இந்த நாளில் அன்று:
(27.1.1941)
பாபு சுபாஷ் சந்திரபோஸ் எங்கே?
நேற்று இரவிலிருந்து காணோம்
ஜனங்களிடையே பெரும் கவலை
கல்கத்தா, ஜன.27- நேற்றிரவிலிருந்து ஸ்ரீசுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை. அவருடைய உறவினர்களிடையேயும், ஸ்நேகிதர்களிடையேயும் பெருங் கவலை நிலவுகிறது. டிஸம்பர் முதல் வாரத்தில் அவர் விடுதலையானதிலிருந்து அவர் அந்த அறையில்தான் இருந்தார்.
சென்ற 4, 5 நாட்களாக ஸ்ரீ. போஸ், பரிபூர்ணமாக மௌனமிருந்து வந்ததாகவும், தமது குடும்பத்தினர் உள்பட யாரையும் பார்க்கவில்லை யென்றும், மத காரியங்களில் தமது நேரத்தை கழித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அவருடைய வீட்டில் கடைசியாக விசாரித்ததில் அவர் எங்கிருக்கிறாரென்பது இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லையென்று தெரியவந்தது.
விவரங்கள்
ஸ்ரீ.சுபாஷ் போஸ் விரும்பியபடி, சனிக்கிழமை இரவு பூராவிலும் அவர் அறையில் அவருடைய உறவினர் யாரும் நுழையவில்லையென்றும், அவரும் அன்று யாரையும் வரும்படி அழைக்கவில்லை யென்றும் தெரிகிறது.
இது அவருடைய குடும்பத்தினரிடையே கவலையை உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்கள் ஸ்ரீ. போஸின் அறையில் நுழைந்து அவர் படுக்கை காலியாய் இருந்ததைக் கண்டனர். எங்கெங்கு அவர் போயிருக்கக் கூடுமென ஊகிக்க முடியுமோ அங்கெல்லாம் விசாரித்தாய்விட்டது. நெருங்கிய பந்துக்கள் உறவினர்களின் வீடுகளிலும் கேட்டாய்விட்டது. ஆனால் போஸ் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஸ்ரீ.போஸின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஸ்ரீ.போஸ் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கக் கூடுமென நம்புகிறார்கள்.
நாடெங்கும் சுதந்திர தின கொண்டாட்டங்கள்
சுயராஜ்யக் கனவு நனவாக வேண்டும்
வார்தா, ஜன.26-
சேவா கிராமத்தில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. காலையில் கொடி வணக்கமும் பஜனைகளும் நடைபெற்றன. ராஜகுமாரி அம்ருத கௌரி கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். ஏராளமான பேர் சர்க்காக்களில் நூற்ற இடத்தில் காந்திஜி அரை மணி நேரத்துக்கு பிரசன்னமாயிருந்தார்.
மகாத்மா காந்தி இன்று உபவாசமிருக்கிறார். ஆச்ரம வாசிகளில் அநேகமாக எல்லாரும் உபவாஸமிருக்கின்றனர். இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை சேவா கிராம ஆஸ்ரமத்தில் எல்லாரும் கூடி நூல் நூற்றனர்.
கராச்சியில் அல்லா பக்ஷ் கலந்துகொண்டார்
கராச்சி, ஜன.26- இன்று இங்கு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் முடிவுற்றன. அங்கு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளப்பட்டது. நிதிமந்திரி கான் பகதூர் அல்லா பக்ஷ் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
(27.1.1941 தினமணியில் வெளியான செய்திகள்...)