கடந்த வாரத் தலைப்பு தொலையாத வார்த்தைகள் வாசகர்களின் கவிதைகள்!

ஈன்றெடுத்த  தாய்  மூன்றெழுத்தில் உச்சரித்து 
கடந்த வாரத் தலைப்பு தொலையாத வார்த்தைகள் வாசகர்களின் கவிதைகள்!

தொலையாத வார்த்தைகள்

ஈன்றெடுத்த  தாய் 
மூன்றெழுத்தில் உச்சரித்து 
சான்றிதழ் கொடுத்த  "அம்மு"
என்ற  வார்த்தை வாழ்நாள் 
முழுவதும்  "தொலையாத  வார்த்தை"
வாழ கற்றுக் கொடுத்த  தந்தை 
மாய  உலகில் எப்படி  நடக்க 
வேண்டுமென  போதித்த 
அறிவுரை  "தொலையாத  வார்த்தை"
கல்வி  சொல்லி கொடுத்து 
மல்லிப் பூ வாசத்துடன் 
பட்டம் பெற ஆசான் 
கற்பித்த பள்ளி கல்லூரிப்  பாடங்கள் 
என்றுமே  "தொலையாத  வார்த்தைகள்"
நான்  ஈன்றெடுத்த  அழகு செல்லம்
முதலில்  "அம்மா" என்று உச்சரித்து 
தாய்மையினை  உணர்ச் செய்த 
மழலை சொல்  "தொலையாத  வார்த்தை"
இன்றும்  மனதில்  கடல் அலையென 
என்றும்  வந்து  போகும் 
"தொலையாத  வார்த்தைகள்" கொடுத்த 
ஊக்கத்தில் இன்றும்
ஏக்கமின்றி வெற்றி நடை  போட 
உதவும்  அற்புத  வார்த்தைகள்!

- உஷாமுத்துராமன், மதுரை   

**

எனதன்பே!
அன்றைக்கு...நீ சொன்ன வார்த்தைகள்...
இன்றைக்கும்...புதிதாய்...எழிலாய்...
என்றைக்கும்  என் இதயக் கூட்டில்...
இனியகானம்  பாடும்  பறவையாய்...
நித்த நித்தம்  அலைமோதி....
தொலைதூர உன்னுருவை...
தொலையாமல் தேக்கி வைக்கும்!

என்னுயிரே!
வார்த்தைகளுக்கு வரலாறு படைத்த
வண்ணப் பைங்கிளி நீ!
காதோரம் நீ ஓதிய
காதல் கீதங்களுக்கு....
உடலும் உயிரும் ஒட்டி இருக்கும் வரை....
இல்லை தொலைவு!
உயிர் உயரே பறந்த பின்னாலும்...
இருக்கக் கூடாது பிரிவு!

மனதிற்கினியவளே!
தொலைக்க நினைப்பவை தொலைவதில்லை!
தொலையக் கூடாதவை தங்குவதில்லை!
வாழ்வில் இதுவே நிதர்சனம்!
கம்ப்யூடர் டிஸ்க்கில் வேண்டுமானால்...
கரப்ட் ஆகிக் கலைந்து போகலாம்!
மன டிஸ்க்கில்....மகிழ்வானவளே...
உன் வார்த்தைகளுக்கு இல்லை மரணம்!

-ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி  

**
தொன்மை ஆகி நின்றாலும்
தொடர் சங்கிலி போல் நீண்டாலும்
வட்டவடிவ எழுத்துருவாகி
வரலாறுகள் படைத்திட்டாலும்
கல்வெட்டுகளில் காண்பதுதான்
தொலையாத வார்த்தைகள்.

ஆதி சிவன் அமர்ந்தது போல்
அன்புகாட்டி நம்மவர்களின் தந்தை
அன்று புகட்டிய அறிவுச் சொற்கள்
அனைத்தும் நம்மனத்தகத்தில்என்றும்
தொலையாத வார்த்தைகள்.

காதலுக்கும் காதலிக்கும் காதலிக்கும்
கருத்து மாறாத மனத்துடனே
உள்ளமது தான் உருகிடவே 
கள்ளமனம் விட்டொழித்துக் களிப்புடனே நாம் விதைத்த
நம்பிக்கை எண்ணங்கள் நம்மவரின்
தொலையாத வார்த்தைகள்.

கலையாத கனவெல்லாம் கனவல்ல
மலைக்காத மனிதனும் மனிதனல்ல
உழைக்காத உயிர்கள் உயிர்களல்ல
உண்மை உரைக்காத வார்த்தை கூட
உயர்ந்த வார்த்தை அல்ல
நம்பிக்கை தரத்தக்க வார்த்தைகளே
தொலையாத வார்த்தைகள்.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**

புவியில் பிறந்தோர் அழைப்பர் - அம்மா
மொழியில் மழலை உதிர்க்கும் - ம்மா,ங்கா, த்தா, ப்ப்பூ,
பக்தியில் பரவசம் - ஓம்,
மனதில் மயக்கும் - மௌனம் 
சிறார்கள் கோபம் வெளிபடுத்த - போடா போடி
உணர்ச்சியில் பரிதாபம் அதிர - த்சு,த்சு
மகிழ்ச்சி கொண்டாடும் மகத்தான - ஹாஹாஹாஹா
முதியோர் ஆற்றாமை - அந்த காலத்தில    
தமிழ் ஆசிரியர் நல்கும் நல்வார்த்தை - நன்று
மருத்துவர் பகரும் - இனி எல்லாம் கடவுள் செயல்
பிரிந்த காதலர்கள் கண்ணோடு கண் நோக்கின் - மனதின் வார்த்தை
கவிஞனுக்கு கண்ணுக்கு தெரிந்த இலக்கியங்களில் உள்ள - எழுத்துக்கள்
-தொலையாத வார்த்தைகள்

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை

**

ஆசை கோபம் கொலை கொள்ளை
பொய் புறட்டு காமுகம் கர்பழிப்பு 
யாவும் தொலையாத வார்த்தைகள் 
அடியோடு தொலைத்தி டுவோமே 

பதுக்கல் ஒதுக்கல் இல்லாதார் 
இரப்பின் உதட்டினைப் பிதுக்கல்
தலை விரித் தாடுதிங்கே லஞ்சம் 
கொடுத்தலை பெறுதலை தடுத்தும்
தொலையாத வார்த்தை களதனை
யடியோடு தொலைத்திடு வோமே

சாதி மதம் தீண்டாமை பொறாமை
பொச்சரிப்பு உச்சரிப்பு நச்சரிப்பு
எச்சரிப்பு கொச்சையரிப்பு யாவும்
தொலையாத வார்த்தை களதனை
யடியோடு துடைத்திட வழித்தேடு

வாயடைப்பு வயிற்றடிப்பு அதனால் பிறப்பெடுக்கும் வறுமை இல்லாமை 
உயிரை விட்டுக் கொள்ளும் நிலைமை
தொலையாத வார்த்தை களதனை 
இனியேனும் தொலைந்திட வழிதேடு 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம் 

**

வெலயெல்லாம் இருக்கட்டுங்க..
அவங்களுக்குப்புடிச்ச..
சாமான் எதுவானாலும் 
நீங்களே ரெண்டு எடுத்துக்கங்க..
கண்தெரியாத வியாபாரி 
ஓடும்ரயிலில் சொன்னது.

விமானப்பயணத்தில் சகபயணி 
மராத்திப் பெண்ணொருத்தி
அவள்கணவனும் குழந்தைகளும் 
முதல்வகுப்பில் 
இவள்மட்டும் இரண்டாம்வகுப்பில் 
என்னருகே சன்னலோரத்தில்
அவ்வளவு பேசிவந்த‌ யுவதியவள் 
இன்னும் சொன்னது
இந்தஇரண்டாம் வகுப்பின் பயணச்சேமிப்பில்
எங்கெங்கோ பிறந்த அவ்வளவு குழந்தைகள் 
பசியாறும்.. 

இன்னும்
தொலையாத வார்த்தைகள்..
ஆழத்தேடினால் 
இன்னும் அவ்வளவு இருக்கும்..
தொலையாத வார்த்தைகளை
தேக்கி வைக்க வேண்டியதில்லை
அதுவே த‌ங்கிப்போகும்
நம் இதயங்களில்..
சொல்லிப்போன‌ மனிதர்களோடும்..


- ரமேஷ் கோபாலகிருஷ்ணண், பீனிக்ஸ், அமெரிக்கா.

**

விடியலுக்கில்லை_தூரம்
தோல்வி மேல் தோல்வி
வந்தாலும் அடுத்த படி 
வெற்றியின் மீதே/
காலத்திற்கு கணக்கீடு
உண்டு இரவும் பகலும் /
காதலுக்கும் வரைமுறை 
உண்டென வல்லுனர்
வகுத்தனரே/
இரவின் உறக்கம் 
விடியலை நோக்கி/
எதிர்பார்ப்பின் நோக்கம்.
பலனை நோக்கி/
சேற்றில் தான் செந்தாமரை 
மலரும் பலர்/
கடலிலும் செந்தாமரை 
மலரவைப்போப்போம் 
வெளிநாட்டவர்/
ஒவ்வொரு மனிதருள்ளும் 
விடியலுக்கில்லை தூரம்
எண்ணங்கள் தானே/
உன்னுள்ளே நான் இருக்கிறேன் 
தன்னம்பிக்கை/
என்னுள்ளே நீ இருப்பாய்
இறைவன் /
தொன்னூறை பெற்றவன் 
அல்ல வெற்றியாளன் /
ஐம்பதில் இருந்து ஐம்பத்தி
ஒன்றை பெற்றவன் வெற்றியாளன்/
வைத்த குறி தப்பாமல் 
விட்டவன் அர்ச்சுனன்/
உயிர்போகின்ற தருணத்தில் 
தானம் கேட்டவன் கண்ணன் /
அவனுக்கு விடியலுக்கில்லை 
தூரம்/
சுறு சுறுப்பானவர்களுக்கு
தோன்றாது தூரம்/
கற்றவர்க்கு எங்கெங்கும் 
பக்கம் தான்/
நிம்மதியாக உறங்கிடுங்கள்
விடிந்து விடும் உதயமே/
தூரம் உங்கள் 
கையளவே தான் ///

- அரு. இளங்கோவன், சென்னிமலை.

**
இன்முகம் இனிய வரவேற்பு எனும்போது
உன் வாய்ச் சொற்கள் அன்பு ஏந்தி நிற்கும்
மின்னும் சொல்லில் எதிரி மனம் மயங்கிடும்
நன்றென்பதால் இவை தொலையாத வார்த்தைகள்

சினச் சீற்றம் சிந்திடும் வார்த்தைகள் சுடும்
தினம் அதனை நினைந்து மனம் நொந்திடும்
வனம் சென்று யோக நிலையில் நின்றாலும்
மனம் வாடும் தொலையாத வார்த்தைகளே அவை.

காதலில் கனிந்துருகி வெளியிடும் சொற்கள்
சாதல்வரை மனதில் சுற்றிச் சுற்றியே வரும்
மோதலில் மனம் முறிந்து தனித்து நின்றாலும்
காதல் உள்ளத்தில் அவை தொலையாதவையே.

இசையோடு சந்தம் கலந்த பாடல்களின் சொற்கள்
அசைபோடும் என்றென்றும் இனிமையினாலே
திசையெலாம் பரவும் அவை மனங்களில் நிறையும்
பசையாய் ஒட்டும் அவை தொலையாத வார்த்தைகளே

சரித்திரம் பேசிடும் சன்னமான சொற்களின் வீரியம்
வரித்திடும் காட்சிகளைக் கண்ணெதிரே தெளிவாய்
எரித்திடும் தவறான முந்தைய நிலைப்பாடுகளை
விரித்திடும் உண்மை அவை தொலையாத சொற்களே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**
தொல்லைகள் பல என் மண்ணின் விவசாயிக்கு 
மழையே இல்லாமல் வாடும் அவன் பயிர் 
ஒரு நேரம் ! சொல்லாமல் கொள்ளாமல் 
கொட்டி தீர்க்கும் பெரு மழை ஒருநேரம் !
பெரு மழையுடன் ஊரையும் அவன் பயிரையும் 
புரட்டிப் போட்டுவிடும் ஒரு சூறைக் காற்று 
சில நேரம் ! 
பயிருக்கு உயிரான மழையே அவன் விளை 
நிலத்துக்கு எமனாகவும் மாறும் ! வெட்டி 
சாய்க்கும் மரங்களையும் ...என் விவசாயி  
கனவையும் சேர்த்து !
ஊருக்கே உணவு கொடுக்கும் என் விவசாயி
அவன் அடுத்த வேளை உணவுக்கு வரிசையில் 
நிற்கும் அவல நிலை இன்று அவன் 
குடும்பத்துடன் ஒரு நிவாரண முகாமில் !
இழந்தது அவன் பயிரை மட்டும் ..ஆனால் 
தொலைக்கவில்லை " மீண்டும் எழுவேன் நான்" 
என்னும் நம்பிக்கையை !
அவன் தவிக்கும் இந்த நேரம் உதவிக் கரம் 
நீட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லவும்  
மறப்பதில்லை அவன் !
எல்லாவற்றையும் தொலைத்து விட்டாலும் என் 
மண்ணின் விவசாயி தொலைக்கவில்லை அவன் 
நன்றி சொல்லும்  பண்பை ! 
மலை அளவோ திணை  அளவோ ...நீட்டும் 
உதவி கரங்கள் அத்தனைக்கும் தான்  ஒரு இளநீராவது 
கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானே இன்றும் 
அவன் ! 
நன்றியும், உலகுக்கு உணவு அளிக்கும் பண்பும் 
அவன் அகராதியில் என்றும்  நிலைத்து நிற்கும் 
தொலையாத வார்த்தைகளோ !

- K .நடராஜன் 

**

“கரு” அமைய வேண்டுமே !  அது
காலத்தை வெளிச்சமிட வேண்டும் ,
காலத்திற்கும் பளிச்சிட வேண்டும் –
நிலையற்ற உயிர்களில் பிறக்கலாம், இருந்தும்
ஆன்மாவாய் ஒரு செய்தியை,  யுகங்களைத்தாண்டி
அது உரைத்திட வேண்டும் !!
தமிழ் காட்டிற்குள் சந்த மரங்களை
தேடுவது இல்லை பாடல்! அவை
மூளைத்திசுக்களின் சொந்தம் போல
ஜன்மிக்க வேண்டும்!
உவமையும் உருவகமும் கலந்த
வெப்பத்தில் அந்த பாட்டுப்பனி
உருக வேண்டும் !!
மெத்தப்படித்தவனுக்கு மட்டுமில்லை
மேய்ப்பவனுக்கும் புரியும் எளிமை வேண்டும் !!
சொற்கடலை  கடைந்து “அமிழ்தமாய்”
 ஒரு பா வெளிவருமா ??
ஆம் ! இப்படித்தான் ஒரு கவிதை  வேண்டும் !!
அதற்காக வாழ்நாள் முழுவதும்
தொலையாத வார்த்தைகளை
தேடிக்கொண்டிருப்பேன் !!

 - கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

அவ்வையின்  ஆத்திசூடியும்,
தாத்தா  பாட்டியின்  பாச  கொஞ்சலும்  ,    
சோகத்தில்  ஆறுதல்  வார்த்தைகளும் ,  
வள்ளுவனின்  வாழ்க்கை  நெறியும்,
அப்பாவின்  கண்டிப்பில்  அம்மாவின்  அன்பு  சொற்களும் ,  
தோல்வியில் நண்பனின் நம்பிக்கையூட்டும்  வார்த்தைகளும் ,
பாரதியின்  புரட்சி  கவியும் ,
சகோதர  சகோதரியின்  அன்பு  பழிச்சொற்களும்  ,  
கோவத்தில்  மனது  புண்  படும்  வார்த்தைகளும் ,
கவியரசரின்  தத்துவ  பாடல்களும் ,
நம்   குழந்தையின்  மழலை  பேச்சும் ,
காதலில்  கண்  பேசும்  வார்த்தைகளும் ,  
பரந்தாமனின்  கீதோபதேசமும் ,
தாலிகட்டும்போது  'மாங்கல்யம்  தந்துனானே'  என்று  உச்சரிப்பதும் , 
தவறை  உணர்ந்து  மன்னிப்பு  கேட்கும்  வார்த்தைகளும் ,
காலத்தில்  தொலையாத
வாழ்க்கையில்  தொலையாத
என்றென்றும்  நினைவலையாய்  நம்  நெஞ்சில்  நிற்கும் ,
தொலையாத  வார்த்தைகள் !!

- பிரியா ஸ்ரீதர்  

**
என்னவளே.. உன்னோடு
உறவு கொண்டாடிய
அந்த இனிமையான நாட்களில்
என்னிடம் நீ பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
உயிரோடும் உணர்வோடும்
இன்றளவும் என்னுள்
பசுமையாய்க் குடியிருக்கிறது..

இப்போது எனக்கிருக்கும் 
அந்த ஒரே ஒரு 
ஆறுதலான துணையையும் 
தொலைக்கவோ இழக்கவோ 
எப்படி இயலும் என்னால்..?

- ஆதியோகி

**

கண் இமையின் கற்கண்டினிப்பே 
புருவ மையில் மையம் கொண்ட புயலே 
விழியசைவில் தெறித்த ஒளிச்சிதறலே 
உன் நாசித்துளை ஈரக்காற்று 
என் உயிர்வாசலின் சுவாசக்காற்று... 
உன் கன்னக்குழி பிடித்த மீன் 
பல கள்ளத்தோணி போகுதடி... 
உனை வர்ணித்து எழுதிய வார்த்தைகள் 
"காதல் அகராதி " என்ற பெயரில் 
தொகுக்கப்பட்டு தொலைந்த புதையலோ ? 
தேடி தேடி எழுதிய வார்த்தைகள் தீர்ந்த பின்னும் 
தொலையாத வார்த்தைகள் 
என் கவிதைக்கு துணையாக வருவது 
உன் அருளினால்தானோ ? 
எந்தமரத்துக் காகிதமும் 
எவருடைய பேனாவும் 
என் கை கிறுக்கையிலே 
பிள்ளைத்தமிழாய் 
உன் நினைவுகளையே பெற்றெடுக்கிறது ... 
உனை தேடி திரிந்தபோது எழுதிய வார்த்தைகள் 
உனை கண்ட மகிழ்வினில் திளைத்த வார்த்தைகள் 
நிழலாய் ஒன்றி வீதியுலா சென்ற நினைவின் வார்த்தைகள் 
நாம் இரண்டறக்கலந்து மூன்றாயானபோது முந்திக்கொண்ட வார்த்தைகள் 
என் மனப்புத்தகத்தில் என்றுமே 
தொலையாத வார்த்தைகள் ... 
என் உயிரையே அரணாயமைத்து 
அதில் பத்திரப்படுத்தி பாதுகாக்கிறேன்.. 
இப் பொக்கிஷ வார்த்தைகளை ...

- குணா , திருப்பூர்

**
உழைத்தவருக்கு ஓய்வே உறக்கம் - குற்றம் 
இழைத்தவருக்கு ஏது உறக்கம் ? 
காய் உறக்கம் இனிக்கும். கனியாகும்.
தாய் உறக்கம் சேய் உறக்கம். 
ஏரோட்டம் நின்றால் நிலம்  உறக்கம். 
நீரோட்டம் நின்றால் வளம் 
உறக்கம்.
உடலோட்டம் நின்றால் உயிர் 
உறக்கம்.
உயிரோட்டம் நின்றால் மீளா உறக்கம் .
தாய் உறக்கம் சேய் உறக்கம். 
சேய் உறக்கம் தாய் உறக்கம். 
வாய் உறக்கம் மெளன கீதமாகும்.
மெய் உறக்கம்  ஆனந்த கீதமாகும்

**

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே 
இந்தியாவின் தனி பாணி   
இறையாண்மை என்பதும் மற்றொன்று 
மதச்சார்பற்ற நாடு இந்தியாவென்பது !       
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை
இந்தியாவின் ஆட்சி மொழியாக
இந்தியோடு ஆங்கிலமும் நீடிக்கும்
என்ற உறுதுமொழி தான் முதல்
தொலையாத வார்த்தையாகும்!
   
விழிமின் ! எழுமின் ! தொழுமின் ! என்ற வாசகம்
எழுச்சி கொண்டு விவேகானந்தர் உரைத்தது
இதுவும் தொலையாத வார்ர்த்தை தான்
“செய் !அல்லது செத்து மடி” என்ற அண்ணலின் மொழி!
அறவழி போராடுபவர்கள் அறைகூவல் வார்த்தை!
இதுவும் அற்பணிப்பு, தொலையாத வார்த்தையாகும்
   
மாறும் என்றவார்த்தையைத் தவிர அனைத்து மாறும்
தோற்ற தில்லை! தோற்ற தில்லை!
தொழிற்சங்கம் தோற்ற தில்லை!
இவையெல்லாமும் தொலையாத வார்த்ததான் !
         
- கவிஞர் அரங்ககோவிந்தராஜன், இராஜபாளையம்

**

கோர்த்து
நிதம் நிதம் உதிர்த்த வார்த்தைகளும் ..
உதடு வரை வந்து
உதிர்க்காமல் போன
வார்த்தைகளும்..
இதயத்தை விட்டு வர
இயலாது போன
வார்த்தைகளும்..
ஊரை விட்டு
உறவுகளை விட்டு
தொலைதூரம் சென்றாலும்
தொலையாத வார்த்தைகளாக....
தொடரும் நினைவுகளாக..
நெஞ்சைத்தொட்டு நிற்கின்றன.

- ஜெயா வெங்கட்

**
ஏழைக்கு தொலையாத வார்த்தைகள் - உணவு, உணவு
வசதிபடைத்தவருக்கு தொலையாத வார்த்தைகள் - பணம், பணம்
மாணவருக்கு தொலையாத வார்த்தைகள் - கல்வி, கல்வி
இளைஞருக்கு தொலையாத வார்த்தைகள் - வேலை, வேலை
தொழிலதிபர்கள், வணிகர்களுக்கு தொலையாத வார்த்தைகள் - வரி, வரி
அரசியல்வாதிகளுக்கு தொலையாத வார்த்தைகள் - பதவி, லஞ்சம்
அரசு அதிகாரிகளுக்கு தொலையாத வார்த்தைகள் - சட்டத்தின் ஓட்டை, கையூட்டு
தனியார் துறையினருக்கு தொலையாத வார்த்தைகள் - கால நேரம்
திரைத்துறையினருக்கு தொலையாத வார்த்தைகள் - புகழ், புகழ்
காதலர்களுக்கு தொலையாத வார்த்தைகள் - சந்தேகம்
தம்பதிக்கு தொலையாத வார்த்தைகள் - சண்டை, சச்சரவுகள்
பிள்ளைகளுக்கு தொலையாத வார்த்தைகள் - பாக்கெட் மணி
இந்த உலக மக்கள் அனைவருக்கும் தொலையாத வார்த்தைகள் - ஆசை, ஆசை
அதையும் கடந்து தொலையாத வார்த்தைகள் - அம்மா, அம்மா, அம்மாவின் அன்பு
உலகம் உள்ள வரையிலும் தொலையாததது - அம்மா, அம்மா, அம்மாவின் அன்பு
அம்மாவையும், அம்மாவின் பாசத்தையும் போற்றுவோம்.

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

வாழ்வின் தொடக்கம் வார்த்தைகளாயின்
நாளும் சொல்வேன் நல்வார்த்தை!
சொன்னவள் அவளே என் அன்னை,
உரக்கச் செய்தது என் தந்தை!
தொலைந்த வார்த்தைகள் பல இருப்பின்,
தொலையாத வார்த்தைகள் சில உண்டு,
மஞ்சம், நெஞ்சம் சொல்வதுண்டு!
கூலாங்கற்கள் பார்த்ததுண்டு!
சிப்பியும் முத்தும் இங்குண்டு!
சிற்பச்சிலைகள் பலவுண்டு!

எண்ணும், எழுத்தும் கண்ணென தகும், எனும் சொன்ன வார்த்தை தொலையாதது!
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பூங்குன்றன் வார்த்தை தொலையாதது!

அகர, முதல எழுத்தெல்லாம் - எனும் வள்ளுவன் வார்த்தை தொலையாதது!
பண்டைத் தமிழன் சொன்னதெல்லாம்,
இன்றைய தமிழன் தொலைத்தது பாதி!
தொலையாமல் நம்மைப் பார்த்துக்கொள்ள வாக்கிய வார்த்தையை மனதில் வைப்போம்!

தொலையாத வார்த்தையைத் தேர்ந்தெடுத்து,
நாளும் தொடர்வோம் நம் நிழல் போல!
செந்தமிழின் வேர்கள் பல கிளைகள்!
நாளும் வளர்ப்போம் நல்வாக்கிற்கினிய! 

-செந்தில்குமார், ஓமன்

**
கரையை மோதி மோதி
சுழன்றாலும்
அலையென மோதுகின்றன 
மனக்கடலை விட்டு தொலையாத
வார்த்தைகள்

ஓயாமல் 
காற்றாய் சுழன்று தொடர்கிறது
வார்த்தைகளோடு 
நினைவுகள்

இருளில் வெளிச்சமாகவும்
வெளிச்சத்தில் பிரகாசமாகவும்
சுடர்ந்து 
விடாமல் சுற்றி வருகிறது
இரவும் பகலுமாய்
உச்சரிக்காத போதும்
முனுமுனுத்தபடி தொடரும்
வார்த்தைகளின் சப்தம்

விட்டுப் பிரிய மனமில்லாத வார்த்தைகள்
உச்சரிக்காமல் இருந்தாலும்
வீணையில்
குறையாமல் நிறைந்து மீட்டுகிறது
மவுன ராகங்கங்களை

ஆத்மாவைச் 
சுமந்த வார்த்தைகள் பிரவாகிக்கிறது
ஏகாந்த வெளியாய்
உயிருள் புகுந்து


தொலையாமல்
தொடர்ந்து அன்பைச் சுமந்து
விடாமல்  என்னுள்ளே பிரமாண்டப் படுத்துகிறது
உன்னை நேசிக்கும்
அந்தத் தொலையாத 
அன்பின் வார்த்தைகள்;
நீ விரும்பாத போதும்...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**
வார்த்தைகள் .....
அன்பில் மலரும் .
அமைதியில் வளரும் .
ஆனந்தம் அளிக்கும் .
ஆசை காட்டும் .
 
வார்த்தைகள் ...
இனிமை தரும் .
இசையாய் ஒலிக்கும்.
ஈட்டி யாயக் குத்தும் .
ஈகையில் வரும்.
 
வார்த்தைகள் .....
உவகை தரும் .
உண்மை விளம்பும் .
ஊக்கம் அளிக்கும் .
ஊமையும் அறியும் .

வார்த்தைகள் ..
எழுச்சி தரும் .
எண்ணங்களில் விளையும். ஏட்டினில் இருக்கும் .
ஏற்றமும் தரும் ..

வார்த்தைகள் ..
ஐயம் போக்கும் .
ஐந்தருவியாய் கொட்டும்.
ஒப்பாரி  வைக்கும் .
ஒன்று பட்டு வாழ்த்தும்.

வார்த்தைகள் ....
ஓசையின்றி வரும் .
ஓங்காரமாய் ஒலிக்கும் .
ஒளடதமாய் உதவும் .
ஒளவையின் உரைகள்..

இவை யாவுமே
இன்றும் என்றும்
அலையலையாய் நினைவைத்
தரும்
தொலையாத வார்த்தைகள் 
தான் !

- கே.ருக்மணி, கோவை

**

தொலைவுகள் கடந்த வாழ்வும்
…….தொலைந்து போவது உண்டு
தொலையாத வார்த்தைகள் யாவும்
…….தொலைவுகள் உள்ளவரை உண்டு
வாயில் வந்த வார்த்தைகள்
…….வானவில்லாய் மறைந்து போகும்
நாவில் வந்த வார்த்தைகள்
…….நினைவுகளில் வலியாய் மாறும்
பஞ்சினில் வெளிவந்த நூலை
…….பக்குவமாய் ஊசியும் தைத்தது
நெஞ்சினில் நின்ற சொல்லை
…….நிமிடங்களும் முள்ளாய் குத்தியது
வலிகொடுக்கும் வார்த்தைகள் விட்டு
…….வாழ்வுகொடுக்கும் வார்த்தைகள் பேசி
வழிகாட்டும் நல்லோர்சொல் கேட்டு
…….வாழ்வை வசந்தமாய் நீயும்நேசி
இனிய வார்த்தைகள் மட்டும்தான்
…….இவ்வுலகை திறக்கும் திறவுகோல்
இன்பமாய் வாழும் வாழ்வுக்கு
…….இதயத்தைத் தாங்கும் ஊன்றுகோல்

- கவிஞர் நா. நடராசு, கோவை

**

அடிக்காமல் அன்பாகவும் , அடித்தும், அழுத்தமாகவும்,
நல்ல வார்த்தைகள் ,சொல்லி ,படிக்கவைத்த ஆசான்களின் 
வார்த்தைகள் தொலையாத  வாத்தைகள்தான்.
சொன்ன சொல், தவறும்பொழுது
யாரேனும் சொல்லும், கடும் வார்த்தைகள் 
தொலையாத, வார்த்தைகள் ஆனாலும்
அந்த கடனை  ,திருப்பி கொடுத்தாலும்
அவர்கள் சொன்ன கடும் வார்த்தைகள் 
தொலைந்துபோவதில்லை
நல்ல வார்த்தைகளை நினைவில்  வைத்து
கெட்டவார்த்தைகளை மனதை  விட்டு  தொலைப்போம்
தொலையாத வார்த்தைகளுக்குள் 
நம் பெயரை நுழைத்து  வைப்போம்

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

ஆணுக்கிணையான கல்வி
பெண்ணுக்கு மறுக்கப்பட்ட
இதயத்திலிருந்து வெளியான
தொலையாத வார்த்தைகள்
 பெண் முன்னேற்றத்தினை
புதைத்த கல்லறைகள்!
பெண் பாதுகாப்பு போர்வையில்
கல்வி வெளிச்சம் காட்டா
 முள் இதயங்களின் சுயநல
ஆணாதிக்க உலகத்தில்
தோல்விகளைத் தொலைத்த
 பெண் சமுதாயம் எங்கே!
 இதயத்தில் வடுவான 
தொலையாத முள் வார்த்தைகளும்
 ஒரு சாண் வயிறு வளர்க்க
யாரிடமும் யாசிக்காத 
வரம் கேட்க வாணியின்
 கல்வி வீணைத் தந்தி
 முன்னேற்ற வெற்றி படிக்கட்டு
 விளிம்புகளில் தொற்றி
புதுமைகள் படைக்க
புறப்பட்ட பதுமைகள்
இனியும் தொலையாத வார்த்தைகளால்
தொல்லைப்படாதிருக்க
ஆணாதிக்கம் வழி விடுமோ!-சீனி

**

தொலையாத வார்த்தைகளாய் இன்றும் வாழும்
……….தொல்காப்பி யச்சொற்கள் மறையா தென்றும்.!
விலைமதிக்க முடியாத வைரம் போலே
……….வியன்தமிழும் அதிலடங்கி இருக்கும் பாரீர்.!
அலைகடலைப் போலெங்கும் வியாபித் தெங்கும்
……….அருந்தமிழால் காந்தம்போல் கவன  மீர்க்கும்.!
கலையழகு பொருந்தியநல் காப்பி யங்கள்
……….கண்முன்னே நிற்கவைக்கும் அதிச யங்கள்.!
விலையில்லாப் பொக்கிஷமாம் காவி  யங்கள்
……….வெளியுலகு அறியுமாறு அறிய வைத்தார்.!
குலையாமல் அப்படியே பத்துப் பாட்டு
……….குறையாமல் நன்னூலும் போன்ற வற்றை.!
தொலையாத வார்த்தைகளாய்த் தொகுத்துத் தந்த
……….தாத்தாவாம் உவேசாவும் இல்லை என்றால்.!
தொலைந்தேதான் போயிருக்கும் அரிய நல்ல
……….தமிழ்காவி யங்களெலாம் அழிந்தி ருக்கும்.!
எண்ணத்தை விருந்தாக வைத்துத் தந்த
……….எழுச்சிமிகு காப்பியத்தைப் படிக்கும் போது.!
எண்ணமதை எழவைத்து மகிழ வைக்கும்
……….ஏங்கவைத்து நம்மைத்தூங் காது செய்யும்.!
வண்ணப்பாக் களாகவடி வமைத்துத் தந்த
……….வள்ளுவனும் கம்பனுமாய் உலகுக் கீந்த.!
தொலையாத வார்த்தைகளை! தொன்று தொட்டு
……….தவழ்ந்துவந்த கவித்துவத்தை! காக்க வேண்டும்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

கண் இமையின் கற்கண்டினிப்பே 
புருவ மையில் மையம் கொண்ட புயலே!
விழியசைவில் தெறித்த ஒளிச்சிதறலே 
உன் நாசித்துளை ஈரக்காற்று 
என் உயிர்வாசலின் சுவாசக்காற்று... 
உன் கன்னக்குழி பிடித்த மீன் 
பல கள்ளத்தோணி போகுதடி... 
உனை வர்ணித்து எழுதிய வார்த்தைகள் 
"காதல் அகராதி " என்ற பெயரில் 
தொகுக்கப்பட்டு தொலைந்த புதையலோ ? 
தேடி தேடி எழுதிய வார்த்தைகள் தீர்ந்த பின்னும்
தொலையாத வார்த்தைகள் 
என் கவிதைக்கு துணையாக வருவது 
உன் அருளினால்தானோ ? 
எந்தமரத்துக் காகிதமும் 
எவருடைய பேனாவும் 
என் கை கிறுக்கையிலே 
பிள்ளைத்தமிழாய் 
உன் நினைவுகளையே பெற்றெடுக்கிறது... 
உனை தேடி திரிந்தபோது எழுதிய வார்த்தைகள் 
உனை கண்ட மகிழ்வினில் திளைத்த வார்த்தைகள் 
நிழலாய் ஒன்றி வீதியுலா சென்ற நினைவின் வார்த்தைகள் 
நாம் இரண்டறக்கலந்து மூன்றாயானபோது முந்திக்கொண்ட வார்த்தைகள் 
என் மனப்புத்தகத்தில் என்றுமே 
தொலையாத வார்த்தைகள்... 
என் உயிரையே அரணாயமைத்து 
அதில் பத்திரப்படுத்தி பாதுகாக்கிறேன்.. 
இப் பொக்கிஷ வார்த்தைகளை.!!!

-  தஞ்சை. ரீகன்

**

புலராதப் பொழுதுகளில்
உலராத ஈரத்தில்
கலையாத நினைவுகள் இன்னும்
கொண்டு நடப்பதுண்டு..!
காதல்வயப்பட்டதும் 
கன்னியின் பின் நடந்ததும்
கவிதை எழுதிவைத்துக் 
காத்திருந்ததும்..
வழியெல்லாம் அவள்
விழிகள் எங்கேனும் தென்படுமாவென
தவித்ததும்.. தென்பட்டாலும்
தயங்கியதும்.. எதிரில் வர
மயங்கியதும்..இன்னும்
எல்லாமே நெஞ்சினில் உண்டு..!
தேவதைக்கு இயற்றிய
தொலையாத வார்த்தைகள் உள்பட..!

- S கௌதம் பிரபு, கொல்லம்பாளையம், ஈரோடு

**
 
அமில நாவில்
அமிழ்ந்துபோன காதலைச்
சிலுவையாக என்முதுகில்
ஏற்றிவிட்டு மலையேறிப் போனாய்

தகிக்கும் பாலையில்
கொதிக்கும் தலையில்
சுடுசொற்களை முட்கிரீடமாகச்
சூட்டிவிட்டுச்
சூனியமானாய் 

வசந்தம் கையெழுத்திட்ட
பூக்களைச் சூடிய கூந்தலில் 
சாகுந்தலாவாக
வந்த நீதான்
ஓர் இலையுதிர்கால இரவில்
பாம்புகளைக் கூந்தலாகக்
கொண்ட மெடியூசாக*
வந்து அச்சுறுத்தினாய்

ஜீவனைக் கொன்ற
ரத்தக்கறைப்
பாவனையோடு நீ
சிவனைச் சந்திக்கும்போது
நெற்றிக்கண்ணிலிருந்து
ரத்தவாடை அடிக்காதா?

என் கல்லறைக்கு
அவர்கள்
கற்கள்
கொண்டுவருகிறார்கள்
நீ
சொற்கள் கொண்டுவருகிறாய்

நடுநிசியில் குரைக்கும்
நாய்களாய் 
உன் 
ஞாபகங்கள்
உறங்கவிடுவதில்லை
இரவுமுழுக்க
ரத்தம்சொட்ட
வழிகின்றன
தொலைந்துபோன
உன்னிடமிருந்து வந்த
தொலையாத
வார்த்தைகள்
- கவிஞர் மஹாரதி

(*மெடியூசா கிரேக்கப்புராணத்தில் சிறகுகளும், பாம்புக்கூந்தலும் கொண்ட ஓர் அரக்கவடிவப் பெண். 
‘கார்கன்கள்’ என்றழைக்கப்படும் மூன்று சகோதரிகளில் ஒருத்தி.)

**

தேர்தல் எனும் தேர்த் திருவிழாவிற்கு மட்டும்
தெரு தெருவாய்த் தெருக்கூத்து நடக்கும் 
வார்த்தைகள் வானைத் தொடும், பின்னர் 
வான வேடிக்கையைப் போலே மறைந்து 
போகும் . 
பருவ காலப் பழங்கள் போல் அல்லாது 
பருவத்தில்ப் பொய்த்துப் போகும் மழையை 
போல் அல்லாது பொய்யனாகாத 
அரிச்சந்திரனைப் போன்றே அரசியல்வாதிகள் 
ஓர் பதினோன்றாவது தசாவதாரம் எடுத்தால் தோன்ற போகும் 
வார்த்தைகள் யாவும் 
" தொலையாத வார்த்தைகளாய் " வாழும் 

- கார்த்திக் பாரதிதாசன் 

**

 
அழியாமல் என்மனதில் பதிந்த
    அழகான வார்த்தையுந்தன் பெயரே
அழகான கவிதைக்கு கருவாய்
    அமைந்துள்ள வார்த்தையுந்தன் பெயரே
எழுதியயென் நாட்குறிப்பு சொல்லும்
    இனிமையான வார்த்தையுந்தன் பெயரே
பொழிகின்ற மழைநீர்போல் மனதில்
    பொழிந்துமகிழ் தரும்பெயருன் பெயரே!

கலையான வார்த்தையாக நெஞ்சில்
    கலையாத வார்த்தையாக - என்றும்
சலிக்காத வார்த்தையாக சுவையை
    தருகின்ற வார்த்தையாக - காதில்
ஒலிக்கின்ற பொழுதெல்லாம் காதல்
    உணர்ச்சியினைப் பொங்கவைத்து - வாழ்வில்
தொலையாத வார்த்தையாக வந்து
    துணையான வார்த்தையுந்தன் பெயரே!
 
- கோ.வேல்பாண்டியன் , வேலூர்

**

அலை அலையாய் நினைவுகள் அனுதினமும் இங்கே
கலையாத ஓவியமாய்
வலை வீசும் கண்கள்,
நிலை சொல்லி நிலை சொல்லி நித்தமெனைக் கிள்ளும்,
துள் ளாத மனம் எங்கும் தொலையாத உன்னில்
கிளை பரப்பி காதல து
தலை தூக்கித் திரியும்,
திவலைகளாய் இலைகளிலே
நீர்த் துளிகள் ஒட
குறுகுறுக்கும் பார்வையதில்
நெருங்கி வரும் என்னை
நொறுக்கு மந்த வார்த்தைகளில்
சாதீயம் தெறிக்கும்,
யுகயுகமாய் அழியாத தீண்டாமைத் தீயில்,
வேண்டாத வார்த்தைகளில் 
மாண்டுவிட்ட காதல்
ஆண்டவனும் இங்கே
கொண்ட தென்ன பாவம்?
தோண்டிடவே வந்ததம்மா
கண்டறியா ஞானம்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

தோண்டித் தோண்டி
மனதுள் வேண்டி,
யாரிந்த வடிவை ஏந்தி
காரிருள் கோலம் கடந்து,
நிலவின் ஆட்சியாய் மலர்ந்து
தண்மையாய், கோபத்தில்
இளஞ்சூடாய் தெரிந்து;
என் மக்களுக்குத் தாயென்று,
மண்ணிலே பூத்த
கற்பகத் தருவென்று
பாடிப் பரவி;
மூத்தோர் வார்த்தை
சில்லரை அல்ல,
முழு செந்தாமரை என
போற்றி வருபவள்;
பகுத்த மனதில்
புகுந்த வெண்புறாவாய்,
கோபுரமாய் உயர்த்தினால்
இல்லத்தை;
சொந்தங்கள் சூழ
சோகங்கள் ஓட
வந்த தேனோடையவள்;
கண்ணகி வம்சத்து
என்முகியாக வந்தவள்;
எந்தா யெந்தை படைத்து 
வளர்த்த உடலை,
காக்கும் மாலானவள்;
கனிந்த ஞானியவள்;
அறத்தில் பிறந்த
அரிதார மில்லாத
அழகு வள்ளியவள்;
அவளை
மறப்பதும் எந்தாய்
தமிழை
மறப்பதும் 
ஒன்றாகும்......

- ப.வீரக்குமார், திருநின்றவூர்.

**
உன் வண்ண முகத்திற்கு 
முன் போட்டியிட முடியாமல்
வானவில் மேகத்திற்குள்
சென்று ஔிந்து கொள்கின்றன
என் தொலையாத வார்த்தைகள்!

தொலையாத வார்த்தைகளை
கோருங்கள் ஒன்றாக
அதிகார ஆளுமைக்கு அல்ல;
ஜனநாயகம் எனும் சக்கரத்தின்
அச்சாணியாக;

குரல் கொடுத்து தேற்றுங்கள்
வாா்த்தைகளை 
தொலைக்காமல்
மழலை சொல் பேசும்
குழந்தைகளுக்கு;

பட்டிமன்றத்தில்
வாஸ்து திசையில் வைத்த
ஒலி பெருக்கியில்
விட்டு கேட்கிறது கலைஞனின்
வாா்த்தைகள் தொலையாமல்;

புதுப்புது வார்த்தைகளை
உருவாக்கிக்கொண்டு
உன்னை தொலையாமல்
பார்த்து கொள்வதே
சுகமாய் இருக்கிறது;

தாய் தந்தை சண்டையிடுவதை
கண்டு வளர்ந்த குழந்தைகள்
போகிற போக்கில் வார்த்தைகளை
கொட்டி விடுகிறார்கள்
தொலையாமல்;

விதைக்கு ஏற்பதான்
பயிா் வளரும் 
நல்ல எண்ணங்களால்
வாா்த்தைகள் தொலையாமல்
தெளிவு பெறும்.
 
எந்த துணியை தைக்கிறோமோ
உடையாகிறது;
எந்த வார்த்தையை மனதில்
நினைக்கிறோமோ அதுவே
வாழ்க்கையாகிறது;

- குரு சுரேஷ் ப, சீா்காழி

**

காற்று மழையில்
காடும் மலையும்
வீடும் வயலும் 
மூழ்கிப் போகலாம்!
கானல் வெய்யிலில் 
கல்லும் மலையும்
உருகிப் போகலாம்!
கடும் பனியிலும் 
கடும் பசியிலும் 
உயிர்கள் பல 
மறைந்து போகலாம்!
புயல் காற்று வந்து
பூமியையே புரட்டிப் போடலாம்!
பூமியில் புரட்சிகள் தோன்றி
பழமையையே அழித்துப் போகலாம்!
சுனாமி கடல் அலையே
மலையைக் குடிக்கலாம்!
சுட்டெரிக்கும் சூரியனால் 
பல உயிர்கள் சுருண்டு போகலாம்!
ஆணவக் கொலைகளாலே
காதலர்கள் அழிந்து போகலாம்!
காதலும் தொலைந்து போகலாம்!
இயற்கையின் சீற்றத்தால் 
எல்லாம் தொலைந்து போகலாம்
பூமியில் ஒன்றுக்கும் மேற்பட்ட 
மனிதன் இருக்கும் வரை 
மனிதநேயம் என்னும் 
வார்த்தை கூட 
தொலைந்து போகாது!

-கு.முருகேசன்

**

கலையாத மேகங்கள்
ககனத்தில் மூழ்கும்
கதிரவனின் முகம் நோக்கி
கரம் கூப்பி மகிழும் |
சதிராடும் நினைவலைகள்
சந்திரிகையாய் தேயும்
புதிரான வாழ்வதனில்
முதிர்ந்து ந்தன் பிம்பம்
எதிரான துருவமதில்
குதிராக நானும்
விதி யென்றும் கோளென்றும்
சதியென்றும் பகர் வர்
மேதினியில் நீதிநெறி
ஆதி முதல் வழுவ
ஏதேதோ காரணத்தால்
என்ன வளும் நழுவ
கன்னலென சொன்னது வும்
மின்னலாய் மறைய
சன்னலுக்குள் ஊடுருவும்
விண்ணகமாய் நெஞ்சில்
மண் மீது வலம் வரும் 
கனவான பொழுதுகளின்
தொலையாத வார்த்தைகள் -
காலமெல்லாம் நீயே எனக்கென அன்று நீ உரைத்த
வார்த்தைகள் - தண்ணீரிலும்
பேரில் - கண்ணீரெனவும் .

- கவிதா வாணி - மைசூர்

**

தொலைதூர வாழ்க்கைப் பயணத்தில்
திசைமாறும் திருப்பங்களின் நடுவே
கலையாத சில கனவுகளோடு சேர்த்து
தொலையாத சில வார்த்தைகளும்
தொடரத்தான் செய்கின்றன நமை!

அவை உணர்ச்சி மிகு தருணங்களில்
உதிர்க்கப்பட்டவையாகவோ,

அல்லது உண்மையை உரக்கச் சொல்லி
நம் உள்ளம் உலுக்கியவைகளாகவோ
உணரப்பட்டிருக்க வேண்டும்!

நம்மில் தொலையாத அவ்வார்த்தைகளில்
நாம் தொலைகிறோம் சில நேரங்களில்!

- நிலவை.பார்த்திபன்

**

தாய் சொல்லைத் தட்டாதே தனயா!
அன்னையின் 
வாய்ச்சொல் வழிகாட்டும் 
தொலையாத வார்த்தைகள்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை மகனே ! 
நெஞ்சில் பதிந்து நெறிகாட்டும் 
தொலையாத வார்த்தைகள்.

முதலில் கசக்கும் முடிவில் இனிக்கும் !
மூத்தோர் சொல் கேள் ! - என்றும் 
தொலையாத வார்த்தைகள்.

இளமையில் கற்ற அற நூல்களின்
வழிமுறைகள் 
பசுமரத்தாணியாய் இதயத்தில் பதிந்திட்ட 
தொலையாத வார்த்தைகள் .
மழலைக்குழந்தையின் முதற்சொற்கள்- அம்மாவின் 
மனம் விட்டு 
தொலையாத வார்த்தைகள்.
 
 - கவிஞர் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

**

வண்ணம் பூசி தேன் தடவி /
அலங்காரம் செய்து வைத்த வார்த்தைகள் /
வானை நோக்கி பறந்தன/
பேரோசையில் வான் அதிர்ந்தது /
சடுதியில் புவியில் விழுந்த வார்த்தைகள் /
ஏவிய பூவையரின் காளையரின் /
காலடியில் விழுந்து குப்பை மேடானது /
தோல் சுருங்கி ஒடுங்கிக் கிடந்த /
முதியவர்களின் குரல் நாண்கள் /
வார்த்தைகளைத் தொலைக்காமல்/
சேமித்து வைத்திருந்தன /
என்றாவது உபயோகப்படலாமென்று!  

- தேவி பிரபா

**

வார்த்தைகளின் குமியலே பேச்சு 
அளவான வார்த்தைகள் காதுக்கு இனிமை 
தொலையாத வார்த்தைகள் கையாலாகாதவை 
வார்த்தைகள் அற்ற நிலை கண்களுக்கு வேலை 
புரிதல் இருந்தால் பெரிய போர்களில் வெல்லலாம் 

- மஞ்சுளா அரவிந்த்

**

“படிக்க வைக்கப் பணமில்லாத நீ
எதுக்குப் பெத்த?” 
ஈட்டியில் நஞ்சுரசி எறிந்தாள் மகள்

“வச்சுக் காப்பாத்த வக்கில்லாத நீ
எதுக்குத் தாலி கட்ன?”
எரிகொல்லி வீசினாள் மனைவி

“ஒனக்குக் கொடுக்கறதெல்லாம் தெண்டச் சம்பளம்”
முகத்தில் உமிழ்ந்தார்
முதலாளி

“ஏன்.. என் உயிர வாங்குறே?”
நெருப்பில் விழுந்த உப்பென வெடித்தார்
நிறைய படித்த ஆசிரியர்

“எத்தன தடவ சொல்றது... அறிவிருக்கா?”
என்று இடித்துத் தள்ளினார்  
நடத்துநர் ஞானப்பிரகாசம்

“ரூபாயை வீசினா கவ்விப் பிடிக்கும்”
என்றார் வாக்காளர்களை
அரசியல் பிரமுகர்

அவமானம் அற்ற வாழ்வு வேண்டி
ஆலயத்துக்குச் சென்றபோது துரத்தினார்கள்
“நடைசாத்தியாச்சு போ.. போ..” என்று

- கோ. மன்றவாணன்

**

ஏதோ ஒரு தொகுதியில்  சில நூறு வாக்காளர்களிடம்
கருத்து கேட்டு விட்டு  கருத்துக்கணிபு எழுதுகிறார்கள்
பகுத்தறிவினால் யோசித்துப் பார்ப்போமாயின் சரிதான்
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல!
இதில் ஒரு சோறு பதம் என்பது தொலையாத வார்த்தை
என்பதை உணர்வோமா! தொலையாத வார்த்தைஅறிவோம்
எப்படி வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிட்டு
சிறுமீனை விட்டுவிட்டு பெரிய மீனை பிடித்திடவே !
சிறு சிறு தொகை அளித்து வாக்கினை பறித்து
பெரிய பெரிய முதலாலிகளிடமும் அரசின் வேலை முடித்துதர
உரிய மனிதர்களிடமும் கையூட்டு பெற்றுக்கொள்ளுவது
அதுதான் பெரிய மீன் ! சின்னமீனை விட்டடாத்தான்
பெரியமீனை பிடிக்கலாம்! என்பதுவும் தொலையாத வார்த்தை!
மும்மரமான போட்டி மூன்று அணி போட்டி வாக்கு 
எண்ணிவெற்றியோடு வெளியே வருகின்றனர் 
அவர்களின் முகத்தை வைத்தே வெற்றி யார் என்று கணித்துவிடலாம்
ஆமாம்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
இதுவும் தொலையாத  வார்த்தைதான் ! இப்படிப்பார்த்தால்
ஏராளமான வார்த்தைகள் தமிழில் இன்றும் வாழ்கின்றன!

- கவிஞர்    ஜி.சூடாமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com