தேநீர் நேரம் கவிதை பகுதி 3

காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
தேநீர் நேரம் கவிதை பகுதி 3

தேநீர் நேரம் 

எண்சீர் விருத்தம்

சாலையோரம் அமைந்திருக்கும் பூங்கா தோறும்
……….சாகவாச இன்பத்தைக் காணு வோரே..!
காலைமுதல் மாலைவரைக் கணினி முன்னே
……….காலநேரம் தெரியாது அமரு வோரே..!
மூலையிலே அமர்ந்துகொண்டு முழுமை யாக
……….முழுமூச்சாய் வியாபாரம் விழையு மோரே..!
வேலையிடை இவர்க்கெல்லாம் வேண்டும் தேநீர்
……….வேலைசெய்ய ஊக்குவிக்கும் தேநீர் நேரம்..!
.
புரட்சியுடன் புத்துணர்ச்சி பெறுவ தற்குப்
…….புகைப்பீடி தேநீரும் கையி லேந்தித்..
திரளாகச் சேர்ந்தவாறு திண்ணை மீது
……….தினநாளைக் கழிப்பதற்கே திரளும் கூட்டம்.!
அரசியலைப் பேசுதற்கோர் அன்றும் என்றும்
……….அலைகின்ற கூட்டத்திற்கு வேண்டும் தேநீர்.!
வரவிருக்கும் சினிமாவை விமரி சிக்க
……….வளையவரும் அங்கெலாம் தேநீர்க் கோப்பை.!
.
விளைநிலத்தில் விவசாயி உழைத்த பின்னே
……….வியர்வைநீங்க இளைப்பாரும் சற்று நேரம்.!
களைப்பாகத் தோன்றுகின்ற வேளை தன்னில்
……….கணநேர ஓய்வினிலே தெரியும் இன்பம்.!
விளையாட்டில் வீரியமாய் தோன்றும் வேளை
……….விடுப்பார்கள் இடைவெளியாய்க் கொஞ்ச நேரம்.!
களைப்பையெலாம் போக்கவரும் தேநீர் நேரம்
……….களிப்புடனே அருந்துவரே கோப்பைத் தேநீர்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

காலையிலும் மாலையிலும் குடும்பத் தோடு
கலந்தமர்ந்து பருகிட்ட தேநீ ரோடு
சோலையிலே பூத்திட்ட பூக்க ளோடு
சொல்லாடல் நிகழ்த்திட்ட வண்டு கள்போல்
வேலைகளை வரவுசெலவு இன்ப துன்ப
வேதனையைப் பகிர்ந்துகொண்ட காலம் மாறி
மூலையிலே அமர்ந்தபடி கைப்பே சிக்குள்
முகம்புதைத்து தனித்துள்ளார் வீட்டிற் குள்ளே !
தெருவோரக் கடைகளிலே அமர்த வாறு
தேநீரின் கோப்பைகளைக் கையி லேந்தி
அருந்திநாவில் சுவைகூட அறிந்தி டாமல்
அரசியலின் போக்குகளை அலசிப் பேசிப்
பெரும்மாற்றம் ஆட்சியிலே செய்த வற்றைப்
பெருமையுடன் பேசுகின்ற கனவாய்ப் போக
உருமாறித் தேநீரின் கடைக்குச் சென்றோர்
உணர்விழக்கும் மதுக்கடைக்குச் செல்ல லானார் !
அலுவலக இடைவெளியில் அருந்தி வந்த
அருமையான் தேநீரோ குளிர்நீ ராக
சிலுசிலுக்கும் அறைகளிலே அமர்ந்த வாறு
சின்னதிரை தொடர்களினை மெல்ல லானார் !
குலுங்கிநடைப் பயிற்சியினைச் செய்த பின்பு
குடித்ததேநீர் அருகம்புல் சாறாய் மாறக்
கொலுசொலிதான் போனதுபோல் தேநீர் போழ்தைக்
கொண்டதின்று கட்புலனும் முகநூல் சேர்ந்தே !

கட்புலன் -- வாட்சப்

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

காலை முதல் மாலை வரை 
வேலை ! தேநீர் நேரம் 
என்று நேரம் ஒன்று 
இல்லை  அவனுக்கு !

கைக்கு எட்டியது அவன் 
வாய்க்கு கிட்டுவதில்லை !
ஒரு கோப்பை தேநீர் அவனுக்கு 
கிட்டாது எந்த நேரத்திலும் !

அவன் பறித்த தேயிலை, தேநீர் 
வடிவில் ஒரு கோப்பையில் என் 
கையில் ! வடிக்கிறேன் நான் 
ஒரு கவிதை "தேநீர் நேரம் " அந்த 
தேநீரை ருசித்துக் கொண்டு ! 

பாவம் தேயிலை தோட்ட தொழிலாளி 
அவனுக்கு  எங்கே நேரம் அவன் 
தோட்டத்து தேநீர் அருந்த ? 

- கந்தசாமி நடராஜன் 

**
தேநீர் இடைவேளை

தேநீர் குடிக்கும் இடைவேளை
     சிறப்புச் சேர்க்கும் பலவேளை !
வாநீர் மழையாய் வரும்வேளை
     வாட்டம் போக்கும் மகிழ்வேளை !
மாநீர் ஆறாய் மலர்வேளை
     மகிழ்ச்சிப் பெருக்கே வளர்வேளை !
பாநீர் பெருகிப் பாய்வேளை
     பகரும் தேநீர் இடைவேளை !

உடலின் அசதி ஓட்டிவிடும்
     உரமே ஊட்டி ஊற்றமிகும் !
கடலின் அளவாம் ஆழத்தும்
     கண்டே முத்தும் எடுக்கவிடும் !
கடக்கா வானம் போல்விரிந்தே
     கதிராய் நிலவாய்த் தோன்றியெழும் !
தடங்கல் எல்லாம் தகர்த்துவிடும்
     தரமாய் வாழ்வைத் தழைக்கவிடும் !

இடறும் வேலை முடித்திடவே
     எழுச்சி தானே உருவாக்கும் !
கிடப்பில் உள்ள வேலையதும்
     கிளர்ச்சி யுடனே முடிக்கவிடும் !
படரும் எதிர்ப்புப் பனியதனை
     பரிதி யாகிப் பாய்ந்தழிக்கும் !
தொடரும் இன்பம் தொடராகத்
     தோன்றும் தேநீர் இடைவேளை !

- ஆர்க்காடு. ஆதவன்.

**
முப்பொழுதும் உற்சாகம்!
எப்பொழுதும் கூட வரும்.
சிந்திக்கும் சில நொடிகள்!
முடிவெடுக்கும் காலம் இது.
தேவையற்ற இன்னல்களை!
மறைக்கும் இந்த தேநீர் நேரம்.
தேயிலை பறிக்கும் தோட்டக்காரர்!
தாகம் தீர்க்கும் தேநீர் நேரம்.
இரவுப்பொழுதில் பணி செய்தால்!
உற்சாகம் கொடுக்கும் தேநீர்நேரம்.
உலகம் முழுதும் சென்றுபார்த்தால்,
தேநீர் அருந்தாமல் எவருமில்லை.
தீரா தாகம் வரும்பொழுது,
நீருக்குப் பிறகு தேனீர் வருமே!
வேடிக்கையான மனிதர்களிடத்தில்
வாடிக்கையாக வந்து செல்வது தேநீர் மட்டுமே!!
புத்துணர்ச்சி கொடுப்பதிலே,
தேனீர் தவிர எதுவுமில்லை...
செந்நீர் சிந்தி உழைப்பவரிடத்தில்!
தேனீர் இன்றி உத்வேகம் இல்லை..

- மு.செந்தில்குமார், ஓமன்

**
தேநீர்ப்பொழுதுகள் தேயவில்லை,
தேயிலை சாறு போல நீளுகிறதே! 

நட்புடன் நேரம் கழிக்கையிலே!
காலம் கழிவது தோனவில்லையே! 

வாழ்க்கை துணையுடன் சாய்ந்திருக்க!
ஒரு கோப்பை தேநீர் உடனிருக்க!
வாய்க்கும் பொழுது ஒரு போதும் சாய்வதில்லையே! 

உறவு கூடி அமர்ந்திருக்க,
மாலை நேர விருந்திருக்க,
தேநீருடன் மகிழ்ந்திருக்க,
வித்திடும் பொழுதுகள் அரிதல்லவே! 

எத்தனை மலை போல் சுமைவரினும்,
எத்தனை அலை போல் பணி மிகுனிம்,
ஓர் கோப்பை தேநீர் நேரம்,
எதையும் சமாளிக்கும் தெம்பைத் தரும்!

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

கொஞ்சம் கவிதை
கொஞ்சம் தேநீர் 
பருகுவோம் வாரீர் !
பரபரப்பு மிகுந்த வாழ்க்கையில்
இயங்கும்   இதயம்
இளைப்பாறி   இன்புற
தேடிச் செல்லும்
தேநீர் நேரம்....
அதிகாலை வேளை முதல்
அந்தி சாய்ந்த பிறகும் கூட
மழைக் காலமோ
குளிர் காலமோ
ரசிக்கவோ
ருசிக்கவோ
தேநீர் நேரம்...
பொதுவானது!
பொன்னானது !

- ஜெயா வெங்கட்

**

உலகக் கதையும் ஊரார்க் கதையும்
    ஒலிக்கக் கேட்டு மகிழலாம் !
பலரைப் பற்றி பலவார் கதைகள்
     பகரக் கேட்டு பரவலாம் !

அடுத்தார் கதைகள் அடுக்கடுக் காக
     அகவக் கேட்டே அகலலாம் !
கொடுத்தார் கெடுத்தார் கொள்கை கேட்டுக்
     குறிப்பாய் உடனே விலகலாம் !

நடந்த கதையும் நடக்கும் கதையும்
     நாளை நடப்பும் கேட்கலாம் !
இடத்துக் கேற்ப நடக்கும் நடப்பை
     இயம்ப அறிந்தே விலக்கலாம் !

நாட்டின் அரசியல் நடப்புப் போக்கை
     நவிலக் கேட்டால் நகைக்கலாம் !
கேட்டில் விளையும் கீழாம் நட்பைக்
     கேட்கும் போதே வியக்கலாம் !

தேநீர் குடிக்கும் நேரத் துள்ளே
     தீர்வு யாவும் காணலாம் !
தேநீர் இடையே குடிப்ப தாலே
     திறமாய் வேலை முடிக்கலாம் !

-து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

அயர்வினை துடைத்திடும் ஒரு நேரம் - இனிய
உயர்வினை எண்ணவோர் அரு நேரம்

தனியுடமையைத் தடுத்திடும் ஒரு நேரம் - நல்ல
பொதுவுடமையே வளர்த்திடும் சுக நேரம்

மடமையைக்  கலைத்திடும் ஒரு நேரம் - உயர்
கடமையை ஏற்கவே அமை நேரம்

மோதலைத் தவிர்த்திட ஒரு நேரம் - கனிந்த
காதலை வளர்க்கவே மலர் நேரம்

பிரிவுகள் இணைக்கவே ஒரு நேரம் - நல்ல
பரிவுகள் காட்டிட வரும் நேரம்

இளமையில் மட்டுமா இது நேரம்? - இல்லை
முதுமையும் தொடர்ந்திடத் தொடர் நேரம்!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

கவிதைகளைப் பரிமாறும் தேநீர் நேரம்
     கனவுகளை, கவலைகளைப் பேசும் நேரம்
தவிக்குமன ஆசைகளைத் தாங்கும் நேரம்
     தாங்கொணாத வலிகளினைப் பகிரும் நேரம்
செவிகளுக்குள் நல்வாக்கைச் சேர்க்கும் நேரம்
     சிந்தையிலே கீதங்கள் கேட்கும் நேரம்
புவிக்குள்ளே ஓய்வதனைப் பார்க்கும் நேரம்
    பொழுதெல்லாம் உற்சாக மாக்கும் நேரம்

இடைவேளை என்பதெலலாம் பெயருக் கன்றோ
     எப்படியும் தேநீருக் கிடையில் எலலாம்
உடைகின்ற அந்தரங்கம் செய்தி நன்றாய்
    ஒவ்வொன்றும் இயல்பினிலே திரிந்து வேறாய்
நடைகட்டும் வாய்தோறும் வதந்தி யாகும்
    நன்மைசெயும் பெரும்பாலும வம்பாய்ப் போகும்
அடைகாக்கும் கோழியென நேரம் பார்த்து
    அகத்திலுள வெளியாகும் நேரம் தானே.

- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன் மதுரை

**

மனம்கவர் ஞாயிறு என்றும் இனிமையே !
இனம் ஒன்றுகூடி மகிழ ஏதுவாகுமே !
மனைவி உடனே தம்பியும் வந்தனன் !
அனைத்து உணவும் உண்டு மகிழ்ந்தனர் .

குழந்தைகளுக்கு ஆனந்த குதூகலம் ,
வழக்கமாய் வரும் நாத்தனார் எங்கே ?
நினைத்த பொழுதே வந்தனள் குடும்பத்துடன்
கனைத்த குழந்தைகள் திமிர ஓடினர் .

ஆரவார ஆர்ப்பாட்டம் அடங்கவே இல்லை .
வார இறுதி கும்மாளம் , கொண்டாட்டம் .
அத்தை ! வடை , கேசரி , முறுக்கு எங்கே ?
சத்தம் மிகவும் பலம் தான் சுட்டி க்கு

காதல் மிகுந்து இல்லம் மிளிர்ந்தது
ஆதலால் தேநீர் நேரம் மிகவும் நன்றே !
நண்பரே , வாரீர் ! அன்புடன் அழைக்கிறோம்
மாண்புடன் குடிக்கலாம் சுவையான தேநீர் .

- திருமதி ராணி பாலகிருஷ்ணன்.

**

வாழ்வில் வெற்றிக்குக் காத்திருந்ததை
விட இந்தத் தேநீர் கடையில்
அவளுக்காக காத்திருந்தது தான் அதிகம் !

அவள் தேநீர் வாங்க வரும் நேரம் -
எனக்கு விஸ்வரூப தரிசனம் !

தேநீர் – என் காதலுக்கு நிவேதனம் !

நான் இந்தக் கடைக்காரனாய் இருந்திருந்தால்
தேநீரோடு என் காதலையும்
அல்லவா அவளுக்கு கொடுத்திருப்பேன் !

மின்சார இரயில் ஏறி
மூன்று மைல் கடந்து – என் தேவதையை
தேநீர் நேரத்தில் தரிசிப்பது என் வாடிக்கை !

மொழிக்கு மட்டும் அடிமை என்று இருப்பவனை – என்
விழிக்கும் நீ அடிமை என்று சொல்லாமல் சொல்கிறாள்
தினந்தோறும் இவ்வேளையில் !

சற்று பொறுங்கள் –
என் தேவதை வந்துவிட்டாள்
தரிசித்துவிட்டு மீதி கதை கூறுகிறேன் !

த.தினேஷ், கடலூர்.

**

நெருப்பின் சாறுபிழிந்த சொற்கள் வெறுப்பில் விழுந்தபோது
காய்ச்சலில் விழுந்தது காதல்; பனிப்பிரதேசத்தின்
பூமாதேவியைப் போல கோமாவில் உறைந்தது காதல்
உறவின் முறிவில் தொடர்ந்த பிரிவில் நிமிடங்களில் தேள்களும்
மணித்துளிகளில் சர்ப்பங்களும் ஊர நீலம்பாரித்துக் கிடந்தது காதல்
ஓர்யுகம் முடிந்த போதில் கண்ணீர்மழையில் இரவு குளித்த
மெளனம் கனத்த கணத்தில் நீவந்து கதவுதட்டினாய்
வெடவெடத்த குளிரையும் மூக்குத்தி வெளிச்சத்தையும்
கொண்டுவந்ததால் இருள்களைந்தது அறை
இருகோப்பைத் தேநீர் கொணர்ந்தேன்
இறந்தகாலமும் நிகழ்காலமும் எதிரெதிரே இருப்பதுபோல
நீயும் நானும் அமர்ந்திருக்க என் கோப்பை விளிம்பின்வழி தெரிந்தது
சுழல்கோடுகளாய் நெளிந்து பறந்த ஆவி
உன்கோப்பையிலிருந்தும் உன் விழிகளிலிருந்தும்

- கவிஞர் மஹாரதி

**

என்னவளே -
தேநீர் நேரங்களில் - நீ வெந்நீரை
கொதிக்க வைத்தாலும் - அது
மணக்கும் புதினா தேநீராய் மணக்கின்றது...

என்ன மந்திரமே - உன்
விரல்படுகையில் வேப்பிலை தேநீரும்
சர்க்கரை தேநீராய் இனிக்கின்றது....

உன் விழிகளின் சுழற்சியாே -
எனக்கு  தினமும் சொக்க வைக்கும் -
சுக்கு தேநீரை தயாாித்து தருகின்றது...

என்னவளே -
நீ பருகி தந்த தேநீரை -
நான் பருக பருக -
என் இளமை இன்னும் நீள்கின்றது....

நீ ஒருபோதும் கோபம்மட்டும் -
கொண்டு விடாதே - ஏனெனில் -
உப்பையும் மிளகையும் - தேநீரில்
தூக்கலாய் தூவி விடுகின்றாய் கோபத்தில்...

என்றென்றும்  நீ - எனக்கு மட்டுமே
உரிய அற்புத  தேநீர்வகை -
நீ உள்ள மட்டும் - நான்
சோா்ந்து போவதுமில்லை
சரிந்து   போவதுமில்லை......

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

உழைத்து களைத்தவனுக்கு
களைப்பை நீக்கி
உற்சாகம் ஊட்டும்
தேநீர் நேரம்!

தேநீர்!
தாவரம் தந்த மூலிகை வரம்
பருகினால் தோன்றும்
மூளையில் ஸ்வரம்!

தேநீர்ப் பொழுதுகள்
நட்புக்கு விதை போடும்!
நாட்டு நடப்பை காதில் போடும்!
மன வலிக்கு மருந்து போடும்!

இரவு நேரத்தில்
ஓட்டுனரின் தேநீர் நேரம்
தூக்கத்தை விரட்டும்
விபத்தை தடுக்கும்!
காவலாளியின் தேநீர் நேரம்
திருட்டை தடுக்கும்!
மாணவனின் தேநீர் நேரம்
தேர்ச்சியைக் கொடுக்கும்!

தேநீர் நேரத்தில் தேநீர் குடித்து
புகைபிடிக்கும் மனிதர்களே!
தேநீரும் புகையும் உங்களைக்
குடிக்காமல் காத்துக்கொள்ளுங்கள்!

-கு.முருகேசன்

**
 
தேனீர் விடுதியில் என் தேனீர் நேரம் வீணாய்போகாது அரசியல் வளர்க்கும்
வானாய் உயர்ந்த தலைவர்கள் தானாய் செய்யவிட்டாலும் தேனீர்நேரம் செய்யும்

ஒரு தேனீர் நேர சந்திப்பால் இந்திய அரசே கவிழ்ந்தது ஒரு வாக்கில் என்பேன்
இன்னும் ஒரு தேனீர் நேர சந்திப்பால் புதிய கூட்டணி உருவானது அன்று

வாக்குக்கு பணம் வாங்கும் கலாச்சாரமும் ஒழிக்க உதவுமா தேனீர் நேரம்
வாக்காளர்களை நேருக்கு நேர் சந்தித்து பணம் வாங்ககாதீர்  வேண்டலாமா?

ஆக்கப்பூர்வமான செயல் பாட்டால் அனைவரும் சேர்ந்து பாடுபட்டல்
வாக்குக்கு பணம் வாங்குவதை தடுக்க வாக்காளரின் தகுதியாய் உயர்த்துவோம்

பணம்வாங்காமல் வாக்களித்தால்நிறுத்தி கேள்விகேட்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு
வேட்பாளர் அறிவிக்கும் முன்னரே தேனீர் நேரத்தில் தோலைஉரித்து காட்டிவிடலாம்

தேனீர் நேரம் சிறந்ததுதான் அது எல்லாருக்கும் கிடைக்க வற்புறுத்துகிறோம்
வாழ்நாளில் வாக்களரைக்கவர்வதற்கு தேனீர் நேரம் போல வாய்ப்பே இல்லை

- கவிஞர் சூடாமணி. ஜி,ராஜபாளையம் 

**
தேநீர்க்காய் இடைவேளை உழைப்போர்க் காகத்
   தீர்மானம் உண்டதிலே மாற்றம் இல்லை !
தேநீர்க்கு இடைவேளை விட்டு விட்டால்
   தெருவெங்கும் பலருக்கும் உளைச்சல் ஆகும் !
தேநீர்தான், இடைவேளை பேச்சுக் கான
   சீர்நேரம் என்றாகிச் சிறக டிக்கும் !
தேநீர்தன் இடைவேளை சிறப்பாய் மேலும்
   திறமாக உழைப்பதற்கே தெம்ப ளிக்கும் !

உழைப்போரின் இடைவேளை தேநீர்க் காகும்
   உள்ளத்தில் புத்துணர்ச்சி அதனால் கூடும் !
விழைவெல்லாம் இடைவேளை வெற்றி யாக்கும்
   வேண்டுவகை எய்திடவே எழுச்சி யூட்டும் !
மழையாலே இடைவேளை மகிழ்ச்சி யூட்டும்
   மண்ணுக்கும் மனத்துக்கும் மாண்பு சேர்க்கும் !
விழையாமல் இடைவேளை உடலெ டுக்கும்
   வியர்வையேநம் வெற்றிக்கு வித்தாய் ஆகும் !

கதிரவனின் இடைவேளை இரவே யாகும்
   கவின்நிலவின் இடைவேளை பகலே ஆகும் !
அதிமழையின் இடைவேளை கோடை யாகும்
   அதிர்கோடை இடைவேளை கார்தான் தீர்க்கும் !
எதிர்ப்பவரின் இடைவேளை பாய்ச்சல் ஆகும்
     இனியவரின் இடைவேளை ஈதல் ஆகும் !
அதியறிவர் இடைவேளை ஆக்கம் ஆகும்
     அன்பர்தம் இடைவேளை அகத்தை ஆளும் !

தேநீர்தான் இடைவேளை விருந்த ளிக்கும்
தேநீர்தான் களைப்பெல்லாம் களையவைக்கும் !
தேநீர்தான் இடைவேளை பிரிவை நீக்கும்
தேநீர்தான் இடைவெளியைச் சேர்த்து வைக்கும் !
தேநீர்க்காய் இடைவேளை தெளிவை நல்கும்
தேநீர்க்காய் இடைவேளை தீர்வு காட்டும் !
தேநீர்க்காய் இடைவேளை காதல் கூட்டும்
தேநீர்க்காய் இடைவேளை கடமை யாமே !

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com