சுடச்சுட

  
  அடுத்தவர்க்குத் துன்பத்தைத் தாராச் சொல்லாய்
    அனைவர்தம்  செவிகளினை ஈர்க்கும் சொல்லாய்
  கடுகளவும் சினந்தன்னைத் தூண்டாச் சொல்லாய்
    கனியாக இனிக்கின்ற கனிவுச் சொல்லாய்
  நடுவுநிலை தவறாத நேர்மைச் சொல்லாய்
    நன்மைகளை விளைக்கின்ற நடவுச் சொல்லாய்
  விடுக்கின்ற  சொற்கள்தாம்  வெல்லும் சொற்கள்
    விளைவுகளைப் பயனாக்கும்  அமுதச் சொற்கள் !
  
  பகையாக  வெறுப்புதனை உமிழு கின்ற
    பாக்கித்தான் செயல்பாட்டில் மாற்றம் செய்து
  நகைசிந்தி  அழைக்கின்ற  நட்பாய் மாற்றும்
    நயத்தக்க சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !
  தொகைதொகையாய்த் தமிழரினைக் கொன்று போட்டும்
    தொலையாத கொலைவெறியில்  உள்ள இலங்கை
  தகைமையுடன் தமரென்றே சொல்ல வைக்கும்
    தணிவான சொற்கள்தாம் செல்லும் சொற்கள் !
  
  பக்கத்து வீட்டாரைப் பழக வைக்கும்
    பண்பான சொற்கள்தாம் வெல்லும் சொற்கள்
  நக்கலாகப் பேசுவோரை நயக்கு மாறு
    நவிலவைக்கும்  சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !
  துக்கத்தை  மாற்றுகின்ற  மருந்தாய் ஆகித்
    துணையாகும் சொற்கள்தாம் வெல்லும் சொற்கள்
  எக்கருத்தே  ஆனாலும் ஏற்கும் வண்ணம்
    எடுத்துரைக்கும் சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai