சிரிப்பு என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 2

சிரிப்பு! சிரிப்பெனும் போதே, சிதறும்(ஞ்)  சிரிப்பு !
சிரிப்பு என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 2

சிரிப்பு 

சிரிப்புகள் உலகில் பலவிதம்
பிரித்துப் பார்த்தால் பரவசம்!
தனியே சிரித்தால் பைத்தியம்
கூட்டத்தில் சிரித்தால் ஆனந்தம்!
இதழ்கள் பிரிந்தால் சிரிப்பு
இதயங்கள் பிரிந்தால் சோகம்!
காதலர்கள் சிரிப்பர் கண்களால்
ஓவியத்தில் சிரிப்பர் மவுனமாக.!
அன்னை சிரிப்பில் பாசம்
அப்பா சிரிப்பில் ஊக்கம்!
மழலை சிரிப்பில் மகிழ்ச்சி
சிறுவன் சிரிப்பில் குறும்பு!
தமக்கை சிரிப்பில் நம்பிக்கை
தங்கை சிரிப்பில் எதிர்பார்ப்பு!
நண்பன் சிரிப்பில் குளுமை
விரோதி சிரிப்பில் எரிச்சல்!
சோம்பேறி சிரிப்பில் வெறுப்பு
உழைப்பாளி சிரிப்பில் களிப்பு!
உள்ளம் மகிழ சிரியுங்கள்
உலகம் சுழலும் உன் கையில்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

சிரிப்பு! சிரிப்பெனும் போதே, சிதறும்(ஞ்)  சிரிப்பு !
சிற்றாடைக் கட்டி வரும், சிங்காரச் சிரிப்பு !
விழிகளில் ஒளி ஒளிர வருஞ், சிரிப்பு ;
வெண்ணிலவைத் துணைக் கழைத்து வரும், சிரிப்பு !
வெற்றிக்குக் கட்டியங் கூறும், சிரிப்பு !
வேதனையில் முகிழ் சிரிப்பு, அதுவல்ல சிரிப்பு--அது,
வெந்து மனம் கசியும் அழுகையின், மறு பிறப்பு!
கெடு மதியில் எள்ளி நகையாடும், சிரிப்பு;
கெட்ட மனம் வழிய விடும்,  அறுவருப்பு !
நாம் சிந்தும் சந்தனச் சிரிப்பு, பூரிப்பு !
நம் அன்னை தந்தையின் அர்ப்பணிப்பு !
இளவட்டங்களின் கன்னல், மின்னல் சிரிப்பு ! --அவர் 
இதயங்களில் நெளிந்து ஓடும் களிப்பு !
பள்ளிப் பருவத்துப் படபடக்கும் சிரிப்பு !
கள்ளமில்லா உள்ளங்களின் பளபளப்பு !
குற்றமறியா குழந்தைகளின் தேன்சுவைச் சிரிப்பு !
கண்களுக்குப் புலப்படாதக்,கருத்துக்கும் புரியாத, இறைவனின் சிரிப்பு !
உயிர்கள் அனைத்தும்  சிரிக்கும் என்பது அறிவியலின் அறிவிப்பு !
உத்தமமான நம் சிரிப்பு மானுட வாழ்வில் அன்பளிப்பு !

- இலக்கிய அறிவு மதி.

**

என்னவளே- மோனலிசா
சிரிப்பைக் காண - மறந்தும்
சென்றுவிடாதே -  உன்னை
சிறைப்படுத்தி - உனது
சிரிப்பை காட்சிபடுத்திவிடப்போகிறாா்கள்...

சிரிக்க சிரிக்க நோய்தீருமென்றாா்கள் -
ஆனால் - என்னவளே - நீ
சிரிக்க சிரிக்க - எனக்குள்
காதல்நோய் முற்றிவிடுகிறது.......

சனியின் சிரிப்போ வீழ்ச்சிக்கு ஆதாரம் -
சகுனியின் சிரிப்பாே சூழ்ச்சிக்கு ஆதாரம் -
என்னவளே - உனது சிரிப்பு ஒன்றுமட்டுமே
எனது வளர்ச்சிக்கு ஆதாரம்......

தவழ்ந்துவரும் மழலையாய் - உனதுபுன்னகை
காற்றில் தவழ்ந்து வருகிறது - அதனை
கொஞ்சி முடிப்பதற்குதான் எனக்கு நேரமில்லை....

பொன்னகை மட்டுமே அணிந்தால் சதைபிண்டம்
புன்னகையும் சேர்ந்தே அணிந்தால் உயிர்பிண்டம்
என்னவளே - நீ மட்டும் சிரிக்காதுபோனால்
நான் உடைந்துபோன மண்பாண்டம்.........!!!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

வாய் விட்டு சிரிக்க நோய் பல தீர,
வயிறு குலுங்க சிரிக்க ,
நரம்புகளில் புது குருதி பாய ,
மன அழுத்தம் குறையுமே !
பொய்மை மனதில் பரவி கிடக்க
துளிர் விடுமே அசட்டு சிரிப்பு !
சிரம் மேல் கனம் சற்று ஏற
பிறப்பு கொள்ளுமே ஆணவ சிரிப்பு !
பிறர் மனதை மதியாதாருள்
உரு கொண்டதே ஏளன சிரிப்பு !
பிறர் செய்கைகளை கேலி செய்ய
தவழ்ந்து வந்ததே நையாண்டி சிரிப்பு !
பெற்ற வெற்றியை கொண்டாடிய மனதுள்
துள்ளி எழுந்ததே சாகசச் சிரிப்பு !
அகம் மகிழ ஆனந்தத்தில் விழிகள் நனைய
பூவிதழ் உதிர்த்தே புன்சிரிப்பு !
இறைவன் மனிதனுக்கு அளித்த  வரங்களுள்
விலை மதிக்க முடியாதது சிரிப்பு !
குடும்பங்கள் தோறும் அன்பை பயிரிட
பகைமை களையெறிய சிரிப்பு மலரட்டுமே !

- தனலட்சுமி பரமசிவம்

**

சிரிக்கும் சிரிப்பில் சிக்கல்கள் சிதறி விடும்
உரிக்கும் உரிப்பில் உளறலில் உண்மை வரும்
பிரிக்கும் பிரிப்பில் பிதற்றலில் பிரிவு பிரியும்
விரிக்கும் விரிசலில் விளக்கம் விரிந்திடுமே

கண்ணால் சிரிப்பது கண்ணியச் சிரிப்பு
பெண் முன்னால் சிரிப்பது வழிசல் சிரிப்பு
ஆணின் அட்டகாசச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
நாணிடும் பெண்ணின் சிரிப்பு நாணச் சிரிப்பு

உதடு பிரியாச் சிரிப்பு உன்னதச் சிரிப்பு
சுதந்திரச் சிரிப்பு தனிமையின் தனிச் சிரிப்பு
கதவிடுக்கில் காணாது சிரிப்பது பயச் சிரிப்பு
மத நல்லிணக்கச் சிரிப்பு உண்மைச் சிரிப்பு

மனக் கசடு நீக்கும் நகைச்சுவைச் சிரிப்பு
தினக் கவலைகளை நீக்கும் சிங்காரச் சிரப்பு
சினச் சீற்றங்களை மறைக்கும் நமட்டுச் சிரிப்பு
இனக் குமுறல்களின் வெற்றி இடிச் சிரிப்பு

உடல்நலத்தின் உன்னத அருமருந்து சிரிப்பு
இடமும் வலமும் இணையும் அன்புச் சிரிப்பு
திடமான மனதில் தினமும் தோன்றும் சிரிப்பு
புடம்போட்ட தங்கமென நாளும் ஒளிரும் சிரிப்பு

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

குங்குமச் சிமிழ் வாய்திறந்து
 குழந்தை சிரிக்கும் சிரிப்பு
பொங்கும் உணர்வுடன் அம்மா
 பூரித்துச் ரசிக்கும் சிரிப்பு

இலக்கியம் சொல்லும் இதழின்
 அலுவல்கள் சிரித்தல்,
இசைத்தல்,உணவுண்ணல்
  முத்தமிடல், உச்சரித்தல்

இதயம் சுத்தியாகிறது நித்தம்
  நாம்சிரிக்கும் போது
காற்றைப்போல் கவசமாகிறது
  நாம்சிரிக்கும் சிரிப்பு

அதிசயம் பாரீர் சிரிப்பின்
 ஒலிகேட்கும் அகத்தை
அணுகாது நோய் என்றும்
  அறிவோம், வெல்வோம்!

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்

**

சிரிக்கத் தெரிந்த மனிதன் 
வாழ்வில் பாதி துன்பத்தை குறைத்தான்!
சிந்திக்கவும் தெரிந்த மனிதன் 
வாழ்வில் மீதி துன்பத்தை குறைத்தான்!

கவலை மறக்க சிரிப்பு இருக்கு,
வலியை மறக்க சிரிப்பு இருக்கு!
நோய் தீர்க்க மாத்திரைகள் எதற்கு!

தன்னைப்பார்த்து தானே சிரித்தால்,
உலகில் கடினமாய் ஏதும் தோன்றாமல் போகும்!

நம்செயலினால் பலர் முகம் மலரட்டும்!
சிரிப்பினால் பல நட்புறவு பெறுகட்டும்!
சிறுகட்டும் எள்ளளும், பொறாமையும்!

கொண்டாடட்டும் இவ்வுலகம் சிரித்து 
மகிழட்டும் வாழ்வு ஒன்றே ஒன்றே!

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

செந்தில். கவுண்டமணி கலாட்டா
தந்தது. பெருஞ்சிரிப்பு. திரைப்படத்தில்
அதில் எனக்கு மிகப். பிடித்த சிரிப்பு
மதில் சுவற்று குளியல் அறையில்
மனைவி குளிக்க , செந்நிறம் கரைந்து
சுனை. நீரென பெருகி வழிந்து ஓடி
கரு வண்டு ஒக்க வெளிவந்த மனைவி
கண்டு அதிர்ந்து அலறிய செந்தில். !
ஆஹா ! கவுண்டமணி அண்ணன் ,
மஹா அண்ணனே ! இது போல்
அண்ணன் உடைய தையலுக்கு
வண்ணம் , வர்ணம் பொருட்டில்லையே ,
தங்கைக்காக மனம் , பொருள் , ஆவி
தங்க உள்ளம் அண்ணனால் மட்டுமே
கொடுக்க இயலும் , வாழ்த ! வாழ்க !
இடுக்கண் என்றும் களையும் அண்ணன் !

- எழுதியவர் திருமதி ராணி பாலகிருஷ்ணன்

**

அகில்தன் சிரிப்பு மணமாகும் அழகின் சிரிப்பு அணியாகும் !
முகில்தன் சிரிப்பு மழையாகும் முல்லை சிரிப்பு மனங்கவ்வும் !
நெகிழும் சிரிப்பு அருவியதாம் நெளியும் சிரிப்பு ஆறழகாம் !
பகிரும் சிரிப்பு கதிர்வரவாம் பால்வெண் சிரிப்பு நிலவொளியாம் !

பூவின் சிரிப்பு காய்கனியாம் பொலியும் சிரிப்பு பசுமையதாம் !
வாவின் சிரிப்பு பயிர்வனப்பாம் வனத்தின் சிரிப்பு உயிர்வளியாம் !
காவின் சிரிப்பு காணெழிலாம் காற்றின் சிரிப்பு உடல்மகிழ்வாம் !
தூவி சிரிப்பு பேரழகாம் தொடரும் சிரிப்பு இயற்கையதாம் !

காதல் சிரிப்பு திருமணமாம் கனிவுச் சிரிப்பு தோழமையாம் !
மோதல் சிரிப்பு காதலதாம் முத்துச் சிரிப்பு முகப்பொலிவாம் !
ஈதல் சிரிப்பு இனிமையதாம் இணையில் சிரிப்பு பெருமையதாம் !
பாதச் சிரிப்பு கொலுசொலியாம் பாசச் சிரிப்பு பகல்இரவாம் !

சிரிப்பே சிரிப்பின் பிறப்பாகும் சிந்தை மகிழும் உயிர்ப்பாகும் !
சிரிப்பே மாந்தர் வாழ்வுக்கு சிறப்பைக் கூட்டும் சீராகும் !
சிரிப்பே துயரைச் சீரழிக்கும் சிறந்த மருத்து தானாகும் !
சிரிப்பே ஆயுள் மிகவாக்கும் சிறந்த அமுதப் பாலாகும் !

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

ஞால உச்சியை அலங்கரிக்கும்
மனித மகுடந்தான்
சிரிப்பு...

அது
மனத்திலிருந்து
அரும்பி போதாகி மலர்வதில்
மகிழ்ந்து கொள்ளும்
உறவுகள்...

சில சிரிப்பு
ஒப்பனையோடு புகழ்ந்தாடும்
சில சிரிப்பு
ஏகடியமும் ஏளனத்தனமும்
தெரியாமல் தெளித்து ஊடாடி
வன்நெஞ்சை மறைக்கும்...

தாய்மையின் சிரிப்போ
வறுமையிலும் 
வருடிவிடுதில் புலரும்
ஞாலம்...

அப்பனின் சிரிப்பு
ஆத்மார்த்தமாய் ஆக்கத்தில் புரண்டு தோள் சுமக்கும்...

காதலர்கள் சிரிப்போ
கனவுலகில் சஞ்சரித்தப் படி
மிதக்கும்...

ஆனாலும்
சண்டாளர் சிரிப்பால் செகம் துடிக்க
வீழும் சமூகத்தில் பார்த்ததே இல்லை
உழைக்கின்ற வர்க்கம்
மனம் விட்டுச் சிரித்தது....

- கா.அமீர்ஜான்/திருநின்றவூர்

**

வானமெங்கும் இரவுவேளை தோறும் துன்பம்
வடித்துவிட்டு மகிழ்ந்துகூடி விண்மீன் யாவும்
ஆனவரை பூஞ்சிரிப்பில் பூத்திருக்கும்;
ஆம்பலென வெண்ணிலவாள் சிரித்திருக்காள்;
ஊனமின்றி உள்ளமெல்லாம் பகல்முழுக்க
உயிர்ச்சிரிக்க தான்சிரிக்கும் பரிதி பாரீர்; 
மானமுடன் பிறர்சிரிக்க வைத்து நாளும்
மனிதமுடன் வாழ்நாளில் சிரிக்க வாழ்வோம்! 

சிரிப்பைப்போல் உடலுக்கே ஏற்றச் சீர்மை
சிறப்பான மருந்துவேறு ஏது மில்லை;
சிரிப்பைப்போல் மருத்துவமும் வேறு இல்லை;
சிரிப்பொன்றே குருதிதன்னை தூய்மையாக்கும்;
உரியதொரு சிரிப்பினையும் வாழ்வில் ஊற்றி
உயிர்வாழ்ந்தால் பிணிகளில்லை; என்றுணர்ந்தே
அரியவகை மூலிகையாம் சிரிப்பை ஏற்று
அன்றாடம் வாழ்விலொரு சுவையாய்  ஏற்போம்! 

- கவிக்கடல், கவிதைக் கோமான், பெங்களூர்.

**

பிறரை மகிழ்விக்க 
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !

 - பி. தமிழ் முகில் ஆஸ்டின், டெக்ஸாஸ்

**

ஒரு நாள் முழுதும் வேலை;
இரவில் தூங்க இடமில்லை

வந்த வருமானம்;
ஒருவேளை சோத்துக்கே அடமானம்

ஒண்ட இடமில்லாமல்;
வானம் பார்த்து சிரிக்கிறான்

சிரிக்கிறானேயென்று மேகம் மழையாக பொழிந்தால்;
அவன் அழுகிறான்

ஒண்ட இடமில்லாமல் தவிக்கிறான்;
அந்த தவிப்பிலும்
வாய்விட்டு சிரிக்கிறான்

அருகில் ஒட்டப்பட்டிருந்த 
"வருமான வரிகட்ட ஆதாரே போதும்" 
என்ற வாசகத்தைப்பார்த்து;
வாய்விட்டு சிரிக்கிறான்

வருமானமே இல்ல வரியா??

- ம.சபரிநாத்,சேலம்

**

சிரித்து வாழ வேண்டும் நீ !பிறர் 
சிரிக்க வாழ்ந்திடாதே நீ ! 
இந்த சொல்லுக்கு விதி விலக்கு 
நான் ! 
நான் சிரிப்பதில்லை .. என்னைப் 
பார்த்து மற்றவர் சிரிக்கிறார் !
ஆம் ! நான் ஒரு நல்ல நகைச்சுவை 
நடிகன் ...மேடையிலும் திரையிலும் !!!

- கந்தசாமி  நடராஜன் 

**

காணாதோரை கண்டப்பின் உதடுகள்
விரியும் ஆச்சரிய சிரிப்பு ||
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சக சிரிப்பு ||
தான் தொடாமலும் பிறரை தொடவிடா மலும் எழும் கள்ளச்சிரிப்பு ||

கள்ளம் கபடமில்லாச் சிரிப்பு வெடிச் சிரிப்பு வசிய சிரிப்பு ||
ஆலோசிக்க வைக்கும் அர்த்தமற்ற சிரிப்பு அசட்டுச் சிரிப்பு ||
அவமதிச்சிரிப்பு மனம்நோக வைக்கும் சிரிப்பு நிந்தனைச் சிரிப்பு ||
உள்ளத்தில் திரையிட்டு உதட்டில் வரும் சிரிப்பு நமட்டுச்சிரிப்பு ||

மொத்தத்தில் கண்கள் காண்பதை இதய கீதம் வீணையில் ||
ஈர்க்கப்பட்டு இசைக்கப்பட ஒலிக்கும் நாதமே சிரிப்பு ||
சிரிக்கத் தெரிந்தோர்கள் அனைவருமே நகை ஞானிகளே ||
அதனினும் பிறரை சிரிக்க வைத்து மகிழ்வோர் தெய்வங்கள் ||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

**

பிறக்கின்ற குழந்தை
அழும் போது --- அதை
பார்த்துக்கொண்டிருப்பவர்களின் சிரிப்பு.
புதிய வரவிற்காண வரவேற்பு.
தன்னைக்கெடுத்தவன்
அழிவதைப்பார்த்து
சிலரிடம் வருகின்ற
சிரிப்பு பழிவாங்கும் படலத்தின் பிரதிபலிப்பு.
கட்டிக்கொடுத்த இடத்தில் கவலையில்
மாட்டிக்கொண்டு
தன் தாய் தந்தை வருகையில்
மனக்கவலைகள்
மறந்தே மகள் வசமிருந்து வரும் சிரிப்பு
பிறந்த வீட்டின் பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பு.
நட்பில் உள்ள ஒருவர்
தடம் மாறும் போது
கண்டுகொள்ளாமல்
விட்டு விட்டு
அவர் விழும்போது
மனதிற்குள் சிலருக்கு
வருகின்ற சிரிப்பு
நட்பிற்கு அது இழுக்கு.
படித்த பிறகு பணியில்
நல்ல இடத்தை பிடித்த பிறகு
கற்க வைத்த தாய் தந்தையை
கற்றுக்கொடுத்திட்ட
ஆசிரியர் பெருமக்களை
எந்த இடத்திலும்
மறக்காமல் சொல்லும்
பிள்ளைகளால்
தாய் தந்தை ஆசிரியர் பெருமக்களுக்கும்
வருகின்ற சிரிப்பு
உலகமே போற்றும் பூரிப்பு.
சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே இருக்கும் வாய்ப்பு.
சிரிப்பை எல்லோரும்
எப்பொழுதும் காண
மனஅழுத்தங்களை
அழிக்க வேண்டும்.
அன்பை மட்டுமே
அனைவரும் அளிக்கவேண்டும்.

- கவிச்சித்தர் களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**
ஆறறிவு மனிதனுக்கு
ஆண்டவன் அருளிய
அன்பளிப்பு .......
அகத்தின் அழகை
முகத்தில் காட்டும்
சிரிப்பு .......
பற்றிக் கொள்பவரை
தொற்றிக் கொள்ளும் ....
விலையே இல்லாதது !
விற்பனைக்கு வராதது !
விலங்கிலிருந்து நம்மை
விலக்கி வைப்பது !....

மனித குலத்தின்
மகிழ்ச்சிக்  களிப்பு...
அன்னை அவளின்
அன்புச் சிரிப்பு ....
மனக்கவலை நீக்கும்
மழலை சிரிப்பு...
கண்டவரை ஈர்க்கும்
கன்னியரின் சிரிப்பு ...
வென்ற பூரிப்பில்
வெற்றிச் சிரிப்பு.....

துயரை மறக்க
தூய்மை நட்புடன்
நண்பன் சிரிக்க....
வாயும் வயிறும் நிறைய
நோயும் நொடியில் நீங்க
வாய்விட்டு சிரிக்க.....

- ஜெயா வெங்கட்

**

புன்னகை க்கென்னகை யுமீடா காது
பொன் நகை யுங்கூட  ||

உன்நகை புன்நகைக்கு என்நகை நன்நகையோ ||

அன்நகையுள் ஆயிரம் அர்த்தங்கள் 
புரிந்தார்க்கு தடுமாற்றம் ||

புரியாதார்க்கு ஏமாற்றமது தெரி யாதது யார் குற்றம் ||

சிரிப்பு ஓர் ஆயுள் சிரைச்சாலை அதில் 
அடைபட்டோருள் ||

மீண்டவரு முண்டு மீளாதவரு முண்டு மாண்டவரு முண்டு ||

காணாமல் போனவருமுண்டு மகிமை சிரிப்பிலே  பூரிப்பிலே ||

மயக்கத்தில் தயக்கத்துடன் புன்னகைக் 
கென்ன பதில் மதில்  ||

மேலிருக்கும் பூனை எந்தப் பக்கம் குதிக்குமோ அந்த ||

பக்கம் நானாக இருக்கக்கூடாதா என்று 
தவமாதவம் கிடக்கிறேன் ||

அச்சிரிப்பிற்கு உலகையே எழுதித் தரும் 
அதிகாரம் எனக்கில்லையே ||

ஆண்டவன் சொத்ததனால் வருந்து கிறேன் தன்னந் ||

தனிமையில் இனிய சிரிப்பிற்காக 
ஏக்கமுற்ற துண்டு ||

துக்கம் நெஞ்சை அடைக்கும் வாய்விட்டு
அழுதிடச்சொல்வார் போல் ||

ஆனந்தமும் நெஞ்சிக்கு கேடு வாய்விட்டு சிரித்துவிட சொல்வார்கள் ||

வாழ்ந்து வீழும்போது தெருசிரிக்கும் ஊரும் சிரிப்பாய் சிரிக்கும் ||

- வே. சகாய மேரி, திருக்க அரியலூர்

**
செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை
சேர்த்தபொருள் தேயுமென வேதனை இல்லை
இன்முகம் காட்டி நல்மனம் சேர்க்க 
வாரீர்! வாரீர்! நகைசெய்ய வாரீர்!

