சுடச்சுட

  
  அரியாசனம்  தன்னில்  அமர்ந்திட்டுக்  கோலோச்ச
                அருகதையும்  வேண்டுமல்லவோ?
         ஆக்கம்தரும்  சக்திதனைத்  தருகின்ற  தெல்லாமும்
                அரிதானக்  கல்வியல்லவோ?
  செறிவுற்ற  திறன்கொண்ட  நேர்மைதனில்  பிறழாத
                செம்மலே  நமக்குநல்ல,
         சிறப்பான  ஆட்சிதனைத்  தரத்தக்கார்  என்பதனை
                சிந்தையதும்  மறக்கத்தகுமோ?
  நெறிமிக்க  கற்றவர்கள்  நாட்டினில்  பலருண்டு
                நெஞ்சமதில்  தீர்க்கத்தோடு,
         நிலைத்தநல்  ஆட்சிதனைத்  தரத்தக்க  அறிஞர்தமை
                நிச்சயம்  அழைக்கவேண்டும் !
  வெறிகொண்டு  பதவிக்கு  அலைகின்ற  ஈனர்களை,
                வீணர்களைத்  தவிர்க்கவேண்டும்;
         விளக்கமதை  நாடிதுவும்  காணவகை  செய்கின்ற
                விவேகமதைக்  கொள்ளவேண்டும்!

  கற்றவரைத்  தேர்கின்ற  நெறிதன்னைக்  கொள்ளல்நம்
                கடமையென்  றாகவேண்டும்,
         காலமும்  நாடிதனில்  வளமெலாம்  பெருகிவர
                கருத்திலிதைக்  கொள்ளவேண்டும்!
  உற்றநல்  ஆட்சிதனை  நாடிதுவும்  கண்டுய்ய,
                உயர்வுதனை  என்றும்காண,
         உன்னதநற்  பண்புகள்  தனைக்கொண்ட  மாந்தர்களின்
               உதவிதனைத்  தவிர்க்கலாமோ?
  பெற்றநற்  கல்வியே  ஆக்கமதைக்  கூட்டுவிக்கும்
                பெருமதனைக்  கொண்டதாகும்;
         பேரிடர்  நேர்வதனைத்  தடுக்கின்ற  ஆற்றலதும்
                பெரிதுமாய்  அதற்குத்தானாம்!
  மற்றபலப்  பண்புகளும்  வேண்டுமென்றப்  போதிலும்
                மாட்சிமிகுக்  கல்விஞானம்,
         மறுத்திடத்  தக்கதில்லை  என்பதே  உண்மையாம்
                மன்றமதும்  இதையேற்குமே!
  அறியாரைத்  தேர்ந்திட்டு  அவலமதை  ஏற்பதுவும்
  நெறிமிக்கச்  செயல்தானோ,  நீயுணர்க !---செறிவுற்ற,
  மதித்திறன்  மிக்கநல்  மாண்புடையோர்  தமைதேர்ந்து
  எதிர்காலம்  சிறக்கநீ  எண்!
  கல்லாரை  அரசேற்றிக்  கண்டதெலாம்  விரயமென
  எல்லோரும்  சொல்லவே  இசையுறுவார்!---இல்லாரால்,
  என்னபயன்  விளைந்திடுமோ? எவ்வகையில்  சிறப்புறுவோம்?
  உன்னதம்  ஆகாதென்  றுணர்!
  தகுதிக்கு  மீறிட்டுத்  தான்கொள்ளும்  வேட்கையினால்
  மிகுந்திட்ட  அவலமதே  மிஞ்சிடுமாம்!---வெகுமதியாய்க்,
  கிட்டத்தக்க  தெல்லாமும்  கேவலமென்  றறியார்தம்
  ஒட்டுமொத்த  நட்புதன்னை  ஒழி!
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai