Enable Javscript for better performance
புதையல் :- ஆ.மகராஜன்- Dinamani

சுடச்சுட

    
    அப்பொழுது, 
    உண்மை உறவுகளையும்
    நட்பையும் விட
    விரோதிகளும் துரோகிகளுமே
    விதவிதமான முகமூடிகளோடு
    சூழ்ந்திருந்தனர் என்னை...
    
    அவர்களின் முகத்துக்கும்
    முகமூடிகளுக்கும் 
    வித்தியாசம் தெரியாது 
    குழப்பமாயிருக்கும்..
    
    கூடவே உடல் ஆரோக்கியமும்  
    சீர் செய்ய முடியாது 
    சிதைந்து கொண்டிருந்தது.
    
    வெறுப்பும் விரக்தியும்
    அமைதி, ஆனந்தத்தை 
    துரத்தியடித்து, 
    மொத்த மனதையும்
    ஆக்கிரமித்துக் கொண்டது.
    
    அப்பொழுது ஒரு நாள்
    என் மீது பரிவும் பரிதாபமும் கொண்ட
    இதயம் முழுக்க  இரக்கம் 
    நிறைந்த ஒருவர்
    'யோகா'வைப்  பற்றி நிறைய விளக்கி
    முறையாய்க் கற்றுக்கொள்ளவும் 
    வழி செய்தார்.
    
    
    அந்த சில நாள் எளிய பயிற்சிகள்,
    என்னுள் ஏதோ ஒன்றைப்
    'பற்ற' வைத்ததில்,
    உள்ளும் புறமும் 'ஒளிர'த்
    தொடங்கியது.
    
    தொடர்ந்து செய்ததில்,
    தொலைந்து போன
    அமைதியும், ஆனந்தமும் 
    மீண்டும் என்னிடம்
    மீண்டு வந்தது..
    
    சிதைந்து கொண்டிருந்த
    ஆரோக்கியமும்
    மெல்ல சீர்படத் தொடங்கியது.
    
    எல்லாமும் என்னுள்
    தலைகீழாய் நிலை மாறிப் போனது.
    
    முகமூடி மனிதர்களின்
    முகங்கள் மட்டுமல்ல..
    மூலம் கூடப் புரிந்தது.
    
    சந்தடி மிகுந்த சாலைகளில் கூட 
    பறந்து கடக்கும் பட்டாம்பூச்சிகளைப் 
    பார்க்க முடிந்தது.
    பூக்கள் பூக்கும் ஓசை கேட்ட்டது
    பறவைகளின் பாஷை புரிந்தது.
    
    படைப்பு எதுவாயினும், அதனுள்
    படைத்தவனையே தேட முடிந்தது.
    மொத்தத்தில்,
    மொத்த பிரபஞ்சமுமே
    கடவுள் எழுதிய கவிதையாய்
    களிப்பூட்டியது...!
    
    எப்படி நிகழ்ந்தது, என்னுள் 
    இத்துனை மாற்றம்..?
    
    சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும்
    விருட்சம் போல,
    யோக விஞ்ஞானத்துள் 
    இத்தனை வீரியமா..? 
    
    மண்ணுள்ளே தங்கப் புதையலாய்,
    மனிதர்களுள் மறைந்து கிடக்கும்  
    ஆனந்தப் புதையல் தேடும்
    அற்புதமான தொழில் நுட்பமா இது..?
    
    இறைவா ! எனக்குக் கிடைத்த
    இந்த அற்புதப் புதையல்
    எல்லோருக்கும் கிடைக்க
    உண்மையில் ஏங்குகிறது என்னுள்ளம்..
    
    விரும்பி உன்னை வேண்டுகிறேன்,
    அதற்கான கருவியாய் என்னை 
    உன்னருளாலே,
    சட்டென்று நீ மாற்றிவிடு,
    சற்றும் தாமதியாமல்..!
    
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai