Enable Javscript for better performance
வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்- Dinamani

சுடச்சுட

    

    வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 07:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்தனைகள் தொடர்ந்திருக்கும் செயலை எண்ணி
       சிதைந்திடாது முடிப்பதற்கு வழிகள் தேடி’
    எந்தவொரு பாதையிலே சென்றால் நன்று
       என்றுதினம் ஏங்குவதே மனதின் தொண்டு
    பந்தமென்றும் பாசமென்றும் உந்தும் ஆசை
       பற்றுவைத்த காரணத்தால் நிறைந்தே சேர
    வந்துநின்ற பிறப்பினிலே வாட்டம் ஓட்டம்
       “வாழ்க்கையெல்லாம் போர்க்களமே”யார்க்கும் இங்கே !
    
    நொந்துநூலாய் அந்துவிடும் அச்சம் கொள்ள
       நிறைவாக்க வேண்டுமென்று இச்சை கொள்ள
    பந்துருளும் நிலைபோலே பாதை மாறி
       படுந்துன்பம் படுவோர்க்கே தெரியும் என்றும்
    எந்தசெயல் செய்தாலும் இடையூ ராகி
       இன்னலதே முந்திவந்து எதையும் மாற்றும்
    வந்திருந்த வசந்தமெல்லாம் புயலாய் மாறும்
       “வாழ்க்கையெனும் போர்க்களமே” வரவென் றாகும்
    
    வருவதெல்லாம் இப்படித்தான் என்றே எண்ணி
       வாய்த்ததுதான் வாழ்க்கையென்ற நிறைவே கொண்டு
    தருவதெல்லாம் தன்மகிழ்வாய் கருதும் போது
       தனித்துவந்து சஞ்சலமே தோன்றா தென்றும்
    தெருவினிலே வாழ்ந்திருப்போர் துன்பம் கண்டு
       தேர்ந்திருக்கு நமதுவாழ்க்கை நன்றே என்று
    வருந்திடாது இருநிலையும் சமமாய் கொண்டால்
       “வாழ்க்கையெல்லாம் போர்க்களமா” இல்லை ! இல்லை !
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai