சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று: 28.1.1941: போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை; புதுச்சேரியில் இல்லையெனத் தகவல்

    Published on : 25th January 2014 08:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்த நாளில் அன்று: 28.1.1941:

    போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை;

    புதுச்சேரியில் இல்லையெனத் தகவல்

    கல்கத்தா, ஜன.27- ஸ்ரீ.சுபாஷ் சந்திர போஸை கைது செய்யுமாறு வாரண்ட் பிறக்கப்பட்டதின் விளைவாக கல்கத்தா ஸ்பெஷல் பிராஞ்சு போலீஸார், இன்று ஸ்ரீ.போஸின் எல்ஜின் ரோடு பங்களாவை குறிப்பாக போஸ் விடுதலையானதிலிருந்து இருந்து வந்த அறையை மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக சோதனையிட்டனர். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த சிலரையும் வேலைக்காரர்களையும் போலீஸார் விசாரித்து ஸ்ரீ.போஸ் போனது பற்றி அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

    புதுச்சேரியில் இல்லை

    ஸ்ரீ.சுபாஷ் சந்திரபோஸ் பற்றி இங்கு கொஞ்சங்கூட செய்தியில்லை என்று புதுச்சேரியிலுள்ள அரவிந்து கோஷ் ஆச்ரம வாசியொருவரிடமிருந்து ஸ்ரீ.சரத்போஸுக்கு இன்று மாலை வந்துள்ள தந்தியொன்று கூறுகிறது. ஸ்ரீ.சுபாஷ் போஸ் அங்கிருக்கிறாரா வென்று விசாரித்து ஸ்ரீ.சரத் போஸ் இன்று காலை புதுச்சேரிக்கு அடித்திருந்த தந்திக்கு மேற்கண்ட பதில் கிடைத்தது.

    சந்திர நாகூருக்குச் சென்று நேரில் விசாரிப்பதற்காக பார்வர்டு பிளாக்கின் ஆக்டிங் காரியதரிசி ஸ்ரீ.முகுந்தலால் சர்க்கர் அந்த பிரெஞ்சுப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

    கடைசி சந்திப்பு: போஸ் 16உ நண்பர்களிடம் சொன்னார்

    கல்கத்தா, ஜன.28- ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் எங்கிருக்கிறாரென்பது பற்றி போலீஸாரிடமிருந்தோ அல்லது போஸின் சகோதரர்களிடமிருந்தோ எந்தத் தகவலும் தெரியாதிருக்கிற போதிலும், ஸ்ரீ.போஸ் திடீரென காணமற் போனதற்கு ஆத்மீக உணர்ச்சி காரணமாக இருக்க முடியுமென்ற பேச்சு இருக்கிறது.

    ஸ்ரீ.போஸ் ஜனவரி 16உ அவரது அறையில் அநேக ஸ்நேகிதர்களையும் வீட்டிலிருப்போர்களையும் சந்தித்ததாக போஸ் குடும்பத்தினர் சொல்லுகிறார்கள். சம்பாஷணை இரவில் வெகு நேரம் வரை நடந்தது. இரவு 2 மணிக்குத்தான் கலைந்தார்கள். நீங்கள் என்னை சந்திப்பதில் இதுவே கடைசி முறை என்று ஸ்ரீ.போஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. அவர் இந்த பேச்சுக்கு வியாக்யானம் கூற மறுத்துவிட்டார். எல்லாம் கடுமையான கட்டுப்பாட்டை அனுஷ்டிக்க வேண்டுமென்று மாத்திரம் அவர் மேலும் கூறினார்.

    வீடு பூராவும் சோதனையிடப் பட்டதில் போஸ் தம்முடன் எதையும் எடுத்துச் செல்லவில்லையென தெரியவந்துள்ளது. (அ.பி)

    (28.1.1941 தினமணியில் வெளியான செய்திகள்...)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai