சுடச்சுட

  

  கண்ணியம்  தனையெலாம்  இழந்திட்டும்---கடமை
            கட்டுப்  பாட்டையும்  இழந்திட்டும்,
  எண்ணந்  தனிலெந்தத்  தெளிவுமின்றி---கொடிய
            இழிவினை  ஏற்கவும்  துணிந்திட்டார்!
  உண்மையை  நேர்மையைக்  காவாத---அந்த
             உலுத்தர்கள்  தமையார்  பொறுத்திடுவார்?
  வெண்மதி  நிலவே  அவர்களிடம்---நீசென்று
             விளக்கத்தை  ஊட்டிட  வேண்டுவனே!

  மாண்பினை  இழந்திட்டக்  குடிமக்களாய்---கொடிய
             மமதையைக்  கொண்டிட்ட  அரக்கர்களாய்,
  காண்கின்ற  ஈனர்கள்  ஆட்சிதனில்---எதனைக்
             கண்டிட்டு  மகிழ்வார்  மக்களெல்லாம்?
  வேண்டிய  மட்டும்  சேர்த்திட்டுக்---குலமெலாம்
             விளக்கத்தைக்  கண்டதும்  கேவலமே!
  வான்தனில்  நீந்திடும்  வெண்ணிலவே---சென்று
             வகையாய்  அவர்கட்கு  உணர்த்திவிடு!

  சிந்திக்க  எந்தவோர்  சிறப்புமில்லை!---நல்ல
             சிறப்புற்றத்  திறன்கள்  எதுவுமில்லை!
  வந்திட்ட  ஆட்சிகள்  தன்னாலே---கொண்ட
             வளமையை  இழந்ததே  நாடிதுவும்!
  எந்தவோர்  நிலையிலும்  மக்களவர்---இனி
             இவர்களைத்  தேர்ந்திட  மாட்டாரென,
  சந்திர  நன்மகள்  நீசென்று ---அந்த
              சழக்கர்க்கு  உணர்த்திட  வேண்டுவனே!

  ஊரதே  தூற்றிட்டு  வசைபாட---இந்த
              உலகோர்  கண்டிட்டு  சிரித்துநிற்க,
  சீரற்றத்  திறன்தனைக்  கொண்டவரால்---இன்று
              சிறப்பினை  இழந்ததே  இன்னாடும்!
  கோர  முகந்தன்னைக்  கண்டுகொண்டார்---மக்கள்
              கொண்டிட்ட  நம்பிக்கை  தனையிழந்தார் !
  பூரண  நிலவுந்தன்  திறனறிவேன்---அவர்க்கு
               புத்தியை  ஊட்டிட  வேண்டுவனே!

  நலத்திட்டம்  என்னும்  பெயராலே---இந்த
               நாட்டவர்  தமையெலாம்  ஏய்த்திட்டே,
  பலப்பலக்  கோடிகள்  கொள்ளையிட்டு---நாடிதும்
               பாழ்படக்  காரணம்  என்றானார்!
  குலமதன்  விளக்கம்  தனைக்கண்டார்---இந்தக்
               கொடுமைக்கும்  எல்லையே  கிடையாதோ?
  நிலவே  உனைநான்  தூதுவிட்டேன்---சென்று
               நீசர்க்கு  இன்னதை  உணர்த்திடவே!

  வெம்புலிக்  காடதே  சிறந்ததென---மக்கள்
               வெம்பிடும்  வகைதனில்  இன்னலுற்றார்!
  தம்மின்  குலமெலாம்  விளக்கமுற---மனதைத்
               தறிகெட்ட  வகைதனில்  போகவிட்டு,
  கும்மியிட்டு  ஊரிதைக்  கொள்ளையிட்டார்---இந்தக்
               கொடுமையை  மக்கள்  மறக்கமாட்டார்!
  அம்புலிநீ  என்சார்பில்  தூதுசென்று---அந்த
                அற்பர்க்கு  உணர்த்திட  வேண்டுவனே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai