சுடச்சுட

  

  ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

  By சொ. மணியன்  |   Published on : 13th September 2017 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  பாடல் - 9

  நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல்நெஞ்சம்
                                                                            கூவிக்கொண்டு
  சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்தன்னை
  ஆணை என் தோழீ, உலகுதோறு அலர் தூற்றி ஆம்
  கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

  (இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) தோழி, என்னுடைய வெட்கத்தையும் அடக்கத்தையும் கவர்ந்துகொண்டு, நல்ல நெஞ்சத்தையும் அழைத்துக்கொண்டு, உயரத்தில், நெடுந்தொலைவில், வானுலகமான பரமபதத்தில் தங்கியிருக்கிறான் எம்பெருமான், தேவர்களின் தலைவன், நான் ஒரு மடல் குதிரையில் ஏறிக்கொள்வேன், உலகுதோறும் சென்று, அவன் எனக்குச் செய்த குற்றங்களைச் சொல்லிச் சிரமப்படுத்துவேன், இது உறுதி.

  ******

  பாடல் - 10

  யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
  தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
  யா மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
  நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.

  (இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) நான் மடல் குதிரையில் ஏறப்போகிறேன், பெண்மைக்குரிய மடப்ப குணம் இல்லாதவளாகத் தெருத்தெருவாகச் செல்லப்போகிறேன், அதைக்கண்டு மற்ற பெண்கள் நாக்கு மடங்காமல் பழிச்சொல் சொன்னாலும் சொல்லட்டும், இந்த நாடுமுழுக்க என்னைத் தூற்றினாலும் தூற்றட்டும், அழகிய கையிலே சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானின் தூய இதழ்களையுடைய, குளிர்ச்சியான துளசிமலரைப் பெற்றுச் சூடிக்கொள்வேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai