முகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...
28.11.1820: கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் இன்று!
By DIN | Published On : 28th November 2016 12:00 AM | Last Updated : 28th November 2016 03:11 PM | அ+அ அ- |

பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஜெர்மனியில் உள்ள பர்மன் என்னுமிடத்தில் 28.11.1820 அன்று பிறந்தார். 20 வயது வரை வியாபாரத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார்.
மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார்.
1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்தில் தங்கி கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க உதவினார். மார்க்ஸுடன் உரையாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார். இறுதியாக 1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் நாள் இவர் மரணமடைந்தார்.