பறவை என்ற தலைப்பில் வாசகர் கவிதைகள் பகுதி 4

மனிதர்களே நீங்கள் பறக்கும் சக்தியற்றுப் போனீர்கள் நாங்களோ காற்றிலேறி விண்ணைச் சாடுகிறோம்
பறவை என்ற தலைப்பில் வாசகர் கவிதைகள் பகுதி 4

பறவை

மனிதா பறவை பேசுகிறேன்...

எங்களுக்குள் கட்சியில்லை
தலைவனில்லை
பிரிவில்லை
அடிமைத்தனம் செய்யாத
சுதந்திரப் பறவை நாங்கள்
கிடைத்த உணவை
பகுத்துண்டு உண்ணுகிறோம்
பேதமில்லாத நாங்கள்
சதை கொழுத்து சாதியம் பேசி
வீணாய் போன சோம்பேறிகள்
எங்கள் கூட்டத்தில் இல்லை
சொத்தும் இல்லை
சொந்த ஊருமில்லை
பரந்த காட்டில்
சிறு கூடே
எங்கள் குடில்
எந்த உயிரையும் வேட்டையாடி
வதம் செய்யாத
பிறவிகள் நாங்கள்
வேறொரு கூட்டில்
அத்து மீறி நுழையோம்
அஞ்சோம்
வனங்களை அழித்தீர்
தொலைத்தோம் உறவுகளை
காற்றை கெடுத்தீர்
அழிந்தோம் நாங்கள்

அனைத்து உயிர்க்கும் சமம்
இயற்கை
அழிப்பதை நிறுத்து
நாளை நீ அழிவதற்குள்.
 
- தமிழ்ப்பேரொளி ஜீவா காசிநாதன்

**
இரவுப்பறவை கறுப்புஅலகுகளால்
இதயத்தைக் கொத்திக்கொண்டிருக்கும்
சப்தங்கள் நிரம்பிய நிர்ச்சலனம்
மெளனத்தின் தியானம் மயக்கத்தின் ஞானம்
கனவுகள் சிலிர்த்து கண்களில் வழிய
கவிதைகள் ஆயிரம் மழைத்தூறலாய்ப் பொழிய
விடிய மறுத்து விடிய மறந்து
இரவுப்பறவை உறவாடும் போது
இருவிழிகளோடு உரையாடும் போது
காலம் முடக்குவாதத்தில் கிடக்கிறது
மேகங்களில் நீராடிய பறவை திரும்ப வரும்போது
அதன் கண்கள் வானத்தைச் சுமந்துவருவது போல்
இருட்டின் ஆன்மாவைக் கிடக்கும் என்னில்
குளித்துவிட்டுப் பிரிந்துபோகும்
இரவுப்பறவையின் விழிகளில் என்மரணம்

- கவிஞர் மஹாரதி

**

மனிதா!
உணர்ந்து கொள்!
தலையில் “கணம்” இல்லாமையால் தான்
உயர உயரப் பறக்கிறது பறவை!

நீ கற்றதெல்லாம் பறவையிடம்!
கற்றதனால் ஆய பயன் என்கொல்?

காக்கையிடம் ஒற்றுமை கற்றாய்!
மயிலிடம் நடனம் கற்றாய்!
குயிலிடம் பாடல் கற்றாய்!
நெருப்புக் கோழியிடம் ஓட்டம் கற்றாய்!
குருவியிடம் சுறுசுறுப்பு கற்றாய் !

பறவையிடமிருந்து
எப்போது தான்
வாழ்கையை கற்றப் போகிறாயோ ?

நீ அவற்றுக்கு
அளிக்கும்
குரு தட்சணை தானா,
வெடிகளும் கைப்பேசி கோபுரங்களும் !
மறந்து விடாதே
வள்ளுவ மொழியை !
“நன்றி மறப்பது நன்றன்று”

வாழு! வாழ விடு!

- த. தினேஷ்,கடலூர்

**
நீலம் மெழுகிய வானம் மேயும்
இறக்கைச் சுதந்திரத்தால்
ஞாலம் அளக்கும் வாமனச் சீவன்கள்!

பழம் தின்று கொட்டை போட்ட
பழமொழிக்குச் சொந்தக்காரர்களாய்
பார் நிறைக்கும் பசுமையாளர்கள்!

ஆறறிவாளன் மறந்த
அரும்பெரும் ஒற்றுமையை
அகிலத்திற்கு சுட்டிக் காட்டும்
அஃறிணை உயிரிகள்!

இவை போல்..
அடுத்த பிறப்பிலாவது
குருவியாகவோ குயிலாகவோ
மயிலாகவோ மைனாவாகவோ
காக்கையாகவோ காடையாகவோ
கொக்காகவோ கோழியாகவோ
பறந்திடும் வரம் தா இறைவா!

- கீர்த்தி கிருஷ்

**

அடிமையின் நிலைகளே இல்லை
அடக்கிடும் வன்முறை இல்லை
முடித்திட ஆர்வமே கொண்டு
முனைந்திடும் முயற்சிகள் உண்டு
குடித்தனம் என்பதைக் கண்டு
குலவிடும் காதலில் நின்று
வடித்திடும் நிறைவினைக் கொண்டே
வாழ்ந்திடும் மகிழ்வினில் பறவை 

கெடுத்திட நினைக்கா உள்ளம்
கீழெனும் சுயநலம் இல்லை
அடுத்தவர் வாழ்வினை பார்க்கா
அடுத்தநாள் உண்டிட சேர்க்கா
தொடுத்திடும் கடமையில் என்றும்
துயரென சொல்லில் நோகா
மடுவென மலையென ஏகும்
மனிதரைமயக்கிடும் பறவை 

- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்.

**
விடியற்காலையில் 
விழித்தெழு என்ற
விழிப்புணர்வு தந்தது..

உணவுகிடைக்க நாளும்
உழைத்திரு என்ற
உண்மையை உணர்த்தியது..

பகுத்துண்டுவாழும் பண்பை
நமக்குச்  சொல்லி
பாடத்தை புகட்டியது..

கவலையின்றி வாழும் 
கலையை நமக்கு
நாளும் கற்றுக் கொடுத்தது..

தேடல்கொண்டால் வாழ்வில் 
தோல்வி இல்லை என்ற 
தத்துவத்தைச் சொன்னது..

- கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்.

**

வண்ண வண்ணப் பறவைகள்;
வானை முட்டும் பறவைகள்;
எண்ணச் சிறகை விரித்திடும்
எண்ணிலா வகையில் பறவைகள்! 

காக்கை ஒற்றுமை ஊட்டும்;
குயிலும் இனிமையாய்ப் பாடும்;
ஊக்கங் கொண்டு கிளியும்
உரக்கப் பேசிப் பழகும்! 

மயிலோ நடனம் ஆடும்;
மாடப் புறாவோ மயங்கும்;
ஒயிலாய் வான்கோழியுமே
மயிலென எண்ணி ஆடும்! 

இவை போன்று பறவையில்
இயல்புகள் தனித்தனித் தன்மைகள், 
அவையவை தனித்தனித் திறமைகள், 
அனைத்தும் பெற்றப் பறவைகள்! 

பறவைகள் போலவே நாமும்
புவியும் சிறந்து விளங்கிட
உறவை நிமிர்த்தும் பாங்கிலே
பறவையாய்ச் சிறகை விரிப்போம்! 

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**

பறவை போல நானும் கூட 
     பறக்கப் போகிறேன் !- வானில் 
பறவை போல பறந்து மண்ணை
     பார்க்கப் போகிறேன் !

பருத்த உடலைத் தக்கை யாக்கப்
     பயிற்சி செய்கிறேன் !- உயர் 
அருமைக் கலையால் இந்த உலகை
     அளக்கப் பார்க்கிறேன் !

அந்தக் கால சித்தர் போல
     ஆக முயல்கிறேன் !- அவர் 
தந்த கலைகள் சரியாய்க் கற்றுத் 
     தானே வருகிறேன் !

முடியா தென்ற முடிவை நானும் 
     முடித்து வைக்கிறேன் !- நாளும் 
விடியல் போல விடியத் தானே 
     விரும்பி உழைக்கிறேன் !

ஓகம்,  யோகம், 'யோகா' ஆகி
     உலவப் பார்க்கிறேன் !- அதை
ஏக மாக எண்ணிக் கற்றே
     இன்பம் காண்கிறேன் !

உலக மாந்தர்  முதன்மைத் தமிழர்
     உணர்வை மதிக்கிறேன் !- இந்த 
உலக மொழியாய் உயர்ந்த தமிழை
     உணர்ந்தே உயிர்க்கிறேன் !

-ஆர்க்காடு. ஆதவன்.

**

கூடுவிட்டு கூடுதேடும் புதிய பறவைகள் 
கிராமம்விட்டு நகரம்நோக்கி நகர்ந்த பறவைகள்
வேலைத்தேடி வீதிவீதியாய் திரிந்த பறவைகள்
வேலையில்லாமல் வீடுதிரும்ப தயங்கும் பறவைகள்
பிடித்த வேலையைவிட - கிடைத்த வேலையை
பிடித்தவேலையாக்கி வாழும் பட்டதாரி பறவைகள்!!!

இணையதளத்தில் விழுந்துவிட்ட கணினி பறவைகள்
இயல்பான வாழ்வியலை இழந்த நீர்ப்பறவைகள்
அந்நியநேரத்தில் வாழும் இந்திய பறவைகள்
சங்கங்கள்வேண்டி சங்கமிக்கும் கூட்டுப் பறவைகள்
வேலைசுமையால் வெட்டுப்படும் வெட்டுப் பறவைகள்
சொந்தவாசலை இழந்த சொாக்கவாசல் பறவைகள்!!!

மொரிசியஸ்நாட்டு டோடோ பறவைபோல் அழியாமல் - 
மிடுக்காய் வாழதுடிக்கும் கழுகு பறவைகள்
காலம்கடந்தும் பயணிக்கும் ஸ்விஃப்ட் பறவைகள்
தன்மானமெனும் சிறகுகள் சிதைக்கபடும் போதெல்லாம்
நோதாஜியாய் வெகுண்டாலும்  - காலத்தின் கட்டாயத்தால்
காந்தியநிலைக்கு மாறிவிடும் அகிம்சை பறவைகள்!!!


-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

(குறிப்பு : டோடோ பறவை- மொரிசியஸ் நாட்டில் வாழ்ந்துமறைந்த பறவை இனம் & ஸ்விப்ஃட் பறவை - ஓய்வெடுக்காமல் பத்துமாதம்வரை தொடர்ந்து பயணிக்கும் பறவைகள் )

**

இறகை விரித்து
இரை தேடிச் சென்ற பறவை
கூட்டுக்குத் திரும்பினால்
இரையொடு வரும்
கூட்டுக்கே வரவில்லையானால்
இரையாகி இருக்கும்!

பழத்தை உண்டு மரத்தை விதைப்பதில்
இயற்கை விவசாயி!
உலகிலேயே பழம் தின்னு கொட்டை போட்ட
முதல் உயிரினமும் பறவையே!

கூட்டை கட்டி உள்ளே போகும்-முட்டை
ஓட்டை உடைத்து வெளியே போகும்
தன் இறக்கை விரித்தால் எங்கும் போகும்
தன் இலக்கை இழந்தால் எங்கே போகும்?

ஒற்றை சிறகோடு எந்த பறவையும் உயரே பறந்ததில்லை!
பறவைகள் இரண்டு வானில் பறந்து உரசிக்கொண்டதில்லை!
பாதை போட்டு எந்த பறவையும் பயணம் போனதில்லை!
கடவுச் சீட்டு வாங்கி எந்த பறவையும் கண்டம் கடந்ததில்லை!

பறவைகள் உயர உயர பறந்தாலும்
பறவைக்கு உணவும் வீடும் மண்ணில்தான்!

-கு.முருகேசன்

**

உதய ராகம் இசைக்கும் பறவைஉலா வானிலே_என்,
உயிரின் ராகம் மீட்டும் நேரிழைநேசம் நெஞ்சிலே
தென்னை இளங்கீற்றில் ஊஞ்சலாடும்  தென்றல்
தெம்மாங்குப் பாடக் குயிலும், கிளியும் 
அனுப்பிய அஞ்சல் மணிப் புறாக்கூட்டம் 
கொண்டு வந்ததா, உன்னைத் தேடியே
பூத்த விழிகளில் முறுவலோடு 
வருவாயா, நீ என்னை நாடியே
வண்ண வண்ணப் பறவைகள் வானிலே, 
உந்தன் சாயலிலே உந்தன்சாயலிலே
விண்ணில் விமானம்,என்னுள் பாவை
புள்ளினமே,புள்ளினமே, உன்னாலே நீ,
இடம், திசைப் பெயர்ந்து,  
இனம், மதம் களைகிறாய்
மனிதா ஓ மனிதா
இனம், மதம்,குலம் பார்த்தே நீ இணைகிறாய்
புள்ளினமே புள்ளினமே
கைம்மாறு கருதாது, பசுமைத் தழைத்திட, 
நீ விதைக்கிறாய்மனிதா ஓ மனிதா
கைமேல் பலனுக்காய்,  
காடு வனமெல்லாம் நீ அழிக்கிறாய்
பறவை இனமே நீவீர் பறந்திடல் காணில் ,
கண்ணீரும் புன்முறுவல் ஆகும்
பாதகம் செயும் மனிதருக்கெல்லாம், 
சகமனிதர் கண்ணீரே அமுதமாகும் ஆதலினால் 
மனித குலமே, மனித குலமே, பறவை நல்குரு உனக்கு 
மங்கை நல்லாளே, மங்கை நல்லாளே, 
நாம் மணம் கொள்ள பறவைவழி நமக்கு 

- கவி.R.அறிவுக்கண் .

**

கானகமும் சோலையும் பறந்து திரியும் பறவையே! வண்ணப் பறவையே  !
கூக் குக்குக் கூ  கீக் கிக்கிக் கீ  குக்குக் கிக்கிக் குக்கூ

உந்தன் குரலோசை உலகை மயக்குதே 
நந்தவனமே, பறவை இனப் பந்தம் ஆனதே  !

விண்ணில் பறந்திட, விமானம் கண்டோம்,
உன்னாலே உன்னாலே !
விண்கோள்களில் வாழ்ந்திட, வெற்றியும் காண்போம், எம்மறிவாலே  !

ஆறறிவு மனிதனே! நீ உயர்ந்தவன் ஏன் மயங்குகிறாய் ?
அன்பும், பண்பும் பேணிடப்  பிறந்தவன், நீ தடுமாறுகிறாய் !

மனிதப் பிறப்பு எப்படித்தான் விளைந்தது, மூலம் என்ன?  என்ன?
மானுடப் பிறப்பின் அனுகூலம் அறிந்தும், என்ன? என்ன?

உன்னைப்போல், உன்னைப்போல், மதம் இன்றி வாழ்ந்திட வேண்டும்  !
உன்னைப்போல் உன்னைப்போல் சாதி இன்றி வாழ்ந்திட வேண்டும்  !

- இலக்கியா

**

மனிதர்களே நீங்கள் பறக்கும் சக்தியற்றுப் போனீர்கள்.
நாங்களோ காற்றிலேறி விண்ணைச் சாடுகிறோம் – எங்கள்
காதற் பேடுகளின் கடைக்கண் பார்வைக்காக.
நீங்கள் நாங்களாக இருந்தால்
உங்கள் காதலிகளுக்காகக் கட்டும் வசந்த மாளிகைகளில்
வானத்து நட்சத்திரங்களையெல்லாம்
கொண்டுவந்து தோரணங்களாகக் கட்டித்
தொங்க விட்டிருப்போமென்று பீலா விடுவீர்கள்.
உங்கள் பீலாவைக் கேட்க, கூட்டம் அலைமோதியது.   
நாங்கள் உங்களைப் பார்த்துச் சிரித்தோம்.
வானத்தை அண்ணாந்து பார்த்து
எல்லையிலாப் பிரபஞ்ச விரிவை
எண்ணி இறையை உணராமல்
கல்லுக்கும் கட்டவுட்டுக்கும்
பால்வார்க்கும் உங்களை என்னென்பது?

- சித்தி கருணானந்தராஜா

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com