ஜிலு, ஜிலு குச்சி ஐஸ் ரெசிப்பிகள்!

குழந்தைகளை சந்தோச ஆச்சர்யத்தில் ஆழ்த்த சில்லென்ற  குச்சி ஐஸ் (பாப்சிகல்) ரெசிப்பிகள்...

இப்போது மழை இல்லை கொஞ்சம் வெயில் அடிப்பதால் குழந்தைகளை சந்தோச ஆச்சர்யத்தில் ஆழ்த்த சில்லென்ற  குச்சி ஐஸ் (பாப்சிகல்) ரெசிப்பிகள் சிலவற்றை செய்து பார்க்கலாம்.எல்லா விதமான பழங்களைப் பயன்படுத்தியும் குச்சி ஐஸ் செய்யலாம்.எளிதில் சளி பிடிக்கச் செய்யும் திராட்சை,ஆரஞ்சு,வாட்டர் மெலன்,அன்னாசி போன்ற பழங்களைத் தவிர்த்து விட்டு ஆப்பிள், பப்பாளி,கிர்ணிப் பழம், மலை வாழை,அவகாடோ,கிவி,மஸ்க் மெலன் போன்ற பழங்களைப் பயன்படுத்தியும் குச்சி ஐஸ் செய்யலாம்.

ஆப்பிள் குச்சி ஐஸ்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் பழம் - 1

எலுமிச்சை - அரை மூடி

துளசி (பேசில்) விதைகள் - 1/2 டீ ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் க்ரீம் ஸ்டிக் - தேவையான அளவு

செய்முறை:

ஆப்பிளை தோல், விதை நீக்கி துண்டுகளாக்கி மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்து அதனோடு அரை மூடி எலுமிச்சை சாறு , தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.பாப்சிகல் மோல்டு  கிடைக்காவிட்டால் வீட்டிலிருக்கும் குட்டி குட்டி டம்ளர்களை மோல்டு ஆகப் பயன்படுத்தலாம்.டம்ளரில் முதலில் துளசி விதைகளைத் தூவி அதன் மேல் ஆப்பிள் எலுமிச்சை சாறு கலவையை ஊற்றவும்.இந்தக் கலவை குறைந்தது 8 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில்

 ஃபிரீஸரில் வைத்து எடுத்து பிறகு பரிமாறலாம்.

ஆரஞ்சு ஜவ்வரசி குச்சி ஐஸ்

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு - 1

எலுமிச்சை - 2 டீ ஸ்பூன்

ஜவ்வரிசி - 1 டீ ஸ்பூன் (ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்தது)

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் க்ரீம் ஸ்டிக் - தேவையான அளவு

செய்முறை:

ஆரஞ்சுப் பழத்தை நன்கு கழுவி தோல், விதை நீக்கி மிக்சியில் அரைத்து எடுத்து அதனோடு இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, சர்க்கரை  சேர்த்து  நன்கு கலக்கவும்.ஒரு மணி நேரம் ஊறிய ஜவ்வரிசியை குச்சி ஐஸ் மோல்ட் எடுத்துக் கொண்டு முதலில் ஜவ்வரிசி பிறகு ஆப்பிள் எலுமிச்சை சாறு என்ற விகிதத்தில் ஊற்றவும் .இந்தக் கலவையை எட்டு மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் ஃபிரீஸரில் வைத்து எடுத்தால் ஆரஞ்சு ஜவ்வரிசி குச்சி ஐஸ் தயார்.

கிவிபழ குச்சி ஐஸ்

தேவையான பொருட்கள் :

கிவி பழம் -2

துளசி விதைகள் - 1 டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் க்ரீம் ஸ்டிக் -தேவையான அளவு

செய்முறை :

கிவி பழத்தின் விதைப் பகுதியை தனியே எடுத்து வைத்து விட்டு பழத்தை தோல் நீக்கி எலுமிச்சை சாறு கலந்து மிக்சியில் அரைக்கவும்,அரைத்த கலவையில் தேவையான அளவு சர்க்கரை கலந்து நன்கு கலந்து குச்சி ஐஸ் மோல்டில் முதலில்  துளசி விதைகள் அடுத்து கிவி, எலுமிச்சை சாறு கலவையை ஊற்றி  ஐஸ்கிரீம் ஸ்டிக்  சொருகி ஃபிரீஸரில் எட்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பப்பாளி குச்சி ஐஸ்

தேவையான பொருட்கள்:

பப்பாளி - 1

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

பப்பாளி பழத்தின் தோல், விதைகளை நீக்கி விட்டு மிக்சியில் நன்கு அரைத்து அதனோடு 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு சர்க்கரை கலந்து குச்சி ஐஸ் மோல்டில் ஊற்றி ஐஸ் கிரீம் ஸ்டிக் சொருகி எட்டு மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுத்து பிறகு பரிமாறலாம்.

ஃபிரீஸரில் இருந்து எடுத்ததும் மோல்டின் பின் பக்கத்தை குழாய் நீரில் காட்டினால் குச்சி ஐஸ் எளிதாக பிரிந்து வரும் . கலர்,கலராக கண்களை கவரும் இந்த குச்சி ஐஸ் ரெசிப்பிகள் குழந்தைகளை சந்தோசத்தில் துள்ளிக் குதித்து சாப்பிடத் தூண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com