நோய்களே இல்லா பேரின்பம் சேர்க்குமொரு 
சோதனையின் போதும் துணையாக காக்கும்
வேறு உயிர்கள் எதிலுமே இல்லாதவொன்று
நம்மிடம் இதைவிட வேறேது நன்று?

தன்னுயிர் அல்லாது பிறிதுயிர் எல்லாவும் 
இன்புறச் செய்திடும் அரு மருந்து 
எந்த நிலையிலும் காத்திடும் மாமருந்து
முகச் சுருக்கமே சுகந்தரும்  அம்மருந்து!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**
மழைச் சிரிக்க மண்சிரிக்கும்; மண்சிரித்தால்
மண்ணுயிர்கள் சிரித்துவாழும்; மண்ணுயிர்கள்
தழைத்திடவே மரம்சிரித்தால் மழைச்சிரிக்கும்;
தரையெங்கும் மரம்சிரிக்க வளம்சிரிக்கும்;
பிழையின்றி   மாந்தரெல்லாம் நோயு   மின்றி, 
பிணியுமின்றி   நல்லுடலைப்   பெற்று  வாழ, 
உழைப்பதுபோல்   குருதிநீரும்   தூய்மை   யாக
             உடலுக்கோ   சிரித்தல்தான்   ஊட்டச்  சத்து! 

வயலுக்கு   உரமிட்டு    நீரும்   பாய்ச்சி
        மண்டியுள்ளக்   களையகற்றிப்   பாது  காக்கும்
இயல்பானச்   செயலொப்ப,  வேளை   தோறும்
         இதயமது   இயங்கிடவே   உண்ணும்   பாங்காய், 
இயற்கைக்கே  எதிராக   பொல்லா   எண்ண
        இழிவுகளைப்  புறக்கணித்து   மற்றோர்  தம்மை
நயமாகச்   சிரிக்கவைத்து   சிரித்து  நாமும்
        நல்வாழ்வு    வாழ்ந்திடவே   முயல்வோ(ம்)   என்றும்! 

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**
நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்றோ 
நான் தற்கொலை செய்திருப்பேன் என்றார் காந்தியடிகள்!
கவலைகளை மறந்திட உதவிடும் சிரிப்பு
கள்ளங்கபடமற்ற குழந்தையின் உள்ளத்தில் சிரிப்பு!
புன்னகை புரிந்தால் நடக்கும் செயல்கள்
பூத்த முகம் சாதிக்கும் செயல்கள்!
சிரிக்க வைப்பவர்களை விரும்பிடும் உலகம்
சிரிப்போடு சேர்த்து சிந்தனையும் விதைக்கலாம்!
பிறரை கேலி செய்து சிரிப்பது குற்றம்
பிறரை சிரிக்க வைப்பது சிறந்த செயலாகும்!
துன்பம் வருகையில் துவளாமல் சிரிக்க்ச் சொன்னார்
திருக்குறளில் திருவள்ளுவப் பெருந்தகை!
முகத்தில் சிரிப்பை அணிந்து இருந்தால்
முகம் பார்ப்போரும் முன்மொழிவர் சிரிப்பை!
ஆற்றிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே
அற்புதமாக் அமைந்த சிரிப்பைப் பயன்படுத்துவோமே  

- கவிஞர் இரா .இரவி

**

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை
அனைவரின் உதட்டிலும் உச்சரிக்கப்படும்
உலகப் பொதுமொழி சிரிப்பு!

ஒருவர் உள்ளத்தில் தோன்றி
உதட்டில் வழிந்து முகத்தில் மலந்து
அடுத்தவர் உள்ளத்தில்
நுழையும் சிரிப்பு!

துன்பத்தில் இறுகிய மனதையும்
திறக்கும் சாவி சிரிப்பு!
சிரிப்பு! இதயத்தை துள்ள வைக்கும்
இறப்பை தள்ளி வைக்கும்!

கொடுக்க கொடுக்க குறையாதது
எடுக்க எடுக்க நிறையாதது சிரிப்பு!
சில்லறைகள் கொடுத்தாவது சிரித்து வை
அது உன் கல்லறையை துரத்தி வைக்கும்!

இளமொட்டுக்கள் சிரித்தால் பூக்கள் மலரும்
இசை மெட்டுக்கள் சிரித்தால் பாக்கள் மலரும்!
தீபாவளியில் மத்தாப்பு ஒளி கொடுக்கும்!
தீராவலியிலும் சிரிப்பு வலி எடுக்கும்!

பெரிய மனிதன் அற்ப செயல்
செய்தால் வருவது சிரிப்பு!
சிறிய மனிதன் அற்புத செயல்
செய்தால் வருவது சிறப்பு!

-கு.முருகேசன்

**

என்ன விந்தை இது!

ஒரே சிப்பியில்
32 முத்துகளை அடக்கி வைத்துள்ளதே
இந்த சிரிப்பு !

தொட்டனைத் தூறும்
பூக்கேணி அல்லவா
சிரிப்பு !

சிலுவைகள் மறந்து,
மனிதனுக்கு
சிறகுகளைத் தரும்
நான்கெழுத்து ஆச்சரியம்
சிரிப்பு !

காலம் என்னும் அதியமான்
நமக்கு அளித்துள்ள
அதிசய நெல்லிக்கனி தான்
சிரிப்பா ?

வாழ்வின் புதிர்களுக்கு
சூத்திரம் இன்றி
சுலப விடை தருகிறதே
இந்தச் சிரிப்பு !

மரத்துப் போன மனித
எந்திர வாழ்வுக்கு
இயற்கை அளித்த
இரத்த ஓட்டம் அல்லவா
சிரிப்பு !

கபிலன் எவ்வாறு மறந்தான் ?
குறிஞ்சிப் பாட்டில்
இந்த சிரிப்”பூ”வை சேர்க்க ?

உலகில் இனிப்பின்றி கூட வாழலாம்!
இந்த சிரிப்பின்றி எவ்வாறு வாழ்வது ?

த.தினேஷ், கடலூர்.

**

காயத்தையும் நியாயத்தையும் எடுத்துச்சொன்ன போது
சபையினர் சிரித்தனர் சிரிப்பு எப்போதும்
ஆண்டவனின் சோலைப்பூ அல்ல
சிரிப்பின் கைகளிலும் சாத்தானின் தீப்பந்தம் உண்டு
ஒருத்தி சிரித்தாள் குருஷேத்திரம் வரை எதிரொலித்தது
இடுக்கண் வருங்கால் நகைத்தவர் பலர்
மனப்பிறழ்வென மருத்துவமனையிலும் இருப்பார்கள்
ஆரண்ய காண்டத்தில் அன்னத்தைப் பார்த்து
அவளையும் பார்த்து ஒருவன் சிரித்தான்
யானையைப் பார்த்து அண்ணலையும் பார்த்து
அவளும் சிரித்தாள் அந்தச் சிரிப்புகள் தொலைந்தகாலம்
அவள் சிரிக்காமல் இருந்தகாலம் இலங்கை இறந்த காலம்
கலிகாலத்தின் கர்ப்பகாலத்தில் ஓர் இருண்மைக் கணத்தில்
சாத்தான் சிரித்துக்கொண்டிருந்தான்
கடவுள் அழுதுகொண்டிருந்தார்

- கவிஞர் மஹாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com