சுடச்சுட

  
  பால்வாயில்  மார்பிருந்து  தமிழோ  டூட்டி
        பண்பாட்டைத் தாலாட்டில்  இசையோ டூட்டி
  வேல்வீரம் ஒழுக்கத்தை  மதிகாட் டூட்டி
        வியர்வைவிழ  உழைக்கத்தன்  மானம் ஊட்டி
  தோல்விகளே  வந்தென்னைக்  குலைத்த  போது
        தோள்தட்டி  நம்பிக்கை  நெஞ்சில்  ஊட்டி
  ஆல்விழுதாய்  நான்வளர  வேராய்  நின்றே
        அன்பாலே  எனைநனைத்த  மழைதான்  அன்னை !
  
  தன்னுடைய  பெற்றோரைச்  சுற்றத்  தாரைத்
        தான்பிறந்த  இடந்தன்னைப்  பிரிந்து  வந்தே
  முன்பின்னே  அறியாத  புகுந்த வீட்டின்
        முழுப்பெருமை  காக்கின்ற  உறுதி  யோடே
  இன்பத்தில்  துன்பத்தில்  தோளாய்  நின்றே
        இல்லறத்து  விளக்குதனில்  ஒளியாய்  நின்றே
  என்பெயரைச்  சொல்லபிள்ளை  பெற்ற ளித்தே
        எனையன்பால்  நனைத்திட்ட  மழைதான்  இல்லாள் !
  
  நல்லொழுக்கம்  பண்பாடு  கல்வி  தன்னை
        நாள்தோறும்  கற்றுயர்வாய் வளர்ந்து  நின்று
  சொல்லாலும்  செயலாலும்  சங்க  நூல்கள்
        சொல்கின்ற  அறவழியில் நாளும் நின்று
  நல்லவனாய்  வல்லவனாய்  நேர்யை  யாக
        நற்செயல்கள்  தன்னழைப்புப்  பொருளில்  செய்து
  பல்லோரும்  போற்றயென்றன்  பெயரைக்  காத்துப்
        பாசத்தால்  எனைநனைத்த  மழைதான்  பிள்ளை !
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai