கடந்த வாரத் தலைப்பு வாராணசி! வாசகர் கவிதைகள்!

வாரணாசி என்றதுமே வரலாறும் தொடங்கிவிடும்.!
கடந்த வாரத் தலைப்பு வாராணசி! வாசகர் கவிதைகள்!

வாரணாசி

வாரணாசி என்றதுமே வரலாறும் தொடங்கிவிடும்.!
ஊரறிய ஜோதிலிங்கம் ஒளிதருமாம் கங்கைநதி..!
ஆரவாரம் எப்போதும் ஆர்ப்பரிக்கும் மக்களலை.!
பாரதத்தில் முக்திதரும் பக்திக்கோர் அடையாளம்.!
.
வேதங்கள் முழங்கிடவே வேதாந்தம் தழைத்துவிடும்.!
பாதகங்கள் தொலைத்துவிட பக்தியிலே மூழ்கடிக்கும்.!
சாதகமான சூழ்நிலையும் சாதுவுக்கே அமைவிடமாம்.!
வாதங்கள் பொய்த்துவிடும் வாரணாசி என்றதுமே.!
.
படித்துறைகள் பலவுண்டு படிப்பதற்கே இடமுண்டு.!
விடியலிலே எழுந்துவிட வாரணாசி பழகிவிடும்.!
படிகொண்ட பக்தியங்கே புரண்டோடும் நதிக்கரையில்.!
முடிமுழுக மூழ்கிவிட்டால் மோட்சமுண்டு நிச்சயமாய்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

 **

மூச்சு திணறிய கங்கை நான் இப்போ சுவாசிக்கிறேன் 
நச்சு இல்லா காற்றை  வாராணசியில் !
பேச்சு மூச்சு இல்லாமல் போய் விடுமோ என அஞ்சிய 
எனக்கு தெரியுது ஒரு விடிவெள்ளி ! 
உங்க மன அழுக்கை கழுவி விட்டு வாங்க நீங்க 
வாராணசிக்கு ! குப்பை தொட்டி அல்ல நான் 
உங்களுக்கு ! நசித்து விட வேண்டாம் மீண்டும் 
கங்கை நதி நான் ஒரு அழகு ஆபரணமாக  
இருக்க வேண்டும் வாராணசிக்கு இன்றும் என்றும் ! 
வாருங்க வாராணசிக்கு ... என்னை இம்சிக்காமல் 
ரசித்துப் பாருங்கள் நான் துள்ளி ஓடும் ஓட்டத்தை !

- K.நடராஜன் 

**
வரிசை வரிசையாய்
வருடக்கணக்கில் வந்து சென்றார்கள்
வாரணாசிக்கு - பாவ
விமோசனம் கிட்டுமென்றும் -
மோட்சம் கிட்டுமென்றும் - ஆனால்
எப்போது மோட்சம் கிட்டும் - தன்னிலை
எப்போது  மாறுமென்று -
என்றெண்ணிய வண்ணமாய்
ஏங்கி கொண்டிருந்தான்
அங்கேயே வாழும் பிச்சைக்காரன்.....!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**
ரயில் ஏறினேன்  என் அப்பத்தா இல்லாமல்,
தாமிரபரணி கரையில்  பிறந்து,
காவேரியில் ஆடி  பெருக்கு  கொண்டாடி,
வைகையில் கல்லழகர் இறங்குவதை கைகோர்த்து  பார்த்து,
பின் சென்னை கடற்கரையோரம்  தனியாக  மகனிடம்  அவள்  அடைக்கலம்!
இன்று சுருக்கம் கொண்டு, பார்வை மங்கி, 
சொல்வது கேளாமல், உணவையும் தவிர்த்த அவள் ,
கங்கையை காண துடித்தாள், அழைத்து  சென்றேன் அவளை, 
வாராணசி சென்றால்  மோக்ஷம்  என்பதால்!
அவளோ அங்கு முக்தி வரை கங்கை என தீர்மானித்தாள்!
செய்வது  அறியாது  தனியாக ரயில்  ஏறினேன்,
மனம் கனத்தது!!

- பிரியா ஸ்ரீதர்   

**
முக்திக் கொருநகர் துடைபழி யெனபல
திக்கில் வரும்பலர் வழியிது  திறன்மிகச் 
சொக்கும் உயர்நகர் முதல்மறை எனவொரு
ருக்கில் ஒளிதரு அரனுறை நகரெனதென் 
திக்கில் நடம்புரி சிவன்சடை குளிர்நதி
பக்கீரதி என்னும் சிரநதி குடிநகர்
மிக்கக்  கவிதரு புலவர்கள் பலர்புகழ்
தக்கச் சிறுநதி வருணாஅசி தவழிடமே!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**
இந்து மக்களின் புனித தலமே!
அள்ளி முடிந்த முடியில் கங்கையுடன்
அருளிய ஆதிசிவன் தனை போற்றிய
புண்ணிய பூமியே – வாரணாசி !

மேற்கு இமயம் தொடங்கி
எழில் கொஞ்ச வளைந்தோடி வரும்
கங்கையின் கரையில்
புனிதம் கண்ட பூமியே – வாரணாசி !

புனித நதியாம் கங்கையிலும்,
புண்ணிய பூமியாம் உன்னிலும்,
எண்ணியபடியே தூய்மை காப்போம்
கண்ணியத்துடனே - வாரணாசி !

- தனலட்சுமி பரமசிவம்

**
பாவம் போக்கும் கங்கை
பாய்ந்தோடும் பரணியின் நங்கை
அன்னமளித்தால் அடங்கும் பசி...
மனதாசை அகற்றிடுபனம் வாராணசி
வந்தவர் வணங்கியே தஞ்சமடைந்தால்
வஞ்சமின்றி வரந்தரும் நல்லாசி...
சஞ்சலத்தை போக்கும் கங்கையாறு
அருமருந்தாய் துணைநிற்கும் திருநீறு....
மனமுருக வேண்டியே மண்டியிட்டால்
வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் லிங்கேசா.....
பக்தர்கள் பாவம்களைந்திடு கருணைவாசா...

- கவி தேவிகா

**

வானத்தின் ஆசி பெற்ற இடம் வாரணாசி!
மூன்று நதிகள் சங்கமிக்குமிடம்- அதில்
மூழ்கி எழுவோர்க்கு முக்தி கொடுக்குமிடம்!
வாரணாசிக்கு வேறு பெயர் காசி!
வாழ்கை முழுக்க காசை நினைக்கும் மனம்!
வாழ்கையின் இறுதியில் காசியை நினைக்கிறது!
ஆசை பட்டுப்போகச் சொல்வதும் வாரணாசி!
பனராஸ் பாட்டுக்குப் பெயர் போனதும் வாரணாசி!
வாரணாசி திருஓட்டைப் பெருபவனை ஆண்டியாக்குகிறது!
வாரணாசி தெருஓட்டைப் பெருபவனை அரசனாகக்குகிறது!

-கு.முருகேசன்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com