Enable Javscript for better performance
கடந்த வாரத் தலைப்பு ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரத் தலைப்பு ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!

  By கவிதைமணி  |   Published on : 23rd September 2018 06:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  padma_vyugam

  பத்ம வியூகம்

  தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
  தண்ணீர் தேடிய தருணத்தில் திராவகம் சூழ்ந்த முதல் சுற்று,
  வாழ்வாதரத்தை வேண்டியபோது அதிகார ஆதாரம் இரண்டாம் சுற்று,
  பசிக்கு பருக்கை பந்தி - சதிகார ஸ்மார்ட் அட்டை மூன்றாம் சுற்று 
  கொம்பு சீவிய காளை நான் - காலை சீவும் கருணை கூட்டம் நான்காம் சுற்று 

  காய்ந்து விட்ட மருத்துவக்கனவுகள் - கம்பி 'நீட்'டிய ஐந்தாம் சுற்று
  சித்தாந்தம் சீண்டாத நாத்திகன் நான் - சீண்டிப்பார்க்கும் வேதாந்தம் ஆறாம் சுற்று  மடிதேடும் மழலைமனம் - மிதியடியாக்கிய மீத்தேன் ஏழாம் சுற்று...
  கலியுலக பத்ம வியூகம் கருணித்த எட்டு வழி - இலவச சுற்று 

  வீரத்தாய்ப்பால் கருணித்த ...வீரத்தமிழச்சியே...
  வியூக விடுதலை போதனையில் விழிப்பூட்டாதது ஏன்?
  தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
  தினம் ஒரு சுற்று... தினம் ஒரு மரணம்...தினம் ஒரு ஜனனம்...

  - நந்தா

  விதியின் விளையாட்டா?
  இதன் காரணகாரியத்தை யாரறிவார்?
  பார்த்தனின் சுபத்திரை பத்மவியூகத்தில்
  நுழைவதைப் பற்றி
  பேசுவதை கருவிலே கேட்கின்றான் அபிமன்யு.
  வளர்ந்தபோதும் வெளியில் வரக்கேட்கவில்லை
  வீரனாய் வளர்ந்து பாரதப் போரில்
  பதினான்காம் நாளில்
  பத்மவியூகத்தை
  உடைத்துக் கொண்டு
  நடுவில் வெற்றியாளனாய்
  நிற்கின்றான்.
  அகங்காரத்துடன்
  வெறிக்கொண்ட பகைவர்
  கையால் அம்புபட்டு
  மண்டைபிளக்க மாண்டான்
  அபிமன்யு
  புத்திர சோகத்தால்
  அண்ணனிடம் நீதி கேட்கின்றாள் சுபத்திரை
  வாழ்க்கைச் சூழலில் எல்லோரும்தான்
  பத்மவியூகத்தில் நுழைகின்றோம்
  வெளியில்வரும் வழி
  தெரியாமலே! தாமரை
  இதழ்விரிப்பது போலே
  வாழ்வைக் கடக்கின்றோம்!
  இது காலதேவனின்
  கணக்கன்றோ!
  மனிதர்களின் அகங்காரமே
  பத்மவியூகம் அதில்
  தர்மத்தின் நீதியே
  கர்மா! அதில் நுழைய
  யார் சொல்லித் தந்தார்?
  வாழ்வின் தத்துவமே
  பத்மவியூகம் தானே! பூமிக்கு
  வந்தோம், வாழ்ந்தோம்
  பிரபஞ்ச விதிகளை மீறிட
  நாம் யார்? தாமரையின்
  மையத்தில் இயற்கையை,
  இறைவனை அடைவதே
  பத்மவியூகம்!
  - A.K.சேகர், ஆகாசம்பட்டு

  **

  பத்ம வியூகம் எடுத்துவா பாரதத்தில் நல்வழிபிறந்திட
  பரந்தாமனே பறந்துவா பாவிகளைப் பதம்பார்த்திட
  பஞ்சமும் தீரலப் பாவிகளின் வஞ்சமும் போகல
  அஞ்சுகத்து மைந்தனும் ஆழ்வதற்கு இங்கில்லை.

  எங்கு செல்வோம் எங்கள் மக்கள் என்ன செய்வோம்
  பஞ்சம் பிழைக்க வழியில்ல பசுமையும் பாலையாச்சி
  கொஞ்சி வாழ்ந்த எங்கள் கூட்டம் அஞ்சி நடுங்குதையா
  பஞ்சி ஆலையும் மூடியாச்சி பட்டினியால் வாடியாச்சி.

  நெஞ்சமுழுதும் குமுறலாச்சி நினைத்தாலே நெருப்பாச்சு
  எஞ்சியுள்ள எங்கள் நரல் ஏற்றம்பெற மாற்றம் வேண்டும்
  ஏகாந்த பரம்பொருளே ஏன் இன்னும் வரத்தாமதம் நீயும்
  ஏழு சக்கர வியூகம் அமைத்தே எழுந்துவா இறைவாநீ!

  - கவிஞர் பி.மதியழகன்

  **

  இரவின் கதவுத் திறந்து
  இருட்டில்
  இளைப்பாறிக் கொள்ள முடியாமல்
  தவித்துக்கொண்டிருக்கிறது
  வெளிச்சம்...

  வெளிச்சத்தில் இருந்து கொண்டு
  கையசைத்தபடி
  தானும் உலவிக் கொள்ள முடியாமல் 
  துடித்துக் கொண்டிருக்கிறது
  இருள்...

  மொட்டிலிருந்து
  மலர்ந்து கொண்ட பூ
  மீண்டும்
  அரும்பாக முடியாமல் வதங்கி
  உதிர்ந்து
  துக்கிக்கிறது தன்னை...

  நிலம் பெயர்ந்து
  வெளியில் 
  வெறுமையின் விரிப்பில்
  வளர்ந்து கொள்ள முடியாமல்
  ஏங்குகிறது கிளைகளைத் தாங்கும்
  வேர்...

  அந்தரத்தில் முளைத்து
  நிழல் பரப்ப ஆர்வம் காட்டுகிறது
  விதைகள்

  கிளையைத் தொட முடியாமல்
  தவிக்கும் உதிர்ந்த இலை போல்
  நாவிற்குத் திரும்ப முடியாமல் துடிக்கிறது
  நழுவி விழுந்து விட்ட வார்த்தைகள்...

  தேவைப்படும் போதெல்லாம்
  அனுபவிக்கவும் விற்றுக் கொள்ளவும்
  வெளியின்
  வெறுமையின் அடுகக்குகளில்
  நீரை நெருப்பை காற்றை
  பதுக்கி  வைத்துக்கொள்ள
  ரகசியமாய்  
  வியூகம் அமைக்க விழைகிறது
  மனம்...

  பசியில்லாமல் இருந்து கொள்ள
  விகாரங்ளை
  புசிப்பதிலிருந்து விடுபடாமல்
  அனுபவித்துக் கொள்ள
  படாதபாடு படுகிறது ஆறறிவு

  எனப் பல

  பத்ம வியூகமெனப் புனைந்த
  எந்த வியூகமும் பலிதமாகாமல்
  பின்னிய வியூகத்தில்
  சிக்கிக் கொண்டுப் புரள்கிறது
  ஒற்றைக்குடையில் 
  ஆளத் துடிக்கும் சுயநலம்...

  - கவிஞர்.கா.அமீர்ஜான்

  **

  அபகரிக்கப்பட்ட தாய்நிலம் மீட்டிட
  அன்று நடந்தது பாரதப் போர்.
  அமைத்தனர் கௌரவர் பத்ம வியூகம்.
  அன்னையின் வயிற்றிலிருந்தபோதே
  அரைகுறையாகப் போர்க்கலை கற்ற
  அபிமன்யு அதிற் சிக்கி உயிர்விட்டான்.
  இயற்கை அமைத்த பத்ம வியூகமாயக்
  எங்கும் சூழ்ந்தது கேரள வெள்ளம்
  மயங்கி மலைத்திட மக்களெல்லோரும்
  வாழ்வையழித்தம் மண்ணைக்கெடுத்தது.
  முற்றுகையிட்டு முழுதாய் அழித்திட
  முள்ளிவாய்க்காலிலிலும் பத்ம வியூகம்.
  அமைத்த கொடியவர் ஆயுத பலத்தால்
  ஆதரவற்றுத் தம்முயிர் ஈந்த  
  ஈழத்தமிழர் இனத்திற்கும் இஃதேதான்
  நேர்ந்ததன்று.  அந்த நினைவு மறக்காது.

  - எஸ். கருணானந்தராஜா

  **

  நின்றிருக்கும்  பகைதன்னை  வெல்வ  தற்கு
      நிலையேழாய்த்  தாமரையின்  இதழ்கள்  போன்று
  நன்றாக  வியூகம்தாம்   அமைத்துக்  கொண்டு
      நரிசூழ்ச்சித்  தந்திரத்தில்  அபிமன்  யூவைக்
  கொன்றிட்ட   துரியோத  படைகள்  போலக்
      கொல்கின்றார்  ஆட்சியாளர்   மக்கள்  தம்மை
  வன்முறையின்  பிடிக்குள்ளே   நாடு  செல்ல
      வளமையெல்லாம்   சுயநலத்தார்  பையுக்  குள்ளே !

  சிக்கலினைத்  தீர்த்திடுவர்  என்றே  யெண்ணிச்
      சிக்கலுக்குள்  சிக்குகின்றார்  வாக்க  ளித்தே
  மக்கள்தம்  வாக்குகளைப்  பெற்ற  வர்கள்
      மகராசர்  போலிங்கே  வாழு  கின்றார் !
  தக்கதொரு   விடியல்தாம்  பிறக்கு  மென்று
      தடுமாறித்  தடுமாறி  எழுந்த  போதும்
  விக்கலுக்கு  நீர்கிடைக்கா  நிலைமை  போன்று
      விக்கித்து  நிற்கின்றார்  இருளுக்  குள்ளே !

  பத்திரமாய்  நாடுதன்னைப்  பாது  காக்க
      பாழான  வாழ்வுதனைச்  சீர  மைக்க
  பத்மமெனும்  வியூகத்தை   நாம்வ  குப்போம்
      படிப்படியாய்   ஆட்சியரை   அதில்நு  ழைப்போம் !
  தித்திக்க  தித்திக்க   உறுதி  தந்த
      திருடர்க்குத்  தண்டனையை  நாம்கொ  டுப்போம்
  சத்தியத்தில்  அறநெறியில்   மக்க  ளாட்சி
      சரித்திரத்தைப்  படைத்திடுவோம்  ஒன்றாய்ச்  சேர்ந்தே !

  - பாவலர்  கருமலைத்தமிழாழன்

  **

  அன்றோ மகாபாரத பத்ம வியூகம்
  உடைக்கத் தெரிந்த அர்ஜூனன் மகனுக்கு
  எதிராக விரிக்கப்பட்ட வலை

  ஆம் - பாதி உடைக்கத் தெரிந்த அபிமன்யுவிற்கு
  எதிராக வகுக்கப்பட்ட வியூகம் - அது அவன் தவறல்ல
  அவன் தாயால் வந்த விணை

  ஆனால் இன்றோ திரும்பிய பக்கமெல்லாம் 
  பத்ம வியூகம் - ஆம் கலியுகத்தில் கள்ளத்தனமான 
  மனிதர்களால் திரும்பிய பக்கமெல்லாம் பத்ம வியூகம்

  ஆனால் யாருக்குமே உடைக்கத் தான் தெரியவில்லை
  கலியுக பத்ம வியூகத்தை - அதனால் தான் அதில்
  சிக்கி சின்னா பின்னமாகின்றனர்

  அன்பில்லாததால் வந்த விணை
  கலியுக பத்ம வியூகம் 

  கலியுக பத்ம வியூகத்தையும் உடைக்கலாம்
  அன்பெனும் வியூகத்தால்

  -ஆம்பூர் எம். அருண்குமார்.

  **                             
  உடைபடாத வேலிகளாய்
  பெண்ணிற்கு வீட்டிற்குள்
  சிறைகளாய் பத்ம வியூகங்கள்!
  பணியிட பாலியல் வன்முறை
  ஆணாதிக்க  பத்ம வியூகச் சிறையில்
  பெண்கள் மீள்வது எப்போது?
  பாலியல் பத்ம வியூக சிறைகள்
  எங்கு நோக்கினும் பெண்குலத்தைத்
  தொடர்வதேனோ!
  படுக்கையறை பதுமைகளாய்
  கல்வி நிலையங்களில்
  கலாசார மாறுபாட்டை
  பத்மவியூகச் சிறைகளாய் 
  மாற்றிய அதிகார ஆணவ 
  ஆணாதிக்கம் தொலைய 
  கீதை சொல்ல கலியுகக் கண்ணன்
  எந்த வடிவில் வருவானோ! 
  உயிர் எழுப்பும் மந்திரங்கள்
  உலூபிக்கும் சுபத்திரைக்கும்
  அறிந்த ஒன்றென எழுதுகோல்
  வரைந்த ரவிவர்மா வியாசனுக்கு
  அரவான் அபிமன்யு
  உயிர் காக்க ஏன் மறந்தார்?
  அன்றிலிருந்து இன்றுவரை
  தந்தை கணவன்
  சகோதரன் பிள்ளையென
  பத்மவியூகங்கள் சிறைகளாகி
  இருக்கும்வரை
  சட்டத்தை சீர் திருத்த மனு
  வியாசனைப் பார்த்துத்தான்
  ஊமையாகி மௌனமாகிப் போனானோ!!
  பெண் சுதந்திரம் காத்திட
  அடிமை பத்ம வியூகங்களை
  உடைத்தெறிய இன்னொரு
  அம்பேத்கார் வருவாரா?! !

  - பொன்.இராம்

  **
  கவலையில்லா மனிதரில்லை உலகில்
  அவலை நினைத்து உரலிடிப்பர் அவர்
  திவலைகள் நிறைய அங்கங்கே சிரிக்கும்
  சவலைப் பிள்ளைகளாய் சரிந்தே நிற்பர்

  பணமிருந்தால் பத்தும் செய்யலாம் தான்
  ரணமான மனதை சீர்செய்வதெப்படியாம்
  குணக்குன்று என்றாலும் விதி விடுவதில்லை
  கிணற்றில் தள்ளி மூழ்கடித்திட முனையும்

  போட்டி பொறாமைச் சேறுகள் எங்குமிருக்க
  ஈட்டிய செல்வம் கொள்ளை போகக்கூடும்
  வாட்டிய துன்பங்கள் வந்து நின்று கூத்தாடும்
  தீட்டிய வாள்கள் எங்கெங்கும் பளபளக்கும்

  பத்மவியூகத்தில் மாட்டிய எலியைப் போல
  உத்தமர்களும் உருண்டு மருண்டு போவர்
  அத்தனையையும் தூசாக்கித் தூர எறியணும்
  புத்தனைப் போல் ஆசைகளற்று நிற்கணும்

  எதிர்த்து நின்றால் எதிர்ப்பதெல்லாம் ஓடும்
  அதிர்ந்து ஒட அவைகளை அடக்கலாம்
  உதிர்ந்த மலர்களாய் காற்றில் பறக்கவிடலாம்
  முதிர்ந்த அறிவால் பத்மவியூகம் வெல்லலாம்.

  - கவிஞர்  ராம்க்ருஷ்

  **

  பாரப்பா பாரதப் போர் நாள் பதிமூன்றாம், 
  பாங்கான பார்த்தன் மகன் அபிமன்யு
  பாய்ந்தானே வியூகத்தில்
  பாண்டவர் க்காக, துரோணரது
  வியூகமதில் தொய்வே இல்லை
  நேரான பேர்களுக்கு
  இல்லை காலம் - இப்போதும்
  எப்போதும் அது தானப்பா,
  தப்பாது - கர்ணனது பானம் என்று
  அர்சுனனை காத்திடவே பரந்தாமனும் 
  அகன்றிடவே அவ்விடத்தில் - 
  அபிமன்யு ஆன மட்டும் 
  அழித்தொழித்தான் துரியன் படையை,
  அந்தோ-புற வாசல் அறியாத 
  அபிமன்யு கர்ணனின் 
  பானத்தில் வீழ்ந்தானப்பா
  பத்மமென்றும் சக்ரமென்றும் 
  பேர்தான் வியூகம்,
  போராலே பிழைத்தவர்கள் 
  பின்னாளிலே - எண்மரப்பா 
  பாண் டவரில், இன்னும் கேளு
  ஈரிரிருவர் எஞ்சியோர் துரியன் வசம்,
  எல்லோரும் அழிந்த பின்னே -
  வாழ்வை வாழ - அப்போது 
  கேள்வியது எழுந்ததுவே -
  எதற்கு போரென்றே.
  வாழ்வும் ஓர் வியூகமப்பா- 
  பத்மம் போலே, ஆனால் 
  இங்கோ - வருவதும் 
  போவதும் தெரியாது.

  - கவிதா வாணி - மைசூர்

  **

  ஆண்பெண் பேதமில்லா அனைவருக்கும்
  தானாய்க் கையேறும் கைபேசி பத்மவியூகமே
  குடியில் வீழ்ந்து மூழ்கும் குடியர்களுக்கு
  குடிதந்து குடியழி டாஸ்மாஸ்க் பத்மவியூகமே 
  அலங்காரமென்று எண்ணித்திரி பெண்களுக்கு
  அலங்கோல அரைகுறை ஆடை பத்மவியூகமே
  பணமீட்டும் திமிரில் மற்றாரை மதியாதார்க்கு
  பணமும் செல்வச்செழிப்பும் பத்மவியூகமே
  இக்கால வாழ்வியல் போர்க்களத்தில் எக்காலும்
  சிக்கித் தவிக்கும் அபிமன்யுகள் இவர்களே!

  - மீனாள்

  **

  குருஷேத்திரத்தில் உருவாக்கிய பத்மவியூகத்தில்
  வேகத்தால் வீழ்த்தப்பட்டான் அபிமன்யு...
  விவேகத்தால் வெற்றியடைந்தான் அர்ச்சுனன்...
  நம் வாழ்க்கை என்னும் வியூகத்திலும்
  அபிமன்யுவாய் விழவைப்பதுவும்
  அர்ச்சுனன்னாய் வாழவைப்பதுவும்
  வேகத்தின் ஆர்ப்பரிப்பும்,விவேகத்தின் அமைதியேயாகும்!!!

  - சு.ரேவதி

  **

  வழிப்பாதையில் தலைநீட்டி அழைக்கும்
  வாழைப்பழத் தார் அல்ல
  வாழ்வின் வெற்றி

  சாவிக் கொத்தைப் பதுக்கிவைத்து
  ஆயிரம் பூட்டுகள் கொண்ட வாழ்க்கையை
  அருளியது யார்?

  சும்மா அமர்ந்திருந்தாலும் உன்னைச் 
  சும்மா விடாது
  சூழல் பேரிடர்

  நிமிடம் தோறும் 
  நீ போராடும் செயலே
  நீ வாழ்கிறாய் என்பதற்கு அடையாளம்

  பகைசூழ் உலகை வெல்லப்
  பாடம் நடத்துகிறது
  பாரதப்போர்

  பத்ம வியூகம் அமைத்துப்
  படைகள் வரட்டும்
  தடைகள் வரட்டும்

  வியூகத்தை உடைக்கும்
  வியூகம் வகுத்துப் போராடு
  வெற்றியைக் கொண்டாடு

  - கோ. மன்றவாணன்

  **

  அன்றைய தின - ஆன்மிக நிகழ்வில்

  ஆரம்பித்தது அபிமன்யுவின் விவாதம்.

  அபிமன்யுவின் தோல்விக்கு
  ஆரப்பா காரணமென வினவ
  ஆளாளுக்கு
  கூறக் கேட்டேன் பலப்பல
  பதில்களை,

  தோற்கவில்லை - அந்தோ அவனை வென்றது சூழ்ச்சி
  கண்ணனே - காரணம்
  கர்ணனே - காரணம் என்றே
  பலரும்-பகன்றனர், பறைந்தனர்,

  அறையில் ஆழ்ந்த மௌனம் நிலவ - அங்கோர் அறிஞர்
  இவ்விதம் உரைத்தார்,

  பாதி அறிவு பாதிக்கும் ஆபத்தென  
  செய்தி முழுமை அடையும் முன்னே - செயல்படுதலும் சிறப்பல்ல என்றார்,  

  ஆழம் தெரியாது - காலை விடாதே' என்பது மாதிரியா? என்றார் ஒருவர்,

  ஆழம் தெரிந்தாலும் -நீந்தத் தெரியாமல் காலை விடாதே என்றார், 
  எனக்கு புரிந்தார் போல் இருந்தது இந்த சக்கர வியூகம் (பத்ம வியூகம் )

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்.

  **

  இதிகாசம் என்றாலே இராமபிரான் கிருஷ்ணபிரான்
  இருவருமே கண்முன்னால் எப்போதும் நிற்கின்றார்.!
  அதில்வந்த அரும்வீரர் ஆயிரத்துள் அடங்காது
  ஆங்கேயோர் பாரதப்போர் அழியாது சரித்திரத்தில்.!
  விதிமீறும் போர்முறை வியூகத்தில் நடந்தது-மா
  வீரனையே விழச்செய்ய வினைசூழ்ச்சி விரைந்தது.!
  பதினாறே அரும்பியவன் பார்புகழும் அபிமன்யு
  பத்மவியூ கப்போரில் பழிவாங்கப் பட்டவனாம்.!
  திராணியிலை துரோணருக்கே தற்காப்புச் செய்துகொள
  திண்டாட வைத்துவிட்டான் திறனுள்ள ஏனையோரை.!
  இராப்பகலாய்த் தூங்காமல் எதிரிகளை விரட்டிடவே
  இவனைவிட மூத்தோரை எளிதாக வென்றானாம்.!
  நிராயுதமாய் நிலைகுலைய நின்றபோதும் அதுசமயம்
  நீதிக்குத் தலைவணங்கா நெறிதவறி நடந்தார்கள்.!
  அராசகமும் புரிந்தார்கள்,! அட்டகாசம் செய்தார்கள்.!
  அனைவருமே சூழ்ந்துகொண்டு அபிமன்யு வைமாய்க்க.!
  அபிமன்யு போலயின்றும் அரசியலின் சூழ்ச்சியிலே
  ஆட்சியாளர் கைப்பிடியில் அகப்பட்டுச் சிக்குகின்றார்.!
  அபித்துரோகம் செய்பவர்கள் அன்றுமுதல் இருந்தாலும்
  அன்றாடம் இன்றுமதை அரங்கேற்றம் செய்கிறாரே.!
  அபிப்பிராய பேதத்தால் ஆக்ரோஷம் கொண்டோர்க்கு
  அசிங்கமெலாம் கிடையாது ஆசையெலாம் பணம்மீதே.1
  சபிக்கின்றார் பாமரர்கள் சளைக்காது துவளுவதால்
  சண்டாளர் சதிச்செயலால் சங்கடங்கள் அதிகமுண்டு.!

  - பெருவை பார்த்தசாரதி
  **

  இது மகாபாரதப் போரல்ல! 
  மனிதனையே மனிதன் கொன்று குவிக்கும்
  நவீன மானிடர்களின் போர்!
  ஆயுதங்கள், அணுகுண்டுகள்
  துப்பாக்கிகள், துரோகங்கள்
  வக்கிரங்கள், வஞ்சனைகள் ..
  அப்பப்பா! அனைத்தும் இங்குண்டு!
  மேலிருந்து ஆட்டுபவன் யார்?
  மீண்டும் கண்ணனா?
  எங்கும் நிசப்தம்.....
  இருள் மெல்ல மெல்ல மூடுகிறது
  அங்குமிங்கும் இடிக்கிறேன்,
  தடுமாறுகிறேன், தள்ளாடுகிறேன்
  தப்பிக்க வழியேதும் இல்லை
  அவ்வளவுதானா? அதற்குள் மரணமா?
  அபிமன்யு! அபிமன்யு!
  எங்கோ தூரத்தில் கதறுகிறது 
  என் தாயின் குரல்!

  - திலகா சுந்தர்

  **

  தாமரை இலை போல 
  வியூகம் அமைத்து 
  போர் புரிகிறது நம்மிடம் 
  இன்றைய சமூக வலைத் தளங்கள் !

  கதைகள் 
  கவிதைகள் 
  நாடகங்கள் 
  புதினங்கள் 
  என தமிழ் இலக்கியமாகட்டும் !

  தமிழ் 
  ஆங்கிலம் 
  கொரியா 
  பிரெஞ்சு
  என பல மொழி படங்களாகட்டும் !

  அதிமுக 
  திமுக 
  தேமுதிக 
  பாமக 
  மதிமுக 
  பாஜக 
  காங்கிரஸ் 
  என அரசியல் கட்சிகளாகட்டும்!

  கல்விப் பாடங்களாகட்டும் !
  கலவிப் பாடங்களாகட்டும் !
  காதலாகட்டும் !
  காமமாகட்டும் !
  ஆன்மீகமாகட்டும் !
  நட்பாகட்டும் ! 
  உரையாடலாகட்டும் ! 
  புகைப்படங்களாகட்டும் !
  அனைத்தையும் ஒருங்கிணைத்து 
  தன்னகத்தே வைத்து 
  போர் புரிகிறது 
  மக்களாகிய நம்மிடம்..!

  நேருக்கு நேர் சண்டை போட்டது 
  போக வலைத் தளங்களிலும் 
  சண்டைகள் பல உண்டு !
  அரசியல் விவாதங்களுக்கு !
  பிடித்த நடிகர்களுக்கு !
  எழுத்தாளர்களின் கவிதைகளுக்கு !
  ஆன்மீகவாதிகளின் கருத்துகளுக்கு !
  போராளிகளின் கைதிற்கு !
  காவிரி நதிக்கு !
  முல்லைப் பெரியாரிற்கு ! 
  தந்தை பெரியாரிற்கு !

  பண்டிகை காலங்களில் 
  வாழ்துக்களாக !
  தலைவர்களின் இறப்பிற்கு 
  இரங்கல்களாக !
  தேர்தல் நேரத்தில் வெற்றி தோல்விகளாக !
  நிரம்பி வழிகிறது !
  ஒவ்வொரு தருணமும் !

  கைச்சங்கிலி !
  கால்சங்கிலி !
  மனச்சங்கிலி !
  என அத்தனை 
  சங்கிலியையும் வியூகமாக 
  நம்மிடம் மாட்டிவிட்டு 
  சாவியை எங்கேயோ 
  ஒளித்து வைத்துள்ளது 
  வலைத்தளம் !
  வியூகத்தை உடைத்து
  விலங்கை அவிழ்க்க 
  தேடுவோம் சாவியை !! 

  - மகேஷ் சேந்தலிங்கம் 

  **

  ஏழடுக்குத் தாமரை மலர்போல
  வீரர்களே சக்கரமாய்ச்  சுழன்றுநின்ற
  வியூகம்.

  முக்காலம் பூவுலகைக் காத்துநிற்கும்
  முகுந்தன் வகுத்து வைத்த 
  வியூகம்.

  கறைபடிந்த போர்அதனில் காலம்
  விந்தைசெய்து வரைந்து வைத்த 
  வியூகம்.

  பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்
  அவன் கண்டும் காணமறுத்த 
  வியூகம்.

  மாதவனின் சேயிழையாள் பெற்றெடுத்த 
  பிரத்யும்னன் கற்று உணர்ந்த 
  வியூகம்.

  கற்றுணர்ந்தும் கண்ணண்மகன் களம் 
  மறுத்ததுவும் விதி செய்ததுவும்
  வியூகம்.

  மாதவனின் தாள்பணிந்த விஜயனுக்கு
  மதுசூதனனே வரமாய்க் கற்றுத்தந்த
  வியூகம்.

  சுபத்திரையின் தவப்புதல்வன் அபிமன்யு 
  கருவறையில் காதினில் கேட்டதுவே 
  வியூகம்.

  சந்திரகுல பிறையும் அவன்
  மதியில்பாதி விதியில்மீதியாக ஆனதுவும்
  வியூகம்.

  தகர்த்தெடுத்து உட்புகுந்த சக்கரத்துள்
  சக்கரமே தக்கவைத்து அறம்பிழைத்த
  வியூகம்.

  தெளிந்திருந்தும் களம்நில்லாமல் விஜயன்அவன் 
  தன்மைந்தன் தோள்சேராமல் விதிசெய்ததுவும்
  வியூகம்.

  கறைபடிந்த சந்திரகுல கறைகழுவி
  கார்முகிலன் முடித்துவைத்த துவாரயுகமே
  வியூகம்.


  பத்மவியூக கதைகளெல்லாம் துவாரயுகத்துடனே
  மடியவில்லை முடியவில்லை இன்னும்இன்றும்
  வியூகம்.

  ஏழடுக்குச் சக்கரமே உயிர்வாழ்வில்
  ஏழடுக்குசக்கரத்துள் உயரச்சென்று இறங்குவதும்
  வியூகம்.

  இவ்வியூகம் வென்று

  அகம்பெருகி புறம்குறுகி பெருவாழ்வுபெற
  பார்புகழும் பரமன்அவன் ஆத்மன்அவன்
  மனமுவந்து வரமும்தர வளமும்பெற
  கார்முகிலன் கருணைஅன்றோ கைவிளக்கு 
  எல்லா யுகங்களிலும் !!

  - ரமேஷ் கோபாலகிருஷ்ணன்.

  **

  பத்ம வியூகம் ...சக்ர வியூகம் ...ஒரு 
  போர் வியூகம் ...அர்ஜுனன் அவன் 
  பிள்ளை அபிமன்யுவை போரில்  இழந்தது இந்த 
  வியூகத்தில்தான் !
  எளிதாக அரண் உள்ளே சென்ற பிள்ளை அபிமன்யுவுக்கு 
  அரணை விட்டு வெளியில் வர தெரியவில்லை வழி !
  அன்று பத்ம வியூகம் விழுங்கியது ஒரு அபிமன்யுவைதான் !
  ஆனால் இன்று வங்கி கடன் , கடன் அட்டை என்னும் சக்கர 
  வியூகத்தில் மயங்கி தன் நிலை தடுமாறி  கடனில் 
  சிக்கி மீண்டு வர வழி தெரியாமல் தவிக்கும் இன்றைய
  இளைய தலை முறையில்  எத்தனை எத்தனை அபிமன்யூக்கள் ?
  அன்று கர்ணன் ஒருவனுக்குத்தான் தெரியும் 
  பத்மவியூக அரணில் அவன் எதிரியை சிக்க வைக்க !
  அதனால் மடிந்தது ஒரே ஒரு அபிமன்யுதான் !
  ஆனால் இன்று வங்கிகள் அத்தனைக்கும் தெரியும் 
  பத்மவியூக யுக்தி என்ன என்று ! அதன் சக்தி என்ன என்று !
  வியூகத்தில் சிக்கி சுழலாமல் ,வங்கி கடன் என்னும் 
  என்னும் மாய வலையில் சிக்காமல், வரவுக்கு மேல் 
  செலவு நான் செய்ய மாட்டேன் என்னும் அரணை 
  நம் பிள்ளைகள் தம்மை சுற்றி அமைத்து விட்டால் 
  இந்த கால பத்மவியூகம் பலி வாங்க முடியாதே 
  ஒரு அபிமன்யுவைக்கக்கூட !
  ஒரு அபிமன்யுவை பலி வாங்கியது அந்த கால 
  பத்ம வியூகமாகவே  இருக்கட்டும் !
  இந்த கால பத்ம வியூகத்தை பழிக்குப் 
  பழி வாங்கும் சக்தி இன்று உங்கள் கையில் 
  அபிமன்யூக்களே ! சிந்தித்து செயல் 
  படுங்கள் பிள்ளைகளே !

  **
  வாசகர் கவிதை ஒரு அபிமன்யு ஆனதோ ?!!!
  பத்ம வியூகம் ... சென்ற வார தலைப்பு 
  வாசகர் கவிதைக்கு !
  பிசகாமல் கவிதை நான் அனுப்பி வைத்தேன் 
  கவிதை மணிக்கு !
  வாரம் ஒன்று சென்று விட்டது ...நேரமும் 
  ஆகி விட்டது ! 
  பத்ம வியூக கவிதை ஒன்றும்  வெளியில் 
  வரவில்லை இது வரை ! 
  வாசகர் அனுப்பி வைத்த கவிதை எல்லாம் 
  ஒருவேளை வியூகத்தில் மாட்டிக்கொண்டு 
  அரண் தாண்டும் வழி தெரியாமல் 
  சிக்கித் தவிக்கிறதோ  ...அபிமன்யு போல ! 

  - கே.நடராஜன்

  **

  குருதியில் நனைந்த குருஷேத்திரத்தைக் கண்டு
  பரிதியும் அஞ்சி மறைந்தது அன்று!
  தியாக விளக்குகளின் சதைகளைக் கொன்று 
  பல வியூகங்கள் மென்று தின்றன அன்று!
  விரிந்த தாமரையாம் பத்மவியூகத்தால் வென்று
  எரிந்து சாம்பலாக என்ன நிலைத்தது அன்று!
  மகா பாரதமெனும் மாபெரும் பாடம்
  உணர்த்திய வழியில் 
  இயங்குதா உலகம் இன்று!
  புகட்டப்பட்ட பாடங்களெல்லாம் 
  புதைக்கப்பட்டுக் கிடக்க
  இன்னும் பேராசைகளில் சுழன்று
  அழிந்து கொண்டிருக்கிறது அகிலம் இன்று!

  - கீர்த்தி கிருஷ்

  **

  உள்ளே செல்பவன் உற்று  நோக்கி செல்ல வேண்டும்
  உள்ளே செல்லும்  வழியே திரும்பிட வேண்டும் !

  வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாது 
  வந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும் !

  விதி என்று எதுவும் இல்லை உணர்ந்திடுக 
  விதி என்பது கட்டுக்கதை என்பதை புரிந்திடுக !

  மதியால் வாழ்வதே சிறந்த வாழ்வு 
  மதிக்கு இணை வேறு உலகில் இல்லை !

  எண்ணம் ஒன்றாக இருந்தால் வழி மறக்காது 
  எண்ணம் சிதைந்தால் சிந்தனை சிதறும் !

  மனதில் வரும் வழியை பதிய வைத்திடு 
  மூச்சு உள்ளவரை நினைவில் நிற்கும் !

  - கவிஞர் இரா .இரவி

  **

  பத்ம வியூகம் சொல்லும் பாடம் - அது
    பாரதம் சொல்லும் வேதம்...
  தர்மனை சிறைபிடிக்கும் தந்திரம்- அது
    துரோணர் வகுத்த மந்திரம்...
  போர் செய்யும் புதியயுக்தி-எதிர்
    போராளியை வீழ்த்தும் புத்தி...
  அபிமன்யு நெஞ்சிலே உறுதி-போரில்
    அஞ்சாதவனுக்கு வெற்றியே இறுதி...
  நாற்றிசையும் துரத்திச் செல்-நீயும்
    நாற்படையும் வெற்றி கொள்...
  ஏழடுக்கு கொண்ட சுற்றுவட்டம்-இங்கு
    எதிரியைவீழ்த்த வேண்டும் திட்டம்...
  இலக்குள்ளவனுக்கு முடியாது பயணம்- அது 
     இல்லாதவனுக்கு மண்ணிலுண்டு மரணம்...
  சக்கரயுகம் ஒரு உளவியல்-இது  
    சிந்திக்க வைக்கும் அறிவியல்...
  புதிர்கள் கொண்ட போர்க்களம்-இது
    புத்தியோடு போராடும் களம்...
  அபிமன்யுபோரில் மரணம் கொண்டான்-அதற்கு 
    அர்ஜுனனும் கௌரவர்களை பழிகொண்டான்..
  வருவதை எதிர்கொண்டு வாழலாம்-நாமும் 
    வாழ்விலே வாகை சூடலாம்...
                                                                
  - கவிஞர்  நா.நடராசு

  **

  துணிப்பைகளை
  துணைக்கு அழையுங்கள் --
  தண்ணீர் தூக்க
  செம்புகளையும் சொம்புகளையும்
  கூப்பிடுங்கள் –
  பழச்சாறு பருக
  கழுவிய புட்டிகள் போதாதோ ?
  உறிஞ்சும் குழாய் எதற்கு ??
  நெகிழிப்பெண்
  நெஞ்சத்தில் புகுந்தாளோ
  மகிழ்ச்சி வேண்டாம் –
  அதுவும் கருவுற்று
  புற்று நோயை பெற்றெடுக்கும் –
  பிளாஸ்டிக் அரக்கனை அழிக்க
  ஒருவரால் முடியுமோ ??
  பத்ம வியுகம் அமைத்துக் கொல்ல
  இரண்டாம் துரோணன் என்று பிறப்பானோ ?

  - கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

  **

  மகாபாரதம் படித்தோர் அறிவர் பத்மவியூகம்!
  பலம் குன்றினும், படைகுன்றினும், புத்தி குன்றா!
  வியூகம் சிறப்பாக அமைவின் வெற்றி நமதே! 

  எல்லா வியூகத்திலும் வல்லவன் பார்த்தான்! 
  வியூகத்தை உடைப்பதிலும், உட்செல்வதிலும், வெல்வதிலும் வல்லான்!
  பக்திக்கும், புத்திக்கும் வெற்றி என கண்ணன் அவன் புறம் நின்றான்! 
  உடல் நுணுக்கம் மட்டும் போதா, மதி நுணுக்கம் மிக்கவன் வல்லான்! 
  என ஒவ்வொரு முறையும் நிறுபித்தான் பார்த்தான்!

  தாமரை மலர் போல்  சூழும் வியூகம் தனை!
  தனதாக்கி வென்று முடித்தான் பார்த்தான்!
  மதியின் வழி சென்று உடல் வாகுடன் போரிட்டான்!
  மாற்றான் எவனாகினும் அஞ்சான் ஆனான்! 
  மதியின் கண் செயல் புரிந்தாகினான்!  
  வெற்றி சூளுறை நணுகியதாக்கினான்!  

  - இனிய தமிழ் செல்வா, ஓமன்

  **

  அம்பும் வில்லும், 
  ஏந்திடும் போர்வீரா,
  இலக்கு உனக்கு நேராய்;
  பார்த்தா,
  பார் நேரெதிரே !

  வில்லை 
  பிடிக்கத்தெரியாதா உனக்கு !
  கைகளில்,
  என்ன நடுக்கம் ?

  போர்க்களம்,
  பார்க்காதவனா நீ !
  மனதில்,
  என்ன குழப்பம் ?

  தேர் மீது,
  ஏறிய உனக்கு;
  போரிட ,
  என்ன தயக்கம் ?

  பார் மீது தோன்றிய யாவும்,
  மண் மீது சாயும்,
  நீயும் நானும் கூட இதில் அடக்கம்;
  ஏன் இந்த கலக்கம் ?

  எதிரே நிற்பவர்,
  உன் எதிரி அல்ல,
  அவர் போராளி;
  நீயும் போராடு 

  கற்ற கலையை,
  போரில் காட்டு;
  வெற்றியை,
  நிலைநாட்டு 

  பலனைப்பார்த்தா;
  பணி  
  செய்வாய் 
  பார்த்தா ?

  செய்வதைச்சரியாய் 
  செய் ;
  வெற்றி 
  உனக்கு.

  - ம.சபரிநாத்,சேலம்

  **

  போர் புரிய வேழு களங்கள் கொண்டு
  வெற்றி தோல்வி பாதையோ இரண்டு 
  மரணம் அல்லால் மறுபிறவி உண்டு தாமரையிலை வடிவில் பத்ம வியூகம் 

  இன்றைய நிலை தமிழர் அரசியலில் அப்பத்ம வியூகம் அமர்ந்து கொண்டிட 
  தானே குழம்பி மக்களை குழப்புவதே 
  வாடிக்கையாகின செயலேதுமின்றி 

  போருக்கு போன அபிமன்யு தோற்று 
  திரும்பினான் மரணித்து; சேதி கேட்டு 
  அலறிய அன்னை மகனின் இழப்பை
  தாங்க வொன்னாமல்; கண்ணீரோடு
  மாரி லோங்கி அடித்துக் கதறினாள்

  இங்கே ஜெயிப்பார் தோற்பார் 
  யார் யாரோ; நாடாள்வார் இல்லை 
  வீடாள்வார் யார் யாரோ; எல்லாம் 
  பத்ம வியூக சக்கரம் பதில் கூறும் 
  பொரு பொருமை கடலினும் பெரிது

  - ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை மகாராஷ்டிரா 

  **

  பைங்கிளியே என்தேவி
  உந்தன் பார்வையின் உள்ளேதான்
  பத்ம வியூகங்கள்
  எத்தனை? எத்தனை?!

  பாரதப் போரின்
  பத்ம வியூகங்கள்
  பரந்தாமன் லீலைகள்
  பரிசுத்த வீரர்கள்
  பாண்டவர் பிழைத்திட
  பரமனே நிகழ்த்திய நிகழ்வுகள்!

  பார்த்தனுக்குச்  சாரதி
  கண்ணன் தான்!
  கண்ணே நம் காதலுக்கும் சாரதி
  கண்கள் தான்!
  பரந்தாமனின் வியூகம்
  பாண்டவரைக் காத்தது
  உந்தன் பார்வை வியூகமோ
  வாழ்க்கை வலைக்குள் நிரந்தரமாக
  வசீகரச் சிறைக்குள் வைத்துவிட்டதடி!

  - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்

   

   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai