அடுத்த வரி

அடுத்த வரி அன்பை பரிமாறும்  வரி, அடுத்த வரி ஆனந்தத்தைத் தரும் வரி
அடுத்த வரி

அடுத்தவரி அன்பை   பரிமாறும்  வரி
அடுத்த வரி  ஆனந்தத்தைத் தரும் வரி

அடுத்த வரி  ஆச்சரியம்
ஊட்டும் வரி
அடுத்த வரி  அழ, சிரிக்க வைக்கும் வரி
அடுத்த வரி  எதிர்பார்க்கும் வரி 
அடுத்த வரி கேள்வி‌, கேட்கும் வரி
அடுத்த வரி தொடரும் வரி

- உமா ராணி

முதலில் எதை எழுத
அடுத்த வரி 
எப்படி இருக்கும் என்றெல்லாம் 
கவலைப்படாமல் 
கண்டதைக் கிறுக்கி 
கதை எழுதும் கயவர்களுக்கு 
எங்கே தெரியப் போகிறது? 
தமிழனின் அடையாளம் 
அடகு வைக்கப்படுகிறதென்று! 
பாட்டனுக்கு
எழுதப்படிக்கத்தெரியாது 
ஆனால் 
அடுத்த வரி தெரியும் 
அரசாங்க வரியும் தெரியும் 

- சுதா ஏகம்மை

எடுத்தவுடன் தொடக்க வரி
உன் நினைவில் தொடுத்தேன் ! 
அடுத்தக்கனம் அடுத்த வரி
என் உணர்வை  பிழிந்தேன் ! 
நான் தொடுத்த வரி அனைத்திலுமே
நம் பாசம் பிசைந்தேன் ! 
நீ அடித்தவறி விழுந்தாலும்_உன்
இதழ் அழைக்கும் அடுத்த வரி நானே!
என் வாழ்க்கை எனும் ஏட்டில் உன் பிடிதவறினாலும் 
என்றும் பிடித்த வரி.. என் நினைவில் அடுத்த வரி நீயே! 
நான் தொடுத்த கவிகளின் 
அடுத்த வரி அறிவேன்... 
இறை கொடுத்த வாழ்விலே
அடுத்த நிலை எவர் அறிவார்!! 
                             
- பவித்ரா ரவிச்சந்திரன், மேலூர் (மதுரை) 

அடுக்கும் அடுக்கலில் மிளிரும் அழகு
தடுக்கும் அடுக்கடுக்கில் திண்ணையாகும்
மிடுக்கும் அடுத்தடுத்த செயலில ஒளிரும்
நடுக்கலும் வரிவரியாய் மனதில் வலிக்கும்

முதல் வரியை அழகுறத் தாங்கிப் பிடிப்பதே
இதமான அடுத்தடுத்த வரிகளின் பொருளே
விதவிதமான பொருள்களை அடுக்கடுக்காக
பதமான வகை தருவது அடுத்தடுத்த வரிகளே

வரி முதலில் அழகாயிருந்தால் போதாது
விரியும் அழகில் அடுத்தடுத்த வரிகளும்
புரியும் வண்ணம் பொருள் தந்து விளங்க
சரியான சந்தங்களில் சிந்து பாட முடியுமே

கொடுத்த தலைப்பை உணர்ந்து முதல் வரி
அடுத்த வரி அதைத் தொடர்ந்து செல்லுமழகு
அடுத்தடுத்த வரிகளும் தொடர கவிதையும்
தொடுத்த முல்லையாய் மணம் வீசிடுமே

எடுத்த முதல் வரி சொல்லும் கருத்தெல்லாம்
அடுத்தடுத்த வரிகளிலே புதிராகத் தெரிய
அடுத்த வரிகள் செழுமையாய் கட்டமைந்து
மிடுக்காகக் கவிதை வெற்றிநடை போடுமே 

கவிஞர்  ராம்க்ருஷ்

ஆண்டவன் மீதே பாடினாலும்
அடுத்த வரி இன்பவரம்தா என்றுதானே
இயம்புகின்றோம்?!

தந்தைக்குக் கடிதம்
தப்பாமல் எழுதும்போதும்
தனக்கு வேண்டியதெல்லாம்
அடுத்த வரியில்
எழுத மறந்ததுண்டோ?!

பொய் உரைக்கத் தொடங்கி
பொதுவில் வெறுப்பைத் தந்தாலும்
அடுத்த வரியில்
காதலுக்கும் காதலிக்கும்
அன்பு காட்ட மறந்ததுண்டோ?!

அடுத்துவரும் வரிகள் எல்லாம்
அகத்தைக்காட்டும்
அவளது முகத்தைக்கூட
மறவாமல் முழுநிலவாய்
வர்ணிக்க மறந்ததுண்டோ?!

ஒரே வரியில்
எழுத வந்த கவிஞர்கூட
அடுத்த வரியை
அற்புதமாய் அமைத்து விட்டார்
முதலும் முடிவுமாய்
அவள் வந்ததினால்
அடுத்த வரியை
தலைப்பாக அமைத்து விட்டார்.

- புலவர் நரசிம்ம சுப்பிரமணியன்.. சிறுமுகை

உள்ளத்தே உதித்த எண்ணத்தை எழுத்தாக்கி
பள்ளத்தே பாய்ந்தோடும் அருவி போல்
சலசலவென படைப்பதுதான் கவிதை!
முதல்வரியை முடித்தபின் அடுத்தவரி அசைபோடாது
அடுத்து வரின் அனைவருக்குமே வசப்படும் கவிதை!
எழுத்துக்களை கோர்க்கையில் எண்ணத்தில் குழப்பமிருந்தால்
வழுக்கி விடும் வார்த்தைகள்!
பழகிவரும் தமிழ்ப்பாக்கள் தந்திடுமே நல்பயிற்சி
அழகாக உருவாகிடுமே மணியான கவிதை!
முதல் முதலாய் கவிதை படைக்கையில் எழுத்துக்களில்
மோதல் கூடாது! பிழைபடவே எழுதிடவே எழுத்துக்
காதல் நிறைவேறாது!
அடுக்கடுக்காய் சொற்கள் அலைமோதி தொடர்ந்திடவே
இடுக்கண் வராது!
முதல்வரியை எழுதிடும்போதே பிறந்திடவேண்டும் அடுத்தவரி
முதல்வரியை பின் தொடரும் அடுத்தவரிகளாலே
அழகாக அலங்கரிக்கும் கவிதை  தன்னாலே!

- நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

இதுவரை சொல்லாத கருத்தை 
சொல்லத் துடிக்கும் 
பிரசவ வலியோடு 
பிறக்குது அடுத்த வரி!

வருவாயைப் பெருக்குவது 
அரசின் அடுத்த வரி!
வாசகனைப் பெருக்குவது 
எழுத்தாளனின் அடுத்த வரி!

அடுத்தவர் துயர் துடைத்து 
உவகை கொடுத்து 
உலகையே புரட்டும் 
நெம்புகோல் வரியே!
தலைவனின் அடுத்த வரி!

போராளியின் அடுத்த வரியில் 
புரட்சிகள் வெடிக்கும்!
அகிம்சாவாதியின் அடுத்த வரியில் 
அன்பு மலை போல் செழிக்கும்!

அடுத்த வரி
அடுத்தவர் வரியானால்
திருட்டு!
அடுத்த வரி 
அடுத்தவருக்கான வரியானால் 
அடுத்தவரை திரட்டும்!

ஒவ்வொரு எழுத்தாளனின் 
உன்னத வரி! 
அவனது முந்தைய வரியை வெல்லும் 
அடுத்த வரியே!

- கு.முருகேசன்

தண்ணீரின் அடுத்த வரி 
புண்ணியனே உன் கையில் 
போதுமென்ற அளவுக்கு - நீரை 
பொறுப்பாக பயன்படுத்து 

பூமியின் அடுத்த வரி 
சாமியே உன் கையில் 
நெகிழியை இட்டு நீயும் -அதை 
நாளும் கெடுத்திடாதே 

இயற்கையின் அடுத்த வரி 
இறைவா உன் கையில் 
செயற்கையை தள்ளி வைத்து 
இயற்கைக்கு கை கொடுப்பாய் 

அடுத்த தலைமுறைக்கு 
அடுத்த வரி வேண்டாமா 
அவருக்காக வைத்திடுங்க 
அருமையான வளங்களையும் 

சொத்து மட்டும் போகாது 
சுகம் கூட வேணுமய்யா 
சுகம் நமக்கு வேணுமுன்னா 
சுத்தமிங்கே வேணுமைய்யா 

-பார்.விஜயேந்திரன், கடலூர்

                                                  
'இதயம் தேடும் அன்பைப் போல
இரவைத் தேடும் நிலவை போல'
முதல்வரி உதயமானது, அடுத்தவரி
'உன்னைத்தேடி வந்தேன் நான்' என்றது.
'நீ மாற்றாருக்கு மணவரை கண்டால்'
ஏக்கத்தோடு முதல்வரி தோன்ற
'நான் காதலோடு கல்லறை செல்வேன்'
விரக்தியாக முடிகிறது அடுத்தவரி
'அங்கும் உடல் மட்டும் மண்ணோடு வாழும்’
வெறுமையில் முதல்வரியை ஆரம்பித்தவர்
'என் மணம் (வாசம்) உன்னோடு வாழும்!
விரக்தியோடு அடுத்தவரி அமைகிறது!
வேறு:-
'உனக்கு ஒன்றுதெரியுமா?நட்புக்குள் காதலிலை
என்றேதான் முதல் வரியை துவங்கினார்
அடுத்த வரியில் காதலுக்குள் நட்புண்டு'என்றார்                          
'காதலிலை' தோழனாய் எனை விட்டு
சென்றாலும் அது    
நிஜத்தைவிட்டு விட்டு வந்த நிழ்ல் போல
என்றமைத்தார் அடுத்தவரியில்!
அவனும் அவளும்தான் செய்த தவறுக்கு
என்று துவங்கிய கவிஞர் அடுத்தவரியில்
தண்டனை குழந்தைக்கு குப்பைத்தொட்டிஆனது
இலக்கியமுகம் இலக்கணமும் தெரியாதன்
ஏடெழுதல்                         
துவங்கியவர் அடுத்தவரியில் 'கேடுநல்கும்' என்றார்

- கவிஞர் அரங்க கோவிந்தராஜன், ராஜபாளையம் 

எழுத்துக்கள் கோர்வையாக ஊர்வலம் போய் கடைசியில் கால்புள்ளி, அரைப்புள்ளி கடக்க சிலபோது ஆச்சரியமும் தாண்டி அடுத்த வரியாய் மறுபிறப்பெடுக்கின்றன.
வினவு தலாய், தேடுதலாய் நகரும் வாழ்க்கைக்கு, வெளிச்சமிட்டுக் காட்டும் நம்பிக்கை வரிகள், சிலர் - கம்பரின் வரிகளுக்கும் ஷெல்லியின் வரிகளுக்கும், வியந்து விழுந்து
ரசிக்க - பாரதியும் குறளும் விலக்கல்ல, உயிர்களைப் போன்றே எழுத்துக்களும் ஜனிக்கும், இப்பிறவியில் செய்ய முடியாத ஏக்கம், மறு முறை தீர்க்க எண்ணும், சொல் -
செயலாக, செயல் விளைவாக காரண காரியங்களுடன் எல்லாமும் நிகழ, இதெல்லாம் பேத்தல் என்று ஆத்திகம் மறுத்து, வாழ்ந்தாலும் அடுத்தவரி- யாரென யாருக்கும்
புரிவதில்லை, இவ்விதம் எழுதுபவனும் இருப்பதில்லை, இன்னொரு நாளில், உயிர்த்தலும் - மரித்தலுமாக - எல்லாம் நடக்கிறது - மௌனமாக, வாழ்வும் -எழுத்தும்
அடுத்தவரி யாதென யாரோ நடத்த அதை காலம் தீர்மானிக்கிறது, எல்லாவற்றையும் ஜீரணித்தவாறு

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

போதையில் காளையர் புறம்போக்கியாவது
மமதையில் கன்னியரின் கற்பைக் களைப்பது 
பெருங்கல்வி கற்றும் அறிவுகற்புடன் திகழாது
பொருளீட்டும் போதையில் பெண்மை போக்குவது

நெறியில்லா நேர்மையிலா வாழ்வு வாழ்வது
பறித்திடும் பிணியில்லா புகழில்லா வாழ்வை
கண்டதே காட்சியன்று, கொண்டே கோலமென்று
தண்டமாய் வாழ்வது வாழ்வா? வாலிப வயதினரே!

அட்டூழியம் செய்து அடுத்தவனை அடித்துச் சேர்ப்பது
மக்கள் அரசு வரி ஏய்ப்பு, அரசினர் மக்களை ஏய்ப்பது 
பண்டங்கள் சேர்த்தாலும் பசிக்குண்பார் சிலரன்றோ! 
பிண்டமளவுகூட உண்ணயிலா, பிணிபல உளதினால்

அடுக்கிவைக்கும் அலமாரி நிறை உடுப்புகளில்
எடுத்து ஒரு முறை அணிவது ஓர் உடுப்புதானே 
அடுத்த வரி ஆண்டவன் என்ன எழுதியுள்ளனோ?
படுத்தால் தவிப்பில்லாது உயிர் போகுமா! யோசிப்பீரே!

எழுத்தை சேர்த்து அசையாக்கி
அசையை சேர்த்து சீராக்கி
சீரை தொடுத்து தளையாக்கி
தளையை தொடுத்து அடியாக்கி...

அடியை தொடுத்து தொடையாக்கி
எதுகை, மோனை தொடுத்து மிக எளிமையாக்கி
இயைபை கொண்டு இயல்பாக்கி
இரட்டைக்கிழவி,அடுக்குத்தொடர் கொண்டு அழகாக்கி...

இவை அனைத்தையும்  கொண்ட 
கன்னித்தமிழில் எழுத தொடங்கினாள் 
வரிக்கு வரி யோசிக்காமல் அடுத்த வரியை 
அற்புதமாகவும் அழகாகவும் எழுதலாம் அன்னைத்தமிழில்.

- க.முனிராசு

புத்தியை தீட்டும் தகவல்கள்
புத்தகஙகளில் இருப்பதாக சொல்லி 
வாசிக்கும் பழக்கத்தை
நேசிக்க வைத்தார் எமது தந்தையன்று !
நேற்றைய தினம்
சற்றே கிடைத்த பொழுதில் 
புதிதாக வாங்கிய
புத்தகத்தை புரட்டினேன் .
ஒரு சில வரிகள்
ஓராயிரம் உணர்வுகளைத் தரும் என்றால் அது மிகையில்லை !
ஒரு வரி .........
நல்ல புத்தகஙகளை சுவைக்க வேண்டும் .!
அடுத்தடுத்த வரிகள் ..........
சில புத்தகங்களை விழுங்கி விடவேண்டும்.!
சிலவற்றை நன்றாக மென்று செரிக்கவிட வேண்டும் .!
புத்தங்களைப் பற்றிய
இத்தகைய அருமையான வரிகள்  எந்தன்
எண்ணங்களை நிறைத்ததால்
 உணவு உண்ண மறந்தது   உண்மை !

- ஜெயா வெங்கட், கோவை

ஒரு கருப்பு மேகத்துக்குள்ளும்
மெல்லிய காதல் –
கற்பனையும் மொழியும் சுழன்று
கவிதை ஒன்றின் தொடக்கம் –
பூமியில் எந்தப்பெண்
வேண்டுமென்று,  
முதல் வரியை
வானத்தில்
“மின்னலாய்” எழுதி,
அடுத்த வரியை
மழைத்துளியால்
நிலத்தில் எழுதுகிறது ?    

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி - MD DNB PhD, புதுச்சேரி

முதல் வரி எழுதும் பொழுதே
உன்னை பற்றிய சிந்தனை
முத்து முத்தாய் எழுகிறதே..
முந்தானையால் மூடி மழையிலிருந்து
காத்தது முதலாய் முட்டி
மோதி வார்த்தைகள் போட்டி
போட்டு வரிந்து கட்டுகிறதே..
அடுத்த வரி ஆரம்பிக்க
ஆர்பாட்டமாய் அணிவகுக்கின்றதே..
தாய்மையையும் காதலையும்
தரமாக தூயதாய் தத்து
அற்று தனகுடன் அளிக்கின்றவளே..
அடுத்த அடுத்த வரிகள்
என அணிவகுத்தாலும்
அவை போதாது உனை போற்ற..

- ப.க.நடராசன்

பேச்சில் கவனம் தேவை
எடுத்தெறிந்து பேசும்
அடுத்த வரி
தடுத்துவிடும் உறவுகளை
மட்டுமல்லாமல் 
நல்ல நட்புக்களையும்தான்!
அடுத்த வரி 
என்ன பேசப்போகிறார்
என்ன ஆவலை துண்டுபவர்
திறமையான பேச்சாளர்!
அடுத்த வரி 
பேசுவதில் ஆர்வம் 
காட்டி பிள்ளைகளை 
தன்னிடம் இழுப்பவர்
திறமையான  ஆசிரியர்!
அடுத்த வரி
யோசிக்காமல்  பேசுபவன்
அவசரக்காரன்!
அடுத்த வரி 
யோசித்து பேசுபவன்
பொறுமைசாலி!
பொறுமைசாலியாக இருப்போம்
அருமையான  வெற்றிக்கனியினை 
பெருமையுடன்  சுவைப்போம்!

- உஷா முத்துராமன், திருநகர்

அடுத்த வரி
 
போகத்தி லுறைந்த
போசனப் பிரியரே!
யோக மறிந்து
யோகங் கொள்க!
யாகத்தின் பயன்
யாவு முன்னை நாடும்
தானத்தின் பெருமை
தரணியில் சிறக்கும்
மோகன விழியை
மோதி யெரித்து
மோதகங் கொண்ட
மூஷிக வாகனை நாடு
முழுது மறிவாய்
முக்தியின் பேற்றை;
வாமன வடிவும்
விருட்ச மாகும்
விருட்சங் கூட - கவி
விருத்தமாகும்;
நம்பியாண் டானின்
வேள்வி தீபோல் - உன்
நம்பிக்கைக் கூட்டிட
தும்பிக்கை வரும்
துயரினைத் துடைத்திட
அடுத்த ஒலியாய்;
ஆனந்த ஊற்றாய் - நீ
துதிக்கையில்
துதிக்கை தாங்கி
கைலையி லேற்றும்......

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

அடுத்தவரி எதுவருமென அலருகின்ற நிலைதனிலே
நடுத்தர மக்களின்று நாட்டினிலே!--கெடுமதியர்
ஆட்சிதனில் காண்பதெலாம் அவலமின்றி வேறில்லை;
வீட்டுக்கு அனுப்பவே விழை!

அடுத்தவரின் வரிப்பணத்தில் அகிலமதைச் சுற்றிடுவோன்
படுதோல்வி தனைகாணப் பார்த்திடலாம்!--கெடுதலே
மிகுந்ததவன் ஆட்சிதனில்,மீளுமோ நாடிதுவும்;
பகுத்தறிவு தனைகொண்டுப் பார்!

- அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.

ஆவலைத் தூண்டிய உன் கடிதத்தின் 
அடுத்த வரியை 
மீண்டும் மீண்டும் பார்த்தாலும் 
அதில் தொனிப்பது காதலா நட்பா 
என்று தெரியாதவாறு 
மிக சாமார்த்தியமாக 
உன் மனதை மறைத்திருந்தாய்.
ஒன்று நினைவில் கொள்,
சந்திர சூரியரையும் பாயும் நதியால் 
நிகழும் காட்டாற்று வெள்ளத்தையும் 
உன் இரு கரங்களால் அணைக்க முடியாது,
ஆனால் என்னை அணைத்து இதயத்தை திறக்க இயலும்,
யாருக்கு இந்த உன் அரிதாரம்,
நிஜம் எது என சுட்டுகிறது - உன் கண்கள், 
ஆழ்மன ஒசையைச் சொல்லத் துடிக்கும் உன் உதடுகளை
நிஜமான அடுத்த வரியை சொல்ல விட்டு
உன் சந்தனப்பட்டு விரல்களால் எழுது
நம் நிஜமான நேசத்தை, 
இருக்கும் ஓர் வாழ்வில் ஏன் இத்தனை அரிதாரம்?
உன் அடுத்த வரிக்காக - திறந்த புத்தகமாய் நான்
மையற்ற எழுத்தாணியாய் நீ ,
மையல் கைகூடுமா? 
அடுத்த வரியால் என எதிர் நோக்கி இருக்கும்
காற்றில் பறக்கும் காகிதமாய் என் இதயம்.
எப்போது எழுத வருகிறாய்
எதார்த்தத்தை .? 
காத்திருக்கிறேன்.

- கவிதா வாணி

அடுத்த வரி எழுத ஐந்து நட்சத்திர ஓட்டலில்
அலங்கார அறை போட்டு அளவாய் மதுவருந்தி
அப்பொழுதும் சொல் வராமல் அப்படியே க்ளாஸ் கவிழ்க்கும்
அதிகாரக் கவிஞர் பலர் நம் திரைத்துறையில் மிகவுண்டு!

அடுத்தவரி யெழுத  அருகில்   அமர்ந்தெழுதும்
நண்பனின் விடைத்தாளை நயவஞ்சகமாய்க் கண்ணுற்று 
பயம்பாதி தன் நண்பனின் பதில் சரிதான வென்ற 
சந்தேகத்தினூடே சரியாய் எழுதாத மாணவர் பலருண்டு!

அடுத்தவரி  போட்டாலும்  அதனையும்  உடன்கட்ட 
ஐரோப்பிய நாட்டு  மக்கள்  அத்தனை  பேருமே 
மனமொப்பி அதுவேற்று மகிழ்வுடனே செயலாக்கம்
செய்வதினால் அவர்நாடு சிறந்தோங்கித் தழைக்கிறது!

அடுத்தவரி  யெழுத  ஆழமாய்  யோசிப்போர் 
இன்னும் பலரும் இவ்வுலகில் இருப்பதனால்
நல்ல கருத்துக்கள் நயமான விஷயங்கள் பல
உலகம் பெறுகிறது! உன்னதமாய் வாழ்கிறது!

-ரெத்தின.ஆத்மநாதன், சுவிட்சர்லாந்து

அடுத்த வரிக்கான சொற்கள்
அகப்படாத போது, கவிதை
அண்ணாந்து விட்டத்தைப்
பார்க்கிறதோ........

அலையும் புரளும்
அடுத்த வரி மனதிலேயே
கருக்கொள்ளுமுன்,
சிதைந்து போகிறதோ.....

அடுத்தவர் படைப்புக்குள்
அலசி, ஆராய்ந்து
அடுத்த வரி மீட்க
அலை பாய்கிறதோ......

தொடுத்த முதல்வரி
துவண்டு விழுமுன்,
அடுத்து வந்த வரி
அசை போடுகிறதோ......

அடுத்த வரி ஒன்றில்
அத்தனை கருத்தையும்
அடுக்கி வைக்கவியலாமல்
அரைகுறை ஆகிறதோ......

சுகமோ....சோகமோ...
சொல்லொணாத் துயரமோ
அடுத்த வரி ஒன்றில்
அமைதி அடைகிறதோ......

அடுத்த வரி விதிக்க
அரசு கற்பிதஞ்செய்ய.....
அடுத்து  வரும் தேர்தலில்
அடிகொடுக்க நினைக்கும் மக்கள்....

அடுத்த வரி அடுக்கி
விலையிலாப் பொருளால்
வசியஞ்செய்து
வசப்படுத்த நினைக்கும் கட்சிகள்....

ஆகப் பெரும்பாலும்
அடுத்த வரிக்கேங்கியே
அத்தனை கவிதைகளும்
குறைப் பிரசவமாய்ப் பிறக்கிறதோ......

அடுத்த வரி அறியாமலேயே
அடைவதற்கு விருதுகள்
அப்படியே காத்திருக்க....
அறிந்தாலும் என்ன.... அறியாமற்
ஆனாலும் என்ன......

- கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

இயற்கையிடம்…
இம்மனிதன் என்பவன் யாரெனக் கேட்டேன்…
இறை படைப்பின் உச்சமென்றது…!
இறைவன் என்பவன் யாரெனக் கேட்டேன்…
இங்கு காணும் அனைத்துமென்றது…!

அன்னை என்பவள் யாரெனக் கேட்டேன்…
அன்பு என்பதன் உருவமென்றது…!
தந்தை என்பவர் எவரெனக் கேட்டேன்…
தியாகம் என்பதன் அடையாளமென்றது…!

நட்பு என்பது யாதெனக் கேட்டேன்…
நல்லதை மட்டும் நினைப்பதுவென்றது…!
உறவு என்பது யாதெனக் கேட்டேன்…
உறு துணையாய் இருப்பதென்றது…!

காலம் என்பது யாதெனக் கேட்டேன்…
கடந்து விட்டால் திரும்பாததென்றது…!
வாழ்க்கை என்பது யாதெனக் கேட்டேன்…
வாழ்பவை அனைத்தையும் ஓம்புதலென்றது…!

வெற்றி என்பது யாதெனக் கேட்டேன்…
விட்டுக் கொடுப்பதில் கிடைப்பதென்றது…!
அமைதி என்பது யாதெனக் கேட்டேன்…
அகத்தின் உள்ளே பார்க்கவுமென்றது…!

அடுத்தடுத்த வினாக்கள் எழுப்பிப் பார்த்தேன்…
அனைத்து விடைகளும் ஒற்றை வரியில்…!
அடுத்த வரியைச் சிந்தித்துப் பார்த்தேன்…
ஆழமாய் ஒன்றும் தோன்றிட வில்லை…!

- ஆ. செந்தில் குமார்.

முதல் வரி எழுதும்போது அடுத்த வரி 
அடுத்த வரி என வரிசை கட்டி என்
முதல் கவிதையை எழுதி முடிக்க வைத்த 
என் முதல் துடிப்பு இன்றும் என் கவிதை 
பயணத்தில் நல்ல ஒரு படகு துடுப்பு !

வரிந்து கட்டி எழுத வேண்டும் கவிதை..அது 
அடுத்தவரின் மனதை நோகடிக்காமலும் இருக்க 
வேண்டும்! ... படிப்பவரின் மனம் என்றும் 
மகிழ வேண்டும் என் கவிதை சொல்லும் 
நல்ல செய்தியில் !

அடுத்தவரின் துணை இன்றி நான் 
அடுத்த வரி அடுத்த வரி என்று தேடி 
அடுத்த கவிதை அடுத்த கவிதை என்று 
அதே முதல் துடிப்புடன் எழுத வேண்டும் என்றும் ! 

- கே.நடராஜன்

அடுத்த வரி தேவை
அழகாய்க்
கவிதை முடிவுற

இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்

வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்

அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து

ஊர்வசியோ மேனகையோ 
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக

- கோ. மன்றவாணன்

 ஆண்டாண்டு காலமாக 
மண் சேற்றில் கால் வைத்து 
ஊருக்கெல்லாம் சோறு போட
உழைத்து உழைத்துக்களைத்த விவசாயி 
மனதுக்குள் மருகுகிறான்
வானமும் பொய்த்தது 
கிணறும் வற்றி விட்டது 
ஆற்றுநீரும் கிடைக்கவில்லை 
என் பாட்டன் பூட்டன் 
எம் குலத்துக்கென விட்டுப்போன 
மண்ணும் வீடும் பறிபோகிறது 
பாசத்துடன் வளர்த்த மரங்களும் 
வெட்டப்படவிருக்கின்றன  
என்னை படைத்த ஆண்டவன் 
என் தலையில் எழுதிய 
விதியின் அடுத்த வரி என்ன?

- ஆகர்ஷிணி 

அடுத்த வரி என்ன போடுவார்களோ? என்ற
அச்சத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்!

நின்றால் வரி நடந்தால் வரி என்றானது இன்று
நாடெங்கும் ஒரே வரி என்று முதுகெலும்பை முறித்தனர்!

சிறுதொழில்கள் எல்லாம் மூடுவிழா நடந்தது
பெருமுதலாளிகள் எல்லாம் கொள்ளை இலாபம் அடைந்தனர்!

உப்புக்கு வரியா ?  என்று  நம் காந்தியடிகள்
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்துப் போராடினார்!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வருமான வரி
அனேக ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியமில்லை!

வருமானவரியே செலுத்தாத பணக்காரர்கள் உண்டு
வருமானவரி அலுவலகம் கண்டுகொள்வதே இல்லை!

உண்மையாகவே வரி செலுத்தும் அரசுஊழியர்களிடம்
ஒன்பது கேள்விகள் வேறு கேட்பார்கள்!

சாப்பாட்டிற்கு வரி செலுத்தும் நிலைவந்தது இன்று
சாமானியர்களும் வருந்துகின்றனர் இந்நிலை கண்டு !

வரி வரி திரும்பிய பக்கமெல்லாம் வரி என்றானது
வரியின்றி எதுவுமில்லை என்றானது நிலை இன்று !

வீட்டு வரி குழாய் வரி சாக்கடை வரி மட்டுமல்ல
விற்றால் வரி வாங்கினால் வரி என்றானது இன்று!

இன்னும் சில நாளில் பாருங்கள் இது நடக்கும்
இனி மூச்சு விடுவோரெல்லாம் வரி செலுத்திட வேண்டும்!

அந்த வரி இந்த வரி எங்கின்றனர் விற்போர்
எந்த வரி புரியாமலே செலுத்துகின்றனர் வாங்குவோர்!

அந்நியன் ஆண்டபோது கூட இவ்வளவு வரி இல்லை
இந்தியன் ஆளும்போதும் தான் இவ்வளவு வரித்தொல்லை!

அடுத்த வரி என்ன போடலாம் என்று தினமும்
ஆள்வோர் சிந்தித்து தொடர்ந்து வரி போடுகின்றனர்! 

துபாய் சென்று பாருங்கள் வரியே வாங்குவதில்லை
துபாய் போல மாறுங்கள் வரியிலிருந்து விடுதலை வழங்குங்கள்!

வரிப்புலியினைப் போலவே பொதுமக்களை நாளும்
வாட்டி வதைத்து வரும் வரிகளை ஒழியுங்கள்!!

- கவிஞர் இரா .இரவி

வரிக்குதிரை  எனும்விலங்கைப்  பார்த்த  துண்டு
    வரிநாட்டைப்  பார்த்ததுண்டா?  நம்நா  டன்றி
வரிசையாகச்  சாலையோரம்  மரங்கள்  நட்டு
    வளர்த்துநிழல்  அசோகன்தான்  தந்தா  னன்று
பரிசாகக்  கவிஞர்க்கே  ஊர்கள்  தம்மைப்
    பட்டாவாய்  மன்னர்கள்  தந்தா  ரன்று
உரிக்கின்ற  ஆட்டுத்தோல்  போல  இன்றோ
    உரிக்கிறது  வரிகளாலே  நம்நாட்  டாட்சி !

ஈட்டுகின்ற  வருவாயின்  தொகையைக்  கூட்டி
    இடுகின்றார்  வருமான  வரியாம்  என்றே
கூட்டிவரி  பறித்தபின்பும்  கடைக்குச்  சென்று
    கூறியொரு  பொருள்தன்னை  வாங்கும்  போதோ
போட்டுவரி  நம்மிடமே  வாங்கு  கின்றார்
    பொருள்தன்னை  விற்பதற்கு  வரியாம்  என்றே
மாட்டிற்கு  மூக்கிலிடும்  கயிறு  போல
    மக்களுக்கு  வரிக்கயிற்றை  இட்ட  தாட்சி !

மரம்தன்னை  நடுவதற்கும்  வரியாம் !  அந்த
    மரம்பூத்தால்  பூவிற்கும்  வரியாம் !  அந்த
மரம்பூத்த  பூ கனியாய்  மாறும்  போது
    மறுபடியும்  அக்கனிக்கு  வரியாம் !  அந்த 
மரக்கனியோ  விற்பகைக்கு  வந்தால்  அங்கும்
    மறக்காமல்  போடுகின்ற  வரியைப்  போன்றே
அரசின்று  உருவாகும்  ஒருபொ  ருள்கே
    அடுத்தடுத்து  வரிபோட்டே  கொல்லு  தந்தோ !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

ஓவ்வொரு வார்த்தைக்கும் 
அர்த்தம் உண்டு அழகும் உண்டு
தாக்கமும்  வாசமும் உண்டு
அடுத்த வரி எதிர்கால தேடல் 

பாசத்தில் நிறைவு கண்டு முதல்
வரியை எழுதிவிட்டால் ஆக்கமும்
தேடலும் கூடி விடுகிறது  அடுத்த
வரி  எதிர்பார்ப்பின் வெளிப்பாடு

காதலில் இன்பம் கண்டு மனம்
திளைத்துவிட அனுபவத்தை
எழுதினால் அடுத்த வரி ஈர்ப்பு
இன்பம் எதிர்கால ஆனந்தமே 

இயற்கையின் அழகை ரசித்து
விட்டு அதை கவிதையாக்கி
கொடுக்கும் போது அடுத்த வரி
ரசிப்பாகும் அது  புதுமையாகும் 

தாய்மண்  வாசனையை நுகர்ந்து
விட்டு அதன் அருமையை நல்
பெருமையை   உணர்ச்சி   பட
கொடுக்க அடுத்த வரி சிலிர்ப்பு 

கடல் அலையின் அழகை ஓசை
ஆர்ப்பரிப்பை கேட்டு விட்டு
அழகாக படைப்பின் ரகசியத்தை
சொல்ல அடுத்தவரி புரியாதபுதிர் 

கல்வியின் மேன்மையை திறம்
பட உணர்த்திவிட்டு அடுத்தவர்
பயன்பெறகல்வியை உரைத்திடும்
அடுத்த வரி கலையே காவியமே 
வரிக்கு வரி ஆளுமை திறமை
மெருகு அழகு என்று தீட்டிட
அடுத்த வரி கல்வெட்டு  காலப்
பொக்கிஷம்  எதிர்கால வரலாறு

 
- சீர்காழி .ஆர்.சீதாராமன்

அடுத்த வரியை
வாசிக்கும் ஆர்வத்திலேயே
தொடர்கிறது
கவிதை வாசிப்பு. 

ஒன்றை எழுதும் போது
உருவாகி விடுகிறது மனதில்
அடுத்த வரி. 

அடுத்த வரி
அதற்கடுத்த வரி என
முற்றுப் பெறாமல்
நீண்டு கொண்டேயிருக்கிறது
படைப்பு. 

அடுத்த வரியை
எழுதுவதிலேயே இருக்கிறது
ஒரு படைப்பாளியின்
ஆளுமை. 

அடுத்த வரி
எதுவென தெரியாமலே
முற்றுப் பெறுகிறது
இத்துடன்
இந்தக் கவிதை. 

- பொன். குமார், சேலம்

முதல் வரி எப்படி தொடங்குவது என்று தெரியாமல் பரிதவிக்கிறேன், இதில் எப்படி அடுத்தவரி தொடங்குவது என்று நினைத்தேன். 

நினைத்த நேரத்தில் நீ என்று தொடங்கினேன். 

நீ மட்டும் முதல்வரியாக இருக்க, அடுத்தவரியாக நான் நின்றேன் நின்றது அடுத்த வரிக்கு பிடிக்காமல் போக. 

நின்றேன் காதல் வரிகளோடு, அதில் ஒரு வரி கவிதை உன் பெயர்தான் என் ஆருயிரே ... 

- ந. அருள்செல்வன்

காகிதத்தில் காணும் 
வரிகள் மட்டமல்ல
இதழ்கள்  பிரிந்து
பேசும் வார்த்தைகள் 
ஒலிக்கும் வரிகளே !

கவிஞனின்
முகவரி தேடிய கவிதை 
அடுத்த வரிக்காக 
காத்துக் கொண்டிருந்தது 
கவிஞன் எழுதுகோல்...

குருவின் பார்வையில் 
ஆழ்தியானத்தில் வரும் 
அடுத்த வரிக்காக 
அமைதியாக சீடன்
அமர்ந்திருந்தான் !

காதலன் 
அனுப்பும் குறுஞ்செய்தியில் 
அடுத்து அடுத்து வரும்
வரிச் செய்திக்காக 
காதலி கைபேசியில் 
வழிமேல் விழி வைத்து
காதல் மொழிக்காக
காத்துக் கொண்டிருந்தாள் ! 

காதலி கவிதாவிடம் 
கவிதா! ‘கவி தா’
கவிதை வரியில் 
காதலன் விளையாடினான் !  

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

அடுத்தவரி கிடைக்காமல் அல்லாடும் கவிகளுக்கு
 அருந்தமிழில் எடுத்துதவ அரிதான பெண்கவிகள்.!
எடுத்துக்காட் டாயதிலே எங்கும்கால் பதித்திருப்பார்
 எப்போதும் மறையாத எழுத்துக்கள் தந்திருப்பார்.!

கொடுந்தமிழில் கவிதைவரி கெடுபிடியாய் இல்லாமல்
 கொஞ்சுமொழி தமிழிலவர்க் கவிக்கழகுச் சேர்த்திடுவார்.!
அடுக்கடுக்காய் உதித்தபல ஆயிரமாயிரம் கவிஞர்கள்
 ஒளவைமுதல் ஆவுடையக் காள்வரையி லுண்டாமே.!

அடுப்பூதும் பெண்களெலாம் அருங்கல்வி அறிவுபெற
 அவசியமும் இல்லையென அவமதித்துச் சொன்னார்கள்.!
எடுத்துகாட்டாய் இனியவர்கள் எல்லாத்து றையிலுமே
 எழிலொடின்று சிறப்புற்று ஏற்றமுற நிற்கின்றாரே.!

இடுப்பொடிய வேலையின்றி இனிக்கின்ற இல்லறமும்
 இகம்சிறக்க வல்லதுவும் இன்றுமவர் துலங்குகிறார்.!
தடுப்பையெலா மூதிவிட்டுத் தங்குதடை யேதுமின்றி
 தனித்திறமை பெற்றங்கு தரணியெலாம் விளங்குகிறார்.!

ஒருவரியில் சொல்லியதை அடுத்தவரி முடித்திட்டு
 உலகத்தில் உள்ளவற்றை ஒடுக்கிவிட்ட ஒருவனேதான்.!
திருவள்ளு வனென்பனவன் தெவிட்டாத புலமையிலே
 திளைக்காமல் எழுதிவிட்ட தேனின்பச் செம்மொழியில்.!

அருங்கலையாம் எழுதுகலை ஆண்டவனே அருளியது
 அரிதாகத் தெரியவில்லை அருவிபோலக் கொட்டியது.!
இருக்கின்ற கவிகளுக்குள் இமயயெனச் சிறந்தவனாம்
 இவ்வுலகிற் கெடுத்துரைத்தான் இனியகவி பாரதியும்.!

- பெருவை பார்த்தசாரதி

அடுத்த வரி அதற்குள்ளா?
ஜிஎஸ்டியே இன்னும் சீராகா வேளையிலே
இன்னுமொரு வரி விதிப்பா?
இந்தியர்கள் தாங்குவரா?!
எத்தனைதான் அடித்தாலும்
எப்படியோ தாங்குகிறான்
என்றே பாராட்டி...
ஏகமாய் உதைகொடுத்து...
அனுப்பியபின் வடிவேலு 
அழுது கொண்டே சொல்வாரே!
அந்தக் கதையிங்கு...
அடிமனத்தை நெருடிவரும்!

அடுத்தவரி கவிதைக்கு...
அன்பே உன் கண்களன்றோ...
வார்த்தை நீர் சுரக்கும்
வற்றாத நீர்வீழ்ச்சி!
கண்களைச் சிமிட்டாமல்
கண்ணே எனை நிமிர்ந்து...
கொஞ்ச நேரம் பார்!
குவலயமே வியந்து போற்றும் 
காவியத்தை உருவாக்கி...
கலையுலகில் உலவ விட்டு...
உன்மடியில் தஞ்சம்புக
ஓடியும் நான் வருகின்றேன்!

- பெருமழை விஜய், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

கண்டதை படித்தால் பண்டிதனாவான்
            கண்டதை தின்றால் பைல்வானாவான்
என்பதை உணர்ந்தே என் பாட்டனார்
            இயல்பாய் அறிவை வளர்த்துக்கொண்டார்
அதிக விஷயங்களை தெரிந்தவர் ஆனால்
            ஆரம்பப்பள்ளியில் படித்ததுள்ளார் அவ்வளவுதான்
அவரிடம் இது பற்றி கேட்டறிந்து கொண்டோம்
              அடுத்தவரி டம்கேட்டே அனைத்தையும் அறிந்தாராம்!

அடுத்தவரிடம் கேட்டு பரிட்சை எழுதக்கூடாது
              ஆனால் ஆட்சி செய்யலாம் ஆற்றலுடன்
அடுத்தவரி டம்கேட்டே அட்சியில் மிளின்றார் முதல்வர்
              அவருக்கு எல்லாம் தெரியாது சொன்னால் கோபம் வரும்
அடுத்தவரி டம்கேட்டு பரிட்சை எழுதியள்ளார்   
               ஐ ஏ எஸ்  ஆயி உள்ளார்  பலபேர் இன்று
அடுத்தவரி டம்கேட்டு அறிந்தே வியாபாரம் செய்தவர்
                அனுபவத்தால் உயர்ந்துள்ளார் வியாபாரத்தில்
        
அடுத்தவரி டம் கேட்டே சுச்சுமம் சூப்பர்  சிங்கர் ஆகிறார்
             அடுதவரிடம் கற்று செய்பவர்தனே அகிலம்முழுது முள்ளார்

- ஜி. சூடாமணி, ராஜபாளையம்


மரகதந் தரித்த
மண் மகளின்
குணமிகு கொண்ட
குமரி களின்
ஏகாந்தந் தவிர்த்து
காந்தமாயி ணைத்து
சரிநிகர் சமத்துவம்
சரியாய் தந்து
ஆச்சாரம் பகரும்
ஆச்சரிய மென்று
மெஞ்ஞானம் பரப்பும்
மெய் வாலை யென்று;
பூப்பதும் காய்ப்பதும்
பெண்மையி னியல் பென்று
பூரிப்பு முப்பும்
பெண்மையி னிலக்கணம்;
இயற்கையும் பெண்மை தான்
இயல்பினி லொன்றுதான்
இடும்பைக் குறைத்தால்
கரும்பா யினிக்கும்
கரும்பாய் நினைத்தால்
காவிரி பொங்கும் - அடுத்தது
பெண்ணும் மண்ணும்
புவியின் சொத்து
புரிந்து பார்;
புகழு முன்னை
பாதுகாப்பாய்
கடைசி வழியாய் - இராமன்
கணை தந்த வழியாய்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்
சிறுவன் எந்த நொடி விழுவான்
எந்த நொடி எழுவான்?

புயல் காற்றில் ஊசலாடும்
மொட்டை மாடிக் கொடி கயிறு
அறுந்து விழுமா? விழாதா?

வெட்டி வீழ்த்தப்படாமல் மரங்கள் 
சாலையோரம் பூத்திருக்கும் காட்சி
கனவா? நிஜமா?

புல்தரையில் வெகுதூரம் நடந்த
நினைவில் இன்னும் ஈரம் 
இருக்குமா? மறக்குமா?

ஞாபகச் சிமிழுக்குள் புதைந்த
தொலைந்த உறவொன்றின் துயர் 
நீங்குமா? தொடருமா?

வெகு நேரம் விழித்திருந்து
எழுதிய இக்கவிதையின் அடுத்தவரி
சரியா? பிழையா?

- உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com