சுடச்சுட

  

  கருமுகில்கள் திரண்டெழுந்தே ஒருங்கு சேர்ந்து
      கண்கூசும் படிமின்னி இடியி டித்து
  வருமழையை ஏருழவர் மகிழ்ச்சி யோடு 
      வரவேற்பர்; விதைவிதைத்து விளைச்சல் காண்பர்!
  பெருமழையால் நிலத்தடிநீர் வளமும் கூடும்;
      பின்னாளில் வறட்சியது தலைகாட் டாது!
  திருவிழாவும் பூசைகளும் நடக்கும் எங்கும்;
      செழிப்புற்று நல்வாழ்க்கை வாழ்வார் மக்கள்!

  படிப்பதற்குப் பள்ளிசெல்லும் மாணாக் கர்கள்
      படிப்பதற்கு வருந்தடையை விரும்ப மாட்டார்!
  படிப்பினிலே ஆர்வமுள்ள எவரும் தங்கள்
      படிப்புதொடர் வதனைத்தான் விரும்பு வார்கள்!
  குடிப்பதற்கு நீரின்றி வறட்சி வந்து
      குலைத்தாலும் அடைமழைதான் பெய்திட் டாலும்
  படிப்பதனைத் தொடர்வார்கள்; வருங்கா லத்தில்
      பல்கலையில் வல்லவராய்த் திகழு வார்கள்!

  பள்ளிசென்று நான்படித்த காலம், சொல்லும்
      படியாக வசதியேதும் இல்லாக் காலம்!
  துள்ளிநடை போட்டவாறு பலகல் சென்று
      துவளாமல் கல்வியினைக் கற்ற காலம்!
  அள்ளியள்ளிப் பருகுகின்ற வேட்கை யோடும்
      அயராத உழைப்போடும் கல்வி கற்கப்
  பள்ளிசென்ற பொற்காலம்! பிற்கா லத்தில்
      பலவகையில் முன்னேற்றம் தந்த காலம்!

  மனைவிட்டுப் பள்ளிசெல்லும் வேளை, நல்ல
      மழைபொழிந்து தடுத்தாலும் நிற்றல் இல்லை!
  நனைந்தபடி, குடைபிடிக்கும் வசதி யின்றி
      நான்படித்த காலமதை மறக்க மாட்டேன்!
  எனைநனைத்த மழையதனை எண்ணி யெண்ணி
      இன்பந்தான் கொள்கின்றேன்! மழையில் சற்றும்
  நனைந்துபடி யாதவர்கள் கோட்டை விட்டார்!
      நனைந்தபடி படித்தவன்நான் ஏற்றம் பெற்றேன்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai