ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

திருக்கண்களையுடைய கண்ணன்
ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

பண்பு உடை வண்டொடு தும்பிகாள், பண் மிழற்றேல்மின்,
புண் புரை வேல்கொடு குத்தா ஒக்கும் நும் இன்குரல்,
தண் பெரு நீர்த்தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரு கண்ணன் நம் ஆவி உண்டு எழு நண்ணினான்.

(காதலி சொல்கிறாள்) பண்புடைய வண்டுகளே, தும்பிகளே, இசையோடு பாடாதீர்கள், உங்களுடைய இனிய குரல், புண்ணின் புரையிலே வேலைக்கொண்டு குத்துவதைப்போலிருக்கிறது. (ஏனெனில்,) குளிர்ந்த, பெரிய நீர்நிலையிலே தாமரை மலர்ந்தாற்போன்ற பெரிய திருக்கண்களையுடைய கண்ணன் நம்முடைய உயிரைக் கவர்ந்துகொண்டு சென்றுவிட்டான்.

பாடல் - 10

எழ நண்ணி நாமும் நம் வானநாடனோடு ஒன்றினோம்,
பழன நல் நாரைக் குழாங்கள்காள், பயின்று என் இனி,
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கலே.

(காதலி சொல்கிறாள்)  நீர்நிலைகளிலே திரிகிற நல்ல நாரைக்கூட்டங்களே, நீங்கள் ஒன்றுசேர்ந்து என்னை வாட்ட முனையவேண்டாம், அதனால் இனி எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், நான் ஏற்கெனவே இங்கிருந்து விலகிச்செல்ல எண்ணிவிட்டேன், வானநாடனாகிய எம்பெருமானுடன் ஒன்றிவிட்டேன், இனி மீதமிருப்பது, நகைகளை அணிந்த என்னுடைய நல்ல உடல்மட்டும்தான், அதுவும் மெதுவாகப் பசையின்றி நீங்கிக்கொண்டிருக்கிறது. இனி, உலகில் இன்பம் தழைக்கட்டும், எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com