கடந்த வாரத் தலைப்பு ‘நட்சத்திரங்கள் விழும் இரவினில்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

உனது தடயங்களைத் தேடி அலைந்து திரிந்தது போதும் ! சற்று நிதானம் கொள்
கடந்த வாரத் தலைப்பு ‘நட்சத்திரங்கள் விழும் இரவினில்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 2


நட்சத்திரங்கள் விழும் இரவினில்!

நட்சத்திரங்கள் விழும் இரவினில்
நட்சத்திரமாய் நீயும் நானும்.

நம்முள்ளே ஈர்க்கவும் எரிக்கவும் 
தெரிந்த விசையிலிருந்து
எதை தேர்வு செய்ய?

நெருங்கி விலகி,
விலகி நெருங்கி
சுவாரசியமானது விண்வெளி விளையாட்டு.

சட்டென்று ஈர்ப்பேதும் 
இல்லாத இடத்தில்
விலகி நகர்ந்தோம்
எதிர் திசையில்.

விழாமல் இருவரும் ஆனோம்
சூரியனாய் 
சந்திரனாய்!

- சுபர்ணா.

**

யாருமற்ற இரவினிலே
மின்மினிக்கும் கரையினிலே!
இரவு வானில் மின்னிடும்
நட்சத்திரங்கள்! நிலவு வானில்
பளிச்சிடும் முத்துச் சிதறல்கள்!
என்னில் தோன்றிடும் அளவிலா
ஆசைகள்! எண்ண முடியா
நட்சத்திர குவியல்கள்!
மல்லிகையும் மணம் வீசுதடி!
எங்கோ மீட்டிடும் வீணையொலி
காதில் கேட்குதடி! மெல்லவே
தென்றல் காற்று வீசுதடி!
மயக்கத்தில் மெளனமொழி பேசுதடி!
சித்திரப்பாவை உன் முகம்
எனது சிந்தனையில் குளிருதடி!
மார்கழி மாதப் பனி போலே!
மின்னி மின்னி ஒளிருதடி!
அது கண்ணை கண்ணைச் சிமிட்டுதடி!
ஆசையலை அடிக்குதடி!
கரையைத் தொட்டு மோதுதடி!
ஆவலில் அள்ளிக் கொள்ள மனம்
துடிக்குதடி! விண்ணுக்கும் 
மண்ணுக்குமான உறவிதுவோ!
விந்தைகளும், விசித்திரங்களும்
நிகழுதடி! நட்சத்திரங்கள் விழும்
இரவினிலே! கனவோ
நினைவோ இது நிஜமோ!

- ஏ.கே.சேகர், ஆகாசம்பட்டு

**

நட்சத் திரங்கள் விழுமிரவாம்
       நடுநி சிநேரம் காத்திருப்பேன்..!
லட்ச மாய்நட் சத்திரமும்
       லாவ கமாய்ச் சூழ்ந்துவர..!

அட்ச தூரம் அதிகம்தான்
       அவளும் வருவாள் நிலாவாக..!
பட்சி களுமே விழித்திருக்கும்
       பசித் திருக்கும் வேளையிலே..!

எட்ட நின்று பார்த்தாலும்
       எப்போ துமவள் அழகேதான்..!
வட்ட வடிவ நிலாவவளாம்
       வளைய வருவாள் சிரித்தபடி..!

வெட்ட வெளியில் உலாவருவாள்
       வெளிச்சம் தந்து வாழவைப்பாள்..!
இட்ட தெய்வம் போலவந்து
       எவ்வு யிர்க்கும் அருளிடுவாள்..!

மண்ணில் வாழும் மனிதருக்கு
       மனதைக் கொண்டுச் சிந்திக்க..!
விண்ணில் நிகழும் அதிசயங்கள்
       வியப்பாய் அதுவும் அமைந்ததுவே..!

எண்ணம் எழவும் வைக்குமன்றோ
       எதையும் அன்பால் நேசித்தால்..!
திண்ணம் உண்டு நம்மனதில்
       திடமாய் எழுத மஹாகவிபோல்..!

- பெருவை பார்த்தசாரதி

**

நினைத்தது நடக்குமாம்
நட்சத்திரங்கள் வீழும் போது..!!
நான் வேண்டிக் கொள்கிறேன் !
இப்போது விழும் நட்சத்திரத்தைப் பார்த்து..!!

இயற்கை அன்னையே 
கேரளாவிற்கு உதவிக் கரம் நீட்டு !
உன் கோபத்தை குறைத்துக் கோள் !
உனது தடயங்களைத் தேடி அலைந்து திரிந்தது போதும் !
சற்று நிதானம் கொள் !

உன் கோபத்தை நீரின்றி தவிக்கும் 
வறண்ட மாநிலங்களின் 
நிலங்களில் செலுத்து ! 
அந்த நிலங்கள் செழிக்கட்டும் !
விவசாயம் வளரட்டும் !
தொழில்வளம் பெருகட்டும் !
அணைகள் நிரம்பட்டும் ! 

ஒரு போதும் உன்னை 
வேண்டாமென்று நாங்கள்
சொல்லவில்லை !
நீயின்றி நீரின்றி ஏது உலகு !
இப்போதைக்கு சென்று விடு
மனிதம் தழைக்க..!!

- மகேஷ் சேந்தலிங்கம் 

**
நட்சத்திரக் கண் சிமிட்டலில்
  நிலவும் நாணம் கொள்ளுதோ...
மேகத்திற்குள் ஒளிந்து கொண்டு
  முகத்தைக் காட்ட தவிக்குதோ...
நட்சத்திரப் பூக்கள் சேர்ந்து
  நிலவுக்கு மாலை சூடியதோ..
நிலவைச் சுற்றி வந்து
  நினைவில் ஏக்கம் கொள்ளுதோ..
வான்வெளியில் வெள்ளித் தோரணமாய்
  விண்மீன்களும் ஒளி வீசுதோ..
புள்ளிகள் வைத்த கோலமாய்
  புன்னகை முகத்தில் பேசியதோ
மேகக்கூட்டங்கள் ஒன்றாய் சேர்ந்து
  வானில் கூட்டம் போடுதோ..
வண்ண நிலவைத் தேடி
  வான்வீதியில் ஊர்வலம் போகுதோ..
இரவுநதியில் விண்மீன்களும் நீந்தி
  இன்பமாய் துள்ளி விளையாடுதோ..
வான்கடலில் முழுவதும் கலந்து
  விண்ணின் முத்துக்களாய் மாறியதோ..
                                      
- கவிஞர் நா.நடராசு

**

குடிசை வீட்டுச் சிறுமியின்
கூந்தலில் மின்ன
இறங்கி வருகின்றனவோ...
இரங்கி வருகின்றனவோ...

மீன்
துள்ளி விளையாடும் தடாகத்தின்
அல்லி மலர்மீது காதல்கொண்டு
நிலம்நோக்கி
குளம்நோக்கிப் பாய்ந்ததில்
இடம்மாறி
தடம்மாறி விழுகின்றனவோ...
    
நளினச் சொற்களுக்குப் பதிலாக
நட்சத்திரங்களை அடுக்கியொரு கவியெழுத
அழைத்தேன் 
அதற்காக வருகின்றனவோ...

நட்சத்திங்களை
நிராகரித்துவிட்டு
நிலவை மட்டுமே பாடும் கவிஞர்களிடம்
நீதி கேட்டு
நெடும்பயணமோ...

நட்சத்திரங்கள்
விழுந்த இடம்தேடி
விஞ்ஞானிகளும்  செல்வதில்லை
மெய்ஞானிகளும் சொல்வதில்லை
பாவ பூமியில்விழ அஞ்சிப்
பாதியிலே சாம்பலாகிக் கரைகின்றனவோ...

உச்சி நட்சத்திரங்கள் விழும் 
ஒவ்வோர் இரவும்
உணர்த்துகின்றதோ...
ஒவ்வொன்றாய் என் கனவுகள்
உடைந்து நொறுங்குவதை?

-கோ. மன்றவாணன்


**

நட்சத்தி ரங்கள் நடுநிசிப் பொழுதில்
தலைகீழாய் வீழ்ந்து தற்கொலை செய்து
பள்ளத் தாக்கில் மறைவது போல
உள்ளம் தாக்கி உறைந்து போனேன்
வாழ்க்கை என்னும் வேட்கை அற்று
யாழ் கைக்கொண்டு அவலம்  பாடி
என்னை மூடிய இருண்ட இரவின்
கண்ணீர்த் துளிகளாய்க் கண்சிமிட் டிவிழும்
விண்மீன்கள் என்னை கொத்தித் தின்னும்
கனவுகள் மிச்ச உடலை மேய்ந்து உண்ணும்
நட்சத்திரங்கள் விழுந்திடும் இரவுப் போதுகளில்
ஈரத்துளிகள் உன்இமை களிலிருந்து விழுந்திடுமா?

- கவிஞர் மஹாரதி

**
நிலத்தின்
அருவியெனப் பாயும் நதியில்
துடுப்பற்று 
படகாக நீந்துகிறது வான்நிலாவின்
பிம்பம்

தங்க ஒளி பரவும் 
மங்கிய இருளின் வெளியில்
துள்ளும் அலைகள் ;
கெண்டைகளென மின்னித் தெரிக்கும்

பூமியின் நட்சத்திரங்களாய்
இருளைத் துளைக்கும்
மின்மினிக்களின் களைப்புத் தீர
வேய்ங்குழல் மேவி வரும்

மனவோடத்தில்
துடுப்புகளற்று எண்ணங்களின் வழி
பயணம் பட
வருடிக் கொண்டிருக்கிறது
தென்றல்

பாடிக்கொண்டிருக்கிற
குயில்களின் நாதத்தில் மயங்கி
சுருங்கிக் கொண்டிருந்தது
வானம்

நிசப்த கணத்தில்
இசைக் கருவியென எழுந்து 
இலாவகமாய் சுழன்று
ஒத்திசைத்துக் கொண்டிருந்த
அலைகளோடு
துள்ளித் துள்ளி நடனமாடும்
மீன்கள்

தன் குஞ்சுகள்தான்
கடல் வீழ்ந்ததென அலறிப்புடைத்து
அகால இரவில்
குஞ்சுகளைத் தோளேற்ற 
நெகிழ்ந்த நெஞ்சோடு நழுவி
விழுந்து கொண்டிருந்த
நட்சத்திரங்களுக்கு
வெளிச்சம் காட்ட புலர்ந்து கொண்டிருந்தது
கிழக்கு....

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

நடந்தேறிய நிகழ்வுகளில் நனைந்திருக்கிறேன்
நிகழவிருக்கும் நிகழ்வுகளை நினைந்திருக்கிறேன்
விழும் பனியிலும் நனைத்திருக்கிறேன் ஏனெனில்
செழுமை நிறை அமெரிக்கா நான் இருப்பது 
நீ இருப்பதோ இந்தியா தற்போது பகற்காலம்
நீ இருப்பதோ பணியிடை கிட்டும் இடைக்காலம்
விடும் விண்வழி மின்னஞ்சல் என் கைபேசியில்
விழும் இரவில் நிலம் விழும் விண்மீன் போல்
விழித்திருக்கையில் உன் நினைவு அலைமோதுகிறதே
விரைவில் வருகிறேன் உன் கரம் பற்றவே காதலியே! 

- மீனா தேவராஜன்

**


நிறங்கள் தொலைந்த நீண்ட இரவினிலே
சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து

கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்..

நிதர்சனக் கோப்பைக்குள் விழும்
நிழல்களைக் கடத்தி வந்து
கரிசனம் ஏதுமின்றி காயப்படுத்திக்

கொண்டிருக்கின்றன இரவை..

அடர்ந்த கரிய நெடி ஒன்று
துருவ நட்சத்திரத்திலும் படர்ந்து விட
துளித்துளியாய் உதிர ஆரம்பிக்கின்றது அதுவும்..

வால் முளைத்த இன்னொன்று பெருவெளி கடந்து
அடுத்து உதிர்ந்து விழ ஆயத்தமாகிகிறது
என் கவிதைக்கு கருவாக..

- கீர்த்தி கிருஷ்

**

இயந்திரமயமான வாழ்க்கையிலிருந்து விடுபடுங்கள்
இரவினில் வாணத்தை இனிதே ரசியுங்கள்!

வானம் போதிமரம் என்றார் கவியரசு வைரமுத்து
வானம் உங்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரும்!

வானில் தோன்றிடும் வானவில் அழகுதான் மறையும்  
வானிலிருந்து சில நிமிடங்களில் ! அழகு நிரந்தரமன்று!

வானத்தில் தெரியும் நிலவோ அழகோ அழகு
வான்நிலவை மேகங்கள் மறைத்து விளையாடும்!

நிலவென்னும் இளவரசியின் தோழிகளாக நட்சத்திரங்கள்
நிதமும் தோன்றும் வெவ்வேறு விதமாக!

எண்ணிப் பார்த்து தோற்றுவிடுகிறோம் நட்சத்திரங்களை
எண்ணிலடங்கா மகிழ்ச்சியை மலர்வித்து மகிழ்கின்றன !

வானை ரசிக்க பொறுமையும் ரசனையும் வேண்டும்
வானின் வண்ணங்களை ரசிப்பது தரும் இன்பம்!

இரவு மிக நீளமானது கவலையில் வாடுவோருக்கு
இரவு மிக சுருக்கமானது ரசித்து வாழுவோருக்கு !

தேய்வது போல தோன்றும் தேய்வதில்லை நிலவு
வளர்வது போல தோன்றும் வளரவுமில்லை நிலவு!

அமாவாசையன்று வானில் தெரிவதில்லை நிலவு
அமாவாசையன்றும் நிலவு இருப்பது உண்மை!

முழுநிலவு நாளில் காணக் கண் இரண்டு போதாது
முழுவதுமாகக் கொள்ளை அடித்து விடும் மனதை!

பசித்தவனுக்கு தோசையாகத் தெரியும் நிலவு
புசித்தவனுக்கு விளக்காகத் தெரியும் நிலவு!

சூரியனின் ஒளியைப் பகிர்ந்திடும் நிலவு
சுந்தரமாக சுண்டி இழுக்கும் வனப்பு நிலவு!

இனியாவது இரவில் ரசியுங்கள் வானத்தை
இயந்திர வாழ்வு இனிமையாக அமையும்!

- கவிஞர் இரா. இரவி

**
நட்சத்திரங்கள் விழும் இரவினில்
நதி கரைதாண்டும் அழகினில்
இங்குமங்கும் அசைந்தாடும் படகாய்
அலைமோதி ஆர்பரிக்கும் உன்நினைவுகளில்
கரைசேர காத்திருக்கிறேன் - த(க)ண்ணீரில் 
தள்ளாடும் நிலவாய் நானும் ...

- மூர்த்தி 

**

நட்சத்திரப் பூக்கள் விரவலில்
தவழ்ந்து வரும் நிலா

எண்ணப் பூக்கள் நெரிசலில்
வென்று வரும் நீ

இரவுப் பெருவெளியெங்கும்-இனிய
இம்சைக்கு இசைவானவாய் நான்..

நிஜம் தொலைத்து வைத்ததெல்லாம்
கற்பனை மிகுந்து துரத்துகிறது...

நினைவு நீட்டி வைத்ததெல்லாம்
கனவு வந்தும் தொடர்கிறது...!

- கனகா பாலன்

**
இருளில் வெள்ளியை
உருக்கி ஊற்றியது யார்?
வெறுமையில் வாழும் சில
உள்ளங்கள்
தனிமையில் ரசிக்கவா
நட்சத்திரங்கள் வாழும் இரவினில்
உச்சம் சென்று ரசித்திட
உறங்காமல் இருக்கிறேன்
சில உயிரனம் இரவில் இரை தேடலாம்
நான் இறையை தேடுகிறேன்
எனக்கும் ஆசை தான்
அவள் நிலவாக இருக்க
பனிமழை பொழியும் இரவில்
தனிமையாக இரவை தேடுகிறேன்

- ப.ராஜ்குமார் சிவன்

**

பகலில் எரிக்கும் சூரியனால்
பார்க்க முடியாத வானுலகு
இரவில் ஒளிரும் விண்மீன்களால்
எழிலோவியமாய் கண்ணைக் கவரும்
விண்மீன்கள் பல்வகையில்
எண்ண முடியாத எண்ணிக்கையில்
கண்ணைக் கவரும் சில
தன்னை மறந்து நிலையிழக்க
சர்ரென்று கீழிறங்கிப் பாயும்
தலைமீது விழுமோ என
அச்சம் கொள்ள வைக்குமவை
இடையில் ஒளியிழந்து மறையும்
மற்றுமொன்று மனம் மயங்கி
இதே நிலையிலாகும்
வானில் ஒளிர்வது பலவென்றால்
கீழிறங்கிப் பாய்வது மிகச் சிலவே
பார்க்கும் கண்களுக்குப் பரவசமே
விண்மீன்கள் விழும் இரவு
கண்மீன்களை மயக்கும் உறவல்லவா

- கவிஞர்  ராம்க்ருஷ்

இரவுச் சுடராய் மின்னும்
நட்சத்திரங்களை எண்ண 
முயன்ற சிறுமி
கடவுளிடம் முறையிடுகிறாள்
இன்று தொடங்கி என்று முடிப்பேன்
எண்ணிலடங்கா இக்குவியலை?
வான் கடலில் மீன் உடலாய் மிளிரும் 
இவ்வெளிச்சப் புள்ளிகளையெல்லாம்
ஒன்றிணைத்து ஒரே கோளாக்கி
கோலமிட விரும்புகிறேன், 
வண்ணமிட நீ வருவாயா இறைவா?

- உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com