Enable Javscript for better performance
யார் மனிதன் - வாசகர் கவிதை பகுதி 3- Dinamani

சுடச்சுட

  
  swimming1

  யார் மனிதன்?

  யாரெல்லாம் மனிதராவர் என்ற கேள்வி
  ……….எமக்குள்ளே பிறந்தாலே எழுமாம் வேள்வி..!
  ஓரெண்ணம் உதவிசெய உதித்து விட்டால்
  ……….உலகமெலாம் உன்னடியில் உருண்டு ஓடும்..!
  ஊரெல்லாம் வாழ்ந்தபல உத்த மர்கள்
  ……….உரைத்ததெலாம் மனிதநேயம் ஒன்றே தானே..!
  பாரெல்லாம் நேசமொன்றே பரவு தற்கு
  ……….பாடுபட்டும் பெரிதாகப் பலனும் இல்லை..!
  .
  குறையற்ற மனிதனாகக் குவல யத்தில்
  ……….கணக்கெடுத்தால் தேறாது கொஞ்சம் கூட..!
  கறைபடிந்த மனதுடனே கால மெல்லாம்
  ……….காலத்தைக் கழிப்பவர்கள் கணக்கி லாது..!
  முறைதவறி வாழ்பவர்கள் முன்னே நிற்பார்
  ……….முயற்சியின்றி முன்னேற மனிதர் கற்பார்..
  துறைதோறும் காணுகின்ற துன்பக் கோலம்
  ………தொல்லைமிகு மனிதராகத் தொடரும் மேலும்.!
  .
  அக்ரமத்தை அழிப்பதற்கே ஆட்சி செய்து..!
  ………அதர்மத்தை எதிர்ப்பவர்கள் மனித ராவார்..!
  வக்ரத்தை வன்மத்தைத் தடுத்து நிற்க
  ………வந்துதித்த நல்லவரே மனித ராவார்..!
  தக்கதையே தகும்நேரம் சொல்லு கின்ற
  ………தரமான குணமுடையோர் மனித ராவார்..!
  சிக்கலேலாம் வரும்போது சிரமம் பாரா
  ………சீராகத் தீர்த்துவைப்போர் மனித ராவார்..!

  - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

  **

  யார் மனிதன் பொய்யற நவில்வீர் யார் மனிதன் ?
  யாதும் அறிந்தவர் தீதற உரைப்பீர் யார் மனிதன் ?

  மானுட உருக்கொண்டு பிறந்து வளர்ந்தவன் மனிதனா ?
  மண்ணில் புகழோடு செல்வச் செழிப்போடு வாழ்பவன் மனிதனா  ?

  மாசறு மனத்தான் நேரிய குணத்தான், தான் மனிதன் !
  மனத்தும் தீமை பிறர்க்கெண் ணாதான், தான் மனிதன்!

  உளத்தும் பிறன் பொருள் விழையாதான், தான் மனிதன்  !
  உண்மையின் உன்னதம்  உணர்ந்தொழுகுபவன் தான் மனிதன் !
  தவறேதும் நிலையெதிலும் புரியாதவனே மனிதன் !
  தவறியும் நேர்மையை விடாதவனே மனிதன் !

  பொய்யுரைத்துச் சுயநலம் கொள்ளாதவனே மனிதன்  !
  பொய்மையும் தீதறுக்க ஆயுதமெனக் கொள்பவனும் மனிதன் !

  நன்னெறி போதனையில் பிள்ளைகள் வளர்ப்பவன்தான் மனிதன் !
  நற்குணக் குடிகளை உருவாக்க முனைபவன் தான் மனிதன் !

  - அறிவுக்கண். R.

  **
  முகமூடிகள் மட்டுமே அணிந்திருந்த
  ஓர்நகருக்குள் ஓரிரவில் திசைதப்பி
  பயணித்த போது நகர் காடாகப் பிளிறியது
  சிங்கம் கரடி புலி நாய்நரி கழுகுகள்
  என்று முகமூடிகள் ஏராளம் உதடுகளில்
  நயமான மொழி தாராளம்
  மனித வாசனையை மோப்பம் பிடிக்க
  எண்ணிய மூக்கைத் தாக்கியது குருதிநாற்றம்
  விலங்குகளின் மாநாட்டில் ஜனநாயகம் வாழ்க
  எனவந்த அதிரடிக் குரலில் வானம் விடிய மறந்தது
  இரவு ஓர்முறை குலுங்கிக் குப்புற வீழ்ந்தது
  முயல்களும் மான்களும் தவளைகளும்
  எதிர்க்குரல் கொடுக்கத் துரோகிகள் என்று
  நாகங்களும் நாய்களும் வேகமாய்ப் பாய்ந்தன
  வேள்வித்தீயில் குடல்கள் சொரிந்தன உடல்கள் எரிந்தன
  இங்கே யார் மனிதன் எனவந்த கேள்விக்கு விடைவந்தது
  ஒன்று அல்சேஷனாய் இரு; இல்லை ஆதிசேஷனாய்

  - கவிஞர் மஹாரதி

  **
  வெள்ளைச்சட்டை போர்த்திய இருளொன்று
  வெகுளிபோல் திட்டமிடுது களவாட
  படிப்பறிவில்லா பாமரனுக்குத் தன்
  பதவியால் குழியைப் பறிக்கிறது

  நேர்மை உடுத்தியப் பாமரனின்
  கோவணம் உருவிடப் பார்க்கிறது
  தன்மானம் பறித்து உழவன்தனின்
  நிர்வாணம் கண்டு இரசிக்கிறது

  விடியல் வெளிச்சத்தை விரட்டிடவே
  வறுமை இருளைத் திணிக்கிறது
  விவசாய நிலத்தில் துளையிட்டு
  கன்னிகற்பினில் குழந்தையைத் தேடுகிறது

  அழுக்குச்சட்டையை அணிந்தவன் தான்
  உன் அடிமைத்தனத்தை உடைத்தெறிவான்
  ஒற்றுமைத் தீப்பந்தக் கரங்களினால்- உன்
  அதிகார இருளெரித்துப் புசித்திடுவான்..

  - ஹமி, தேனி மாவட்டம்
   
  **

  அருவினை என்ப உளவோ
  ஆற்றலுடன் உழைத்தால்?
  இன்முகம் மாறா
  ஈகைக் குணத்துடன்
  உதவிடும் உள்ளத்தை
  ஊரோர் பேnற்றுவர்-
  என்றும், இவரால்
  ஏற்றம் பெறுவதில்
  ஐயமும் உண்டோ?
  ஒரு மட மாது ஒருவனுமாகி
  ஓராயிரம் கனவுகளில்
  ஒளவியம் தவிர்ப்பவன் -
  ஆயுதம் தேடான்
  அவன் தான் மனிதன்
  அறிந்தவன் ஞானி...

  - கவிதாவாணி, மைசூர்

  **

  எல்லோருக்கும் தெரிந்த கேள்வி?
  தெரியாத பதில்!
  டயோஜெனிஸ்
  பகலிலும் விளக்கோடு தேடினான்
  விளக்கம்தான் கிடைக்கவில்லை!

  மனிதன் யார்?
  மனித உருவில் இருப்பவனா?
  மனித உணர்வுடன் இருப்பவனா?
  குரங்கிலிருந்து வந்தவனா?
  மனதில் குரங்காய் தாவி குதிப்பவனா?
  ஊரை அடித்து உளையில்போட்டு
  கோடி கோடியாய் குவித்துபோட்டு
  மாடிமேல மாடிகட்டுபவனா மனிதன்?

  தோல்விகள் துரத்தி துரத்தி அடித்தாலும்
  அலைகடலென ஆர்பரித்து எழுபவன் மனிதன்!
  உழைக்காமல் கிடைக்கும் பொருளை
  உதறத் தெரிந்தவன் மனிதன்!
  வசதி வந்தால் ஆடாதவன்
  வறுமை வந்தால் வாடதவன் மனிதன்!

  ஒழுக்கத்தோடும் நெறியோடும் வாழ்பவன்
  பிறருக்காக விட்டுக் கொடுப்பவன்
  பிறரை தட்டிக்கொடுப்பவன்
  பிறர் தவறை மன்னிக்கத் தெரிந்தவன்
  தன் தவறை திருத்திக்கொள்ளத் தெரிந்தவன்
  சுயநலம் துறந்து பொதுநலத்தோடு வாழ்பவன்
  மானிதர்களில் மகத்தானவன்!

  மகதானவர்களை வெளியில் தேடினால்
  கிடைப்பது அரிது!
  உன்னுள் தேடு
  மகத்தான மனிதனாய் மாறு
  ஒரு நாள் உலகே மாறும்
  மகதானதாய் பாரு!

  -கு.முருகேசன்

  **
  மக்களாக  வாழ தெரிந்தவன்
  உலகம் விரும்பும் மனிதன்!
  காலம்  மாறினாலும்
  மனிதாபிமானம்  மாறாத
  தயாள குணமுடைய உத்தமன்
  அவனே  மனிதன் என்று 
  பகவானே சொல்லும் அற்புதம்!
  அநியாயமும்  அக்கிரமும் வளர்ந்து
  காயப்படுத்தியதால்  மனவலி  தாங்காமல் 
  எழுந்த  வாசகம்  "யார் மனிதன்?"
  புதிய  காலை ஒவ்வொன்றும்
  நம்பிக்கை என்ற கதிரவனும்
  பிறக்க அதை மனிதன்
  பறக்கவிடாமல் உறுதியாக  பற்றினால்
  சிறக்க  வாழ்வான்!  -  அவனே....
  உயர்ந்த மனிதன் மட்டுமல்ல
  "யார்  மனிதன்?" என்ற
  வினாவிற்கு பதில் சொல்லும்!
  மனிதனாக வாழ முயற்சிப்போம்!
  கனிவுள்ளவனாக வாழ்ந்து
  "யார் மனிதன்?"  என  நிரூபிப்போம்! 

  - பிரகதா நவநீதன்.  மதுரை

  **

  சுற்றும் ஞாலம்  அதில்
  முற்றும் அன்புடன் வாழ
  மனிதன் என்று  சொல்லும்
  புனிதமான சொல்லுக்கு
  தகுதியானவன் என
  பகுத்தறிவுள்ளவர்கள்
  சொல்வதை உணர்வோம்!
  நாளை என்பது உறுதியில்லா
  காலை விடியும் ஒவ்வொருநாளையும்
  ரசித்து வாழ்வோம்...............!
  அதுவே  மற்றவர்களுக்கு
   பொதுவாக   உணர்த்தும்  கருத்து
  மனிதன் மனிதனாக  வாழ
  கற்பதால்  வருவது  நிம்மதி!
  ஏற்புடைய   வாழ்க்கை  வாழ்ந்து
  வனப்புடைய  அமைதியினை  பெற
  நீ  மனிதனாக  வாழ்!
  யார் மனிதன்?  என்ற  வினாவிற்கு
  சோர்வில்லாமல்   பதில்  அளிக்க
  தளராதவனே..... மனிதன்!

  -   உஷாமுத்துராமன்,  திருநகர்

  **
  தன்னுயிராய் எவ்வுயிரையும் நினைப்பவன்
  ....தன்னலமின்றி பிறருக்குக் கொடுப்பவன்
  தன்னம்பிக்கை யோடுதினம் உழைப்பவன்
  ....தன்மானத்தை உயிராய் மதிப்பவன்
  உறுதியான நெஞ்சம் கொண்டவன்
  ....உலகை அறிவால் வென்றவன்
  இறுதிவரை முயற்சியோடு இருப்பவன்
  ....இன்னல்களை இன்பத்தோடு ஏற்பவன்
  பசிக்கும் மனிதனைக்கண்டு துடிப்பவன்
  ....பசியாற வயிறுக்குசோறு கொடுப்பவன்
  கசியும் கண்ணீரின்பொருள் புரிந்தவன்
  ....காலன்முன் காசுசெல்லாததை உணர்ந்தவன்
  மரமாய் நின்றுநிழலைத் தருபவன்
  ....மழைபோல் வாழ்க்கை வாழ்பவன்
  மரணத்தை வென்று நிலைப்பவன்
  ....மண்ணில் வரலாறாய் நிற்பவன்

  - கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

  **

  வெந்ததை உண்டு விதியென மாயும் விழிப்பிலா வீணனா மனிதன் ?
  நொந்துடல் தளர்ந்து நோயினில் வதைந்து நொடிபவன் தானா மனிதன் ?

  வாழ்ந்திடும் காலம் வரையினில் வையம் வாழ்த்திட வாழ்பவன் மனிதன் !
  சூழ்ந்தவர் வாழ்த்த துணையென நிற்கும் துடிப்புடன் சுடர்பவன் மனிதன் !

  அருமையும் பெருமையும் அற்றவ னாக அலைந்திடும் அவனா மனிதன் ?
  உருவினில் அழகாய் உளத்தினில் விலங்காய் உழல்பவன் அவனா மனிதன் ?

  புத்தனும் ஏசுவும் வள்ளலார் காந்தியும் போலவே வாழ்பவர் மனிதர் !
  சித்தரார் போலவும் பாரதி, தாசனாய்த் திகழ்ந்திவண் சிறந்தவர் மனிதர் !

  கல்வியைத் தந்தநம் காம ராசராய், கக்கன்போல் வாழ்பவர் மனிதர் !
  வல்லநம் பெரியார், அண்ணா, கலைஞராய் வாழ்ந்துயர் வளித்தவர் மனிதர் !

  தமிழ்மொழிக் காகவும் தமிழினம் ஓங்கவும் தளரா துழைத்தவர் மனிதர் !
  நமிலுயர் வானவர் நவிலுயர் மேன்மையர் நவிலரும் நல்லவர் மனிதர் !

  எத்தனை ஆண்டுகள் வாழ்துளோம் என்பதில் ஏற்றமா காண்பான் மனிதன் !
  இத்தனை ஆண்டுகள் இருந்ததன் செயலினால் இனிதிவண் வாழ்பவன் மனிதன் !

  - படைக்களப் பாவலர்" துரை. மூர்த்தி,ஆர்க்காடு

  **

  TAGS
  poem
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai