கடந்த வாரத் தலைப்பு ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள்

மதுக்குடி மாண்பல்ல என்ற நியாயம் புதுக்குடி கொட்டை வடிநீருக்கில்லையே
கடந்த வாரத் தலைப்பு ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள்

இரண்டாவது கோப்பை

ருசியறியும் முன் தாயின் இரண்டு மார்பு கோப்பைகளில் இருந்தும்,
கேட்காமலே கிடைக்கும் பால்,
உயிர் ஊசல் ஆடும்போது மனைவியின் கையால் பாசத்தோடு கடைசியாக,
கேட்காமலே கிடைக்கும் பால்
இறந்தபின் ஆன்மாவிற்கு மகன்.
கேட்காமலே அளிக்கும் பால்,
நாம் வாழும் போது மட்டும் 
கேட்டால் தான் கிடைக்கும் குடிப்பதற்கு பால்
இரண்டாவது கோப்பை!!
இது நமக்கு உணர்த்துவதோ  
முயற்சி செய் பலனை எதிர்பார்க்காதே என்று!!
வாழ்க்கை என்பது லட்சியம்,
முயற்சி என்பது முக்கியம்,
தோல்வி என்பது முடிவல்ல, 
வெற்றியின் ஆரம்பம்!
அதுவே வாழ்க்கை நமக்கு தரும் இரண்டாவது கோப்பை!!

- பிரியா ஸ்ரீதர்  

**

வேதனை தவிர்க்க
வெட்டித்தன மனிதனாய்,
இருந்தவன் எனை − நட்பென்னும்
நயவஞ்சகத் தீ சில
ஆல்கஹாலுக்குள் 
அமிழ்த்தி விட்டு
சந்தோசப்பட்டது,
என் குடும்பம் இப்போது
வேதனையால்....;.

துடித்தவர்கள், என்னை
குடி மறக்கும் நிலையத்தில்
இட்டு, பராமரித்து
புது மனிதனாய்
வெளியே வந்தேன்..

மீண்டும் அதே கூட்டம்
என் குடும்பம்
திரும்பப் பதறியது
ஆம், கண்ணாடிக் குடுவை
மதுவை வாயருகில்...

கொண்டு சென்று;
சீய்... கருமம் என்று சொல்லி
வெளியே விற்ற
கரும்புச் சாற்றைக்
கோப்பையிலிடச் சொல்லி
அருந்தினேன்,
மகிழ்வுடன்
இது இரண்டாம் பிறப்பு
என்றார்கள........

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

காலைப்  பொழுதினை 
சோலையில் உலாவும் 
உற்சாக பொழுதாக்கும் 
அற்புதப்பானம்!  அது 
சிலருக்கு தேநீர் 
பலருக்கு  காபி!
முதல் கோப்பை கொடுக்க 
மறந்த சுறுசுறுப்பை 
சிறந்த  விருந்தாக்குவது 
"இரண்டாவது  கோப்பை"  காபி!
முதல் முறை தோல்வியுற்ற  தேர்வில்
இரண்டாம்முறை  பெறும் 
வெற்றி போல .....
இரண்டாவது  கோப்பையில் 
முரண்பாடில்லா  வெற்றி வாகை சூடும்
திறன் கொடுக்கும்
வல்லமையுள்ளதை   உணர்வாய்!
மலர்ந்த முகம் வேண்டுமா?
தளர்ந்து  விடாது வாங்கிக்கொள்
"இரண்டாவது  கோப்பை"  காபியினை!

- உஷா முத்துராமன், மதுரை

**

சமத்துவபுரத்தில் 
தீண்டாமையை ஒழித்து
பிரிவினைகளை ஒடுக்கி
சாதிமதங்களை நீக்கிட
சபதமெடுத்த தலைவரின்
கூட்டணி பேச்சுவார்த்தை
இரண்டாவது ரவுண்டிலும்,
கடைக்கோடி தொண்டனின் பசி
சிரட்டையிலும்

- சிவம், திருச்சி

**

மதுக்குடி மாண்பல்ல என்ற நியாயம்
புதுக்குடி கொட்டை வடிநீருக்கில்லையே
ததும்பத் ததும்பப் பெரிய குவளையாயிற்று
வெதுவெதுப்பான திரவம் வேண்டலாயிற்று

பெருங் குவளையில் கவலையான இல்லாள்
இரு கோப்பைகளில் முக்காலும் நிரப்பினாள்
தரும் திரவத்தின் அளவுக் குறைவு தெரியாது
பெரும் சாதனையாய் இரண்டு கோப்பையில்

கோப்பை ஒன்றில் ருசி அறியாத வேகம்
கோப்பை இரண்டில் ருசிக்கும் ருசியாலே
காப்பாற்றினாள் அதிகமில்லாமல் இல்லாள்
சாப்பாடும் சரிவிகிதம் வயிற்றில் சென்றதே

இரண்டாவது கோப்பை வந்ததால் நன்மை
திரண்ட உடல்நலம் குன்றாது காத்தது அது
வரண்ட வாழ்க்கையிலும் இரண்டு கோப்பை
மிரண்ட வயிறு ஏழைகளை எண்ணியதே

ஒன்றே நன்று அதிகம் இல்லாதார்க்கென்றே
கன்றும் தாய்ப் பசுவுமான உறவில் வாழ்ந்திட
என்றும் நல்ல மனம் கொண்டால் நன்றல்லவா
அன்றே இரண்டாவது கோப்பை வேண்டாமே

கவிஞர்  ராம்க்ருஷ்

**
காலைக்கடன்களைக்
கட்டாயம் கழித்திடவே
இந்திய மூத்த குடி மக்களுக்கு
இரண்டாவது கோப்பைத் தேநீர்
இல்லை எனாமலே வேண்டும்.

சிந்தனை ஆள்பவர்க்கும்
சிரிக்க வைக்கும் நபர்களுக்கும்
இரண்டாவது கோப்பைத்தேநீர்
இனி வேண்டாம் எனக் கூறவருமோ?!

கோப்பையிலே குடியிருப்பு
கோலமயில் துணை இருப்பு
என்றெழுதிய கவியரசுகூட
எனக்கு எதற்கு இரண்டாவதுகோப்பை 
என என்றாவது சொன்னதுண்டா?!

தாய் மகிழ்ந்து தந்த பின்னும்
தாரம் தந்து மகிழ்ந்திடத்தான்
பாழ் மனந்தான் துடிக்கிறதே
பருகிடத்தான் இனிக்கிறதே
இரண்டாவது கோப்பை தேடி
இதய வாசல் திறக்கிறதே!

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**
காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை 
காப்பி ...பின்னர் காலாற ஒரு பொடி 
நடை வீட்டை சுற்றி சுற்றி !
தன் முகாமுக்கு திரும்பும் ஒரு படை 
வீரன் துணிவுடன் எடுப்பேன் நான் 
அன்றைய செய்தித்  தாளை தினமும்
என் நடைபயிற்சி முடிந்தவுடன் !
எத்தனை அதிர்வு செய்தி, எத்தனை 
குற்ற செய்தி தினமும் ! அத்தனையும் 
படிக்க மனதில் உறுதி வேண்டும் !
இரண்டாவது கோப்பை "ஸ்ட்ராங்" காப்பியும் 
கையில் இருக்க வேண்டும் அப்போது !
இரண்டாவது கோப்பை காப்பிக்கு என்ன 
அத்தனை சக்தி ! எதையும் தாங்கும் 
என் இதயம் இரண்டாவது கோப்பை 
காப்பி மட்டும் என் கையில் இருந்தால் !
முதல் கோப்பையில் இல்லாத தரமும் 
சுவையும் இரண்டாவது கோப்பை காப்பியில் 
எப்படி சாத்தியம் ?  அது என்ன ரகஸ்யம் ? 
கேட்டேன் நான் என் சகதர்மிணியை ! 
பட்டென கிடைத்தது விடை என் கேள்விக்கு 
முதல் கோப்பை காப்பி "நீங்களே தயாரிக்கும் 
காப்பி அவசரக் கோலத்தில் விடிந்தும் விடியாமலும் "!
இரண்டாவது கோப்பை காப்பி உருவாகுவது 
என் மனைவியின் முதல் தர இயக்கத்தில் !
புரிந்து கொண்டேன்  நான் இரண்டாவது 
கோப்பை காப்பியில்தான் முதல் தர 
காப்பியை ருசிக்கிறேன் தினமும் என்று !
கோப்பை இரண்டாவதாக இருக்கலாம் ஆனால் 
அதில் கிடைக்கும் காப்பி முதல் தரமாயிற்றே !
இந்த இரண்டாவது கோப்பை உண்மையில் 
இருக்க வேண்டிய இடம் இரண்டாவது இடத்தில் அல்ல !

- K.நடராஜன் 

**

இரண்டாவது கோப்பையும் இறங்கிற்று உள்ளே!
ஜிவ்வென்று எங்கோ பறந்தது அவனுளம்!
மூன்றாவதும் போட்டால் முகிழ்க்குமோ இன்பமென்று
முடிவின்றி எண்ணம் மூழ்கிற்று சுறுசுறுப்பில்!
அடித்து உதைத்து ஆர்ப்பாட்டம் மிகச்செய்ததால்
அருகிலிருந்தவன் அறைந்து இழுத்து வந்து
சாலையோரத்தில் சாக்கடை மத கருகில்
படுத்திருந்த நாயின் பக்கத்தில் இவனை
கிடத்திப் போனான்!கிஞ்சித்தும் இரக்கமின்றி!
முகர்ந்திட்ட நாயும் முகஞ்சுழித்து அகல
ஓடிவந்த பன்றியும் ஒடுங்கியே நின்றது!

பருவமழையின் ஊடலில் பரலோகம் இருளடைய
பச்சிளம் குழந்தைகள் இரண்டும் பயப்பட்டுக்கொண்டே
'அப்பா ஏம்மா இன்னும் வரவில்லை?யென்று
அடிக்கொரு தரம் அமுதாவைக் கேட்க
கரண்ட் போனதால் கவிந்த இருளை
கைவிளக்கால் மெல்லக் களைந்தே விட்டு
'வருவார் விரைவில் வாங்க நீங்கசாப்பிட!'
என்றே சொன்னாலும் எழிலான அவள்மார்பு
பயத்தில் சற்றே பதற்றத்துடன் துடிக்க
மின்னி இடித்து மிதமாய்ப் பெய்தவானம்
அவனையும் நனைத்தது!அவள் கண்ணையும் நிறைத்தது!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**
ஒரு மழை நாளின்
குளிர் இரவில் சிலிர்க்கும் ஈரம் படர்ந்த 
சாலையோரத் தேனீர் விடுதியின் - 
முதல் கோப்பைத் தேனீரில் தெரிந்திருக்கவில்லை
மறுமுறை நாம் சந்திக்காதிருப்போம் என்று,
நிந்தனைகளும் நிபந்தனைகளும் சூழ்ந்த 
நிசப்த வெளி யின் நீண்ட பொழுதுகளில்
மெளன ஓலமாய் ஓசையின்றி அழும் 
உள்மனம் ஏங்குவது தொடர்கிறது,
இன்னொரு கோப்பைத் தேனீருக்கு,
உன் ஈர முகமும் செர்ரி இதழ் சிரிப்பும்
தேனீரை சுவையாக்குவது யாருக்கு தெரியும்?
அந்த
இரண்டாவது கோப்பைத் தேனீரை பருகுவது எப்போது?
நாம்.

- செந்தில்குமார் சுப்ரமணியம்
**
தேநீர்க் கோப்பை வலது கையிலும்
திறந்த புத்தகம் இடது கையிலும்
இருப்பதே
எனது யோகாசனம்

தேநீர்ச் சுவையும்
வாசிப்பின் சுகமும் 
மனதை மயக்கும் தேவதைகள்

மனைவி அழைத்த போதும்
மழலை சிரித்த போதும்
தெரிவதில்லை
தேநீர்க் கோப்பையின் அரவணைப்பில்

வாசிப்பில் மெய்மறந்த தருணம்
ஆவி பறந்தோடித் தப்பித்திருக்கும்
கோப்பையில் இருந்து

காலியான தேநீர்க் கோப்பையை
உதடு பொருத்தி உறிஞ்சி ஏமாறுதல்
ஒவ்வொரு நாளும் உண்டு

இரண்டாவது கோப்பை கேட்கையில் மட்டுமே
நிகழ்வுலகுக்குத் திரும்புதல்
நிகழ்கிறது

-கோ. மன்றவாணன்

**
சொர்க்க சுந்தரியை க்காண வேணு மெனில் 
உடலெனும் உடுப்பினை 
வாழ்ந்த இடத்திலேயே கழட்டி வைத்து 
உயிர் மட்டும் செல்லுமாயின் அதனால் 
யாருக்கு என்ன சுகம் கிட்டக்கூடும்

அங்கே வெறும் ஐந்தே சுந்தரிகளே நீ 
இருக்கு மிடத்திலோ கோடான கோடி 
உடலின்றி உயிர் ஒரு உயிரில்லை 
உயிரின்றி உடல் ஒரு உடலில்லை 
இரண்டும் ஒன்றாயின் சுகம் உண்டு

கார்குழலை மல்லிகை மலர்களால் அலங்கரித் தொரு 
வாசம் வீசுதிங்கே 
தட்டுங்கள் திறக்கப்படும் என்றதுவோ 
உலக நியதிகளில் ஒன்றாகும் நானே 
தட்டுமுன் தட்டினாள் ஒருகப் காபியென 

சிலையாகி நின்றேன் பிரம்மித்து ஒரு
கோப்பையோடு ஓரங்கட்டி விடுவாளோ 
இரண்டாவது கோப்பை வரவழைத்திட
ஒப்புக்கொண்டாள் தீர்ந்தது சந்தேகம்
அக் கோப்பையாலே வாழ்வு பெற்றேன்

ஆபிரகாம் வேளாங்கண்ணி

**

உயர்ரக தேநீர் கடைக்கு  - நான்
உரிய நேரத்தில் வந்திடுவேன் 
என்றுரைத்தவளுக்காக
எனக்கான முதல் கோப்பையோடும் 
அவளுக்காக
வாங்கிவைத்த இரண்டாவது கோப்பையோடும் 
காத்திருந்தேன்...
நேரம் அதிகரிக்க அதிகரிக்க - கோபம்
அதிகரித்தது; நாள்தோறும் இப்படித்தான் 
காக்கவிடுவாள்...
கோபத்தை இன்று காட்டிவிட வேண்டுமென
நினைக்கும்போதே.. எதிரே நின்றால் புன்சிரிப்போடு..
அந்த புன்சிரிப்பில் என்கோபம் மட்டுமல்ல
நானும் அவளிடமே சரணடைந்து  விட்டேன்..
இரண்டாவது கோப்பையை மெல்லப்பருகினாள் 
நானோ அவளின் மயக்கும் விழியால் 
காதலைப்பருகினேன்..
அடிக்கடி கோப்பைகள் இடம் மாறின
அவளின் உதட்டின்சாயம் என்னுதட்டில் அரங்கேறின..
எத்தனையோ சுவையான தேநீரை சுவைத்தாலும்
அவள்சுவைத்து மீதம்வைத்த தேநீருக்கு ஈடாகவில்லை...
எவ்வளவு நேரமானாலும் ரசித்துக் கொண்டேயிருப்பேன்...
அவ்வளவு அழகுக்கு உரியவள் என்காதலி;
பலநாள் தொடர்ந்த எங்கள் சந்திப்பு
பாதியிலே முடிந்தது; மனம் உடைந்தது...
அவளைத் தேடி தேடி அலைந்தபோதுதான்
அதிர்ச்சியான உண்மை தெரிந்தது - அன்று
அவள் வாக்குறுதி அளித்தால் - உன்
பிறந்தநாளுக்கு நேரத்திற்கு வருவேன் என்று;
என்னை காண்பதற்கு வேகமாய் வந்தவள்
வாகன விபத்துக்குள்ளாகி துடிதுடித்து இறந்திருக்கிறாள்..
இதை அறியாமல் இருந்துவிட்டேன் - அவள்
இல்லாமல்  பித்து பிடித்தவானேன் - நாள்தோறும்
தேநீர் கடைக்கு செல்வேன் - வராத
தொலைபேசியில் அவளோடு நிறைய பேசுவேன் 
வாகனத்தில் பாா்த்து பொறுமையாய் வா
நேரத்தைவிட உயிர் முக்கியம் என்றவாறு...
இரண்டாவது கோப்பையை வாங்கிவைத்தேன் அவளுக்காக..
அதில் தேநீர் நிரம்பி இருக்கவில்லை...
அவளின் அற்புத நினைவுகளே நிரம்பியிருந்தது....!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**
முதலாக  உழைப்புதளை  போட்ட  வர்கள்
    முழுநாளும்   வயல்களிலே  உழைத்த  போதும்
முதல்கோப்பை   கஞ்சிக்கும்  வழியே  யின்றி
    மூன்றுவேளை  பட்டினியில்   துடிக்கின்  றார்கள்
விதவிதமாய்   வாக்குறுதி   கொடுத்துத்  தேர்தல்
    விளையாட்டில்   வெற்றிகண்டே   ஆட்சி  பெற்றுப்
பதவியிலே   அமர்ந்தவர்கள்  செய்ய  வில்லை
    பரிதாப  உழவர்க்கோ  விடிய  லில்லை !

அடுக்கடுக்காய்   வீடுகட்டும்  கொத்த  னார்கள்
    அருமையாக   துணிநெய்யும்   நெசவா  ளர்கள்
வடுக்களாக  அங்கையில்  காய்ப்பு  காய்த்தும்
    வலியோடு   பொழுதெல்லாம்   கல்லு  டைப்போர்
நடுக்கடலின்  உள்சென்று   வலைகள்  வீசி
    நனைந்தவுப்பில்  திரும்புகின்ற  மீன  வர்கள்
விடுகின்றார்   பசியேப்பம் ;   கோப்பைக்  கஞ்சி
    விடியலுக்கும்   வழியில்லை   வறுமை  யாலே !

உழைப்பவரின்  வியர்வையிலே  வாழ்ப  வர்கள்
    ஊர்வளத்தைச்  சுருட்டியின்பில்  திளைப்ப  வர்கள்
அழைப்புதனை   தருவார்கள்  எனக்கா  வாமல்
    அவர்களாக  முன்வந்து   தாரா  விட்டால்
குழையாமல்   அவர்களிடம்  பிடுங்க  வேண்டும்
    கூடியதை   முதலிரண்டு  கோப்பை  என்ன
உழைப்பவர்கள்   வயிறார  உண்ப  தற்கே
    உரிமையென   மொத்தமுமே  கொடுக்க  வேண்டும் !

பாவலர்  கருமலைத்தமிழாழன்

**
முதல் கோப்பைக் காப்பியுடன்
தொடங்கும் விடியலில்
முழுவதுமாக நிறைவதில்லை
மனது.
இரண்டாவது கோப்பைக்கான
இடைவெளியில்
உண்ணுவதற்கு எத்தனையோ
உணவிருந்தும்
மணக்கும் காப்பி யையே
மனம் விரும்புவது 
பழக்கமாய்ப் போனது .
பல முறை காப்பி
பருகுவது
உடலுக்கு கேடு என
உணவு ஆராய்ச்சியாளர்கள்
உரைத்தாலும்
ஃபில்டர் காப்பியின்
மணத்திற்கும்
நிறத்திற்கும்
மயங்காதவர் உண்டோ எம்
மண்ணில் !
களிப்பு என்றாலும்
கவலை ஏற்பட்டாலும்
தலை வலி என்றாலும
தடங்கல் வந்தாலும்
உடலும் உள்ளமும்
சட்டென்று
விரும்புவதென்னவோ
ஒரு கோப்பை காப்பி யைத்தான் !

- கே.ருக்மணி, கோவை

**
அருந்துதற்கு இனியதுதான் நல்ல காப்பி
……….அதைப்பற்றி சிறிதுநேரம் சிந்திப் போமே.!
ஒருசெடியை ஊன்றிவளத் துமர மாக்க
……….ஓராயிர லிட்டர்தண் ணீரும் வேண்டும்.!
உருவிலது பெரிதாகி காயும் காய்க்க
……….உழைப்போடு தண்ணீரும் அதிகம் தேவை.!
ஒருகோப்பைத் காப்பிக்குள் ஒளிந்தி ருக்கும்
……….உண்மையிது என்பதுவே வியக்க வைக்கும்.!

பிரச்சாரம் செய்வதற்கு இடையே நீங்கள்
……….பிரியமாக அருந்துகின்ற பானம் தேனீர்..!
தரமாகச்  செயல்களையே செய்ய காப்பி
……….தைரியத்தைக் கூட்டுமென மனம்நி னைக்கும்.!
சுரப்பிகளும் நன்றாக வேலை செய்ய
……….சுகந்தருமோர்ப் பானம்தான் சொல்வ துண்டு.!
இரண்டாவ துகோப்பையைநீர் குடிக்கு முன்னே
……….இதையெல்லாம் நினைப்பீரே இயற்கை பற்றி.!

வரமாக இயற்கைதந்த நல்வ ளத்தை
……….வரம்பின்றி அழிப்பதற்கும் அளவு மில்லை.!
உரம்போட்டு வளர்க்கின்றார் செடியை யின்று
……….உள்ளத்தில் நல்லெண்ணம் என்ப தில்லை.!
வரப்போகும் துன்பத்தை அறிந்தும் முன்பே
……….வேண்டுமென்றே செய்விப்ப துமநி யாயம்..!
இரசாய னமில்லாத உணவுப் பண்டம்
……….இன்றைக்கு இருக்கிறதா நீரே சொல்லும்.!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறு 
எல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி !

தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்கு 
தாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் !

குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார் 
காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !

காந்தியடிகள் வாங்க மறுத்து விட்டார் 
காரணம் என்ன ? என்று கேட்டார்  தந்தவர் !

மற்றுவருக்கான இளநீரை நான் குடிப்பது 
முறையன்று நியாயம் அன்று என்றார் !

இயற்கையின் வளத்தை ஒருவரே 
இனிதே அனுபவிப்பது தவறு என்றார் !

வள்ளுவர் வழியில் பகிர்ந்துண்டு வாழ
வழி சொன்னவர் நமது அண்ணல் !

ஒருவருக்கு ஒரு கோப்பை என்று முறையாக 
ஒவ்வருவருக்கும் வழங்கிடும் வேளையில் !

ஒருவர் மற்றும் இரண்டாவது கோப்பை 
ஒருபோதும் கேட்கக் கூடாது உணர்க !

நாகரிகம் அருந்துவதிலும் வேண்டும் 
நாகரிகமன்று இரண்டாவது கோப்பை !

ஆர்வமாய்  கேட்கும் இரண்டாவது கோப்பை 
அடுத்தவருக்கானது என்பதை அறிந்திடுக !

யாரும் காணவில்லை என  இரண்டாவது கோப்பை 
யாசிப்பதை உங்கள் மனசாட்சி தடுக்க வேண்டும் !

ஒரு கோப்பை போதும் என்று திருப்தி கொள்க
ஒவ்வருவருக்கும் வேண்டும் நினைவில் கொள்க !

- கவிஞர் இரா .இரவி

**
தேனீர் - முதல் கோப்பைக்கே வழியில்லாதபோது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்க முடியுமா - ஏழை

மது - முதல் கோப்பைக்கே உடல் நலத்திற்கு கேடு விளையும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கும் - மதுப்பிரியர்

விஷம் - முதல் கோப்பையே உயிரை கொல்லும்போது
இரண்டாவது கோப்பைக்கு ஏங்கமுடியமா - தற்கொலையாளி

அமிர்த்தம் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பைக்கும் ஏங்கும் - பேராசைக்காரர்

மருந்து - முதல் கோப்பையிலேயே முகத்தை சுழித்தபோது
இரண்டாவது கோப்பைக்கு மறுக்கும் - நோயாளி

பால்  - முதல் கோப்பையிலேயே வயிறு நிறம்பும் போது
இரண்டாவது கோப்பைக்கு போக்கு காட்டும் - குழந்தை

தண்ணீர் - முதல் கோப்பை கிடைத்தபோது
இரண்டாவது கோப்பை மட்டுமல்லாது 
பல கோப்பைகளை சேகரித்து வைக்கும் - பொதுஜனம்

மழை நீர் - உயிர்நீர், தண்ணீர் - உயிர்நீர்
குடிநீர் - உயிர்நீர் - உயர்நீர்

மழைநீர் - முதல் கோப்பையிலிருந்து அனைத்தையும் சேகரிப்பும்
உலகை காப்போம், வனத்தை காப்போம், சுற்றுச்சூழலை காப்போம்

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**
பச்சை வண்ண நிறம் படந்திருந்த
ஒரு தேநீா் கடையினுள்
உன் வருகை நோக்கி காத்திருக்கின்றேன் 
இரு கோப்பை தேநீருடன்...

குளத்துநீாில் கை கால் நனைத்து அலம்பும் குழந்தையின் மனதாய் நான் குதுகலிக்கிறேன்  
இரண்டாவது கோப்பையில் தேநீா் அருந்துகையிலே

மனிதர்கள் வழிபடும் பஞ்சபூதங்களும் அடங்கும்
என் இரண்டாவது கோப்பை தேனீரில்

குழந்தைகள் தேநீா் அருந்துகையிலே பொம்மைகளுக்கும்
இரண்டாவது கோப்பையில் தேநீா் ஊற்றியது

தேயிலையைப் பறித்து பறித்து கைசிவந்த தேயிலை விவசாயின் துயரம் தாெியுமா இரண்டு கோப்பை தேநீாில்...?

குரு சுரேஷ்.ப, குரோம்பேட்டை

**
முள் முளைத்த மூளைகளுக்கு நடுவே 
மூலதனம் முளைத்த மூளைக்கு 
சொந்தக்காரரான 
காரல்மார்க்ஸோடு
தேனீர் அருந்த 
இரண்டாவது கோப்பையோடு 
காத்திருக்கிறேன்.

வாழ்கையின் எல்லாத் திசையிலிருந்தும்
துன்பக் காற்று
துரத்தி அடித்தாலும் 
அடிபெயரா இமயமாக இருந்து 
கம்யுனிச சித்தாந்தம் வடித்த 
மன வலிமையோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு 
காத்திருக்கிறேன்.

பள்ளியில் பரீட்சைத் தாளே
அறிஞர்கள் வியக்கும் 
ஆய்வுக் கட்டுரையான 
அதிசயத்தைப் பற்றி பேச
இரண்டாவது கோப்பையோடு 
காத்திருக்கிறேன்.

உலகின் மிகப் பெரிய நூலகத்தை
அதிக நேரம் பயன்படுத்தி
சேமிக்கப்பட்ட உழைப்பே மூலதனம்
என்ற மாமனிதரோடு உரையாட 
இரண்டாவது கோப்பையோடு 
காத்திருக்கிறேன்.

பணக்காரப் பெண்ணை  
ஏழை கதாநாயகன் 
காதலித்து கரம் பிடிக்கும் 
பெரும்பாலான தமிழ் சினிமாவிற்கு
கதை தந்த வாழ்க்கைக்கு 
சொந்தக்காரரோடு உரையாட 
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.

பொருளாதாரப் பிரச்சினையோடு போராடினாலும்
சம்சாரத் தோடு அன்பாய் வாழ்ந்த 
ரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.

ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
ஏங்கல்ஸ் பற்றி அறிந்து கொள்ளவும்
நீ எழுதிய போது புகைத்த 
சுருட்டைகூட சம்பாதிக்காத எழுத்தையும் 
தொடர்ந்து எழுதிய 
நம்பிக்கை மனிதரோடு உரையாட
இரண்டாவது கோப்பையோடு
காத்திருக்கிறேன்.
-கு.முருகேசன்

**
தேனீர் கோப்பைகள் இரண்டு எப்போதும் பயன்படுத்தப்படாமல் காட்சி அலமாரியில் இருக்கும்,
முதல் கோப்பையில் நாங்கள், இரண்டில் எங்களுடன் மகன்களும்,
உருவப் படங்கள் பொறிக்கப்பட்டு,
அன்பாக ஆதரவாக மிகவும் கவனிப்பவர்களாக தெரிந்தார்கள் - மகன்கள்,
இரண்டாவது கோப்பையில்,
உண்மையில் டாலர் விழுங்கி
பல்லாண்டுகளாகின,
பெரியவன் போன் செய்து பல மாதமாக, சின்னவனோ- ஹாய், டேக்கேர் என்று வாட்ஸா ப்பில் வசனிக்கிறான்,
இரண்டாவது கோப்பையில் மகன்கள் இப்போதும் முறுவலிக்கிறார் கள் அன்பாக, ஆதரவாக, 
நிஜத்தில் காணாமல் போயிருந்தார்கள்
டாலர் தேசத்தின் வரைபடத்திற்குள்

கவிதா வாணி, மைசூர்

**

ஒரு கோப்பை காப்பியில்
ஒன்றானோம் வாழ்வில்..!
நன்றாகத்தான் 
சென்றாலும்..
நமக்குள் ஏதோ ஒன்று 
நம்மை நம்மிடமிருந்து
வேறுபடுத்திக் காட்ட..
மாறுபாடோடு மறுகிக் கிடப்பதுவும் ஏன்?
காலயந்திரம் ஒன்றும் வரப்போவதில்லை
கடந்த காலத்திற்கு கொண்டு போக!
காதலித்த காலத்தை 
கொணர்வோம் மீண்டும்..!
உணர்வோம் ..
நமக்கு நாமேயென்று..!
இதழ் சிரிப்புடன்
இதயம் நீ 
என்னோடு வருவாயோ?
இரண்டாவது கோப்பைக்கு..!

கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

**
ஓட்டப் பந்தய வரலாற்றில்
வெற்றி பெற்ற இரண்டாவது கோப்பை
உச்சி முகர ஆளின்றி 
வருத்தத்தில் தலை சாய்த்து
கண்ணுறங்க  ஓசோனின்
ஓட்டைப் படல பரிதியின்
உபயத்தால் வறண்டு 
சுருங்கிய முதியோராய் 
காத்திருக்கும் நிலமகளின்
முத்து வயிற்றில் அமிர்தமாய்
மழை இறங்க பசுமை காண
வழி  தேடி
வெற்றி பெற்ற இரண்டாவது கோப்பை
வட்டிக்கடை அலமாரியில்
பித்தளை வாளியுடன்
 விவசாயி இரண்டாவது கோப்பை
கூழ் குடிக்க என்ன வழி
என விசாரித்துக் கொண்டிருக்கிறது!
என்று மாறும் விவசாயியின்
எல்லையில்லா பசுமை புரட்சி
என விசனத்துடன்
காத்திருக்கிறது!
-சீனி 
**
படிக்கும் காலை நேரங்களில்
கடுங் காப்பியே முதல் கோப்பை
அப்பா தருவது.. சூடும் அதிகம்..
பால்கலந்த இரண்டாவது கோப்பை.
அம்மா தருவது.. சுவையும் அதிகம்..
முதல் கோப்பை 
வாழ்வினைப் பேசியதும்
இரண்டாவது கோப்பை 
அன்பினைச் சொன்னதும்
வளர்ந்தே புரிந்தது..

நண்பர்களுடன் 
தேநீர்க் கோப்பைகள்
கோப்பைகள் கணக்கில்லை
அவ்வளவு தளங்கள் 
கனவுகள் பேசக் 
காத்திருந்த அனுபவங்கள்
மகிழ்ந்திருந்த‌ தேநீர்நிமிடங்கள்.

உன்னுடன் அந்த மழைநாள்.. 
பேசாதிருந்த‌ ஒருகோப்பைத் தேநீர்..
இரண்டாவது கோப்பைக்குக் காத்திருக்காமல்
நம்மை நகர்த்திப் பிரித்து
நகரத்தொடங்கிய மணித்துளிகள்
இன்றும் வலித்துச் சுமக்கும்
தேநீர் நினைவுகள்.

மனைவியின் சொல் கடந்து
இப்பொழுதும்
கடுங்காப்பியோ தேநீரோ
பிள்ளைகளுக்கும் தந்துமகிழும் நிமிடங்கள்
கூடுதல்குறைகள் சுவைகளிலும் இல்லை
குழந்தையாய் வாழும் கணங்களில்..

இரண்டாவது கோப்பையில்
தேநீர் தொட்டுப்பேசும் 
உணர்வுகள் இவ்வளவும் 
இன்னும் ஆழப் பார்க்கிறேன்
நேசிக்கும் உங்களுக்கும் 
இமைகள் சிலிர்க்கலாம்...
மகிழ்ந்து மலர்க 
தேநீர் நிமிடங்களில்
அது உங்க‌ளுக்கானது..

ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா

**

இரண்டாவது கோப்பை , அது
இரண்டாம் வகை கோப்பை !
இருண்ட காலத்தின் குறிப்பை
இடைக்காலத் தப்பை!

சாதி ஒதுக்கிவைப்பை!
அப்பைங்க செய்த தப்பை,
மூர்க்கர்களின் மப்பை,
பசங்க தவிர்த்தோம் இப்பையே,

இப்பல்லாம் தெரிவதில்லை இரண்டாம் வகை கோப்பை
இருக்கலாம் சில குப்பையிலே
தேடி உடைக்கலாம் வா பயலே!

-இளம்பரிதி ஆழ்வார்சாமி

**

முண்டியடித்துப் பள்ளிப்
பருவத்தி் ஓடி
விழுந்து மீண்டெழுந்து
வலியை எண்ணாமல்
கோப்பை ஒளியை எண்ணி
வென்றது...

மீண்டும்
தினமணியால்,
மறந்த பக்கங்க ளெல்லாம்
தூசி தட்டி;
பரிமளகாந்தியாய்,
நினைவுத் தூண்டி
நெகிழ வைக்கிறது..

மீண்டும் ஓட்டம்,
இது
எழுத்து ஓட்டம்
ம்...ம்.... வேகமாக,
மிக வேகமாக
அடையாளக் கல்லையும்
தாண்டி இலக்கை மிஞ்சிய,
இதயங்களுடன்;
பயணித்துப் பெரும்
கவி என்னும் இரண்டாம்
கோப்பை இது.....

- ப.வீரக்குமார்

**

தடகளப்போட்டிகளில்
தடம் பதிக்க வேண்டும்,
உள்ளத்திற்குள் உயிருடன் ஒரு சூரியன் !!

இவன் வாயில் சென்ற
முட்டைகளின் வேகத்தில்
வான் கோழிகளுக்கே வியர்த்தன !!

உடற்பயிற்சியை
பாடமாகக்கொண்டவர் உண்டு—இவனோ
பார்வையாகக்கொண்டவன் !!

பயிற்சியாளன் ஒருவன் ,
இவன் ஆசைகளில் குளித்தான் –
இவன் ஆர்வத்தைக் குடித்தான்!!

நூறு மீட்டர் நீளம்
இவன் ராக்கெட் கால்களுக்கு
பத்தே நொடிகள் !!

வெற்றிக்களிப்பில்
இறைவனைக்கண்ட அடியவனாய்
கைக்குள் அடக்கிய முதல் கோப்பையுடன் !!

கொண்டாட நினைத்த
நண்பர் கூட்டம்  
இழுத்தது இவனை அந்தக்கடைக்கு!!


என் மெல்லிய சொற்களை
அவன் காதுகளுக்குள்
நடைப்பயிற்சி செய்ய விட்டேன்
வேண்டாமே உனக்கு இரண்டாம் கோப்பை

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

வெறுமையாகிக் கொண்டிந்த
கோப்பையிலிருந்து
இடம்மாறிக் கொண்டிருந்தது
வேட்கை...

போதையின் விளிம்பில் ஆவியற்று
கோப்பை நுனி ததும்பாமல்
அலைமோதிக் கொண்டிருக்கிறது
மனம்

கொடூரமோ கருணையோ
பிம்பங்களாகி
பிதற்றிக் கொண்டிருந்தன
சுய ரூபங்களில்
நிஜம்

முதலும் இரண்டாவதுமான
முழுமையின் வாழ்தலிருந்து
குடும்பத்தை
கோப்பைகளால் நிராகரித்து
முன் நிற்கிறது 
அரசு 

சபலத்தில்
ஒற்றைக் கோப்பை
வெறுமையாகி விட்டப் பின்

புறத்தின் நிஜங்கள்
இருட்டின் நிழல்களை மிதிக்க
ஆக்ரோஷப்படும் போது தான்
குடியாட்சியின்  கொற்றம்
கொடூரமானதென்று புரியும்

புத்தியின் கூர்மையை 
மழுங்கடித்ததில்
கஜானாக்களில் நிரம்பி வழிகிறது
கோடிகளுடன்
மதுவின் துர்நாற்றமும் எரியும்
குடும்ப அவலங்களும்

மதுக்கடையும் சிம்மாசனமும்
மக்களை மயக்கும்
ஒப்பனைகளால் ஆன
கோப்பைகளின் வெளிச்ச பிம்பங்கள்...

தப்பிப் பிழைக்க 
திசைகளற்று திகைக்கிறது
வாழ்க்கை.....

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

வாழ்க்கை என்ற பந்தயத்தில்
வெற்றிஎனும் தங்கக்கோப்பை
பெற தோல்வி என்ற தடைகளைத் தாண்டுவோம்!
முயன்றால் முடியாதது இல்லை.என முனைவோம்!
முதலாவது என்றில்லாவிட்டலும்
இரண்டாவதாக 
நான் பரிசாகப்
பெற்ற அனைத்து
வெற்றிக் கோப்பைகளும்
வெறும் பொருட்கள் அல்ல
அடுக்கி வைத்து மட்டும்
அழகு பார்க்க .
அன்னையவள் அன்று 
காட்டிய அக்கறையும்
ஊட்டிய ஊக்கமுமே
நான் இன்று பெற்ற
முதலாவது மற்றும்
இரண்டாவது கோப்பைகளில்
நிரம்பியிருக்கின்றன என்பதே
நிதர்சனம்.

- ஜெயா வெங்கட்

**

ஆர்வமே செயலில் வெற்றி அது தீவிரமாகுக! 
மனதால், மூச்சால், செயலால் முடியுமெனக் கண்டேன்! 
உழைப்பால், உறுதியால் மனவோட்டத்தால் வென்றேன்! 
பலம் முயற்சி செய்வது! பலவீனம் அஞ்சாதது! 
எந்தப் போட்டியிலும் எத்தனை வீரர்கள் 
எதிரில் நின்றாலும் முதல் போட்டியைப் 
போன்றே களமாடிடுவேன்! வென்றிடுவேன்! 
அதே முயற்சி, அதே உற்சாகம் 
எனக்குள்ளே தான்! முதல்கோப்பை வெற்றியின் ருசி மாறவில்லை! 
நிசர்சனமாக இரண்டாவது கோப்பையையும் வென்றிடுவேன்! 

- A.k.சேகர்.ஆகாசம்பட்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com