மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 3

அறத்தின் தலைவர், அகிம்சையில் ராஜகுரு, அவனியெங்கும் புகழ்பெற்ற ஞானி!
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

கோடாரியால் கதை சொன்ன 
நீதி தேவதைகள்
மரங்களுக்கான அணிகலனானார்கள்

கதை கதையாய் பாடம் வைத்து
ஆரம்பப்பள்ளியிலே மரம் நட்டு
அசோகரை பரப்பினார்கள்

நாட்டு நலப்பணித்திட்டம் 
சாலையோரத்தில் செடிகள் செய்து
விழிப்புணர்வு செய்தார்கள்...

கல்லூரி சென்றதும்
கசங்கி வாடிய செடிகளுக்கு
நீரூற்ற மரத்தை வச்சவன் இல்லை...

நூறுநாள் திட்டத்து காந்தி 
சிரித்தே சம்பளமிடுகிறார்
பூத்துக் குலுங்கிறது மரங்கள்....

மரத்தை வைக்காதவரும்
தண்ணீரடலாம் சர்வேசா...
காந்தி சிரிக்க வேண்டும்!

- வீரசோழன்.க.சாசோ.திருமாவளவன்

**

மகாத்மாகாந்தி மாமனிதர் அல்லவா! அவர்
மனவுரம் கல்வியின் பலனல்லவா !  
அமைதியும் அன்பும் நற்பண்பின் விதைகளல்லவா ?
அதையவர் வாழ்ந்தது வெற்றிக் கதைகளல்லவா ?


மனமே மனமே உனைத்தான் உயர் வென்றார் !
தோல்வியும் மனவூக்கம் தரும் ஆக்கம் என்றார்!
நன்றானது கொள்கையானாலும் வன்முறை கூடாதென்றார் !

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டமே !
எதையும் சாதிக்க முடியும் தேரோட்டமே !
காந்தி சிந்தனை படிப்புடன் சேவையுமே !
உடன் மாணவர் ஆற்றல் வெளிப்படுமே ! 

மகாத்மா காந்தி அண்ணல் சொன்னார்,
சிறந்தது மனிதம் என்ற புத்தகமே !
சீர்தூக்கிப் பார்ப்பின்  வணங்கும் நித்திலமே !

- கவிஞர் இலக்கிய அறிவுமதி

**

அண்ணல் தேசபிதாவே
அஹிம்சை சத்தியம்
புன்னகையுடன் கடைபிடித்து
உடல் வருத்தி கண்ணீர் விட்டு
வாங்கித் தந்த சுதந்திரம்
விழலுக்கு இறைத்த நீராயின!
அப்பாவி மக்களின்
அன்றாட வாழ்க்கையே
வன்முறை வெறியாட்டத்தில்
குண்டு முழக்கத்தின் நடுவே
குருதியில் மிதக்கிறது!
துப்பாக்கிக் குண்டில்
நீ மட்டும் மடியவில்லை
அஹிம்சை சத்தியம்
மனிதநேயம் அன்பும்
மடிந்து கொண்டு வருகிறது!
சுதந்திர இந்தியாவில்
பட்டாம் பூச்சிகள் போல்
சுதந்திரமாய் மக்கள்
பறக்கலாம் நினைத்தாய்!
பறக்கும் பட்டாம் பூச்சிகள்
சிறகுகளைப் பிய்த்து விட்டு
பறக்கச் சொல்லும்
பாரத நாட்டில் நாங்கள்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
வெளிச்சம் என்று நினைத்து
தீயில் விழுந்து நாங்கள்
வெந்துகொண்டு இருக்கிறோம்!
சுதந்திர ஆன்மீக வெளிச்சம்
எங்களுக்குக் கிடைப்பதற்கு
எப்போது இங்கு வருவாய்?
மீண்டும் நீ வந்தால்
மனிதநேயம் உலகில்
மீண்டும் துளிர்த்து விடும்
மகாத்மாவே மீண்டும் வா!

- கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

ஆங்கிலேயர் நமது நாட்டை
     அடக்கி ஆண்டனர் !- நாளும்
தாங்க முடியா கொடுமை செய்தே
     தழைத்து வந்தனர் !

அடிமையான நமது மக்கள்
     ஆர்த்தே எழுந்தனர் !- வான்
இடியைப் போல இடித்துத் தாக்க
     எண்ணம் கொண்டனர் !

அண்ணல் காந்தி அனைவர் தமையும்
     ஆற்றுப் படுத்தினார் !- மக்கள்
எண்ணம் தன்னில் அன்பு விதையை
     இனிக்கத் தூவினார் !

அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்
     அடங்கி நின்றனர் !- எந்தத்
தடையும் இல்லாத் தன்மை நிலவ
     தாமே பணிந்தனர் !

இந்தியாவை இந்தியர்க்கே
     இனிதே ஈந்தனர் !- நம்
சிந்தையள்ளும் விடுதலையை
     சிறக்கத் தந்தனர் !

அமைதி வழியே சிறந்த தென்று
     அறிய வைத்தவர் !- அண்ணல்
அமைதி வழியே உலகம் ஆள
     அனைத்தும் ஆண்டவர் !

அன்றும் இன்றும் என்றும் எங்கும்
     அண்ணல் வாழ்கிறார் !- அவர்
அன்பால் இந்த உலக மக்கள்
     அகத்தில் வாழ்கிறார் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

பாத்தியம் இருப்பது என்பது சாத்தியமே
விடுதலைக்கென ||

வாசித்த வாத்தியம் இன்னின்னதென
யோசித்து விளக்கம் ||

தந்தத் தந்தையை தேசிய தந்தையாய்
நேசிக்கும் பாக்கியம் ||

மறைந் தோருக்கும் பிறந் தோர்க்கும்
ஒலிக்கும் வாக்கியமே ||

அடித்துக் கொள்வோம் பெருமிதத்துடன்
நம்முள் சிலாக்கியம் ||

இனியும் இழிநிலையை அடையவிடாது கொள் வைராக்கியமே ||

உன்கையிலும் உனது சட்டைப்பையிலும்
ஏன் கனவிலும் காந்தி ||

பிணமான போதிலும் பணமாக உயிர்
வாழ்வது சத்தியமே ||

மகாத்மா காந்தியை நினையாதவன்
நன்றி கெட்டவன் ||

மகாத்மா காந்தியை மறவாதவன் தேச
பக்தி கொண்டவன் ||

மாண்டுப் பார்க்க தெரிந்து கொண்ட
காந்தியாருக்கு தேசத்தை ||

ஆண்டுப் பார்க்க முடியாத துரதிர்ஷ்டம்
கொடுத்து வைக்காதது ||

ஒரு மனக்குறையே சுதந்திரம் அடைந்த
பாரத தேசத்தவர்க்கு ||

சுதந்திர பறவையானோம் இவற்றை
முன்னோர் அளித்தது ||

அவற்றை கட்டிக் காக்கும் கடமையோ
இனிமேல் நம்முடையது ||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

அனுகூலம் செய்வது போல் 
நம்மை சுத்தி உறவுகள் இருக்கும்
ஆராய்ந்து பார்த்தால் தெரியும்
கூர் கத்தி அக்குளில் இருக்கும்

இப்படித்தான் மகாத்மா காந்தி
காலக் கதையும் முடிந்த தங்கே
சாக்கு போக்கு ஆயிரம் சொல்வார்
நீக்கு போக்கு அறிந்தே செய்வார்

பாரத தேசத்தை அன்னியர் பல்லக்கு 
தூக்கி வலம் வந்தார் மகாத்மா காந்தி 
எனும் பிள்ளை பூச்சி 
அவருக்கு பாடைகட்டினார்

சிரப்பு மிக்க பிறப்பு மகாத்மா காந்தி 
வரப்பு மடித்து இத்துடன் எனது நிலம் 
உனது நிலமெதுவோ அங்கு  
செல்லென  துரத்தினார்

- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

**

எதற்கு சுதந்திரம்
எங்களுக்கு
வாங்கிக் கொடுத்தீர்கள் ?

இப்போது
நீங்கள்  உயிரோடு இருந்திருந்தால்
நீங்கள் சொல்லும் கருத்தைக்கூட
மீம்ஸ் போட்டு
உங்களையும் கலாய்த்திருப்பார்கள் !

மணல் திருட்டை எதிர்த்து
நீங்கள் போராட வந்திருந்தால்
ப்ரேக் இல்லாத லாரிகளை
நீங்கள் வசிக்கும் தெருவிலையே
ஓடவிட்டிருப்பார்கள்!

தேர்தல் நாளில்
வாக்குச்சாவடிக்கு
நீங்கள் வாக்களிக்க சென்றிருந்தால் கூட
மகாத்மாவின் ஓட்டைக்கூட
மாற்றி ஒருவன் போட்டுச் சென்றிருப்பான்!

இத்தனைக்கும் சொல்லப்போனால்
உன் பிறந்தநாளில்
உன்னைச் சுட்டுக்கொன்ற
கோட்சேவுக்கே  நோபல் பரிசு
கொடுத்தாலும் கொடுத்திருப்பார்கள் !

- அ.அம்பேத் ஜோசப்

**
அகிம்சை என்றால் என்னவென்று தெரியவில்லை
அகிலம் முழுவதும் வன்முறை பரவி விட்டது!

பொறுமை என்றால் என்னவென்று புரியவில்லை
பொறுமை இழந்து சினத்தில் வாழ்கின்றனர்!

எளிமையை என்றும் விரும்பினார் காந்தியடிகள்
எளிமை மறந்து ஆடம்பரத்தில் ஆடுகின்றனர்!

அரசியலில் நேர்மையைக் கடைபிடித்தார் காந்தியடிகள்
அரசியலில் நேர்மை இன்று காணாமல் போனது!

உப்புக்கு வரியா? என்று எதிர்த்தார் காந்தியடிகள்
ஒன்றும் இல்லை வரி இன்றி என்றானது இன்று!

இயந்திரமயமாதலை விரும்பவில்லை காந்தியடிகள்
இயந்திரமாகவே மனிதர்கள் இன்று மாறிவிட்டனர்!    

எல்லோரும் என் சகோதரர்கள் என்றார் காந்தியடிகள்
இன்று சகோதரர்களே வெட்டிக் கொல்லும் அவல நிலை!

சாதிமத வேறுபாடு பார்க்காதீர் என்றார் காந்தியடிகள்
சாதிமத வேறுபாட்டால் வன்முறை நடக்குது இன்று!

- கவிஞர் இரா. இரவி.

**
அமைதி இமயம் அண்ணல் காந்தியை
ஆண்டுக் கொருமுறை நினைத்தோம் - அவரின்
அமைதி வழியை போற்றிக் காத்திட
அடடா நாமும்  மறந்தோம்!

ஆங்கி லேயர் குண்டு மழையை
ஆயுத மின்றி எதிர்த்தார்; - அந்த
ஆங்கி லேயர் மட்டு மல்ல
அகிலத் தாரும் போற்றினார்!

அரிச்சந் திரனின் வாய்மைப் போற்றி
ஆயுள் முழுவதும் பற்றினார்; - தாமும்
வறியோர் போல தமிழரைப் பார்த்து
வேட்டி உடைக்கே மாறினார்!

பாரத விடுதலை பாமரர்க் கிலாததால்
பதவிச் சுகத்தை வெறுத்தார்; - பெற்றப்
பாரத விடுதலை  பயனிலை என்றே
ஆறாய்க் கண்ணீர் வடித்தார்!

அமைதி இமயம் அண்ணல் காந்தி
அன்றே கண்ட கனவை - நாமும்
அமைதி யோடு நாட்டில் நிலையாய்
அமைய காந்தியை மறவோம்!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**

காந்தியின் கண்ணாடி
கேள்விக்குறியாய் இன்று
அஹிம்சையை அறவே
மறந்து விட்ட சமுதாய்ம்
வன்முறை எனப்து
ஆள்பவர், எதிர்ப்பவர்
இரு புறமும் இருப்பதால்
இடையில் இருக்கும்
எங்கள் இன்னல் !
என்று வந்திடும் அமைதி?
காந்தியம் கேள்விக்குறியாய்
ஒவ்வொருவர் மனதிலும்

- தாமோதரன்.ஸ்ரீ, கோயமுத்தூர்

**

அருள்நெறி தலைவர் காந்தி அவதரித்த 
நூற்றி ஐம்பதாம் ஆண்டில்                 
சிறுமையை விலக்கி நல்ல 
சிந்தனை தலைமேற்கொள்வோம்
பொறுமை, அடக்கம், 
அன்பு பொருந்திய 
மனத்தைப் பெறுவோம்
வறுமையை ஒழிக்க வல்ல 
வழியினைகாண்போம் வெல்வோம்
சாதியை உண்மையாய் களைந்து 
சகலரும் அன்புடன் இணைந்து
நீதியைக்கோரிடும் ஏழை 
நிலஉழுமாந்தர்க்குத் துணையாய்
வீதியில் பேசிடாது மன்றில் 
விதியினை படைத்திடச்செய்வோம்
நீதியை நாடுவோர் மன்ற 
நிலையினை அறிந்திடச்செய்ய
வாதிடும் முறையினைத் 
தமிழில் வந்திட ஆவனசெய்வோம்

காதியைப் போற்றிடும் நாட்டில் 
கணணிகோலோச்சுவதைபார்க்கின்றோம்
நீதியாய் காந்தியை நினைந்து 
நிலையினை மாற்றிட முனைவோம்
ஏழ்மையைக்கண்டிறங்கும் 
ஏற்ற நல் உள்ளம் பெறுவோம்
கல்வியை தாய்மொழியில் 
கொணர்ந்து கலையினில்மேலோங்கி நின்று
கள்ளினை அறவே விலக்கி  
களிப்புடை வாழ்க்கை யாக்கி
உழைப்பினை போற்றி 
வாழ உறுதியைப் பூணுவோமின்று            

- கவிஞர் சூடாமணி. ஜி, இராஜபாளையம்

**

அண்ணல், தலைவர், மகாத்மா, தலைவரல்ல, 
தலைவரை உருவாக்கும் பல்கலை
சொன்னால் வியப்பீர்கள்! தலைவராய் 
ஓர்ஆண்டு, உயிர்போகும்வரை தலைவரில்லை

அறத்தின் தலைவர், அகிம்சையில் ராஜகுரு, 
அவனியெங்கும் புகழ்பெற்ற ஞானி!
திறமையின்  தலைவர்களைஉண்டாக்கி 
திணறடித்தார் வெள்ளையரை அன்று

அரைநிர்வாண பக்கிரி என்று ஒருசிலராலும்,
ஒன் மேன் ஆர்மிஎன மவுண்டபாட்னாலும்    
பயம் நிறைந்த உணர்வுடன் பகர்ன்றனர் 
பரங்கியர் என்றால் சும்மவா நமது காந்தி!

ஆங்கிலம் பேசும் வெள்ளை ஆதிக்கம் 
எதிர்த்த உயர்சாதி கனவாங்களின் கையில்
பாங்குடன் வீற்றிருந்த காங்கிரஸ் 
கட்சியை பாட்டளிகளின்  கட்சியாக் கினார்

பிர்லாவும் ஆதரித்தார் பின்னர் அவரிடம் 
பணிசெய்த ஏழைதொழிலாளியும் ஆதரித்தார்  
ஆர்ப்பாட்டம் என்றாலும் போராட்டம் 
என்றாலும் அண்ணல்செய்தால் நாடேசெய்தது

கோழையல்ல கொள்கையில் கோமான் என்றும் 
மூன்றாம்வகுப்பில் பயனம்செய்தார்
ஏழைகளோடு ஏழையாக உயிர் உள்ளவரை 
தொடர்வண்டியில் பயணம் செய்தார்

மேலாடை ஏழை விவசாயிக்காக துறந்தார் 
ஏறுவதில்லை விமானத்தி லென்ற
மேலான கொள்கை கொண்டே மேலான 
காந்தி இறுதிவரை வாழ்ந்தார்

உயர்சாதினர் என்றாலும் அவர் உயர்சாதினர் அல்லர் 
இந்து என்றாலும் இந்து அல்லர்!
உயர்வான காந்தியின் குணங்களை 
உண்மையாய் பின்பற்றுவோம்அதுதான்அஞ்சலி !    

 - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com