கடந்த வாரத் தலைப்பு ‘நட்சத்திரங்கள் விழும் இரவினில்’வாசகர்களின் கவிதைகள் (பகுதி 1)

விழுவது விண்கல் என அறிவியல் சொன்னாலும்
கடந்த வாரத் தலைப்பு ‘நட்சத்திரங்கள் விழும் இரவினில்’வாசகர்களின் கவிதைகள் (பகுதி 1)

நட்சத்திரங்கள் விழும் இரவினில்...

நீ இல்லாத 
தனித்த இரவொன்றில்
விழுந்தது நட்சத்திரங்களல்ல
துண்டு நிலாக்கள்!

- ச.கீர்த்திவர்மன், புதுச்சேரி.

**
பெரும்காற்றோடு சலசலத்த
காலங்களை 
மிதக்கும் இலை
நனைந்துகொண்டே  பகிர,

நதி நீரோ
தன் ஆச்காரியங்களை 
சிறு வட்டங்களால் 
வெளிப்படுத்தியது !

ஒன்பது ஆண்டு வாழ்ந்த
மனைவியின் பிரிவு
ஏழு நாள் குழந்தையின் 
மீளா நினைவு
நட்சத்திரங்கள் விழும் இரவினில்
நன்றாக வசித்த வீட்டிலிருந்து
வெளியேறிய கணம்

எப்போதாவது கனவில் வந்து 
திடுக்கிட வைத்திருக்கலாம்
வனத்தில் உறங்கிய
புத்தனின் கனவில்.

- விஸ்வநாதன்

**
அகண்ட சாலையில் 
ஒரு மாலை வெய்யில் நேர
அலுவலக நெரிசல்,
சிக்னலில் வட்ட குங்குமம்,
நிறுத்திய ஸ்கூட்டரின் 
பின்னால் அமர்ந்திருந்த
நாட்டிய உடை சிறுமியின்
கைகளின் காற்றில் 
வரைந்து பயின்ற அபிநயங்கள்
நெரிசலின் நெருக்கடியை
குறைத்து வைத்தது.
பின்னர்
குளிர் காற்று வீச
ஆரம்பித்தது. 

-வினோதினி

**

விழுவது விண்கல் என
அறிவியல் சொன்னாலும்
வான் பார்த்து
மொட்டை மாடியில் 
படுத்திருக்கும் 
கவிதை மனது 
ஆரம்பித்து வைத்தது
மற்றுமொரு கவிதையை..

'நட்சத்திரங்கள் விழும் 
இரவினில் '  என

-டோடோ

**

விண்வீழ் கொள்ளிகளாய்
விடியும் வரை காத்திருக்காமல்
நள்ளிரவில் பதியிழந்த
நங்கையர்போல் முகம் வாடி
வானில் பிறந்த விதியிருந்தும்
புகைந்து கரிந்து வீழ்வதென்ன?!

களவு வாழ்க்கை வாழ்பவர்க்கும்
கனவில் வாழ்ந்து வருபவர்க்கும்
இரவில் பூக்கும் மதிமலர்போல்
இங்கும் அங்கும் திரிபவர்க்கும்
நட்சத்திரங்கள் விழும் இரவே
நம்பிக்கை தரும் நல்லிரவாம்!

கடும் உழைப்பினால் அன்றோ
பெறும் வெற்றி பெரிதாகும்
முயற்சியெல்லாம் துணையாகும்
மானிடனே மறைந்த போதும்
மண்ணில் எரிந்து வீழ்ந்தபோதும்
வானம் போலக் கலங்கிடாமல்
வாழ்ந்து நீயும் காட்டிவிடு
வானம் போலே உயர்ந்துவிடு. 

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்.சிறுமுகை.


**

நாளும் கிழமையும் ஏழைக்கேது
உலகம் உள்ள வரை,
தூங்கும் பொழுதும், 
இயங்கும் உடலின் உறுப்புகள் கெடாத வரை;
அது [உடலின் உறுப்புகள்] கைவிடாத வரை ,
பசிக்கு ஒரு முடிவு வராத வரை; [உடல் & வயிற்றுப்பசி]
நட்சத்திரங்கள் விழும் இரவினில் மட்டுமல்ல; 
எல்லா உயிர்களின், உலக உயிர் போராட்டங்கள்; 
நாளும் வாழும் வரை; 
தொடரும்  தொடரும்  தொடரும், 
தொடர்ந்து கொண்டுதானிருக்கும்……..

களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

இரவே நீ,
இறக்கை கொண்டு வா;
நட்சத்திர ஒளியில் நாம்,
சேர்ந்தே பறக்கலாம்

பகலின் உழைப்பு,
அதனால் வந்த களைப்பு;
கண் சொக்குதே,
இரவினைத்தேடுதே

நிறைவேறா
ஆசையெல்லாம்,
நிறைவேற்றும்
வரம்;இரவு

உருமாறும்
மனிதனுக்கு;
உரைத்திடும்
நல்லிரவு

நீ
உருவான 
காரணம்;
கருவான அவ்விரவு

வெண்போர்த்திய
படலத்தால்;
குளிர்விக்கும்
பனியிரவு

இனிவரும் நாட்களை
எதிர்கொள்ள;
நம்பிக்கை தரும்
பொன்னிரவு

தினம் தினம்;
நீ
எனக்கு
வரவு

என்னால்;
உனக்கு
தானே
செலவு

இருப்பினும் இரவே,

இறக்கை கொண்டு வா;
சேர்ந்தே பறக்கலாம்,
காற்றில் காயம் ஆற்றலாம்,
வாழ்வை இனியதாய் மாற்றலாம்.

- ம.சபரிநாத்,சேலம்

**
“அழகிய நிலவொன்று போதும் ,
தேவையில்லை நீங்கள் எனக்கு “
நட்சத்திரங்களை விரட்டியது வானம் –
இருளில்லாமல்  மகிமையில்லையே !
இறுகும் இதயங்களுடன்
இறங்கின அவை –
விண்மீன்களுடன் நாமும் தான்
ஜொலிப்போமே !
உவகையுடன் ஈர்த்தது பூமி –
உஷார் ! விண்கற்கள் விழுந்துகொண்டிருக்கின்றன !
உள்ளே செல்லுங்கள் !
சொன்னது அறிவியல் !

- கவிஞர் டாக்டர்.  எஸ். பார்த்தசாரதி

**
நட்சத்திரம் விழும் இரவில் 
நறுமுகையே உனைக் கண்டேன் 
கண்ட பொழுதுமுதல் - உனை 
கொண்டிடவே நான் துடித்தேன் 

விழுமந்த நட்சத்திரத்தும் 
வேண்டினேன் வெண்ணிலவே
வாழ்க்கையில் நீ வேண்டும் 
வண்ணமாய் நான் வாழ 

நட்சத்திரம் தந்ததென்ன 
நல்லழகி உனை எனக்கு 
கொண்டாடுகின்றேன்  - இன்று 
குடும்பத்துடன் வெள்ளி விழா  

- பார். விஜயேந்திரன், கருங்குழி 


மலையுச்சியில் பனிபடர்ந்து உருகியொழுக மண்ணறுந்து
கற்கள் பெயர்ந்து உருண்டு 
துண்டாகி துளாகி துகளாகி 
கடைசியில் மணலாகி ஓடும் 
நீரோடு கலந்தோடும் போல்

வானமண்டலத்து மின்கற்களதனை
நட்சத்திரங்கள் விழும் இரவினில் என 
காண்போர்க்கு அதிசயம் ஆச்சரியம் சில பாதியில் சாம்பலாகி மறையும் 
சில பூமியில் வந்து விழும் அதை
காண்போர் கதிகலங்கி போவர் கெட்ட 
நேரமென கணக்கிட்டு கொள்வார் 
பச்சை நிறம் பார்த்திடச் சொல்வார் 

மாதருள் ஒரு சாராரை காமுகத்தோர்
நட்சத்திரங்கள் விழும் இரவினில் என
சிவப்பு விளக்கு வீதியில் நிறுத்தி 
அதனால் பல குடும்பம் அழிகிறது அவ்
வேடிக்கை காட்டும் படலம் ஒழிந்திட
நட்சத்திரங்கள் இனி விழாது இரவினில் என அழியும் குடும்ப துயர் துடைப்போம்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை மகாராஷ்டிரா

**

நட்சத்திரங்களே யாரை காண 
பூமியை நோக்கி விரைகிறீர்கள் 

இந்த இரவு நேரத்தில் காதலர்களின் மனதினிலே
களிப்பை உண்டாக்கவா

கவிஞர்களை கவி எழுதத் தூண்டவா

குழந்தைகளை நிலச்சோறு உண்ணச் செய்யவா

நிலவை காணும் மக்களை நீ காணவா !


நட்சத்திரங்களே ஏன் விழுகிறீர்கள்
இந்தியாவில் முக்கிய தலைவர்கள் வீழ்ந்ததாலோ

இந்த இரவினிலே இனிமைக்கு பதிலாக 
எங்களை துக்கத்தில் ஆழ்த்தவோ 

ஏன் விழுகிறீர்கள் நட்சத்திரங்களே 
சமுதாய சீர்கேடுகள் அதிகரித்ததால் 
வருத்தம் கொண்டு தற்கொலை செய்து வீழ்கிறீர்களா ?


சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கண்டு 
மனம் தளர்ந்து வீழ்கிறீர்களோ

கீழே விழாதீர்கள், இந்த சமுதாயத்தை விழித்தெழ
வீறுகொண்டு எழச்செய்ய இந்த இரவினிலே 
மேல்நோக்கி செல்லுங்களேன் ! 

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

எட்டாத உயரத்தில் கண்சிமிட்டும் விண்மீன்கள் 
என்னைப் பார்த்துதான் சிமிட்டுது அதன் கண்ணை 
என  எண்ணி நான் என் கண் சிமிட்டாமல் 
ரசிப்பேன் விண்மீனின் கண் சிமிட்டலை  நிலவொளி 
இரவில் !

விண்ணில் இருந்து விண்மீன்கள் வருமா 
மண்ணுக்கு ?....இது ஓரு கேள்வி 
என் மனதில்..!.ஒரு நாள் இரவு விண்மீன் 
கூட்டம் ஒன்று வரிசை வரிசையாய் என் 
கண் முன் வான வேடிக்கை காட்டி 
விண்ணில் இருந்து எரிந்து மண்ணில் 
விழும் காட்சி நான் பார்க்கும் வரை !

மண்ணுலகம் பிரிந்து நாம் விண்ணுலகம் 
செல்வது போல் ஒருவேளை நாள் ஒன்று 
குறிக்கப் படுமா ஒவ்வொரு விண்மீனுக்கும் 
விண்ணுலகம் மறந்து  பறந்து வந்து இந்த 
மண்ணில் மடிய ?  பதில் தெரியாத கேள்வி 
இது எனக்கு !


- கே.நடராஜன்

**

வானில் அள்ளித் தெளித்த 
பவழ மல்லிப் பூக்களாய்
விண்ணில் கண்சிமிட்டிக் கதைபேசின
நட்சத்திரங்கள்.
தூங்காத  இரவினில் எண்ணங்கள்
விண்ணைத்தொட 
தெள்ளிய சலனங்களுடன் வசப்பட்டது
வானம்.
விண்ணில் தொலைந்த எண்ணங்கள்
தொடரற்ற புள்ளிகளாய்
தொடரற்ற புள்ளிகளே நட்சத்திரங்களாய்
தொடும்கோடுகள் மெல்ல வரைந்தேன்.
சலனங்களின் சமவெளியில்  மின்மினிகள்
மௌனம் கலைக்க
கைப்பிடித்துக் கதைசொல்லின நட்சத்திரங்கள்.
எனக்கு மட்டும்..
உனக்கும் சொல்லச் சொல்லி..
உள்ளம் வழிந்தொழுகி உவகை ஊற்றெடுக்க
மகிழ்ச்சியின் கற்றைகளைக் கண்டெடுக்க 
எண்ணத்தின் கோடுகளை வண்ணத்தில்
வரையப் பார்த்தேன்.
சட்டென்று  சலனங்கள் ஆர்ப்பரிக்க
கலைந்துவிட்டது பெரும் தியானம்
மீண்டெழுந்து வானத்துப் பெருநீலத்தில்
வண்ணங்கள் தொலைத்து அழுதேன்.
பெரும் பாரம் நீங்கியது..
பெருவெளியில் நட்சத்திரங்கள் சொல்லியகதை
அனைத்தும்
தேடாமல் தேடினாலே வசமாகும்
சொல்லிச் சிரித்த நட்சத்திரங்கள்
கண்சிமிட்ட
வானமே போதிமரமாய் மாறிப்போனது..
நானும் புத்தனாய் வாழ்ந்த கணங்களில்
பெருவெளி நட்சத்திரங்களிடம் உள்ளகதைகள்
உனக்கும் எனக்கும் சொல்லமட்டும்
அவ்வளவு ஏராளம்
சன்னல் திறந்து உள்ளமும் திறந்தால்
கதைகள் அவ்வளவு சொல்லும்
கண் சிமிட்டிக் கதைசொல்லிய நட்சத்திரங்கள்
ஓரிர‌ண்டு உதிர்ந்தும் போனது
- செண்பகம்.. தாழம்பூ.. பெருமல்லி..
பவழமல்லி.. சிறுமுல்லை.. 
உனக்குப் பிடித்த பூக்கள் எல்லாம்
உடனே நிறைந்து மலரச் சொன்னேன்
உதிர்ந்த நட்சத்திரங்களுக்கு மெத்தையாக்க‌
பூமியிலும் கட்டியணைத்துக் கதைகள் கேட்க.‌

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்.

**


விண்மீன்கள்  விழிகாணும்  இரவுப்  போழ்தில்
    வீசுகின்ற  தூய்மையான  தென்றல்  காற்றில்
திண்ணையிலே  அமர்ந்தபடி  தாத்தா பாட்டி
    திருவான  பெயர்த்தியை   மடிய  மர்த்திப்
பண்பாட்டை  ஒழுக்கத்தைக்  கதையாய்ச்  சொல்லிப்
    பதியவைத்த  காட்சியெல்லாம்  கனவாய்ப்  போக
எண்ணத்தில்   மட்டுமந்த  திண்ணை  நிற்க
    எல்லாமும்  மறைந்ததுவே   முதியோ  ரோடே !

பால்நிலவின்  ஒளிசிந்தும்  இரவுப்  போழ்தில்
    பயிர்செழித்த   பசும்வயல்சூழ்   வரப்பின்  மீது
கால்நீட்டி  அமர்ந்தபடி  குடும்பத்  தோடு
    கலகலப்பாய்  நிலாச்சோறு   உண்ட  வாறு
ஆல்விழுதாய்  சுற்றமெல்லாம்   கலந்து  பேசி
    அன்போடே   இருந்தஅந்த  காட்சி  யெல்லாம்
கோல்விழுந்த  பந்தற்போல்  ஆன  தோடு
    கொழித்திருந்த   வயல்வெளியும்   போன  தின்று !

வான்மீன்கள்  கண்சிமிட்டும்  இரவுப்  போழ்தில்
    வளர்ந்திட்டக்  களவொழுக்கக்  காத  லர்கள்
தேன்சுவையாய்  இல்லறத்தைச்  சுவைப்ப  தற்குத்
    தேள்கொடுக்காய்   சாதியன்று  தடுக்க வில்லை !
கூன்மதியால்  இன்றுவந்த  சாதி  யாலே
    கூடியோரைப்  பெற்றோரே  கொல்லு  கின்றார்
ஏன்இந்த  அவலங்கள்   எல்லாம்  முன்னோர்
    ஏற்றிவைத்த   வழிமுறையை   மறந்த  தாலே !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
மொட்டை மாடியில் ராக்கனவில் 
புதுமண தம்பதிகள் காத்திருப்பர்
நாளும் வரும் நட்சத்திரம் போல 
அவர்கள் வாழ்க்கை மினுமினுக்கும் 
மாலை எப்போது மறையும் என
காத்திருந்த நேரத்தில்
முதல் வெள்ளியாய் 
சிரிக்கின்றன நட்சத்திரங்கள்
 
- பாரதிராஜன் பெங்களூர்

**

துணை தேடி காத்திருந்தேன்!
உன் விழி தேடி காத்திருந்தேன்!
இணையாக நீ இல்லாத பொழுதில்,
காண்பதெல்லாம் மாயமா என்ன?

காண்பதற்கு இதமாய் ஒளிரும் நிலா!
நிலவின் தோழிகள் போல் நட்சத்திரம்!
மௌனமே மையல் கொண்ட  இரவு! 
உன் வாசம் வீசிச் செல்லும் தென்றல்! 
உன் கைப்பற்ற துடிக்கும் இரு கரங்கள்!
வரவேற்பு எண்ணித்தவிக்கும் மனது!
இவையனைத்தும் சேர்ந்தது நட்சத்திரம் விழும் இரவல்லவா!

தாமதித்து போனால் அவைகள் கூக்குரலிடும்! 
மெய் தீண்டி நினைவூட்ட பனி தென்றலாய் வரும்!
பக்குவமாய் எடுத்துக்கூற வண்டுகள் பவனி வரும்! 
வா அன்பே வா! வா அன்பே வா!

நட்சத்திரம் ஏக்கத்தில் விழுந்துவிடும் முன் வா!
நிலா ஒளி தராமல் கோபம் கொள்ளும் முன் வா!
காற்று சத்தமிட்டு வீசிடும் முன்வா!

இந்த இரவினை இன்னமும் நீட்டுவோம்!
நட்சத்திரம் விழும் இரவில் தாளம் மீட்டுவோம்!
புதிய கீதம் இசைத்து ஒன்றாய் ஒலிப்போம்! 
காதல் ஒலிக்கட்டும்! அவள் காதில் ஒலிக்கட்டும்! 

-இனிய தமிழ் செல்வா, ஓமன் 

**
நட்சத்திரம் விழும் இரவில் நடுனிசியில்
நெஞ்சம் வெறுமையாய் புலவன் இருந்தான்!
எரி நட்சத்திரம்,விண்கற்கள்,வால்வெள்ளி,
எல்லாமே வான்வெளியின் அதிசயங்கள்
நட்சத்திரம் விழுகிறது அதன் வால் நீள்கிறது!
அதற்குக் கரணம் சூரியனும் காற்றும்
வானதிலிருந்து வரும்தூசிகள் வளிமண்டலம்
சூரிய கதிர் பாதிப்பால்  பந்துபோல் காணும்
மண்ணில் விழாமல் கடலில் விழும் பெரும்பாலும்
அன்று மலைகிராமம் புலவரின் ஊர்மேல்  விழுந்தது
பொன்னிநிறமாய் வானம் காட்சியளித்து புழுதியில்
பூரித்து மகிழ்ந்தனர், குழந்தைகளும்,காதலர்களும்
அன்று வானத்தின் மீது கவனம் அனைவருக்கும்
கண்டுகொள்ள மாட்டார்கள் காதலர்கள் தனியாவோம்
என்றான் நலங்கிள்ளி, வேண்மாளை சந்தித்தான்
எழுச்சிகொண்டு கலந்தனர் பின் பிரிந்தனர்
எதிர்பார்த்து காத்திருந்தான் உடன்போக்குகாக
ஏந்திழையாள் வந்தாள் வெறும் கையோடு
அதிர்ந்திட்டான் அவளிடம் கேட்டு விட்டுவிட்டான்
“உன் நகை அணிகளங்கள், பட்டெல்லாம்,எங்கே’
பதிலளித்தாள் வெண்மாவும்“ உன்னை நம்பிவந்தேன்
உடன்போக்குக்கும் உடன்பட்டேன்,நகை,பணம் எதற்கு “
“போதும் உந்தன் காதல், புறப்படுகிறேன்,நன்றி உனக்கு”
பின்வாங்கி திரும்பினாள் வீட்டுக்கு பத்திரமாய்!
வேண்மாளின் தாயும்,தந்தையும் கவலைளோடு
தேடும் இடமெலாம் தேடி ஓய்ந்தனர் பாவம்!
வேண்மாள் எழுதிய மடலொன்று மாடத்தில் கண்டனர்
அதைக்கண்ட தந்தை தமிழ்புலவர் அதனால்
கண்டார் கடிதத்தில் இலக்கணப்பிழை அதனால்
இருகோடானது அவரின் கவலை மடல் பெரியகோடானது
பெண் நல்ல தமிழ்கற்றவள்தான் தவறாய் எழுதியது கவலை!     
விண்வெளியில் இருந்து வந்த அதிசயம் முடிந்தது
வீதியெலாம் புழுதி கலக்கம் நீங்கி வானம்தெளிவானது    
வேண்மாளும் வீடு திரும்பிவிட்டாள் புலவரின் வெறுமை விலகியது!      

 - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், ராஜபாளயம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com