சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று: 29.1.1941; சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை; வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில்

  Published on : 25th January 2014 09:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்த நாளில் அன்று: 29.1.1941

  சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை

  வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில்

  கல்கத்தா, ஜன.29- ஸ்ரீ.சுபாஷ் போஸை தேட அவரைச் சேர்ந்தவர்களும் போலீஸாரும் சென்ற மூன்று நாட்களாக ஓய்தல் ஒழிவின்றி செய்த முயற்சிகளால் அவர் இருப்பிடம் பற்றியோ அல்லது அவர் எண்ணம் பற்றியோ எவ்வித தகவலையும் பெற முடியவில்லை. நேரம் ஆக ஆக, கவலையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மாகாணத்திலும் மாகாணத்துக்கு வெளியிலும் எல்லா வட்டாரங்களிலிருந்தும் விசாரிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

  இப்பொழுது கடைசியாக விசாரித்துள்ளவர் மகாத்மா காந்தி. அவரிடமிருந்து ஸ்ரீ.சரத் சந்திரபோஸுக்கு இன்று காலை வந்துள்ள தந்தி கூறுவதாவது:-

  போஸைப் பற்றிய செய்தியைக் கேட்டு திடுக்கிட்டுப் போனேன். தயவு செய்து உணமையை தந்தி மூலம் அனுப்புக. கவலையாக இருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக இருக்கட்டும். பாபு.

   

  வாழ்க்கையை துறந்திருக்கக்கூடும்

  மகாத்மா காந்திக்கு ஸ்ரீ.சரத் சந்திரபோஸ் பின்வரும் பதிலை தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார்:-

  பொது ஜனங்களைப் போலவே, எங்களுக்கும் சுபாஷின் இருப்பிடம் பற்றியோ அல்லது எண்ணங்கள் பற்றியோ கொஞ்சங்கூட தெரியாது. அவர் எந்த நேரத்தில் போனாரென்பது கூட சரியாகத் தெரியவில்லை. சந்தர்ப்பங்களை கவனிக்குங்கால், வாழ்க்கையை துறந்திருக்கக் கூடுமென ஊகிக்க வேண்டியிருக்கிறது.

  பல்வேறு வட்டாரங்களில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறபோதிலும், ஸ்ரீ சுபாஷுடன் நெருங்கிப் பழகியவர்கள் ஆத்மீக ஆவேசத்தால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கக் கூடுமென்ற ஊகத்துக்கு அதிக மதிப்பு வைக்கிறார்கள்.

  ஸ்ரீ.போஸின் எல்ஜின் ரோடு பங்களாவிலுள்ள இரு டெலிபோன்கள் மண்ணி அடித்த வண்ணமாயிருக்கின்றன. நகரிலிருந்து விசாரிப்புகளும் தொலைதூரங்களி லிருந்து டிரங்க் டெலிபோன் மூலமும் போஸைப் பற்றி கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன.

  நாடு பூராவிலும் தேடுகிறார்கள்

  ஸ்ரீ.போஸைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது நாடு பூராவிலும் அவரைத் தேடி வருகிறார்கள். யோகம் நடக்கிற கோயில்கள் ஆச்ரமங்கள் இன்னம் சில ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் ஜாப்தா எடுக்கப்பட்டு, அங்கெல்லாம் தந்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்கு குறிப்பாக தென்னிந்தியாவிலுள்ளவைகளுக்கு ஆட்கள் போயிருக்கிறார்கள்.

  (29.1.1941 தினமணியில் வெளியான செய்திகள்...)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai