தேநீர் நேரம் கவிதை பகுதி 2

யாரும் முந்திக் கொண்டால் உன்னால் சந்தித்து காதலை
தேநீர் நேரம் கவிதை பகுதி 2

தேநீர்  நேரம்!

காலை இளங்கதிர் எழுந்து
சோலை போன்ற உலகை  மாற்றும்
வேளையில்  கவனம் காட்டும்
கதிரவன் கண் திறக்கும்
பொழுதில் "சூடான  தேநீர்"
அழுதென   கிடைக்கும் நேரம் 
உற்சாகத்துடன்  சொல்வோம் 
எனக்கு  பிடித்த  "தேநீர்  நேரம்" என்று!
வீட்டு  வேலையில்  சோர்வோ  
அலுவலக வேலையில்  சோர்வோ 
 எது  எப்படி வரினும் "சூடான  தேநீர்"
காது  உறிஞ்சி  குடிக்கும்
போது  சோர்வு ஓடி
சுறுசுறுப்பு தொற்றிக்  கொள்ளுமே!
அளவான  தேநீர்  குடித்தால்
வளமான   ஆரோக்கியம்  கிடைத்து
பள  பள  மேனியினை பெறலாமே!
அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும்  நஞ்சு போல
அதிக  தேநீர் எடுப்பதை  விட்டு
 பாதிக்காத அளவு தேநீர்    அருந்துவோம்...
கொண்டாடுவோம் "தேநீர்  நேரத்தை!"
 
- பிரகதா நவநீதன்

**

கடின வேலையில் மனம்
தடிமனாகி  சோர்ந்து  போனால்
வடிகட்டிய தேநீர் குடித்து
துடிப்புடன் உற்சாகம்  பெறும்
நல்ல பொழுதே......உன்
பெயர்தான்    "தேநீர் நேரம்"
பால் விலை ஏறி மலையை தொட
கால் பகுதி நீரில் கலக்கும்
தேயிலை  தன்  சத்தினை  கொடுக்க
பாலில்லா  கறுப்பு  நிற  தேநீர்
மறுப்பின்றி  உற்சாகம்  கொடுக்கும் ..உன்
பெயர்தான்   "தேநீர் நேரம்"
காலை எழுந்தவுடன்  உற்சாகம்
மாலை களைப்பினை  போக்கி சோர்வு
வலையில்  வீழாமல்  இருக்க
மலைபோல  உதவும்........உன் 
பெயர்தான்   "தேநீர்  நேரம்"
குறிப்பிட்ட  நேரம்  மட்டுமே
"தேநீர்  நேரமில்லை"..மனம்
உற்சாகம்  விரும்பும்  எந்நேரமும்
"தேநீர்  நேரம்" அன்றோ?
தேநீர்  அருந்துவோம்  சோர்வை விரட்டுவோம்...
உற்சாகமாக  வாழ்வோம்……………………….!

- உஷாமுத்துராமன், திருநகர்

**

மாலை மயங்கும் நேரம் மனதில் ஏக்கம்
வேலையின் களைப்பில் ஓய்வுத் தாக்கம் 
ஓலைக் குடிசையும் ஓரடுக்கு மாடியும்
வாலைக் குழைத்து நிற்கும் தேநீர் நேரம்

நேரம் தவறினால் பித்தம் தலைக்கேறும்
பாரம் மனதில் அழுந்த தலை வலிக்கும்
தீரமுள்ள மனிதர்க்கும் தேவை தேநீர்
சாரமுள்ள தீதில்லா தேயிலையின் நீர்

ஊக்கம் தரும் அருமருந்தாய் தேநீர்
ஆக்க வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் நீர்
தூக்கம் விரட்டும் தூய காரணியின் நீர்
ஏக்கம் வரும்போது ஏந்திடுங்கள் தேநீர்

காலை மாலை இருநேரமும் தேநீர் நேரம்
சாலைக் கடையிலும் உண்டு தேநீர் நேரம்
வாலைக்குமரியும் அருந்தும் நேநீர் நேரம்
மூலை அமர்ந்தாலும் உண்டு தேநீர் நேரம்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

பணியிடை வசந்தம் வரும் !
பாப் போலச் சுகமும் தரும் !
பொன்மணித் தேனீர் நேரம் ! (2) 

விண் மழைப் பொழிந்தாலும்,
 வீசும் மண் புழுதியிலும் ,
விரும்பிடும், தேனீர் நேரம் !  (2) (பணியிடை-1) 

கலகலச் சிரிப்பின் பந்தம் !
கலந்திடும் அரசியல் விருந்தும் !
களமாகும் தேனீர் நேரம்  !  (2) (பணியிடை-1)  

நட்பின் வலிமை காக்கும் ! 
நல்ல திட்டம் வகுக்கும்  !
நாணயம் தேனீர் நேரம் !   (2) (பணியிடை-1) 

அன்புளம் பூக்கும் தருணம் !
அறிவின் உச்சம் காட்டும் !
ஆளுமை தேனீர் நேரம் ! (2) (பணியிடை-1) 

- கவிஞர் இலக்கிய அறிவுமதி

**

அந்தி மாலை வேளையில்,
சில்லென்று குளிர்  
காற்று வீசுகையில் ,
ஒன்றாய் நாம்  
கை  கோர்த்து நடக்க,
அந்த  அற்புத நேரத்தில் ,
ஒரு  கோப்பை தேநீரை 
நாம்  பங்கிட்டு குடிக்க,
தேநீர்  கோப்பையில் இருந்த  
உன்  செவ்வாய்  பதிப்பு,
என்  இதழை  இதமாக  முத்தமிட ,
கண்களில்  காதல்  நினைவுகளில்  எதிர்காலம்!
இந்த  தேநீர்  நேரத்தை  கல்  வெட்டாய்  
என்  இதயத்தில்  செதுக்கிகேன்,
என்றென்றும்  நினைவு  கூற!!

- ப்ரியா ஸ்ரீதர்

**

சீனத்து ராஜ வின் வெந்நீரில்
வானத்து தேவதையாய் 
தேயிலை விழவே
தேநீரின் காலமது துவங்கலாச்சு,
எழை பாழை சனங்களோட 
உணவு மாச்சு, காசிருந்தா 
கால் வயிறு டீயும் பொறையும், 
பணமிருந்தா பாதி வயிறு கூழோ கஞ்சி, 
மீதி தினம் மோட்டு வளை நிலைபசித்தோருக்காம்,
சோற்றுத் துருத்தி யென 
திரிந்திடும் கூட்டம் - 
பாட்டாளி கடனில்லா வாழ்வு 
பெறவே அறமோங்கி 
அறிவூரப் பாடுபடுவோம், 
அன்றே அகிலமெங்கும்'
நிஜமான தேநீர் நேரம்
அன்பர்களே அன்பு நிலை
புரிந்து கொள்வோம்!!

- கவிதா வாணி, மைசூர்

**
வேலை தளத்திலே வேலை
செய்து களைத்துப் போகும்
நாடி நரம்புகள் தளர்ந்துவிடும்
வேளையில் முறுக்கு ஏத்தும்

சுறுசுறுப்பாக்கும்  மீண்டும் 
வேலைக்கு ஆயத்தமாக்கும்
நேரம்தான் தேனீர் நேரமாக
ஒதுக்கம் வேலைத் தளத்தில்

பழக்க தோஷம் தேனீர் நேரத்தில்
அருந்தாவிடில் எதையோ இழந்த
உணர்வுகள் எழுந்து உணர்த்தும்
அது இன்னதென்று தோன்றாது

பதனீர் நேரம் பழச்சாறு நேரம்
சிலருக்கு நீராகார நேரம் என்று 
உண்டு அவரவர் வசதிக்கேற்ப
அங்கனமே இத்தேனீர் நேரமும்

- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

**
அவளுக்கென கிடைக்கும் நேரம்
தேநீர் நேரம் ||

அந்நேரத்தில் மட்டுமே அவளை சந்திக்கவே இயலும் ||

யாரும் முந்திக் கொண்டால் உன்னால்
சந்தித்து காதலை ||

சொல்லவே முடியாது போகுமானால்
வருந்தி நொந்துவிடாதே ||

தான் செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவள் அவள் ||

நேரம் அறியும் அவள் தேவையை ஆனால் அவள் அறியாள் ||

அவள் தேநீர்ப் பருகிட அவள் இதயம்
பாதிக்கப் படாதிருக்கும் ||

அந்த இதயத்தில் இடம் பிடித்தாலென்
இதயம் மகிழ்ச்சி தரும் ||

அவளை சந்திக்க வழிகளை சிந்திக்க
தேநீர் நேரம் பார்த்து ||

செல்கிறேன் விருப்பத்தை சொல்கிறேன்
ஏற்பதும் ஏற்காததும் ||

அவள் விருப்பம்; கோபப்பட்டுவதில் ஒரு அர்த்தமுமில்லை ||

அடைந்தே தீரவேண்டு மெனும் கட்ட
வழக்கில்லை; குறுக்கு ||

வழிகள் ஆயிரம் இருக்கிறது அதில்
மரியாதை இல்லை ||

தேநீர்தேயிலைத் தூளைக் கொதிக்கும் நீரிலிட்டு வடிகட்டி ||

சாரத்தை பிழிந்திட்டு குப்பையில்
வீசியெறிவார் போல் ||

நான் அவளையோ அவள் என்னையோ
விட்டு பிரிந்திட மாட்டொம் ||

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

பகல் நேர சுழற்சி பணியிலிருந்து
சற்றே ஓய்வெடுக்க மஞ்சத்தில்
தலை சாய்த்த கதிரவன்
மஞ்சள் வெயிலால் மேற்கு வானை 
சொர்ண வானாய் அலங்கரிக்க,
மனம் மயங்கும் மாலை நேரத்தில்
பணிச்சுமையை சற்று தளர்த்தி,
விரலுள் கைதான குவளையுள்
நுரை பொங்கிய குளம்பியை
இதமாய் இதழுரிஞ்சியதை நா ருசிக்க,
காற்றில் பறக்கும் பட்டமாய்
மனம் இறுக்கத்திலிருந்து தளர்ந்து
விண்ணில் அசைந்தாடி மகிழுமே !
பணிச்சுமையில் கசங்கி போன மூளைக்கு
தேநீர் நேரம் இளைப்பாறல் , புண்ணர்ச்சியூட்ட
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமே !

- தனலட்சுமி பரமசிவம்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com