சுடச்சுட

  
  சொல்லுகின்ற சொற்களெல்லாம் சுடுமே என்று
    சிந்தனையில் சிறிதேனும் நினைத்தல் உண்டோ
  அள்ளவேண்டும் பொருளென்று எண்ணும் போதே
    அதுவெல்லாம் பொதுவுடமை கணக்கில் உண்டா
  மெல்லமனம் சொல்லுகின்ற நீதி எல்லாம்
    மௌனத்தால் கனிந்திருந்து நினைத்தல் உண்டோ
  எல்லையின்றி உழைப்பவர்கள் உதிரம் எல்லாம்
    உன்செல்வம் என்றுணரும் எண்ணம் உண்டா
  
  உனக்கெனவே சுயநலமாய் பாதை கண்டாய்
    உழைக்கின்ற எளியோரை அடிமை என்றாய்
  கணக்கில்லா துன்பத்தைக் கண்ணால் கண்டும்
    கருணையில்லா செயல்காட்டி கடிந்து நின்றாய்
  மனத்துள்ளே ஓர்நாளும் இரக்கம் இன்றி
    மதியில்லா கீழ்பிறப்பாய் நடந்து கொண்டாய்
  குணங்காட்டி என்றேனும் இசைவாய்ப் பேசி
    குளிர்கின்ற ஓர்பார்வை பார்த்த துண்டா ?
  
  வருந்துன்பம் வறியவர்க்கா ? நமக்கே என்று
    வலிந்துதவும் சிந்தனையை மனதால் நாடு
  மருளென்ற இருள்நீங்கப் பரிவாய்ப் பேசி
    மனமெல்லாம் அருளாகி நேசம் காட்டு
  தருகின்ற கைதானே தாயின் கைகள்
    தணிந்தருள பயந்தோடும் வறுமைப் பேய்கள்
  இருள்சூழ்ந்த ஏழையரின் இன்னல் தீர
    “இதயமொரு முறையேனும் துடித்தல்” வேண்டும்
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai