அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி

பெட்ரோலியம் என்பது கருப்பு நிறம் கொண்ட பாகுநிலை மிகுந்த திரவமாகும். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் தனிமங்களை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான சேர்மங்கள் இதில் உள்ளன.
அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி

கார்பன் டை ஆக்சைடு

* கார்பன் டை ஆக்சைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்றை விடக் கனமானது. நீரில் சிறிதளவே கார்பன் டை ஆக்சைடு கரையும். -78 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்வித்தால் கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக மாறும். இத்திண்மத்தை உலர் பணிக்கட்டி என்பர். இது உருகாமல் நேரடியாக கார்பன் டை ஆக்சையாக மாறும்.

* கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும். மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.

* கார்பன் டை ஆக்சைடு தீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.

* மீத்தேன் என்பது மிக எளிய ஹைட்ரோ கார்பனாகும். இதைக் கொள்ளி வாயு அல்லது சதுப்பு நில வாயு என்றும் அழைப்பர்.

* நிலக்கரி வாயுவில் 30 சதவிகிதம் மீத்தேன் உள்ளது. இயற்கை வாயுவில் ஏறத்தாழ 80 சதவீதம் மீத்தேன் உள்ளது.

* மீத்தேன் ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும். ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் பிணைக்கப்பட்டுள்ளன.

* நீரற்ற சோடியம் அசிடேட் மற்றும் சோடா சுண்ணாம்பு கலவையை கடினமான சோதனைக் குழாயில் சூடுபடுத்தி மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது.

* மீத்தேன் நீரில் கரையாது என்பதால் நீரின் கீழ்முகப் பெயர்ச்சியினால் சேகரிக்கப்படுகிறது.

* மீத்தேன் ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்ரை விட எடை குறைவானது. காற்றில் நீல நிறச் சுடருடன் எரியும்.

* மீத்தேன் கார்பன் பிளாக் செய்யவும், பார்மால்டிஹைடு, மீத்தைல் ஆல்கஹால் மற்றும் குளோரோஃபாம் முதலான பலபொருட்கள் தயாரிக்கவும், எரிபொருளாகவும், ஹைபர் முறையில் அம்மோனியா தயாரிக்கவும், ரப்பர் தொழிற்சாலையில் நிரப்பியாகவும் பயன்படுகிறது.

* சாணவாயு, தானியங்கி வாகனங்கலில் பயன்படும் இயற்கை வாயு ஆகியவற்றில் மீத்தேன் அதிகம் உள்ளது.

* சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும், நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.

* சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும், நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.

நிலக்கரி

* இயற்கையில் மடிந்து மண்ணாகிய உயிரிப் படிவங்களிலும், பெட்ரோலியம், நிலக்கரி மறஅறும் பீட் ஆகியவைகளிலும் ஹைட்ரோ கார்பன்கள் காணப்படுகின்றன.

* நிலக்கரி இயற்கையில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இந்தியாவின் தொழில் வர்த்தகத்துக்குத் தேவையான ஆற்றலில் 67 சதவிகித ஆற்றல் நிலக்கரி மூலம் கிடைக்கிறது.

* பெட்ரோலியம் என்பது கருப்பு நிறம் கொண்ட பாகுநிலை மிகுந்த திரவமாகும். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் தனிமங்களை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான சேர்மங்கள் இதில் உள்ளன.

* பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோலிய வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறலாம். இவை எரிபொருளாகப் பயன்படுகின்றன.

* ஹைட்ரோ கார்பன்களின் முக்கிய மூலம் நிலக்கரியாகும். பிட்டுமினஸ் நிலக்கரியைக் காற்றின்றி வெப்பப்படுத்தும் போது (கார்பன் மயமாதல்) நிலக்கரித் தார் ஆவியாகவும், கல்கரி வீழ்படிவாகவும் கிடைக்கிறது.

* நிலக்கரித் தாரைப் பின்னக் காய்ச்சி வடிக்கும்போது பலவிதப் பொருட்கள் கிடைக்கின்றன.

* பீட் நிலக்கரியில் 60 சதவிகித கார்பனும், லிக்னைட் நிலக்கரியில் 70 சதவிகித கார்பனும், பிட்டுமினஸ் நிலக்கரியில் 87 சதவீத கார்பனும், ஆந்தரசைட் நிலக்கரியில் 90 சதவிகித கார்பனும் உள்ளது.

பெட்ரோலியம்

* பெட்ரோலியம் என்பற்கு பாறைகளின் எண்ணெய் என்று பொருள் பெட்ரோலியத்தில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய இயற்கை வாயுக்களும் கசடு எண்ணெயும் அடங்கும்.

* பெட்ரோலியம் என்பது பல்வேறு ஹைட்ரோ கார்பன்களும் (கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சேர்மங்கள்) மேலும் ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகத்தைக் கொண்ட கரிம சேர்மங்கள் சிலவற்றையும் உடைய சிக்கலான கலவையாகும்.

* சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்களும், விலங்குகளும், பாறைகள் மற்றும் படிவங்களில் கலந்து ஆக்சிஜன் இன்றி அதிக வெப்பம், அழுத்தத்திற்கு உட்பட்டு பெட்ரோலியமாக கடலுக்கடியில் மாறியுள்ளன.

* பெட்ரோலியத்தின் பகுதிப் பொருட்களை அவற்றின் வேறுபட்ட கொதிநிலைகளை அடிப்படையாகக் கொண்டு பிரித்து மாசுக்களை நீக்குவதற்கு சுத்திகரித்தல் என்று பெயர்.

ஹைட்ரோ கார்பன்கள்

* கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட எளிய கரிமச் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. இவற்றில் கார்பன் நான்கு இணைதிறனையும், ஹைட்ரஜன் ஒரு இணைதிறனையும் உடையன.

* கரிமச் சேர்மங்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: 1. திறந்த சங்கிலித் தொடர் அல்லது அலிபாட்டிச் சேர்மங்கள் 2. மூடிய அமைப்புள்ள அல்லது வளையச் சேர்மங்கள்

* கார்பன் அணுக்களின் நான்கு இணைதிறன்களும் நான்கு அணுக்கள் அல்லது தொகுதிகளுடன் ஒற்றைப் பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய கார்பன்கள் உள்ள சேர்மங்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. ஏனெனில் அவை மேலும் சில அணுக்களுடனோ அல்லது தொகுதிகளுடனோ பிணைப்பு ஏற்படுத்த முடியாது.

* கார்பன் அணுக்கள் தமிமிடையே பல பிணைப்புக்களால் (குறைந்த அளவு ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) பிணைக்கப்பட்டிருந்தால் அத்தகைய சேர்மங்கள் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும்.

* நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் CnH2n+2 (n-ன் மதிப்பு = 1,2,3,4...) என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.

* ஆல்கேன்களில் முதல் சேர்மம் மீத்தேன். மீத்தேனின் வாய்பாடு CH4+ இரண்டாவது சேர்மம் ஈத்தேன். இதன் வாய்ப்பாடு C2H6 . மற்றவைகளை ஒப்பிடுகையில் இவை நிலைத்தன்மை உடையவை. ஏனெனில் அவை நிறைவுத் தன்மை உடையவை. எனவே அவை பாரஃபீன்கள் என அழைக்கப்படுகின்றன.

* நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களான அல்கீன்கள் CnH2n என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை ஒலிஃபீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எளிய ஒலிஃபீனின் வாய்ப்பாடு C2H4 இதன் சாதாரணப் பெயர் எத்திலீன்.

* அல்கீன்கள், கார்பன் அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு அதிகமான இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.

* இரு அணுக்களுக்கிடையே இரு எலக்ட்ரான் இணை பங்கிடப்பட்டு இரு சகப்பிணைப்பு ஏற்பட்டால், அவ்வணுக்கள் இரட்டைப் பிணைப்பால் சேர்ந்துள்ளன என அறியலாம்.

* நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களின் மற்றொரு வகை அல்கைன்களாகும். அதன் பொதுவான வாய்ப்பாடு CnH2n-2 இதன் சிறப்பம்சம் இதிலுள்ள கார்பன் - கார்பன் அணுக்களுக்கிடையேயான முப்பிணைப்பாகும்.

* ஆல்கைன் வரிசையில் முதல் சேர்மத்தின் வாய்ப்பாடு C2H2 ஆகும். இது அசிட்டிலின் எனப்படும். எனவே அல்கைன்கள், அசிட்டிலீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

எத்திலீன்

* ஈத்தீனின் பொதுப்பெயர் எத்திலீன். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4 ஆகும். பெரிய அல்கேன் மூலக்கூறை வெப்பத்தின் உதவியால் சிறிய ஹைட்ரோ கார்பன்களாக சிதைக்கும் முறை கிராக்கிங் எனப்படும்.

* எத்திலீன் பழங்களைக் கனிய வைக்கவும், பாலிதீன், பாலி புரப்பிலீன் மற்றும் PVC (பாலி வினைல் குளோரைடு) தயாரிக்கவும் பயன்படுகிறது.

* எத்திலீன் டை குளோரைடு, செயற்கை இரப்பரான தயோக்கால் தயாரிப்பில் பயன்படுகிறது. கிளைக்கால் தயாரித்தலிலும் பயன்படுகிறது.

ஈத்தைன் அல்லது அசிட்டிலின்

* ஈத்தைன் நிறமற்ற, நறுமணமுடைய வாயு. இது நீரில் கரையாது.

* ஈத்தைனுடைய சிறிது ஆக்சிஜன் சேர்த்து தனி உலையில் எரித்தால் மிக அதிக அளவு வெப்பத்தைக் கொடுக்கும்.

* ஆக்சி-அசிட்டிலீன் சுவாலை கிடைக்கிறது. இச்சுடர் உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது.

* ஈத்தைன் அல்லது அசிட்டிலீனின் மூலக்கூறு வாய்பாடு C2H2 ஆகும்.

* பாலிவினைல் அசிட்டேட் மற்றும் செயற்கை இரப்பர் ஆகியவை தயாரித்தலில் அசிட்டிலின் துவக்கப் பொருளாக பயன்படுகிறது.

* தொழில்துறையில் முக்கியச் சேர்மங்களான அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் அமிலம், அசிட்டோன், எத்தனால் மற்றும் பென்சீன் தயாரித்தலில் துவக்கப் பொருளாக பயன்படுகிறது.

தனிம வரிசை வகைபாடு

* தனிமங்கள் பலவற்றைக் கண்டுபிடித்த பின்னர், சில வேதியியல் அறிஞர்கள் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்றனர்.

* 1869-ல் இரஷ்ய நாட்டு அறிஞர் மெண்டலீப் முதல் தனிம வரிசை அட்டவணையைத் தயாரித்தார். இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது.

* பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார்.

* தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார்.

* பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.

டாபர்னீரின் மும்மை விதி

* தனிமங்களின் அணு நிறைக்கும், வேதிப்பண்புகளுக்கும் இடையேயான தொடர்பை இவர் கண்டறிந்தார்.

* ஒத்த பண்ணபுகளைப் பெற்ற தனிமங்களை மும்மூன்று தனிமங்களாகத் தொகுக்கலாம் என்றும், அவைகள் மும்மைகள் (Triads) என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

* தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள மையத் தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரியாக அமையும். இதுவே மும்மை விதியாகும். இவ்விதி சில தனிமங்களுக்கு மட்டுமே பொருந்தியது.

எண்ம விதி

* நியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கியபொழுது, இசையில் எவ்வாறு முதல் சுரமும் எட்டாவது சுரமும் ஒத்திருக்குமோ அதே போன்று ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணனர்ந்தார்.

* இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை.

மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு

* இரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீஃப் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் மேயர் ஆகியோர் தனிம வரிசை அட்டவணையை தனித்தனியே உருவாக்கினார்கள்.

* மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார். அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் கொடுத்தார். அது மெண்டலீஃபின் ஆவர்த்தன விதி எனப்பட்டது.

* தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகின்றன. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் அணு எடைகளின் ஏறுவரிசையில் அமைந்துள்ளன.

* செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள், தொகுதிகள் என அழைக்கப்பட்டன.

* இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் எனக் குறிக்கப்பட்டன. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃபின் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை.

* I முதல் VII வரையிலான ஒவ்வொரு தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக A,  B என பிரிக்கப்பட்டுள்ளன.

* VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று தனிமங்கள் உள்ளன.

* பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் பெற்றுள்ளது.

* ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் உள்ளன (H, He).

* இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்கள் (குறுகிய தொடர்) ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் காணப்படுகின்றன.

* நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் (நீண்ட தொடர்) 32 தனிமங்கள் உள்ளன.

* ஏழாவது தொடர் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதில் 19 தனிமங்கள் உள்ளன. (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்).

* இவற்றில் பெரும்பான்மையான தனிமங்கள் செயற்கை முறையில் தயார்க்கப்பட்டவை.

மெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள்

* புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே அறிந்து கூறப்பட்டது. அட்டவணையில் சில காலியிடங்கள் இருந்தன. இக்காலியிடங்கள், அதுவரை கண்டுபிடிக்கப் படாத புதிய தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின.

* இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-அலுமினியம், ஈகா-சிலிக்கான் என அழைத்தார். பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட முறையே காலியம், ஜெர்மேனியம் என அழைக்கப்பட்டன.

மெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்

* ஹைட்ரஜனிற்கு முறையான இடம் தரப்படவில்லை.

* அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள் குறைந்த அணு நிறையைப் பெற்ற தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.

* அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம். இவை III B தொகுதியில் 6-வது தொடரில் அமைக்கப்பட்டுள்ளன.

* இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம வரிசை அட்டவணையில் சரியான இடம் அளிக்கப்படவில்லை.

* தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அத்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே காணப்படுகின்றன. ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

* வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த பண்புகளை உடைய தனிமங்களான காப்பர், மெர்குரி போன்றவை வெவ்வேறு தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

* அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன ஆவர்த்தன விதி

* 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று அறிந்தார்.

* இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதி உருவானது. இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.

* தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன. இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.

* அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை அட்டவணை ஆகும்.

* தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள் 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் இடைநிலைத் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்

* தனிம வரிசை அட்டவணையில் உள்ள கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன.

* ஒரு தொடரில், ஒரே வரிசையாக அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கும். மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

* முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் (மிகக்குறுகிய தொடர்).

* இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. (குறுகிய தொடர்)

* நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்)

* ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. (மிக நீண்ட தொடர்)

* ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும்.

* தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது.

* நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன. இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் தொகுதிகள் ஆகும்.

* ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் அமைந்துள்ளன.

* ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.

* I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவத் தனிமங்கள்.

* I  A தொகுதித் தனிமங்கள் கார உலோகங்களாகும். II  A தொகுதி தனிமங்கள் கார மண் உலோகங்கள் ஆகும்.

* VI  A தொகுதித் தனிமங்கள் (16) சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் குடும்பத் தனிமங்களாகும்.

* VII  A தொகுதித் தனிமங்கள் (17) ஹாலஜன் அல்லது உப்பீனிக் குடும்பத் தனிமங்களாகும்.

* I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் VIII-வது தொகுதித் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.

* பூஜ்யத் தொகுதி  தனிமங்கள் மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) எனப்படும்.

* லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் ஒரே தொகுதியில் இருந்தாலும் அவைகள் அட்டவணைக்குக் கீழே தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

* தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும்

* தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை உள்ள தனிமங்கள் பொதுவாக முதன்மைத் தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

* தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

* தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.

* மெக்னீசியம் அணு, அதன் 3-வது வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.

* ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

* ஒரு பொட்டாசியம் அணு அதன் வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.

* ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் ஒத்திருக்கின்றன.

* அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருக்கின்றன. எனவே வினைதிறன் அற்றவை.

* தனிம வரிசை அட்டவனையில் ஒர் தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது.

* கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும், தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.

* உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் அதிகமாகிறது.

* தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள தனிமம் மிகவும் வினைதிறன் உடைய தனிமம் ஆகும்.

* ஒர் தொடரின் வலது பகுதியில் அலோகங்கள் காணப்படுகின்றன. அலோகங்கள் உள்ள தொகுதியில், அதிக வினைதிறன் கொண்ட தனிமம் தொகுதியின் தலைப்பில் உள்ளது.

* ஏழாவது தொகுதியில் முதலாவதாக அதிக வினை திறன் கொண்ட அலோகம் உள்ளது.

படித்ததை படிப்பவர்களோடு பகிர்ந்துகொண்டால் நல்ல பலன்களையும், நினைவுத்திறனையும் பெறலாம்.

இணையத்தோடு இணைந்திருங்கள் நாளைப் பார்ப்போம்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com