சுடச்சுட

  
  knm2

  சென்னையில் அண்மையில் தொடங்கப்பட்ட ஆர்.கே. கன்வென்ஷன் சென்டர் என்கிற நிறுவனத்தின் முதலாவது நிகழ்வில் திரைப்பட ஆய்வாளர் ராண்டார்கை கலந்து கொண்டு கர்னாடக இசைக் கலைஞர்களும் தமிழ்த் திரைப்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து-

  கர்னாடக இசையுலகில் கொடிகட்டிப் பறந்த ஜிஎன்பி என்கிற ஜி.என். பாலசுப்பிரமணியம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த "பாமாவிஜயம்' என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் கதாநாயகனாக அல்ல. அப்படத்தில் கிருஷ்ணராக நடித்தவர் மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி. இவர் கர்னாடக இசைக் கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் தம்பி. பாமா, ருக்மணி ஆகிய பாத்திரங்களில் பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட ரத்னாபாய், சரஸ்வதி பாய் இருவரும் நடித்தனர். நாரதராக நடித்தவர்தான். ஜி.என்.பி. இவர் நிஜத்திலேயே பெரிய அழகர். இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். சி.ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்த "பாமாவிஜயம்' படத்தை மும்பையைச் சேர்ந்த மணிக்லால் டாண்டன் என்பவர் இயக்கியிருந்தார். (இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன்).

  அந்தக் காலத்துப் படங்களில் பாடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு சிறப்பு என்று கருதப்பட்டது. 63 பாடல்கள் நிறைந்த படம் என்று "லவகுசா' படம் விளம்பரப்படுத்தப்பட்டது. சங்கீத லவகுசா என்றே அதனை பத்திரிகைகள் குறிப்பிட்டன. அப்படத்துக்கு விமர்சனம் எழுதிய கல்கி இது "டாக்கி' அல்ல "பாட்டி' என்று எழுதினார். அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா, நாரதர் எல்லோரும் சேர்ந்து நின்று "ஜன கண மன' என்று தேசிய கீதம் பாடுவார்கள். ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை எழுதியது எந்த ஆண்டில், மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்தது எந்த யுகத்தில் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் மக்கள் அந்தப் படத்தை வெகுவாக ரசித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் ஜி.என்.பி.தான்.

  ஆனால் ஜி.என்.பி.க்கு திரைப்படப் புகழ் வர ஆரம்பித்ததும் கர்னாடக உலகில் சிலர் அதை தகுதிக்குறைவாக நினைத்தார்கள். "பாமாவிஜயம்' வெளியான பின்பு ஒருநாள் ஜி.என்.பி. கச்சேரிக்காக தஞ்சாவூர் சென்றார். அவர் நிகழ்ச்சிக்காக மேடையில் போய் உட்கார்ந்த பிறகும் ரசிகர்கள் யாரும் அரங்கினுள் வரவில்லை. பக்கவாத்தியக்காரர்கள்கூட மேடைக்குப் பின்னாலேயே இருந்தார்கள். ஜி.என்.பி.யோ யாரையும் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அருமையான பைரவி ராக ஆலாபனையுடன் நிகழ்ச்சியை தொடங்கிவிட்டார். அதைக் கேட்டதும் ரசிகர்கள் முண்டியடித்து உள்ளேவர பக்கவாத்தியக்காரர்களும் மன்னிப்பு கேட்டபடி வர, அன்றைய கச்சேரி அமர்க்களமாக நடந்தது.

  1940-ல் ஜி.என்.பி.யும் எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த "சகுந்தலை' படம் வெளிவந்தது. இப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார்.

  பின்னர் 1946-ல் ஜி.என்.பி.யும் வசுந்தரா தேவியும் ஜோடியாக நடித்த "உதயணன் வாசவதத்தா' படம் வெளிவந்தது. இந்த வசுந்தரா தேவியின் மகள்தான் நடிகை வைஜெயந்திமாலா. இப்படம் முதலில் தியாகராஜபாகவதர் கதாநாயகனாக நடித்து பாதி எடுக்கப்பட்டுவிட்டது. அப்போது பாகவதர் சிறை செல்ல நேரிட்டதால் ஜி.என்.பி.யை ஒப்பந்தம் செய்து மீண்டும் படமாக்கினார்கள். ஆனாலும் இப்படம் பெரிய வெற்றியை அடையவில்லை. அடுத்ததாக "மோகினி ருக்மாங்கதன்' என்ற படத்தில் ஜி.என்.பி. நடித்தார். அந்தப் படமும் தோல்வியடைந்ததால் படவுலகைவிட்டு விலகினார் இசைமேதை ஜி.என்.பாலசுப்ரமணியம்.

  1935-ல் வெளிவந்த "நந்தனார்' படத்தில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வேதியர் வேடத்தில் நடித்தார். அப்படத்தில் நந்தனாராக நடித்தவர் கே.பி. சுந்தராம்பாள். அதற்காக அன்று அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு லட்சம்.

  1942-ல் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த "நந்தனார்' படத்தில் எம்.எம். தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடிக்க வேதியராக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். தொடர்ந்து "பட்டினத்தார்' படத்திலும் தண்டபாணி தேசிகர் நடித்தார்.

  முசிறி சுப்பிரமணிய ஐயர் "துக்காராம்' என்கிற ஒரே படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்ற போதும் தொடர்ந்து நடிக்க அவர் விரும்பவில்லை.

  நாதஸ்வர சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை "காளமேகம்' என்கிற படத்தில் நடித்தார். கதைக்குப் பொருத்தமில்லாவிட்டாலும் ராஜரத்தினம் பிள்ளை நடிப்பதால் "காளமேகம்' தெருவில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு போவது போன்று ஒரு காட்சியை வைத்தார்கள். உடன் ஒத்து ஊதுபவராக கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்தார். அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

  1942-ல் வெளிவந்த "கண்ணகி' திரைப்படம் அதுவரை தமிழ்ப்பட கதாபாத்திரங்கள் பேசிவந்த வசனங்களை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. எழுதியவர் இளங்கோவன். பி.யூ.சின்னப்பா கோவலனாகவும் பி. கண்ணாம்பா கண்ணகியாவும் நடித்திருந்தனர். பி.யூ.சின்னப்பா சிறந்த கொன்னக்கோல் வாத்திய கலைஞர். பி.கண்ணாம்பாவுக்கு அப்போது தமிழ் தெரியாது. தமிழ் வசனங்களை ஒரு கரும்பலகையில் தெலுங்கில் எழுதி கேமராவுக்குப் பக்கத்தில் ஒருவர் பிடித்துக் கொள்ள அதைப் பார்த்து பேசுவார். ஆயினும் அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்றுவரை பேசப்படுகிறது.

  எம்.எல்.வசந்தகுமாரி "சுதர்ஸன்' படத்தில் சில காட்சிகளில் நடித்தார். பின்னர் "கிருஷ்ணபக்தி' படத்தில் மேடைக்கச்சேரி செய்பவராக பாடி நடித்தார்.

  "சகுந்தலை' படத்தில் மன்னன் துஷ்யந்தன் சபையில் நடனம் ஆடும் பெண்ணாக ஒருவர் நடித்திருப்பார். அவர்தான் வி.என். ஜானகி. பின்னாளில் அவர் திருமதி எம்.ஜி.ஆர். ஆனார்.

  பிரபல வயலின் மேதை மைசூர் டி.செüடய்யா 1943-ல் கன்னட மொழியில் "வாணி' என்கிற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் வரும் ஒரு கச்சேரி காட்சியில் நடிக்க செம்பை வைத்தியநாத பாகவதரை அணுகினார் செüடய்யா. அவரது அன்புக்காக சம்மதித்து " நிகில பாப விநாசினி' என்கிற பாடலை பாடி நடித்து கொடுத்தார் செம்பை. படம் முடிந்ததும் செüடய்யா செம்பையை சந்தித்து நன்றி கூறிவிட்டு 10,000 ரூபாய் பணத்தை எடுத்து நீட்ட செம்பை பதறி "வேணாண்டா அது பாவம் செஞ்ச பணம்டா' என்று கூறி வாங்க மறுத்துவிட்டார். செüடய்யா மிகவும் வற்புறுத்தவே அந்தப் பணத்தை தனது ஊரிலிருந்த கோயிலுக்கு காணிக்கையாக தந்துவிட்டார் செம்பை.

  -ராஜ்கண்ணன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai