கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

முக நூலில் நட்பு வட்டம் பெரிது... ஆனால் அகமும் முகமும் மலர்ந்து  சிரிக்கும்
கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

வாழ்வின் நிஜங்கள் 

முக நூலில் நட்பு வட்டம் பெரிது... ஆனால் 
அகமும் முகமும் மலர்ந்து  சிரிக்கும் அவன் சுற்றமும் நட்பும் 
பார்த்து அவன் முகம்  மலர்ந்து சிரிப்பதே அரிது !
இது வாழ்வின் நிஜம் !

நிஜம் நிஜமாக இருக்கையில் நிஜத்தின் அருமை 
பெருமை தெரியாமல் இருந்து விட்டு நிஜம் 
நிழலாக மாறிய பின்னர் நிழலுக்கு மாலையும் 
மரியாதையும் தவறாமல் நடக்கும் தினமும் 
இது வாழ்வின் நிஜம் ! 

நிழலை நிஜம் என்று நம்பி நிஜ வாழ்வை 
தொலைத்தவர்  பலர் ... இதுவும் வாழ்வின் நிஜம் !
நெறுநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை படைத்த இவ்வுலகு என்னும் வள்ளுவன் 
வாக்கை மறந்து தான் வாழும் வாழ்வு என்றும் 
நிரந்தரம் ...சுக போக வாழ்வு அது என் சுதந்திரம் ,!
என்று வாதிப்பர் பலர் ...இதுவும் வாழ்வின் நிஜம் !

என் வாழ்க்கை நான் வாழ்வதற்கே என்று நம்பி 
நிலையில்லா வாழ்வு என்னும் அலைகடலில்  
ஓட்டைப் படகில் துடுப்பும் இன்றி பயணிப்பர் 
மெத்தப் படித்த புத்திசாலிகள் சிலர் !
இதுவும் வாழ்வின் நிஜத்தில் ஒன்று !

நிழல் எது  நிஜம் எது என்று தெரியாமலே 
நிழலை நிஜமாகவும் நிஜத்தை நிழலாகவும் 
நினைத்து வாழ்ந்து முடித்தவரும் பலர் !
வாழ்வின் நிஜம் இதில் நிதர்சனம் !

- கே.நடராஜன்

** 

ஒவ்வொரு நொடியும் வாழ்வின்
ஒயிலான நிஜம் என்பதனை
உணர்ந்திட்டால் நமக்கி ங்கே 
ஒன்று  மில்லை  பிரச்னைகள்!

பிறப்பும் அது தொடரும் 
இறப்புந் தானே வாழ்வில்
நிரந்தர நிஜங் களென்று
நிம்மதி கொள்ள லாமே!

நிஜமாகவே சொல்கிறே னென்று 
நிம்மதி குலைத்துப் போடும்
உளுத்தர்கள் உற வொதுக்கி
ஒதுங்கினால் உண்டு நிம்மதி!

நிஜத்தினை உரக்கச் சொல்ல
நெஞ்சுரம் கொஞ்சம் போதும்!
நிஜத்தினால் உறவு பேண
நெஞ்சினில் ஈரம் வேண்டும்!

வாழ்வினில் நிஜங்கள் பேணி
வல்லமை கொண்டு வாழ்ந்தால்
வரலாறு  நம்   பெயரை
வையத்தில் நிலைக்கச் செய்யும்!

-ரெத்தின.ஆத்மநாதன், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

வீட்டிற்கு ஒன்று,
வெளியுலகிற்கு ஒன்று,
குழந்தைகளுக்கு ஒன்று,
அலுவலகத்திற்கு ஒன்று,
நண்பர்களுக்கு ஒன்று என 
நித்தம் ஒரு 
புத்தம் புது முகமூடி 
அணிந்து பழக்கப்பட்ட 
நமக்கு நேருக்கு நேராக 
பார்க்கும்  
திராணி இருப்பதில்லை

எந்த முகமூடியையும் 
பொசுக்கிவிடும் 
வாழ்வின் நிஜங்களைக் காண.

அடுத்த முறை
உங்கள் நடைபயிற்சிக்கு 
ஒரு பெரிய காம்பவுண்டு வைத்த
அரசு மருத்துவமனையை 
தேர்ந்தெடுக்கவும்

அவசர சிகிச்சைப் பிரிவு,
எலும்பு முறிவு,
பிரசவ வார்டு,
ரத்தப் பரிசோதனை 
என சுற்றி முடிக்கும் போது
பாதியும்

அதன் வாசலில் 
சிறு கோவிலில் 
கண்ணீர் கறையோடு தொழும்
பிரார்த்தனையில் 
மீதியும் 

தெரிய வரும்
வாழ்வின் நிஜங்கள்.

கனவே இல்லாத 
கருவறை இருட்டின் 
தூக்கம்
தீர்வு தராமல் 
போகலாம்
அனால் அது,
மெல்ல அழிக்கும் 
வாழ்வின் நிஜங்களை

எப்போதாவது 
நான் மட்டும் 
ரகசியமாக
எடுத்துப் பார்க்கும்

நீ அனுப்பிய
வாழ்த்து அட்டைகள்,
பரிசுகள்,
கையெழுத்திட்ட புத்தகங்கள்,
சிறு கீ செயின்கள்,
ஒரு பர்ஸ், 
எல்லாம் நேற்றைய
கனவின் நிழல்கள்

எல்லோரும் பார்க்க
ஹாலில் மாட்டிய
என் குடும்ப புகைப்படங்கள்
இன்றைய 
வாழ்வின் நிஜங்கள்.

- டோட்டோ

**

அன்புடன் கூடி ஊட்டும் இல்வாழ்க்கை இல்லை
ஆண்டவனைத் தொழுவதில் உண்மை இல்லை
குடும்பத்தில் இன்பமாய்க் கூடி குலவ முடிவதில்லை
பிள்ளைகளை வளர்க்கத் துளிக்கூடப் பொழுதில்லை 
அலுவலகம் செல்ல பகலென்ற கால வரம்பில்லை
காலவிரைக்கேற்று வீட்டடுப்பு மூட்ட முடிவதில்லை
வேண்டிய உணவு விதவிதமாய் வீட்டில் கிடைப்பதில்லை

அன்பிற்குத் தாழ்வைத்து அடைத்து விட்டதால்
போலி வெளிப்புறவலரிடம் புல்லரிடம் மயங்கி
பால்க்காரன், தண்ணீர்க்காரன், காவற்காரன் வலையில்
விட்டில் பூச்சிகளாய் இளம்கொழுந்து பெண்களழிவது
காட்டுமிருகங்களாய் ஆண்பிள்ளைகள் போலி நட்பலையில்
மாட்டிக் குடித்தும்  போதைப்பொருள் உண்டுமழிவது
பணத்திற்கே முதலிடம் கொடுக்கும் இக்கால சமுதாய
சமுதாய வாழ்வியல் நிஜங்களென அறிவீர்! 

**

இருக்கும் வரை தெரியலடி
இனியவளே உன் இனிமை
பொறுப்பான பொன் உனையே
போற்றிடவே  மறந்தவன் நான்

உடல் சோர்ந்து நீ இருக்க - ஓர்
உதவி செய்ததில்ல
அன்பான பேச்சுமில்ல
அரவணைப்பை கொடுத்ததில்ல

அடியே நீ போன பின்பு
அடியேனுக்கு யாருமில்ல
வாழும் வரை புரிவதில்ல
வாழ்க்கையின் நிஜ உருவம்

- பார். விஜயேந்திரன், கருங்குழி

**

நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை  தீர்ப்பு
நிஜத்திலோ நம்பி கடன் தந்தோர் திரும்பக்கேட்டால் தாக்குதல்.. 

குழந்தையும் தெய்வமுமும் ஒன்று சான்றோர் வாக்கு 
நிஜத்திலோ கயமை எண்ணத்தில் குழந்தைகள் வன்புணர்வு,  பின்  கொடூரக்கொலை  

உணவைத்தருவோர் கடவுள் போல.... யாரோ சொன்னது
நிஜத்திலோ விவசாயிக்கு மதிப்பே இல்லை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சான்றோர் சொன்னது
நிஜத்திலோ மூத்தோர் முதியோர் இல்லங்களிலும் பட்டியினிலும்

பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்பார்கள் இன்றோ சுயநலம் மட்டுமே
யாரும் யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை

கனாவில் காணும் பல எண்ணங்கள் வானவில் போல அழகாய்! 
பயம் கொள்ள வைக்குது எதிரில் காணும் கேட்கும் படிக்கும் சம்பவங்கள்

பல்வேறு காரணிகள்... காரணங்கள்... பின்னணிகள்.. தலைசுற்றுது! ... 
பயமுறுத்துது  நாளைய நம் சந்ததிகள் சந்திக்கவிருக்கும் வாழ்வின் நிஜங்கள்.... 

- ஆகர்ஷிணி 

**

இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை
இன்பம் மட்டுமே நிரந்தரமாக யாருக்கும் இல்லை!

எனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று
எல்லோருமே புலம்பி தவித்து வாழ்ந்து வருகின்றனர்!

மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்
மற்றவர்களைப் பார்த்து பெருமை கொள்ளுங்கள்!

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போலவே
வாசல்தோறும் வேதனை பல உண்டு!

என்னடா வாழ்க்கை என்று சலிப்பதை விடுத்து
எதையும் சமாளிப்பேன் என்று விரும்பி வாழ்ந்திடுக!

தோல்விகள் கண்டு துவண்டு விடக்கூடாது
தோல்விகள் நிரந்தரமன்று வெற்றி வந்து சேரும்!

ஒரே நாளி உயர்ந்து விட வாழ்க்கை 
ஒன்றும் திரைப்படமல்ல உணர்ந்திட வேண்டும்!

மேடு பள்ளம் இரண்டும் உண்டு சாலையில்
மகிழ்ச்சி துன்பம் இரண்டும் உண்டு வாழ்க்கையில்

சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும்
சோர்வையும் சோம்பேறித்தனத்தையும் நீக்கிட வேண்டும்!

இழப்புகள் வரலாம் சோகங்கள் நிகழலாம்
எதையும் தாங்கிடும் உள்ளம் வேண்டும்!

நேர்வழியில் கிட்டிடும் பொருள் நிலைத்திடும்
நேர்மையற்ற வழியில் கிட்டுவது நிலைக்காது!

முடிந்தவரை பிறருக்கு உதவிட வேண்டும்
முடிவு கட்டிட வேண்டும் தன்னல வாழ்க்கைக்கு!  

- கவிஞர் இரா .இரவி

**

நிழல்கள்  நிஜமாவது 
மனிதா.... உன் கையில்தான் 
உள்ளது.......
வாழ்வின்  ஒவ்வொரு கணத்தையும்
தாழ்வில்லா ஏற்றத்துடன் 
எதிர்  நோக்கினால் 
சதிராடாமல் அனைத்து 
நிஜங்களும் நமக்கு புரியும்!
படிக்கும்  மாணவனுக்கு 
பாடமே  அவன் 
வாழ்வின்  நிஜங்கள்!
நிஜத்தை  புரிந்து 
கவனத்துடன் படித்தால் 
மனம் விரும்பும்  வாழ்வு அமையும்!
நிழல் படம்  நிஜமாகி 
உற்சாக  வாழ்வு வேண்டுமென 
எண்ணும்  உள்ளங்களே....
வாழ்வில் எல்லாமே 
நிஜங்கள்தான்!
நம்பி  உழைப்போம்!
தெம்புடன்  வாழ்வோம்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

பிரமுகர்கள் பின்னால்
பினாமிகளின் பிறப்பு –
நிஜத்தை மறைத்த
நிழல்களின் ஆட்சி –
தொழிலில் செழுமை:
பொறுக்காமல் சுழியாக்க
குழிபறிப்போர் சிலர் –
உண்மைகளை மறைக்கத் தவிக்கும்
 உதடுகள் –
உருவாக்கிய சிரிப்புடன்
உறவுகள்-
வாய்மை மரங்களை
வெட்டிச்சாய்த்து
ஒரு வாழ்க்கைச்சாலை –போதும் .
இறந்து பார் – எரிப்பதற்கு முன்  
எத்தனை உடல்கள் விரதத்தில்,
எத்தனை கண்களில் உப்புக்கடல்:
எண்ணிப்பார் ,
அவை சொல்லும் வாழ்க்கையின் நிஜங்களை

- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி  -- MD DNB PhD

**
பெற்ற தாயை
விரட்டி,
வளர்த்த தந்தையைத்
துரத்தி,
வயோதிக நிலை, தனக்கு
வராதென நினைத்து
சுருங்குந் தோளழகைப்
பேரழகாய்ப் புகழ்ந்து,
பெண்ணே! − கடவுளின்
பேரெழில் படைப்பாய்,
பின் சென்று
பிதற்றிச் சிரித்து
பித்தந் தனக்குள் திணித்து,
பிச்சாடனக் கோலந் தரித்து,
கண்மத்துள் காணாமல்,
கலந் துருகிக்
கெட்டியான − மண்
பானையா யுருமாறித்
திரிவது தான்
திரிந்த நாகரீகத்தின்
வாழ்வியற் கோட்பாட்டு
வளமையற்ற உண்மைகள்.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

பால் குடங்களும்
பன்னீர் அபிஷேகமும் இறைவனுக்கு!
பசியால்  இறந்தது பச்சிளங்குழந்தை !

சட்டத்தின் காவலர் நீதிபதி
சட்டப் புத்தகம் கையிலே !
சட்டைப்பையில் இருந்ததோ 
லஞ்சப்பணம்.!

தமிழ் எங்கள் மூச்சு
தங்கத் தலைவனின் முழக்கம்
அவர்தம் குழந்தைக்கோ கான்வென்ட்  படிப்பு .!.

மது எனும் அரக்கன் மடியில்
மயங்கிக்கிடக்கும் குடி மக்கள்
மதுவிற்பனையில் வருமானம் 
உயர்ந்தது மகிழ்ச்சியில் அரசு!.

பெண்ணும் ஆணும் சமமென
பேச்சிலும் எழுத்திலும் சொல்லப்பட்டது !
தொடர்வதோ பெண் சிசுக் கொலை !

அண்டைஅயலாரை அறியார் ஆனால் அறிமுகம நண்பர்கள் 
அகிலம் முழுவதும் இணையம் மூலம் !

பெருகி வரும் மக்கள்தொகை
தொடர்கிறது தொழில்.  புரட்சி!
தொலைநதது இங்கே இயற்கை மலர்ச்சி!

இவை யாவும் வலி தரும்
இன்றையவாழ்வின் நிஜங்கள்! 

- ஜெயா வெங்கட்

**
வாழ்வின் நிஜங்கள் அன்று
வாழ்க்கையை உயர்த்தியது.

வாழ்வின் நிஜங்கள் இன்று
வறண்ட பூமியாக்கியது.

விழ்வின் நிஜ முகமூடிகள்
வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

வாழ்வின் நிஜங்கள் இன்று
பேச முடியாத ஊமையினது.

வாழ்வின் நிஜங்கள் இன்று
லஞ்ச ஊழலுக்கு அடிமையானது.

வாழ்வின் பொய்யான நிஜங்களை நம்பி
நிழலாகி விடாதே மனிதா! 

வாழ்வின் நிஜங்கள் நிசப்தமானது.

- உமாதுரை

வாழ்வின் நிஜங்கள் வக்கிரங்கள், பெரும்பாலோர்
தாழ்ந்தமனங் கொண்டவர்கள் தானெனலாம்!--ஆழ்ந்திதனைப்
பார்க்குங்கால் இதற்கு பண்டிதரும் விலக்கல்ல;
யார்நம்பத் தக்கவரோ இயம்பு!

ஆன்மீக வாதிகளாய் அவதாரம் எடுத்தவர்கள்,
வான்புகழ் தனைகண்ட வல்லுனர்கள் பலரிடமும்
காண்கின்றோம் வக்கிரத்தை, கடிதான உண்மையிது!
வீண்வேஷம் போடுகிறார் வீணர்களும் நல்லவர்போல்!

- அழகூர். அருண். ஞானசேகரன்.

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை! 
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை! 
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை! 

இருக்கும் வாழ்வை அன்பால் வாழ்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்! 

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

வெட்டுங்கள்  குளமென்றால்  வெட்டி  டாமல்
    வெட்டாதீர்  எனும்மரத்தை  வெட்டு  கின்றார்
கொட்டுங்கள்  குப்பையெனும்  இடத்தை  விட்டுக்
    கொட்டாதீர்  எனும்தெருவில்  கொட்டு  கின்றார் !
நட்டிடுவீர்   செடியென்றால்  நட்டி  டாமல்
    நட்டுகல்லை  விளைநிலத்தை  விற்கின்  றார்கள்
திட்டங்கள்  தீட்டுவோரே   திருடிச்  செல்லத்
    திருடரினைப்  பிடிக்காமல்   புகழ்கின்  றார்கள் !

உழைத்துவரும்  பணம்தன்னில்  உண்டி  டாமல்
    ஊரேய்த்தே   உண்டியலில்  கொட்டு  கின்றார்
பிழைப்பதற்கே    ஆயிரமாய்   வழியி  ருக்கப்
    பிறர்முதுகில்   ஏறுதற்கே   முனையு  கின்றார் !
உழைப்பதற்காய்   இருக்கின்ற   கையி  ரண்டில்
    உழைக்காமல்  இரப்பதற்கே  நீட்டு  கின்றார்
கழைக்கூத்தே   வாழ்க்கையென்  றறிந்தி  ருந்தும்
    கற்காமல்  வேடிக்கை   பார்க்கின்  றார்கள் !

பிறர்மீது  பழிசுமத்தித்  தம்மு  டைய
    பிழைகளினைத்  தெரியாமல்  மறைக்கின்  றார்கள்
அறத்தால்தான்   வரும்இன்பம்   என்ற  றிந்தும்
    அநீதித்தீ   சுகமென்றே   வீழு  கின்றார் !
புறம்பேசிப்  பொறாமையை   மனத்தி  ருத்திப்
    புகழ்வோர்க்கே   செவிமடுத்து  மயங்கு  கின்றார்
திறமையினை   மதித்திடாமல்  காலைக்  கையைத்
    தினம்பிடிக்கும்   போலியையே  வாழ்த்து  கின்றார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

அன்புடன் கூடி ஊட்டும் இல்வாழ்க்கை இல்லை
ஆண்டவனைத் தொழுவதில் உண்மை இல்லை
குடும்பத்தில் இன்பமாய்க் கூடி குலவ முடிவதில்லை
பிள்ளைகளை வளர்க்கத் துளிக்கூடப் பொழுதில்லை 
அலுவலகம் செல்ல பகலென்ற கால வரம்பில்லை
காலவிரைக்கேற்று வீட்டடுப்பு மூட்ட முடிவதில்லை
வேண்டிய உணவு விதவிதமாய் வீட்டில் கிடைப்பதில்லை

அன்பிற்குத் தாழ்வைத்து அடைத்து விட்டதால்
போலி வெளிப்புறவலரிடம் புல்லரிடம் மயங்கி
பால்க்காரன், தண்ணீர்க்காரன், காவற்காரன் வலையில்
விட்டில் பூச்சிகளாய் இளம்கொழுந்து பெண்களழிவது
காட்டுமிருகங்களாய் ஆண்பிள்ளைகள் போலி நட்பலையில்
மாட்டிக் குடித்தும்  போதைப்பொருள் உண்டுமழிவது
பணத்திற்கே முதலிடம் கொடுக்கும் இக்கால சமுதாய
சமுதாய வாழ்வியல் நிஜங்களென அறிவீர்! 

- மீனாள் தேவராஜன்

**

ஆங்காங்கே பிரச்சினை சிந்தி
கிடக்கும்; உறுதி ஆகிடவிடாமல்
துகள் ஆக்கிட சிந்திக்க வேண்டும்; 
நம்மை நாமே அறிந்து கொள்ளவும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

தீர்க்க முடியாது என்று தீர்க்கமாக
தெரிய; அமைதியை அலங்கரித்து 
கடவுளை பிராத்திக்க; மனதில் அதீத
நம்பிக்கை பிறந்து மனம் இலேசாகும்;
பிரச்சனை தீரந்திட வழி தெரிந்திடும்
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

பிரச்சினையை கண்டு பயந்தோடாதே
அமைதியோடு சந்தி; எதுவரினும் நாம்
அஞ்சோம் என துணிகரமாக எதிரிகள் 
எதிரில் நில்ல; அவனது கடுங்காலில்
அவன் பயத்தின் அறிகுறி தெரியும்; 
மனதில் கூடுதல் பலம் சேர்க்கும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

தேவைகள் கால்வாய் வெட்டும் அதில் 
மனசோர்வு எனும் கண்ணீரே ஓடும்;
ஆசைகள் எனும் கொடி கிளை படரும்
தேவையில்லாத கிளைகள் தறிக்க;
அடிக்கொடி தடிக்கும் அடிக்கும் காற்றில் 
அங்குமிங்கும் அலையாமல் இருக்கும்;
மனதில் கூடுதல் பலம் சேர்க்கும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com