சுடச்சுட

  

  நாட்டுநலன் கருதுகின்ற நல்ல வர்க்கே
      நாடாளும் அரியணையைத் தருதல் வேண்டும்! 
  வீட்டுநலன் பெரிதாகக் கருது வோர்க்கு
      விட்டுவிட்டால் சீக்கிரத்தில் சுரண்டித் தீர்ப்பார்!
  பாட்டுவளம் மிக்கிருந்த புலவர் போற்றும்
       படியாண்ட முடிமன்னர் அக்கா லத்தில்
  நாட்டுவளம் கேட்டறிந்தே ஆட்சி செய்தார்;
      நல்லாட்சி அமையமக்கள் வாழ்ந்தார் நன்றே!

  மக்களாட்சி முறையின்று சிறந்த தாக
      மதிப்பதனால் உலகிலுள்ள நாட்டார் எல்லாம்
  தக்கபடி மக்களாட்சி அமைத்துக் கொண்டார்!
      சர்வாதி காரமுறை ஒழியக் கண்டோம்!
  சிக்கலில்லை; நாடாளு வோரைத் தேர்வு
      செய்வதற்குத் தேர்தலினை நடத்து கின்றார்!
  மக்களிலே பெரும்பாலோர் விரும்பு வோரே
      வந்திங்கே ஆளுவதால் தீமை யில்லை!

  ஆட்சியதி காரத்தைக் கையில் பற்றி
      அரசாள நினைப்பவர்கள், பெரும்ப ணத்தைக்
  காட்டிவாக்கு பெறுகின்றார்! கள்ள வாக்கும்
      கணக்கின்றிக் கிடைப்பதனால் வெற்றி பெற்றே
  ஆட்சிக்கு வருகின்றார்; ஊழல் செய்தே
      அள்ளியள்ளிப் பணம்சேர்க்க முயலு கின்றார்!
  மாட்சிமிகு மக்களாட்சி முறைக்குக் கேடு
      வந்ததிந்தக் கயமையினால்! பொறுக்க லாமோ?

  அரியணையில் அமர்ந்தாட்சி புரிவ தற்கே
      ஆசைபடு கின்றார்கள் எல்லோ ரும்மே!
  புரிதலில்லா மக்களுக்குப் பணத்தைக் காட்டிப்
      புறவழியில் வாக்குபெறப் போட்டா போட்டி!
  அரியணையில் அமர்வதற்கு மக்கள் தங்கள் 
      அறியாமை முதலீடாய்க் கருது வோர்க்குச்
  சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்;
      தக்கவிழிப் புணர்வதனைப் பெறுவோம் நாமே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai