வாசகர் கவிதை வர்ண ஜாலம் பகுதி 3

ஓவியனின் தூரிகையின் வண்ண ஜாலம்  உயிர்ப்புடனே தெரிகின்ற சித்தி ரந்தான்
வாசகர் கவிதை வர்ண ஜாலம் பகுதி 3

வர்ணஜாலம்

காகத்தின் பாதி நிறத்தில்
 தேகம் ஒன்று – இங்கு
கருமைக்கு வறுமையே இல்லை –
கூந்தலுக்குள், உன்  கூந்தலுக்குள், 
கருப்புத்தோகை விரித்த
மயில் எங்கே ?
தேடிக்கொண்டிருக்கிறார் சிலர்--
உன் விழியை பார்த்த விஞ்ஞானிகள்,
கரிக்கல்லிற்குள்  வைரம் இருக்கும்
அதிசயத்தை உணர்ந்தனரே !!
கழுத்தில் மச்சம் கொடுத்த இயற்கை,
கருப்பிற்கே நிழல் உண்டு
என்று புரிந்து கொண்டது.
இப்படி , கருப்பின் முழு வடிவம் தான் நீ ,,
என் மூளைக்குள் மட்டும் ஒரு வர்ண ஜாலத்தை
ஏற்படுத்துவது எப்படி ?

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

போயும் போயும் தீண்டக் கூடாத 
அவளையா காதலிக்கிறாய் எவ்
வகையில் தீண்டத்தகாதவளோ?
ஆமாம் தீண்டக்கூடாதவள் தான் 

முகூர்த்த நாளை குறி வைத்து 
வெற்றிலை பாக்கு வைத்து 
சொந்தங்களை வரவழைத்து 
கெட்டிமேளம் கொட்ட வைத்து 
தாலி கட்டி மனைவியாக்காது 
தீண்டக் கூடாதவள் தான் நீவீர் 
சரியாக த்தான் சொல்கிறீர்கள் 

வானவில்லின் வர்ணஜாலம்
வர்ணத்து பூச்சியில் வர்ணஜாலம்
உதயம் அஸ்தமத்தின் வர்ணஜாலம் 
வானவேடிக்கையின் வர்ணஜாலம் 
மனு குலத்தின் ஏற்றத்தாழ்வையும் 
நிர்ணயம் செய்வதும் வர்ணஜாலமே 

- வே. சகாய மேரி

**

ஓவியனின் தூரிகையின் வண்ண ஜாலம்
     உயிர்ப்புடனே தெரிகின்ற சித்தி ரந்தான்
தாவிவந்து கருத்தினிலே இன்பம் சேர்க்கும்
     தளிர்நடையை பயிலுகின்ற சிறுகு ழந்தை
காவியமாய்க் கிறுக்குகின்ற சித்தி ரங்கள்
     கரிக்கோடோ வெறுங்கோடோ சுண்ணக் கோடோ
கோவிலதன் கலைநயமாய்க் கண்க ளுக்குக்
     கொள்ளையின்பம் அளிக்கின்ற வண்ண ஜாலம்

வானவில்லில் தெரியுமந்த வண்ண ஜாலம்
     மாமழைதான் மேகமதில் தீட்டுங் கோலம்
பானகமாய்ப் பலூடாவின் வண்ண ஜாலம்
     பருகுவதில் தனியின்பம் சேர்க்கும் காலம்
மோனவெளிச் சிந்தனையில் மூழ்க மூழ்க
     முகிழுமொரு ஞானமலர் வண்ண ஜாலம்
தானடைதல் வாழ்வினுக்குப் பொருளைக் காட்டும்
     தனிப்பிறவிக் கனியாகும் ஜால மன்றோ!

- கவிமாமணி " இளவல்" ஹரிஹரன், மதுரை

**

வாழும் வரை
வாழும் தரையில்
யாரையும் வெறுக்காதீர்கள்.
ஊரையும் பகைக்காதீர்கள்.
நாளுக்கொரு மாற்றம்
ஆளுக்கொரு மாற்றம்
நேற்று இருப்பவர் இன்றில்லை.
இன்று இருப்பவர்
நாளை இல்லை.
விட்டுக்கொடுப்பவர்
கெட்டுப்போவதில்லை.
மனதை ஏழு வண்ணம்
கொண்ட வானவில்லாக்குங்ஙள்.
சரிசமமாக சேர்ந்திருந்து
நம் நிரந்தரமில்லாத வாழ்வினை வானவில்லில் கலந்து
ஒன்றாக நன்றாக என்றாக சேர்ந்தே
தெரியும் வர்ணஜாலம்
போல ஜொலிக்கும் படி
வாழ்ந்து காட்டுங்கள்.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**

பார்க்கும் விழிகள் பார்த்து களிக்க 
இயற்கை வண்ணம் வானவில்லில் 
வர்ணஜாலம்||

ஒர் நிற த்தோடோர் நிறஞ்சேர்க்க வேறோர் 
நிறமாய் நிறமாற்றம் காட்டும் 
வர்ணஜாலம்||

வர்ணத்து பூச்சின் வர்ணப் பூச்சுகள்
இயற்கை ஈந்த வரப்பிரசாத மதிலும் 
வர்ணஜாலம்||

ஆண் டாண்டி லோர்நாள் தீபவொளித் 
திருநாளில் வானவேடிக்கை ஒளிரும் 
வர்ணஜாலம்||

அந்தி வேளை ஆதவன் அஸ்தமிக்க
கீழ்வானத்தில் காணக் கிடைத்திடும் 
வர்ணஜாலம்||

இங்கே மேலோர் கீழோரென இனத் திற்கினம் 
மனம் நோகச் செய்திடும் வர்ணஜாலம்||

இவ் வர்ணஜாலம் மனுவை இனம் பிரித்து 
ஓரங்கட்டி தம்மை உயர்த்துதே 
இது என்ன ஞாலம்||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**
வர்ணஜாலம் தினமும் நமக்கு காட்டிடும்
வானத்தை உற்று நீங்கள் பாருங்கள்!

கவலை இருந்தால் காணாமல் போகும்
கண்ணிற்கு விருந்தாக காட்சித் தரும்!

வானவில் தோன்றும் சில நிமிடங்கள்
வண்ணத்தின் அழகு வார்த்தையில் அடங்காது!

அதிகாலையில் வானம் ஒரு மாதிரி
அந்தி மாலையில் வானம் வேறு மாதிரி!

பொன்னைக் கொட்டியது போலவே இருக்கும்
பார்வைக்கு பொன்னாகவே காட்சித் தரும்!

நீல உடை கட்டியிருக்கும் ஒரு நேரம்
நித்தமும் ஒவ்வொரு ஆடை அணிந்திருக்கும்!

பார்த்து ரசிக்க விழி இரண்டு போதாது
பரவசம் தரும் புத்துணர்வும் தரும்!

இயந்திரமயமான உலகில் இயந்திரமான மனிதர்கள்
எப்படி   வானத்தை ரசிப்பார்கள் நேரமில்லை!

- கவிஞர் இரா. இரவி.

**

பருந்து கண் படாமல் 
கலர் கோழிக்குஞ்சுகள் 
அங்காடி அலமாரியில்
ஆளை அசத்தும்  
குளிர்பான பாட்டில்கள்    
அலறிக்கொண்டு போகும்
ஆம்புலன்ஸ் காட்டும்
அவசர சமிக்கையும் 
வாழ்வை நிர்ணயிக்கும் 
நிதானமே நிதர்சனம் 
நின்று போ சொல்லும்
டிராபிக் சிக்னலும் 
வர்ணங்கள் தான் .
வாய்த்த இடங்களும், 
வாழும் முறைகளும் தான் வேறு 

- எம்.  விக்னேஷ் 

**

வண்ணத்தின் வித்தை காட்டுது பாடம்
நெஞ்சத்தின் பித்தை போக்குமே நாளும்
வண்ணங்கள் ஆயிரம் உலகினில்  உண்டு 
வாழ்வினை விளக்குதே தனிப்பண்புகள் கொண்டு 

வெண்மையே தூய்மை என்றவோர் உண்மை
கருமையே காட்டும் ஈர்த்திடும் பண்பை
பசுமையும் பாங்கெனக் காட்டுதச்  செழுமை
செந்நிறம்  செய்திடும் நல்லபுரட்சியின் வன்மை

மஞ்சளே சொன்னதே உன்னத வெற்றி
நீலமும் அறிவென விரிந்ததே சுற்றி
காவியே காட்டுதே தியாகத்தின் மாண்பு
கருஊதாவும் இங்கே கற்பனைத் தாம்பு

ஒவ்வொரு நிறமும் சொல்வது ஒன்று 
நல்லதோர் திறமை தனிமனிதரில் உண்டு
அந்தவோர் சிறப்பினைத் தேடியே கண்டு
நலத்துடன் வாழ்வினை நடத்திடு இன்று!

(தாம்பு - ஊஞ்சல்)

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

அழகைக் காண காட்டும் அனைத்து உயிரும் மகிழும் !
அழகில் மயங்கித் தானே அனைத்து உயிரும் கூடும் !

ஆன மட்டும் ஆடும் அனைத்துப் பாட்டும் பாடும் !
ஆன உறுதி யோடே ஆடிப் பாடி கூவும் !

மயங்க வைக்கத் தானே மலைக்க யாவும் செய்யும் !
தயக்கம் இன்றி யாவும் தணிக்கத் தானே செய்யும் !

பெட்டைக் காக சேவல் பெரிதும் அழகு காட்டும் !
ஒட்டி ஒட்டி உரசும் ஓடும் ஏறி மிதிக்கும் !

பாட்டுப் பாடும் பறவை பறவை உறவை நாடும் !
கூட்டும் குரலைக் கூட்டி கொஞ்சும் உறவைச் சேரும் !

ஆடு மாடு கூட அழகாய்க் கத்தி அழைக்கும் !
ஆடு மாடு கூடும் ஆசை தீர்த்துக் கொள்ளும் !

பூக்கள் அழகு காட்டும் பொழுதும் உறவுக் கேங்கும் !
ஈக்கள் பூக்கள் மேலே இணைந்தே ஒன்றாய் இழையும் !

உறவுக் காலம் வந்தால் உறவுக் காக ஏங்கும் !
உறவும் பசியாய் ஆகும் உறவு தீர்ந்தால் ஓடும் !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

வண்ணமயக் காட்சிகளின் அந்தி வானம்
-----வார்த்தைகளில் வடிக்கவெண்ணா அழகுக் கோலம்
கண்களினை மயக்குகின்ற எழிலின் ஆட்டம்
-----கற்பனையை விரிக்கின்ற வனப்பின் தோட்டம் !
எண்ணங்கள் அலைமோதும் தன்மை யாக
-----எழுதாத ஓவியமாய் மேகக் கூட்டம்
பண்ணிசைக்கும் குயில்தோப்பின் இன்பம் போல
-----பார்வைக்குத் தெவிட்டாமல் மகிழ்ச்சி ஊட்டும் !
பூத்தமலர் இதழ்களாக மஞ்சள் நீலம்
-----பூசிவிட்ட இளம்சிவப்பில் முகில்கள் ஓடும்
கூத்திசைக்கும் கலைஞர்தம் அபிந யத்தைக்
-----கூட்டமாக வந்துமேகம் ஆடிக் காட்டும் !
காத்திருக்கும் காதலிளம் கன்னிக் கூந்தல்
-----காற்றினிலே அலைவதுபோல் நாணிக் கோணும்
மாத்தமிழில் புனைத்நிட்ட சுரதா பாட்டில்
-----மலைக்கவைக்கும் உவமைகளாய் வியப்பைக் கூட்டும் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

பால் வடியும் லில்லி 
கணுக்காலிகள் 
ஏறி ஒடியும் மல்லி!
காற்றிலாடும் செவ்விதழாய்
செம்பருத்தி!
முள்ளுக்குள் சிக்கிய ரோஜா!
மஞ்சல் நிழல் கொட்டும்
பூமரம் ஒன்று!
இன்னும் என்னனவோ
பேர் அறிய புஷ்பங்கள்!

அங்கு வேலை செய்யும்
நீலச் சட்டை செகுரிட்டியின்
வண்ணம் கூட அதே நிறமிருக்கும்
பூ ஒன்றை எனக்கு
அது ஞாபகப் படுத்துகிறது

பார்த்த  பூக்களோடு
அவற்றின் வண்ணங்களும்
என் கண்ணோடு பதிவாகி
வீடு வருகிறன!

என் கண் பார்த்த 
அத்தனை நிறங்களும்

என் தலைக்கு மேல்
விரிந்தோடி இருக்கும்
மரக்கிளை ஒன்றில்
தலை காட்டி காட்டி
மறையுமொரு ஒற்றை
பச்சோந்திக்குள் வாழ்கின்றன!

-அ.அம்பேத் ஜோசப்


**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com