Enable Javscript for better performance
இந்த நாளில் அன்று: (29.3.1944) ”மாணவருக்கு” - பறிமுதல் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று: (29.3.1944)

    ”மாணவருக்கு” - பறிமுதல் உத்தரவு

    காந்திஜியின் கட்டுரைகளடங்கிய “மாணவருக்கு” என்ற தமிழ்ப் புத்தகத்தை, பறிமுதல் செய்து சென்னை சர்க்கார் ஒரு உத்தரவு போட்டிருக்கிறது. இந்த உத்தரவு பாதுகாப்புச் சட்டப்படி போடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் இந்த புத்தகம், மாணவர்கள் சம்பந்தமாக காந்திஜி 1921-முதல், 1938 வரை “யௌவன இந்தியா” பத்திரிகையிலோ, ஹரிஜன் பத்திரிகையிலோ எழுதிய கட்டுரைகள் அடங்கியது. இவ்வாறு கட்டுரைக் கோவையாக இவை முதலில் ஆங்கிலத்தில் கராச்சியில் ஏற்கனவே பிரசுரமாயிருக்கின்றன. ஆங்கிலத்தில் அந்தப் புத்தகம் பறிமுதலானதாக தெரியவில்லை. இந்த நிலைமையில், தமிழில் அந்தப் புத்தகம் பறிமுதலாவதற்கு எவ்வித நியாயமுமிருப்பதாகத் தெரியவில்லை.

    இதுபற்றி பாதுகாப்புச் சட்டத்தின் 40-ஆவது விதிப்படி, சர்க்கார் பிரசுரித்துள்ள உத்தரவில், சம்பிரதாயமாக சட்டத்தின் வாசகங்களின்படி, காரணம் கூறப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில், யுத்த முயற்சிக்கு பாதகமான தகவல்கள் இருக்கின்றன என்பதுதான் உத்தரவில் கூறப்படும் அந்த காரணம்.

    பாதகமான தகவல்கள் என்ற வார்த்தைக்கு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் 34-வது ஷரத்திலுள்ள வியாக்கியானம், பாதகமான செயல்களை தூண்டும் தகவல்கள் என்பது. பாதகமான செயல்கள் என்பதற்கு  வியாக்கியானம் மிகவும் விரிவானது. மன்னர் மீதோ அவரது பிரதிநிதி மீதோ, சர்க்கார் மீதோ துவேஷமுண்டாக்குவது என்றா அர்த்தத்திலும் அந்த வார்த்தை உபயோகிக்கப் படலாம். இந்த அர்த்தத்தில்தான் சர்க்கார், இந்த சட்டத்தை பிரயோகித்திருக்கிறதுபோலும். அப்படியானால் புத்தகத்தின் எந்தப் பகுதியை சர்க்கார் அவ்வாறு கருதுகிறது என்பது தெரியவேண்டும். பிரசுர கர்த்தாக்களுக்காவது அந்த விவரம் அறிவிக்கப்பட வேண்டும். பிரஸ்தாப புத்தகத்தில் 97 கட்டுரைகள் இருக்கின்றன. அந்த 97 கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவை. மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியே மகாத்மா காந்தி இந்த கட்டுரைகளில் ஆராய்ச்சி செய்துள்ளார். அப்புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் மாணவர்களுக்கு மிகவும் உயர்ந்த உபதேசங்களாகும் என்பதை சர்க்காரின் கல்வி இலாகா கூட ஒப்புக் கொள்ளும். ஆதர்ச வாழ்க்கைக்கு வழிகாட்டுவஹ்டில் உலகிலேயே பெரிய மகானாக மதிக்கப்படும் ஒருவரது உபதேசத்தை இந்திய மாணவர்கள் படிக்க வசதியில்லாமல் தடுப்பது எவ்வகையிலும் நியாயமாகாது.

    (29.3.1944 தினமணியில் வெளியான தலையங்கத்தில் இருந்து...)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai