சுடச்சுட

  
  ஏழாம் பிள்ளையாய் நான் உன் வயிற்றில் தங்கினாலும்
      தாழா அன்புடனே எனைத் தாலாட்டி சீராட்டி
  பாழாய்ப் போகாமல் என் வாழ்வைப் பசுமையாக்க
       ஓடாய் உழைத்து உன் உதிரத்தை வியர்வையாக்கி
  காடாய்க் கிடந்த என் மனதைக் கவினுறும் கழனியாக்க
        மேலாய்  நீ பொழிந்த அன்பன்றோ எனை நனைத்த முதல்மழை!
  
  பகலில் உங்களைப் பார்ப்பதே மிக அரிதென்றாலும் 
        இரவிலும்கூட எங்கள் நலம் பேணவென்றே 
  காலில் சக்கரம் கட்டிய கடமைமிகு தந்தையாய்
        எல்லோரின் கல்வியொன்றே என்றைக்கும் நிரந்தரமென்று
  சொல்லியதோடல்லாமல் செய்தும் காட்டிய தந்தையே!
        உங்கள் அறிவுக் கண்ணன்றோ எனை நனைத்த பெருமழை!
         
  பத்துவயதானால் பங்காளியாவர் சகோதர ரும் என்ற பழமொழியை
        இடித்துத் தவிடு பொடியாக்கி இல்லை அப்படியெல்லாம்
  எத்தனை வயதானாலும் நாங்கள் இருப்போம் ஒற்றுமையாய்
         இளையோன் வாழ்வதனை எங்கள் வாழ்வாய் எண்ணி 
  அவனும் கடைத்தேற ஆவன அனைத்தும் செய்வோமென்று 
         எனை உயர்த்திய அண்ணன்கள் தியாகமன்றோ எனை நனைத்த பாசமழை!
  
  கைப்பிடித்த கணவன் வாழ்வே கவினுறும் தன்வாழ்வென்றெண்ணி
        இருப்பதைக் கொண்டே வாழ்வை இன்புறு சோலையாக்கி 
  வழித்தடம் மாறாது வந்துதித்த மக்களைப் பேணிக் காத்து
        அறிஞராய் அவர்தம் ஆக ஆவியையும் நல் மூலதனமாக்கி 
  எத்தடம் ஏகினாலும் அவர் இருவரும் வெற்றி கண்டுயரும் வண்ணம்
        ஆக்கிய மனையாள் கடமை!அதுதானே எனை நனைத்த காதல்மழை!
  
  கண்ணியம் தவறா வாழ்வில் கடமையாய் பெற்றோர் நிலையறிந்து
      இடர்களை அறிந்து அவற்றை இலகுவாய் விலக்கித் தள்ளி
  புண்ணியம் சேரும் வண்ணம் புளகாங்கிதமாய் நின்று வாழ்ந்து 
      அடுத்தவர்க் குதவுவதில் நாளும் அலாதி இன்பம் கண்டு 
  எங்கே யாம் வாழ்ந்தாலும் என்றும் இந்தியராய் வாழ்வோமென்று
      கங்கணம் கட்டி வாழும் குழந்தையரே!எனை நனைத்த இன்பமழை!
  
  
  இத்தனைக்கும் காரணமாய் இருப்பவன் நீ!உந்தன் அப்பனுக்கே புத்தி சொன்ன
   அறிஞன் நீ!ஒளவைக்கும் சுட்ட பழம் தந்த சுடர்க் கொடி நீ!
  
  அத்தனைக்கும் உலகில் அடித்தளம் நீ!உனையல்லால் அசையாது ஓரணுவும்!
      ஆனாலும் எதனையும் நீ உன்னதென்றே எப்பொழுதும் சொல்லாய்!
  
  எனையும் ஆட்கொண்டு இவ்வுலக இன்பமெல்லாம் அனுபவிக்க வைத்தாயே!
       யாவே!முருகாவே!உன்மீது கொண்ட பக்திதானே!எனை நனைத்த பக்திமழை!
  
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai