Enable Javscript for better performance
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: சிற்பி பாலசுப்ரமணியம்- Dinamani

சுடச்சுட

  

  தமிழ் அறிஞர்கள் அறிவோம்: சிற்பி பாலசுப்ரமணியம்

  Published on : 03rd April 2014 01:19 PM  |   அ+அ அ-   |    |  

  sirpi

  கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பண்பாளர் ஒரு பல்துறை அறிஞராக விளங்குபவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருசியன் உள்ளிட்ட பலமொழிகளையும் அறிந்தவர்.

  தமக்கென்று ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு எழுதி வருபவர். பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் உந்து விசையாய் இருந்து, புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கேற்றவர்.

  பிறப்பு: கவிஞர் சிற்பி அவர்கள் தமிழ்நாட்டின் தென்மேற்கு எல்லையின் கேரளத்தை ஒட்டி இருக்கும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற சிற்றூரில் 29.07.1936 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் கி.பொன்னுசாமி - கண்டி அம்மாள் ஆவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியம் என்பதாகும். பொ.பாலசுப்பிரமணியன் என்ற தம் பெயரைக் கவிதைக்காகச் சிற்பி என்று புனைந்து கொண்டார்.

  கல்வி: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். 1956 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) பட்டம் பெற்றார். மலையாள மொழியையும் நன்கு அறிந்தவர். மலையாள மகாகவி வள்ளத் தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து 1987 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார்.

  கல்லூரி ஆசிரியர் பணி: பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் 1958 முதல் விரிவுரையாளராக பணாயாற்றினார். பின்னர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 1989 முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

  இதர பணி: எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்

  விருதுகள்: மொழிபெயர்ப்புக்காகவும்(2001), படைப்பிலக்கியத்துக்காகவும்(2003) இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, அரசர் முத்தையாவேள் விருது பெற்றவர். கலைமாமணி விருந்து, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது, தமிழ்ப்பல்கலைக் கழகப் பரிசு எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.

  சிறந்த கவிஞராகவும், நல்ல மொழிபெயர்ப்பாளராகவும், புகழ்பெற்ற கல்வியாளராகவும், இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கும் சிற்பி அவர்கள் படிப்பும், எழுத்தும், பேச்சும் தம் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர்.

  இதுவரை 15 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் 6 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

  வானம்பாடி, அன்னம்விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். வானம்பாடி கவிதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்தபொழுது சிற்பியின் பங்களிப்பும் இருந்தது. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  சிற்பி அறக்கட்டளை: தம் பெயரில் ஒரு 1996 ஆம் ஆண்டில் ‘கவிதை அறக்கட்டளை’யை நிறுவி இருக்கிறார். அந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் சிறந்த முதுபெரும் கவிஞர் ஒருவரையும் இளங்கவிஞர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார். இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் ஒரு தனிச்சுடராய் ஒளிர்கிறார்.

   

  கவிதை நூல்கள் (20)

  * நிலவுப் பூ (1963)

  * சிரித்த முத்துக்கள் (1966)

  * ஒளிப்பறவை (1971)

  * சர்ப்ப யாகம் (1976)

  * புன்னகை பூக்கும் பூனைகள் (1982)

  * மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)

  * சூரிய நிழல் (1990)

  * இறகு (1996)

  * சிற்பியின் கவிதை வானம் (1996) (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)

  * ஒரு கிராமத்து நதி (1998) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)

  * பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999)

  * பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001)

  * பாரதி - கைதி எண்: 253 (2002)

  * மூடுபனி (2003)

  * சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)

  * தேவயானி (2006)

  * மகாத்மா (2006)

  * சிற்பி கவிதைகள் தொகுதி - 2 (2011)

  * நீலக்குருவி (2012)

  * கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)

  கவிதை நாடகம் (1)

  * ஆதிரை (1992)

  புதினங்கள் (3)

  01. அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)

  02. ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)

  03. வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai