சுடச்சுட

    

    வெற்றி முரசு கொட்டுவோம்! நம்மில்
    வேற்றுமை யெல்லாம் களைந்தனம் என்றே! 
    பற்றி யிருந்த பகைமை யெல்லாம்
    பறந்தே ஓடின! உறவுகள் ஆயினோம்! 
    சுற்றி யிருந்த கயவர் வாலைச்
    சுருட்டிக் கொண்டு தொலைந்து போயினர்! 
    சிற்றி னத்தவர் சிந்தை மாறினர்; 
    செம்மை எங்கும் தங்கின நிறைந்தே!

    மக்கள் எலோரும் மகிழ்வில் திளைத்தனர்; 
    மாற்றம் அவரிடம் புகுந்து கொண்டது! 
    மிக்க அறிவினால் மேன்மை அடைந்தனர்; 
    மேலும் மேலும் உயர்ந்து நின்றனர்! 
    சிக்கல் யாவும் அவிழ்ந்து கொண்டன; 
    சீர்மை யாரையும் திருந்த வைத்தன! 
    தக்க சான்றவர் தகுவழி காட்டினர்; 
    தகுதியால் ஒருவரை யொருவர் விஞ்சினர்!

    அரசியல் இளைஞர் கைக்குள் வந்தது! 
    அனைவரும் உலகியல் அறிவைப் பெற்றனர்! 
    வரவுகள் நல்வழி வரும்படி வகுத்தனர்! 
    வாழ்வா தாரம் பெருக்கி மகிழ்ந்தனர்! 
    இரவுகள் விடியலை எதிர்பார்த் திருந்தன; 
    எங்கும் எழுச்சி இணையக் கண்டனர்! 
    கரவுகள் தாமே கழிந்து கொண்டன; 
    கையூட் டென்னும் கயமை ஒழிந்தது!

    மதியை மயக்கும் மதுக்கடை ஒழித்தனர்; 
    மங்கையர் தாலி இழப்பது குறைந்தது! 
    சதிசெய் பவர்கள் எங்கோ தொலைந்தனர்; 
    சாதனை நாடென திகழ்ந்தது பாரினில்! 
    விதியை நம்பியோர் வெதும்பி அழுதனர்; 
    விரட்டி யடித்தவர் வளர்ச்சி கண்டனர்! 
    எதிலும் நன்மை கண்டனம் என்றே
    இனிக்கொட் டிடுவோம் வெற்றி முரசே! 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai