சுடச்சுட

  
  வெல்லுகின்ற சொல்லொன்று வசமாக வேண்டும்
      வேட்கையுடன் அதன்பின்னே நாம்செல்ல வேண்டும்
  சொல்லுகின்ற சொல்லதனை முன்னிறுத்த வேண்டும்
      சொல்லுக்குப் பிறிதொருசொல் இல்லாமல் வேண்டும்
  பல்லுயிரும் விரும்புகின்ற சொல்லாக வேண்டும்
      படைப்போனை ஈர்க்கின்ற மந்திரச்சொல் வேண்டும்
  தொல்லையெலாம் போக்குகின்ற நற்சொல்லாய் வேண்டும்
      தொடக்கமென வருகின்ற பொருட்சொல்லாய் வேண்டும்.
  
  வித்தையெலாம் அறியவைக்கும் வியன்சொல்லாய் வேண்டும
      வேதங்கள் மொழிகின்ற ஒருசொல்லாய் வேண்டும்
  புத்துலகம் காட்டுகின்ற புதுச்சொல்லாய் வேண்டும்
       புத்தகங்கள் அறியாத பெருஞ்சொல்லாய் வேண்டும்
  நித்தமுமே நிம்மதியைத் தருஞ்சொல்லாய் வேண்டும்
       நிர்மலமாய் மனவமைதி பெறுஞ்சொல்லாய் வேண்டும்
  எத்திசையும் புகழ்மணக்கும் இன்சொல்லாய் வேண்டும்
       இயன்றவரை நிறமறியாத் தனிச்சொல்லாய் வேண்டும்.
  
  நாள்தோறும் அச்சொல்லை நாம்சொல்ல வேண்டும்
      நலமாக்கும் அருட்சொல்லே நாப்பேச வேண்டும்
  ஆள்சொல்லாய் அகச்சொல்லாய் நமையாள வேண்டும்
      அன்பென்னும் அருளன்னை வாய்சொல்லாய் வேண்டும்
  கோள்பேசும் கொடுஞ்சொல்லில் லாதிருக்க வேண்டும்
      கோபச்சொல் நீக்கியதோர் காதற்சொல் வேண்டும்
  மீள்விரும்பும் மிகுசொல்லாய் வாழ்க்கையிலே வேண்டும்
      வெற்றியினை வழங்குவதே வெல்லுஞ்சொல் லன்றோ!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai