்கு தனக்குள் இறைவனின் ஆசீரும் இரக்கமும் பெற்று மகிழவும் அவ்வின்பத்தைப் பிறருடன் பகிரவும் தனக்குள் ஓர் தூண்டுதல் வளருவதை உணர்ந்தார். எனவே தொடர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். தன் வாழ்நாளின் இறுதிவரை வேதாகமம் அவரது நெருங்கிய தோழனாகக் காணப்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

  பதினெட்டாம் வயதில் பக்தி எழுச்சி ஊட்டும் ஓர் இயக்கத்தில் அவர் சேர்ந்தார். அவ்வியக்கம் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் ஜெர்மானிய தேசம் முழுவதும் செயல்பட்டு வந்தது. தனி பக்தி வாழ்க்கை குறித்து வலியுறுத்திய அந்த இயக்கம், சுயநலத்தினின்றும் பேராசையினின்றும் மனிதன் விடுதலை பெற ஊக்குவித்து வழிகாட்டியது. மேலும் இறைத்தொண்டும் சுயம்பாராது அர்ப்பணிக்கப்பட்ட மனிதபொதுநல பணிவிடையும் முக்கியமானதெனவும் போதித்தது. இதுமுதல், தனக்குள் பெருகி வழிந்தோடிய உள்ளத்தின் மகிழ்ச்சியும், சமாதானமும் பற்றி மிகவும் அக்கறையுள்ளவராகக் காணப்பட்டார். புத்தகம் வாசிக்கும் ஓர் பித்தனாக சிறுவயதிலேயே ஆர்வங் கொண்ட சீகன்பால்கு நாளடைவில் சரீர பலவீனத்துடன் மிகவும் நோய்வாய்ப்பட்டு 1702 ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பெர்லின் மாநகரிலுள்ள இன்னுமொரு பள்ளிக்கு அதே ஆண்டு அவர் சென்றபோது அங்கே அவரை அருள்திரு யோயாக்கீம் லாங்கே என்பவர் சந்தித்தார். மொழியாக்கம் செய்யும் கலையை அவர் அங்கேதான் கற்றறிந்தார். லாங்கே அவர்கள் சீகன்பால்குவிற்கு எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் கற்றுத்தந்தார்.

  லாங்கே என்பவர் பிற்காலத்தில் சீகன்பால்கு இந்தியாவிலிருந்த காலத்தில் அனுப்பிய அனைத்துக் கடிதங்களையும் அச்சிட்டு ஜெர்மானிய தேசம் முழுவதும் விநியோகம் செய்தார். சீகன்பால்குவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த இன்னுமொரு முக்கிய பிரமுகர் ஹலே பல்கலைக்கழகப் பேராசிரியரான ஆகஸ்ட் ஹெர்மான் பிராங்கே என்பவராவார். அவரே பக்தி இயக்கத்தின் பெருந்தலைவராகவும் காணப்பட்டார். சீகன்பால்குவின் உடல் நலக் குறைவு, மற்றும் சிக்கல்களை அறிந்த இப்பேராசிரியர் சீகன்பால்குவை இறையியல் கற்றுக்கொள்ள ஹல்லே செல்ல தூண்டினார். அங்கே இவர் மாணவ சமுதாய வாழ்விலும் ஆசிரியர் பலருடன் கொண்ட உறவுகளின் விளைவாக மகிழ்ச்சியுடன் தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார். வெற்றிகரமாகத் தனது படிப்பை முடித்த சீகன்பால்கு மெர்சேபாக் எனும் ஊருக்கு சபைகுருவாக நியமனம் பெற்று சென்றார். அங்கு பிதைத்தாப்ட் என்பவர் இவரிடம், “காலமெல்லாம் சபைக்குருவாக குருசேகர பணியாற்றி கிறிஸ்தவ சபை மக்களுக்கு பணியாற்றுவதை விட, இறைத் தொண்டராக நற்செய்தி பணியில் ஈடுபட்டு ஒரு ஆத்துமாவையாகிலும் ஆதாயம் செய்தாலும் கூட அதுவே தலைசிறந்த தொண்டாகும்” எனக் கூறி சீகன்பால்குவை உற்சாகப் படுத்தினாராம்.

  இந்திய நற்செய்தி இறைப்பணிக்கு இறைவனின் அழைப்பு

  1705 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் சீகன்பால்கு புளுச்சௌ ஆகிய இருவரும் கோபன்ஹேகன் தேவாலயத்தில் குருத்துவ அபிஷேகம் பெற்றனர். அப்போஸ்தலர் 26: 17, 18 ஆம் வாக்கியங்களைக் கொண்டு சீகன்பால்கு அருளுரை ஆற்றினார். சீகன்பால்கு நிகழ்த்திய அருளுரை கேட்டு மகிழ்ந்த அரச குடும்பத்தினர் சீகன்பால்குவை அவரது வாழ்நாளின் இறுதிவரை அரச குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவராகப் பாராட்டினார். 17.11.1705 அன்று கோபன்ஹேகனில் செய்யப்பட்ட அரச விளம்பரத்தின் விவரம் கீழ்வருமாறு: “அருள்திரு சீகன்பால்கு அருள்திரு புளுச்சௌ ஆகிய இருவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நமது அரசவை நற்செய்தித் தெண்டராகத் தெரிந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்றுள்ளனர். நாம் ஆளுகை செய்யும் அனைத்து கிழக்குத் தேசங்களிலும், இறைவனுடைய பரிசுத்த வசனத்தை இவர்கள் போதிக்க வேண்டும். மனசோர்வு இன்றி இந்து மற்றும் பிற மார்க்கங்களைச் சார்ந்த அனைவருக்கும் ஆகஸ்பர்க் அறிக்கையில் அடங்கிய அனைத்து உண்மைகளையும் போதிக்கவேண்டும், மக்கள் இரட்சிப்பின் அறிவை இவர்கள் வழி பெற்றுக்கொள்ள வேண்டும். நமது நற்செய்தித் தொண்டர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் அனைத்து ஈடுபாடுகளிலும் அரசுடன் நல்லுறவு கொண்டு என்ன செய்தாலும் அரசின் நல்லாலோ சனை பெற்றுச் செயல்பட வேண்டும், நல்வாழ்த்துக்களுடன்”. இவர்களின் நற்செய்திப் பணித்தொண்டு மேற்கத்திய அமெரிக்க தீவுகளிலா அல்லது ஆப்பிரிக்க கன்டத்தின் கினியா தேசத்திலா எனும் விவாதம் நீண்ட நாட்கள் இருந்த போதிலும், இறுதியில் அவர்கள் இந்திய பணித்தளம் செல்லுதல் உறுதிபடுத்தப்பட்டது.

  சீகன்பால்கு அவர்கள் 1705 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் பிரியாவிடை கூறி ஆகஸ்ட் ஹெர்மான் பிராங்கே அவர்களுக்கு ஒரு கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். “இறைவன் ஆச்சரியமாகத் தமது ஞானத்துடன் எங்களை வழிநடத்தியிருக்கின்றார். ஆபிரகாமை இறைவன் கேட்டுக் கொண்டது போல, எங்களையும் கூட எங்களது நாட்டையும், எங்களது மக்களையும், எங்களது நண்பரையும் விட்டு இறைவன் எங்களுக்கு காட்டும் நாங்கள் அறியாத தேசத்திற்குச் செல்லுங்கள் என்று பணித்துள்ளாh.;” சீகன்பால்குவின் இந்த வார்த்தைகள் அனைவரின் உள்ளங்களையும் தொட்டன. 1705 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி அன்று இவர்கள் இருவரும் பிரின்ஸஸ் சோபியா ஹெட்லிக் எனும் கப்பலில் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். யோசுவா 1:9, 1 நாளாகமம் 16:24, ஏசாயா 46:4 மற்றும் சங்கீதம் 91:11, 12 ஆகிய வேதாகமப் பகுதிகளைத் தியானித்தவர்களாக ஏழு மாதங்கள் கப்பல் வழியாக இந்தியா சென்றனர்.

  நன்னம்பிக்கை முனையில் கப்பல் சில காலம் தங்கிற்று. அப்பொழுது இவர்கள் இருவரும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு சந்தித்த மக்களுக்கு நற்செய்திப் பணியாற்றினர்.

  தங்களது பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களுக்கு ஒரு புத்தகம் வடிவம் கொடுத்தனர். அதன் தலைப்பு “The General School of True Wisdom”. அதின் பொருள் “உண்மையான ஞானத்தின் பொதுக்கல்விக்கூடம்” என்பதாகும். 1710 ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டது. தங்களது நீண்ட பயணத்தை “மரணத்தின் ஆய்வுச்சாலை” எனும் பொருள்பட “Academy of Death” எனவும் “விசுவாச சோதனை” எனும் பொருள்பட “A Test of Faith” எனவும் விவரித்தனர். பயணத்தின்போது கப்பலின் தலைவன், பெண்மணி ஒருத்தியிடம் முறை கேடாக நடந்து கொண்டதைப் பார்த்து அவரைக் கண்டித்து பெண்களை மரியாதையுடன் நடத்துவதின் அவசியத்தை கப்பல் தலைவனுக்கு சீகன்பால்கு கற்றுத்தந்தார். அதன் விளைவாக கப்பலை விட்டு இறந்கி ஊருக்குள் செல்ல அனுமதி இழந்து பல நாட்கள் காய்ந்த ரொட்டியையும் உப்புத் தண்ணீரையும் சாப்பிட நேர்ந்தது. ஆயினும் இறைத்தொண்டரோ “வாராவினை வந்தாலும் சோராதே மனமே வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே” (கீர்த்தனை 203) எனும் மனதுணிவுடன் முன்னேறிச் சென்றனர்.

  தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

   

   

   

  அந்நாட்களில் வியாபாரம் மற்றும் மீன்பிடிக்கும் தொழில் அனைத்திற்கும் தரங்கம்பாடி ஒரு பட்டணமாகத் திகழ்ந்தது. பதினேழாம் நூற்றாண்டில் டேனிஷ் தேசத்தவருடனுள்ள வாணிகத் தொடர்பினால் தரங்கம்பாடி பிரபலமாயிற்று. அந்நாட்களில் வியாபாரம் மற்றும் மீன்பிடிக்கும் தொழில் அனைத்திற்கும் தரங்கம்பாடி ஒரு பட்டணமாகத் திகழ்ந்தது. பதினேழாம் நூற்றாண்டில் டேனிஷ் தேசத்தவருடனுள்ள வாணிகத் தொடர்பினால் தரங்கம்பாடி பிரபலமாயிற்று. ஜென்சி’ன் என்பவர் தரங்கம்பாடி பற்றிக் கீழ்க்கண்ட விவரங்களை நமக்குத் தருகின்றார் “தரங்கம்பாடி ஐரோப்பிய பாணியில் திட்டமிடப்பட்ட பாதுகாவல் நிறைந்த ஒரு பட்டணமாக அமைக்கப்பட்டிருந்தது. சதுர வடிவில் ஒழுங்கு செய்யப்பட்ட முக்கிய தெருக்களும், அந்த தெருக்கள் அனைத்துமே டேனி’ஷ் பெயர் சூட்டப்பட்டவைகளாகவும் இருந்தன. அப்பெயர்கள் இன்றும்கூட வழக்கத்தில் உள்ளதை அறியலாம். இராஜவீதி எனும் சாலை ஒன்று பிரதான சாலையாகப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் பிரபல சாலையாகவும் இருந்தது. இப்பொழுதும் அப்படியே இருக்கின்றது. உயர் அதிகாரிகள் வசதி நிறைந்த மாளிகைகளிலும், ஐரோப்பாவின் நடுத்தரமானவர்கள் புதிய தெருவிலும் குடியிருந்தனர். 1712 ஆம் ஆண்டின் போவிங் எனும் நற்செய்தி தொண்டரின் அறிக்கையின் படி டேனிஷ் குடிமக்கள் 24 பேர் அக்காலத்தில் அங்கு குடியிருந்தனர். டேனிஷ் கோட்டையின் பிரபுக்களாக அவர்கள் திகழ்ந்தனர். ஐரோப்பியர் மத்தியில் ஜெர்மானியருக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது. டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் இவர்கள் பலரும் பணிபுரிந்தனர். மேலும் போர்த்துக்கீசியர் 100 நபர்களும் (கலப்பட மக்கள்) மற்றும் 500 ரோமன் சபைக் கிறித்துவர்களும் காணப்பட்டனர்.

  சீகன்பால்கு மற்றும் புளுச்சௌ ஆகியோரின் தரங்கம்பாடி வருகையும் தமிழ் மொழி கற்றுக் கொள்ளுலும்

  தரங்கம்பாடி மக்கள் பேசிய போர்த்துகீசு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளையும் கற்றுக் கொண்டால் மாத்திரமே நற்செய்திப் பணியினையும் இறைத்தொண்டினையும் மக்களிடையே நிறைவேற்ற இயலுமென உணர்ந்தனர். சீகன்பால்கு தமிழ் மொழியையும், புளுக்சௌ போர்த்துகீசு மொழியையும் கற்றுக் கொள்ள தீர்மானித்தனர். 1707ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் வெளிவந்த ஓர் அறிக்கையின் படி சீகன்பால்குவின் தமிழ்மொழி ஆசிரியர் தமிழ் எழுத்துக்களை ஓலைச் சுவடிகளில் எழுதி, குழந்தைகளுக்கான இராகத்தோடு கற்றுத் தந்தாராம். சீகன்பால்கு அம்முறையைப் பின்பற்றியே பாடம் கற்க முயன்றாராம். தமிழ் எழுத்துக்களைக் கற்றபின்னர், சிறுசிறு வார்த்தைகளும் பின்னர் கற்றுக் கொடுக்கப்பட்டது.. இத்ததைய பயிற்சிகள் பலநாட்கள் தொடரவும் இறைத்தொண்டர் சீகன்பால்கு வார்த்தைகளை நினைவில் கொள்ளவும், முறையே அவற்றை உச்சரிக்கவும் உதவியாக இருந்தது”.

  அந்த நாள் மாணவர் போலவே சீகன்பால்கு மணலில் அமர்ந்து, விரல்களைப் பயன்படுத்தி இரண்டே ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அந்நாட்களில் தமிழ்மொழி கற்றுக் கொள்வது மாத்திரமே தனது இலட்சியமென முழு மூச்சாய் செயல்பட்டார். .ஜெர்மான், பெர்டு பிஸ்கன் மற்றும் அர்னோ லேமென் எழுதிய ஏடுகளினின்று, மலபாரி மக்களென அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்த்துசீசு மொழியில் கொச்சையாக பேசியபடியால் சீகன்பால்கு முதலாவதாகச் சற்று போர்த்துசீசு கற்றுக்கொண்டு பின்னர் தமிழ் ஆசிரியரைத் தனது பள்ளிக்கூடத்தைத் தனது வீட்டிலே நடத்த அழைப்பு விடுத்தார் எனவும் அறிகின்றோம். சீகன்பால்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் கற்றுக் கொள்ளும் மாணவரையும் மிக உன்னிப்பாக முழுநேரமும் கவனித்தது உச்சரிப்பு கற்றுக் கொள்ள மிகவும் உதவியாயிருந்தது. அலேப்பா எனும் மொழியாக்கம் செய்பவரை தனது பணியில் அமர்த்தினார். நற்செய்தி இறைத்தொண்டர் அனைவருமே மொழியைக் கற்றுக்கொள்வதில் அலேப்பா மிகவும் பயனுள்ளவராயிருந்தார்.

  தமிழ் மொழியைக் கற்றுத் திறனுடன் பயன்படுத்தும் தனது வளர்ச்சியைக் கண்ட சீகன்பால்கு அத்திறமையை அவருக்குத் இறைவன் தந்ததோர் வரம் கன ஏற்றுக்கொண்டு இறைவன் அவரைத் தொடர்ந்து தமிழ்மக்கள் மத்தியில் பணிபுரிய விரும்புகின்றார் எனும் ஓர் அடையாளமாகவும் கருதினார். சில ஆண்டுகள் பணிக்குப் பின்னர் ஐரோப்பா திரும்பி செல்லவேண்டுமென கோபன்ஹேகனில் முதலமுறையாக அவர் எடுத்த தீர்மானத்தை அவர் இப்போது மாற்றி தனது வாழ்வின் இறுதி மரணம்வரை தமிழ்மக்கள் மத்தியிலே வாழ்ந்து இறைத் தொண்டுபுரியவும் தீர்மானித்தார்.

  தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட தனது அனுபவத்தைப் பற்றித் தனது சொந்த வார்த்தைகளிலே அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். “எழுதவும் பேசவும் திறன்பெற வேண்டுமென அதற்கு உதவும் புத்தகங்களை மாத்திரமே தெரிந்தெடுத்து வாசித்து பிறரைப் பார்த்து பின்பற்றினேன். நூறு தடவைகளுக்கும் மேலாகப் பிறர் எனக்கு வாசிக்க நான் செவிமடுத்துக் கேட்டேன்.  ஏனெனில் ஒரு வார்த்தையிலும் கூட நான் பேசுவதிலும் எழுதுவதிலும் பிழை ஏற்படக் கூடாது என விரும்பினேன். நான் இந்தியா வந்துள்ள கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறை கூட ஜெர்மானிய மற்றும் இலத்தீன் மொழிப் புத்தகம் ஒன்றைக் கூட தொடவில்லை. அனைத்து அன்றாடக விவகாரங்களனைத்தையும் மலபார் மொழியில் (1709) என் தாய்மொழிபோலவே இலகுவாக வெளிப்படுத்த முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல புத்தகங்களைத் தமிழ்மொழியில் எழுதி முடித்து மகிழ்ந்தேன்…”

  தமிழ் மொழி படிப்பதற்கான அன்றாடக அட்டவணை

  பிரான்சிஸ் லுட்கன்ஸ் என்பவருக்கு சீகன்பால்கு 22.8.1708ல் எழுதிய கடிதத்தில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். “காலை மணி 7 முதல் 8 மணி வரையில் முந்தின நாளில் கற்றுத்தரப்பட்ட சொல் அட்டவணையையும், சொற்றொடர்களையும் மீண்டும் மீண்டும் சொல்லி பயிற்சித்தேன். காலை 8 மணி முதல் 12 மணி பிற்பகல் வரை இதுவரையும் வாசித்து இராத புதிய புத்தகங்களை மலபாரெனும் தமிழ் மொழியில் கவிஞனும் ஆசிரியருமான ஒருவர் முன்னிலையில் உரத்த குரலில் வாசித்தேன். சிக்கலான சொற்களையும் தொடர்களையும் ஆசிரியர் எனக்கு விவரித்துக் காட்டினார். பழக்கத்தில் இருந்த சில கொச்சை வார்த்தைகளைப் புரிந்து கொள்வது எப்படியெனவும் அவற்றை எழுத்துவடிவில் தரும் போது எழும் மாற்றங்களையும் அவர் விவரித்துச் சொல்வார். பின்னர் 3 மணியிலிருந்து 5 மணி வரையில் பிற்பகல் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்தேன். 6.30 மணி முதல் 8.00 மணிவரை மலபாரரெனும் தமிழ்மொழி எழுத்தாளர் ஒருவர் என் கண்பார்வைக்கு ஓய்வுதரும் நோக்கில் புத்தகங்களை நான் செவிமடுக்க அவர் எனக்காக வாசித்து வருவதும் உண்டு. இத்தகைய பயிற்சிகள் தமிழ் மொழியுடன் ஓர் பிணைப்பை எனக்கு ஏற்படுத்தின.”

  மாற்றம் பெற்றுவந்த அன்றைய தமிழ் எழுத்துக்களின் அமைப்பும், எழுதும் வழக்கங்களும்

  அக்காலத்தில் அச்சு இயந்திரம் இந்தியாவில் இல்லை. ஓலைச்சுவடிகளில் மாத்திரமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு மக்கள் அவைகளை விலை கொடுத்து வாங்கி வாசிக்கும் நிலைமை காணப்பட்டது. மேலும் ஓலைச்சுவடிகளின் விலையும் அதிகமாயிருந்தது. ஓலைச்சுவடிகளின் இயல்புக்கு ஏற்ப எழுத்து உருவங்களும் எழுதும் பழக்கங்களும் மாறி மாறிவந்தன. ஓலைச்சுவடிகளின் பின்புற எழுத்துக்களைப் பாதிக்காதபடி முன்பக்க எழுத்துக்களில் புள்ளிகள் வைப்பது தவிர்க்கப்பட்டது. எழுதும்போது எழுத்தாணியால் ஓலைகள் கிழிந்து விடாமலிருக்க இது துணைபுரிந்தது. ஓலைகளுக்கு பாதிப்பு வராதபடி பார்த்துக்கொள்ள எழுத்துக்களின் உருவங்களை அப்பொழுது சரித்து சாய்வாகவே எழுதுவதும் வழக்கத்திலிருந்தது. செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள (horizontal) அல்லது வான விளிம்புக்குச் செங்கோணத்திலுள்ள (vertical) எழுத்து முறை ஓலைச்சுவடிக்கு பாதிப்பு விளைவிக்கின்ற நிலையில் இருந்தது. ஓலையில் எழுதும்போது உயிர் எழுத்துக்களில் குறுகிய மற்றும் நீண்ட எழுத்துக்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் இல்லாமலே எழுதப்பட்டது. மெய்யெழுத்துக்களிடையேயும் தெளிவான வேறுபாடுகள் இல்லாமல் எழுதப்பட்டன. இதன் விளைவாக எழுதும் எழுத்தில் பல குழப்படிகள் இருந்தன என்பது உண்மையே. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்களுக்கு அச்சு வடிவம் கொடுக்கும் வரைக்கும் தமிழ் எழுத்து உருவங்கள்; மாறிக்கொண்டேயிருந்தன.

   

   

   

  ஸ்ரீனிவாச ஐயங்கார் 14 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலைமை நீடித்தது எனக் குறிப்பிடுகின்றார். சென்னைக் கிறித்துவ கல்லூரி பேராசிரியர் கிப்ட் சிரோமணி என்பவர் சங்ககாலத்திலிருந்து (கி.மு. 250லிருந்து கி.பி.250 வரை). கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எழுத்துக்கள் தமது அமைப்பையும், உருவத்தையும் எழுதும் முறைகளையும் கிட்டத்தட்ட 17 விதங்களில் மாற்றிவந்துள்ளன எனக் குறிப்பிடுகின்றார்.

  அச்சு இயந்திரமும் தமிழ் அச்சு எழுத்துக்களும்

  தமிழ் வேதாகமம் தமிழ் மக்களுக்கு எனும் சீகன்பால்குவின் கனவு நனவாக இங்கிலாந்து தேச ஆங்கிலிக்கன் சபையின் “கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்தி சங்கத்தினர்” (S.P.C.K) தரங்கம்பாடி இறைத்தொண்டு சங்கத்திற்கு அன்பளிப்பாக அச்சுப்பொறியினைத் தந்தனர். ஜெர்மானிய தேசத்தில் தயாரிக்கப்பட்ட தமிழ்மொழி எழுத்துகளின் அச்சுகள் இந்தியாவிலுள்ள தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தன. பிரெஞ்சு தேச கடற்படையினர் அச்சு எழுத்துக்களைக் கொண்டு வந்த கப்பலை அரசியல் காரணமாகக் கடத்தி சென்ற நிலையில் இங்கிலாந்து தேச சபை சங்கத்தினர் அன்றைய சென்னை ஆளுநரை அணுகி அவர் மூலம் கப்பலையும் மீட்டனர். அச்சு இயந்திரமும், அச்சு எழுத்துக்களும் இறைத் தொண்டுக்கென துறைமுகம் வந்து சேர்ந்த போதிலும் அச்சுக் கோர்த்து இயந்திரத்தை திறம்பட இயங்கச்செய்யும் பயிற்சி பெற்ற ஜோனாஸ் ப்ரான்ஸ் என்பவர் கரை சேர இயலாது கப்பலிலே மரணமடைந்தார். ஆயினும் தரங்கையில் வாழ்ந்து வந்த டேனிஷ் அரச போர் வீரர் ஒருவருக்கு அச்சு இயந்திரம் இயக்கும் திறன் உண்டென கண்டுபிடித்த சீகன்பால்கு அவர் சேவையை நாடி தனது பணிவிடையைத் தொடர்ந்தார். 1712 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் நாள் கிரண்டுலர் சென்னை சென்று அச்சு இயந்திரத்தையும் நூறு ரீம் அச்சடிக்கும் காகித்தாளையும் எடுத்து வந்தார். தமிழ் அறிஞர் சிலர் உதவியுடன் உருவாக்கப்பட்ட 17000 சொற்கள் அடங்கியதோர் அகராதியும் தரங்கம்பாடி நற்செய்தித் தொண்டு சங்கத்தால் சீகன்பால்கு தலைமையில் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் ஹலே என்னும் ஜெர்மானிய நகரில் வெளியிடப்பட்ட ‘கிராமடிக்கா டாமுலிகா’ எனும் பிரபலநூலும் தமிழ் இலக்கண இலக்கிய அறிவிலும் அனுபவத்திலும் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழியாக்கம் செய்யவும் பின்னர் பழைய ஏற்பாட்டை துவங்கவும் அவருக்கு துணைநின்றன. மீனாட்சி சுந்தரம் அவர்கள் சீகன்பால்கு பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “இந்த இறைத் தொண்டு விவகாரத்தில் சீகன்பால்கு நிகரற்றவராய், தனி இடம் பிடித்தவராய் சிறந்து நிற்கின்றார். அச்சு இயந்திரத்தை இந்தியாவிற்கு அவர் கொண்டு வந்தது மட்டுமின்றி அச்சுக்குரிய தமிழ் எழுத்து வரைப்பாளம் செதுக்கி தமிழ் வார்த்தைகளையும் எளிதாகவும் வாசிக்க வசதி செய்து தந்தவராவார்”.

   

   

   

  தமிழ் வேதாகம மொழியாக்கத்தின் முதல் நிறைவு

  1708 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் சீகன்பால்கு கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து தமிழ் வேதாகமத்தை மொழியாக்கம் செய்ய முனைந்தார். பல்வேறு மொழிகளாகிய ஜெர்மன், இலத்தீன் டச்சு, டேனிஷ் மற்றும் போர்த்துக்கீசு ஆகிய மொழிகளில் ஏற்பட்ட புதிய ஏற்பாட்டு மொழியாக்கங்களையும், பிற வேதாகம வியாக்கியான அறிவுரை நூல்களையும் அவர் ஆழ்ந்து ஆராய்ந்தார். தனது மொழியாக்கத்தில் அதிகாரங்களை மாற்றாது அப்படியே விட்டு விட்டார். வசன எண்களை அவ்விதமாக விடமுடியாது போயிற்று. ஐரோப்பிய முறையில் வாக்கியங்களை உருவாக்குவது போல் தமிழ் மொழியில் செய்ய இயலாததெனக் கண்ட அவர் வசனங்களின் எண்களை மாற்றியமைப்பது அவசியமாயிற்று. சில வசனங்களின் வாக்கியங்களைப் பொருள் தர இணைப்பதும் பிரிப்பதும் அவசியமாயிற்று.

  தமிழ் மொழியானது வாசிப்பதிலும் எழுதுவதிலும்; எபிரேய மொழி போல் கடினமே ஆயினும் சாத்தியமற்ற ஒன்றல்ல. எனினும் சீகன்பால்கு அவர்களைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி மீது அவருக்கு இருந்த ஆர்வமும், தமிழ் மக்கள் அறிவில் சிறந்தோர் மட்டுமின்றி இறைபற்று நிறைந்தோரெனவும் உயர்ந்த அபிப்பிரயம் கொண்டிருந்தார். ஆயினும் இயேசு கிறிஸ்துவில் தாம் கண்ட பேரின்ப சமாதானத்தை தமிழ் மக்களும் பெற்று மகிழ வேண்டும் எனும் இலட்சியமே அவரது பணிவிடைகளைத் தூண்டும் கருவிகளாயிருந்தன. எவ்வாறாயினும் புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழியாக்கம் கிரேக்க மூல மொழிபோல் முன் வடிவின் தமிழ் மொழியில் பொருள் தந்தது. முதல் புதிய ஏற்பாடு மொழியாக்க நகல் 1711 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி ஆயத்தமாயிற்று. 235 ஓலைச்சுவடிகளில் கையால் எழுதப்பட்ட தமிழில் மொழியாக்க புதிய ஏற்பாட்டின் தொகுப்பு இன்றும் கூட கோபன்ஹேகனிலுள்ள அரச வாசகர் புத்தக சாலையின் கையால் எழுதிய பிரதிகள் உள்ள பிரிவில் பாதுகாக்கப்படுகின்றது. கோபன்ஹேகன் செல்லுவோர் இன்றுகூட அன்று கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடுகளை கண்டு மகிழலாம்.

  இத்தகைய விசித்திரமானதும் புதுமையானதுமான வளர்ச்சிகள் காரணமாக இதுவரை தமிழ் மொழியில் காணப்பட்ட செய்யுள் நடைமுற்றிலுமாக உரைநடைக்கு மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது. வார்த்தைகளுக்கு இடையே இடம்கொடுக்காமல் சேர்த்தே இதுவரை எழுதி வந்த பழக்கத்திற்கு நாளடைவில் 1848 ஆம் ஆண்டிலே ஒருபெரிய திருப்பம் உண்டாயிற்று. சென்னை வேதாகம சங்கத்தினர் முதல் முறையாக தமிழ் வேதாகமங்கள் அச்சிட்டபோது வார்த்தைகளுக்கிடையேயும் வாக்கியங்களுக்கு இடையிலும் இடம்விட்டு எழுதும் முறையை அறிமுகம் செய்து வாசகர் அனைவருக்கும் தெளிவையையும் எளிமையையும் தந்தனர் என்பதை தமிழ் இலக்கிய களஞ்சியத்தின் முற்சுட்டிய கட்டுரை ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார். சீர்த்திருத்தச் சபையை பர்த்தலோமேயு சீகன்பால்கு எப்பொழுது நிறுவினாரோ அப்பொழுதே அச்சுத்தொழிலும் நிரந்தரமாக இந்தியாவில் நீடிக்க வழி பிறந்தது. 24 வயதில் ஜெர்மனியின் புகழ்பெற்ற நகரமான ஹலேயிலிருந்து இந்தியா வந்த ஜெர்மானிய லுத்தர்ன் நற்செய்தி இறைத் தொண்டர் இந்தியாவில் முதன்முதலில் நிறுவிய சீர்த்திருத்த சபையுடன் பதினேழாம் நூற்றாண்டில் அகில உலகமும் அறிய புகழ் பெற்றதோர் அச்சுக்கலைக் கூடத்தையும் நிறுவினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வேயாகும்.

  வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு மொழியாக்கம் இன்னும் நிறைவு காணாத நிலைமையிலிருந்த போதிலும் 1719 ஆம் ஆண்டு 37 ஆம் வயதில் சீகன்பால்கு தொண்டர் முதிரா நிலை மரணத்தை சந்தித்தார். அவரது கல்லறையில் இன்று நாம் காணும் வாசகம்: “Glory to the King of universe who gave to the Tamilians, first among the Indians, their first New Testament”. ஏனைய இறைத்தொண்டர் முழு வேதாகம மொழி பெயர்ப்பின் அவரது கனவை நனவாக்கும் பணியில் துரிதமாக முனைந்தனர். பெஞ்சமின் சூல்ட்ஸ் என்பவர் சீகன்பால்கு இறந்த பிறகு அதே ஆண்டு இந்தியா வந்து தரங்கம்பாடி சேவையில் இணைந்து வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் மீதியான அனைத்துப் பகுதிகளையும் மொழியாக்கம் செய்தார். 1723 ஆம் ஆண்டிலிருந்து 1727 ஆம் ஆண்டுக்குள்ளாக முழு பழைய ஏற்பாட்டு வேதாகமப் பகுதிகளையும் நான்கு பகுதிகளாக அச்சிட்டு அவர் பிரசுரித்தார். தமிழ் மொழி ஆர்வலரும் தமிழ் மக்களின் நண்பருமான பர்த்தலோமேயு சீகன்பால்கு மற்றும் புளுச்சோ, கிரண்டுலர் ஆகிய அனைவரது வழி நாமும் நின்று இறைப்பணி மற்றும் பொதுப்பணி நிறைவேற்றி நாம் பெற்ற அனைத்து இன்பமும் இவ்வையகம் பெற்றிட நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம்; ஊக்கமாக உழைத்திடுவோம், ஜெபித்திடுவோம். நாம் வாழும் உலகமும் நமது பாரததேசமும் நம் தாய்மொழி தமிழும் வாழட்டும் வளரட்டும். பார்போற்றும் வேந்தன் இயேசுவின் நாமமும் இனிதே மலரட்டும்.

  - அருள்திரு அறிவர். து. ஆல்பர்ட் தேவதாசன் செல்வின்

  (I have taken all the details and information relevant for this short essay from my own book “300 years of Tamil Bible: Its origin and Impact” published by the (BSS) Bible Society of Singapore and (FIDC) the Federation of Indian Denominational Churches” in Feb.2013 for the benefit of the Tamil-speaking people in Singapore and Malaysia. I acknowledge gratefully for their encouragement and support. Now I have suitably amended it for the first time in India for commemorating on 31st March 2016, the Tamil Bible’s 305th year celebrating Ziegenbalg and his contribution to Indian church and society in the form of this short essay to print media for the benefit of the wider Indian Tamil reading public.)

   

   

   

  - Rev. Dr. J. Albert Devadosan Selwyn

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai